Blog

  • ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்….

    இந்து மதம் , பல ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களையும் , ஆச்சர்யமான பல நுட்பமான அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது . கோயில் , கோயில் கோபுரம் , பிரகாரம் , கொடி மரம் , பலி பீடம் , சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் என ஒவ்வொரு படைப்பிலும் நம் முன்னோர்கள் காட்டிய நுட்பங்கள் , இன்றைய நவீன தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு சவால் விடுபவையே. இன்றைக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடியாது என்பதே உண்மை.
    நம் நாட்டில் ஒவ்வொரு கோயிலும் ஒரு பேரதிசயமே. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கட்டடக்கலை , இதைத் தாண்டி சூட்சுமமான பல அரிய பொக்கிஷங்கள் நம் கோயில்களில் மறைந்து கிடக்கின்றது. இங்கு சில ஆன்மிக அதிசயங்களை உணர்வோம்.

    ஸ்கேன் கருவிக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை சிற்பமாக்கிய அதிசயம்

    திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, அந்தந்த மாதக்கணக்கில் எந்த வடிவத்தில் , என்ன நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களாக கல்லில் வடித்து வைத்துள்ள நம் முன்னோர்களின் திறன் வியக்க வைக்கிறது . தொடர்ந்து வந்த பல அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்கள் சிதையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது . காலங்களை முன் கூட்டி உணர்வதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அறிவை கொண்டவர்கள் நம் மூதாதையர் என்பதற்கு நிலைத்திருக்கும் சாட்சியாக நிற்கிறது இந்த சிற்ப காட்சிகள்.

    சிங்கத்தின் வாயில் வழியே குளித்தவர்கள்

    வாசல் வழிக்கு தமிழில் வாயில் என்றொரு சொல் உண்டு. சிங்கத்தின் வாயில் வழியே குளித்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கிணறு தான் இந்த வரலாற்று அதிசயத்தின் சாட்சி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் தென்படும் ஒரு கதவின் மூலம் கீழே இறங்கினால் அந்த கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்ப்பவர்க்கு நாம் குளிப்பது தெரியாது. இது அன்றைய ராணிகள் பாதுகாப்பாக நீராட கட்டப்பட்ட கிணறு. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்கள் மரகதகற்கள் பதிக்கப்பட்டவை . இதன் சிறப்பம்சமே வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். அதே போல வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் சோழக் குலத் திலகம் ராஜேந்திர சோழர். கங்கை கொண்ட சோழ பெருமக்கள் புகழ் போற்றுவோம்.

    ஏறின எடை குறையும் அதிசயம்

    கும்பகோணம் அருகே , உள்ள நாச்சியார் கோவில் கருட சேவை மிகவும் பிரசித்தி வாய்ந்தது . இங்குள்ள கல் கருடாழ்வாரின் எடை அதிகமாகிக்கொண்டே போவது இன்று வரை அனைவருக்கும் வியப்பை அளிக்கக் கூடியது . காரணம் பெருமாள் புறப்பாட்டின் போது , சன்னதியிலிருந்து வெளியே வரும் வேளையில் கருடன் நான்கு பேர் தூக்கி வரும் அளவிற்கு தான் கனம் இருக்கும் . ஆனால் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் , வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு பேர் என எடை கூடி , தூக்கி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகும் . இதுவே , வெளியே இருந்து பிரகாரங்கள் சுற்றி சன்னதிக்கு உள்ளே திரும்பி வரும் போது ஏறின விகிதத்திலேயே எடை குறைந்து வரும் . காலங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த அதிசயத்தின் காரணம் மிகவும் சுவாரசியமானது .

    பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரத்தின் படி , தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் . பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். அன்னத்தை ஒப்பிடும் போது கருடன் பலம் மிகுந்தவர் , வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே தான் கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதாக புராணம் கூறுகிறது . அதனால் இத் திருகோவிலில் இப்போதும் தாயாருக்கு தான் முதலிடம் .
    பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் காட்சி பார்க்கும் பக்தர்களுக்கு எல்லாம் மெய் சிலிர்க்க செய்யும் .
    ஆன்மீக அதிசயங்கள் வளரும் .

  • வழிகாட்டுகிறார் சீரடி சாய் ……

    ஓம் சாய் ராம் – இது வெறும் மந்திரமல்ல வாழ்க்கையை புரட்டிப் போடும் வழிகாட்டும் தந்திரம்
    மகாராஷ்ட்ரா மாநிலம் கோதாவரிக் கரையில் சீரடியில் தன்னை வெளிப்படுத்திய மகான் சாய் . உலகெங்கும் கோடானு கோடி மக்கள் ஒவ்வொரு நொடியும் , மூச்சு விடும்போதெல்லம் ஜெபிக்கும் மந்திரம் சாய் ராம். சாய் ராம் என்று சொல்லும் போதே மனதில் கவலைகள் நீங்கி நம்பிக்கை பிறக்கின்றது. இருள் விலகி வெளிச்சம் தென்படுகிறது. தீராத பல சிக்கல்களின் முடிச்சுகளை தனது சாந்தமான கருணைப் பார்வையினால் களைந்து விடுகிறார் கருணாமூர்த்தியான சாய் மகாராஜ் .இந்த நூற்றாண்டில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றஞானிகளில் சீரடி சாயி பாபா மகத்தானவர். மதங்களை கடந்து மனிதர்கள் மிகுந்த உரிமையுடன் , நம்பிக்கையுடன் அவரது சமாதியை நாடி , நாள்தோறும் ஓடி வருகிறார்கள்.
    சமாதி நிலையிலும் தன்னை நாடிவரும் தன்னுடைய பக்தர்களை வெறும் கையுடன் என்றும்அவர் அனுப்புவதில்லை . பொறுமை மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை தான் பாபா தன்பக்தர்களிடம் எதிர்பார்ப்பது . இவரின் பிறப்பு மற்றும் வயதை இதுவரை யாராலும் அறுதியிட்டுகூற முடியவில்லை . தன்னுடைய பக்தர்களால் சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் ‘சாய் பாபா ‘ ’அவர்கள் இந்தியாவில் உள்ள மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள சீரடிக்கு1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் வருகை புரிந்தார்.
    முதன்முதலாக சீரடி கிராமத்து மக்கள் அவரை , மசூதி ஒன்றில் அருகாமையில் அமைந்திருந்த வேப்பமரத்தின் அடியில் தியானத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தரிசித்தார்கள் .வயதில்இளைஞராக காட்சியளித்தாலும் , அவரது முகத்தில் தெரிந்த தேஜஸே முக்காலமும்கற்றுணர்ந்த ஒரு மகானாக மக்களின் கண்முன் தோற்றுவித்தது . அந்த இளம் வயதிலேயே தன்னை நாடிவந்த மக்களுக்கு ஆன்மீக வழியை காட்டினார் . சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை ,மிக எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்ததால் ,அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் கூடஆரம்பித்தனர் .
    வெறும் வாய்மொழி தத்துவங்களோடு நிற்காமல் , உடல் நலம் வேண்டி தன்னை நாடிவருபவர்களுக்கு தன்னுடைய வரம் நல்கும் கரத்தால் ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக்குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், மற்றும் மகத்துவம் மதங்களை தாண்டிஅனைத்து தரப்பு மக்களையும் தேனை நோக்கி கவரப்பட்ட தேனீக்களாக சீரடி நோக்கி செல்லவைத்தது .
    சாய் ராம் . மகானின் வாழ்க்கை சரிதம் நம்மை உயர்த்தும் .
    தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டிய புனித சீரடி சாய் பாபாஅவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சிறப்புகள் , மற்றும் அவரின் போதனைகளை இனிதிங்கள் மற்றும் வியாழன் தோறும் நாம் விரிவாகக் காண்போம்.

  • அட்சய திருதியை நாளில் என்ன வாங்கலாம்

    அட்சய திருதியை நாளில் செல்வ வளம் பெருகி சிறப்பாக வாழ, மங்களப் பொருட் களில் ஏதேனும் ஒன்றை வாங்குவது நல்லது. ஆலயங்களில் ஏலம் போடும் பொழுது, அதிக விலை கொடுத்து உப்பு வாங்குவார்கள். உப்பு வாங்கினால் பணம் சேரும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் அட்சய திருதியை நாளில் பொன், பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் மட்டுமன்றி உப்பு, தானியங்கள், மளிகைச் சாமான்கள், சோறு வடிக்கும் பாத்திரம், மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீர்வரிசை சாமான்கள், பூஜையறையில் உபயோகப்படுத்தும் புனிதமான பொருட்கள், அகல்விளக்கு, வெண்கல மணி, எழுதுகோல், லட்சுமி படம், அடுப்பு, பணப்பெட்டி, மணிபர்ஸ், சர்க்கரை வெல்லம், நெல்லிக்காய், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வசதிக்கேற்ப வாங்கி வைக்கலாம். அன்னதானம் அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்வதும் சிறப்பான பலனைத் தரும். அன்னை பராசக்தி இந்த நாளில் ஈசனுக்கு அன்னம் அளித்தாள் என்பர். இந்த நாளில் அன்னதானம் செய்தால் இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிடைக்கும் மற்ற நாட்களில் இறைவனுக்கு நிவேதனம் என்ற பெயரில் உணவு படைக்கிறோம். மேலும் கிருஷ்ணர் வழிபாட்டை மேற்கொண்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். கஷ்டம் விலகும் அட்சய திருதியை நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டும். பசு மாட்டில் தான் அனைத்து தேவர்களும் இருப்பதாக ஐதீகம். அத்துடன் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம், அன்னதானம் செய்வதன் மூலம் பெருமாளின் கருணையால் குடும்பத்தில் உள்ள வறுமை, கஷ்டம் விலகும். எனவே தங்கம். வெள்ளி வாங்க இயலாதவர்கள் ஒரு பாக்கெட் உப்பு மட்டுமாவது வாங்கலாம். ஏழை ஒருவருக்கு அன்னதானம் அளிக்கலாம்.

  • ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு பாதயாத்திரை

    வைணவ குரு ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் சென்றனர்.

    சென்னை, அரும்பாக்கம் ஸ்ரீஹரி மடம் ஸ்ரீமதே நம்பிள்ளை ராமானுஜ மகா தேசிகர் சுவாமிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ராமானுஜ அடியார்கள் மற்றும் பக்தர்கள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனர்.
    இதில் ஸ்ரீராமானுஜரின் புகழையும், மங்களாசாசனம் மற்றும் பஜனை நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி, காஞ்சிபுரத்தில் உள்ள காந்தி சாலை, நான்கு ராஜ வீதி, பேருந்து நிலையம், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலை சென்றடைந்து அங்கு சுவாமி தரிசனம் செய்தனர்.

  • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

    சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கலில் கல்லில் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
    சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த் தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    பகல் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா

    திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழா இரவு விடிய விடிய நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் ஆண்டு தோறும் ரஜப்பிறை மாதத்தில் சந்தனக்கூடு விழா நடைபெறும். நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவினையொட்டி சுமார் 25 அடி உயரத்தில் மின் விளக்குகளால் சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டது. அதில் சந்தனம் நிரப்பப்பட்ட செம்புடன் நகரின் முக்கிய வீதிகளில் சந்தனக்கூடு சுற்றி வந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் மலைமீதுள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தப்பட்டு, சந்தனம் பூசிக்கொள்ளப்பட்டது. இவ்விழாவில் கோவை, திருச்சி, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

  • சுவாமிமலை முருகன் கோவிலில் படி பூஜை

    சுவாமிமலை முருகன் கோவிலில் நேற்று கோவிலில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    முருகனின் ஆறுபடை வீடுகளுள் 4-வது படை வீடாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இந்த கோவில் குரு உபதேச தலம் எனச்சிறப்பு பெற்றது.

    இந்த கோவிலில் தமிழ் வருட தேவதைகள் தங்கள் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து சுவாமிநாதருக்கு சேவை செய்து வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள 60 படிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று படிபூஜை நடைபெற்றது.
    இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள 60 படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை தீர்த்தவாரி

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நேற்று சித்திரை விசு தீர்த்தவாரி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விசு திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தன. இரவில் சுவாமி – அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றன. கடந்த 9-ந் தேதி தேரோட்டம் நடந்தது. கடந்த 12-ந் தேதி சித்திரை சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடந்தது.
    திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை சித்திரை விசு தீர்த்தவாரி நடந்தது. காலை 10.30 மணிக்கு மெயின் அருவியில் சுவாமி- அம்பாள் தீர்த்தவாரியும், அதன்பிறகு சுவாமி வீதி உலாவும் நடந்தது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • குலதெய்வ பூஜை அவசியம் என்ன?

    குலதெய்வ பூஜை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அல்லது பங்காளிகள் ஒன்று கூடி நடத்துவது ஆகும்.  இது குடும்ப ஒற்றுமைக்கும் மிக பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த பூஜை ஒரு சில குடும்பங்களில் பகலில் நடத்துகிறார்கள் ஒரு சில குடும்பங்களில் இரவு முழுவதும் நடத்துகிறார்கள். அது அந்த குலதெய்வத்தின் வழக்கபடி அமைகிறது. இந்த பூஜையின் அவசியம் என்ன என்றால் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் குலதெய்வம்.அதனை நாம் வணங்காமல் இருக்கலாமா. நீங்கள் சோதிடர்களிடம் சென்றால் குலதெய்வத்தை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகும் என்று கூறுவார்கள். நீங்கள் என்ன என்னமோ பரிகாரம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் பரிகாரம் எடுபடாது.

    எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது. ஒரு சில இடங்களில் குலதெய்வத்தை ஒருமுறை மட்டும் தான் கும்பிடுவார்கள் அதற்கு பிறகு அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் குலதெய்வத்தை ஒரு முறை தான் கும்பிட வேண்டும் என்று இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டு கும்பிடமாட்டார்கள் அவ்வாறு ஒன்றும் கிடையாது. தாராளமாக கும்பிடலாம்.  உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் ஒரு முறை சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீங்கள் வெளியூரில் இருந்தால் மாதம் ஒரு முறை சென்று வாருங்கள் அவ்வாறு சென்று வரமுடியவில்லை என்றால் அந்த கோவிலுக்கு ஒரு குறிபிட்ட தொகை அனுப்பி அங்கு உள்ளவர்களை சாமி கும்பிட்டு பிரசாதத்தை உங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள்.  குலதெய்வ வழிபாடு உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் கும்பிடலாம் அவ்வாறு இல்லை என்றால் பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று செய்யலாம். நாம் மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம் ஆனால் குலதெய்வத்திற்க்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும்.  நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் உங்கள் வீட்டு குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு எந்த தோஷம் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள் அது அனைத்து தோஷத்தையும் போக்க கூடியது. குலதெய்வ வழிபாடு தான் முதலில் அடுத்த பரிகாரங்கள் எல்லாம் பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள்.

  • சோதனையை வென்ற தர்மர்

    மகாபாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
    அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.
    யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.
    அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.
    லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.
    பின்தொடர்ந்த நாய் …


    மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.
    பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.
    அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”
    சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.
    அர்ச்சுனன் வீழ்ந்தான்…
    சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.
    அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.
    தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.
    ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.
    மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.
    விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.
    அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார்.