Blog

  • முன்னோர்களுக்கு சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் மணிகர்ணிகா குளம்

     

    மாத அமாவாசைகள் மற்றும் விசேஷமான மஹாளய அமாவாசையில் புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு திதி மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகிறது.இதில் காசியில் உள்ள ‘மணிகர்ணிகா காட்’ என்னும் இடத்திலுள்ள மணிகர்ணிகா குளம் இவையெல்லாவற்றையும்விட சிறந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தக் குளத்தினையொட்டிய கங்கை நதிக்கரையில் அமாவாசை தினத்தில் மட்டுமின்றி ,

    எல்லா நாட்களிலும்  மறைந்த முன்னோர்களுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மணிகர்ணிகா குளம்  பல தலைமுறைகளைச் சேர்ந்த முன்னோர்களுக்கு  சுவர்க்கம் செல்ல பாதையைக் காட்டும் புனிதக் குளமாகும்.நடுப்பகல் வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து அதன் துதியையும் அவதார திருக்கதையையும் மகாளய பட்ச தினமாகிய 15 புண்ணிய தினங்களில் கூறுவோர் பெறும் புண்ணியத்தை தேவர்களாலும் கூறிட முடியாது.

     மகாவிஷ்ணு தன் தங்கை உமையவளை பரமசிவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து தேவர்கள், மகரிஷிகள், தேவகணங்களால் இடையூறுகள் இல்லாத பூலோகம் வந்த போது, அவர்கள் மூவருக்கும் ஒளி பொருந்திய ஓர் இடம் தென் படவே அங்கு தன் சக்ராயுதத்தால் அழகான தீர்த்தத்தை உருவாக்கினார். தன் தங்கையும், கணவன் பரமசிவனும் அதைக்கண்டு நீராட விரும்பி அழைத்து சென்ற போது தேவி அதில் எட்டிப்பார்த்து விட முகம் பொலிவாகத்தெரிந்தது. தன் நகைகளை சரி செய்த போது அவள் அணிந்திருந்த மணி குளத்தில் விழுந்தது. அதை பரமன் எடுக்க முயன்ற போது காதணிகள் நீரில் விழுந்தன.

     அம்பிகையின் மணியும், பரமணின் கர்ண குண்டலமும் விழுந்ததால் மணிகர்ணிகா என்ற பெயர் பெற்றது. இந்த விஷேச மணிகர்ணிகா தீர்த்தங்கள் காசி மட்டுமல்ல வேதாரண்யம், திருபுவனம், திருநீர் மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தர்ப்பணம் செய்வதற்கு என்று சில தலங்கள்  புகழ்பெற்றவை. அங்கு சென்றும் நாம் நம் முன்னோர்களுக்கு நம் பித்ரு கடமைகளை செய்யல்லாம்.

     நாகை மாவட்டம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள மூக்தீஸ்வரக் கோயில்.தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படுகிறது. சந்திர தீர்த்தமும் அரசலாறும் ஓடுகிற இந்த தலத்தில் மஹாளய பட்ச தர்ப்பணம் செய்யலாம். ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோடியக்ரை, திருப்புல்லானி, தேவிபட்டினம், நவபாஷானை கடற்கரை தலம், கும்பகோணம் மகா மகக்குளம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, மூன்று நதிகள் சங்கமிக்கிற பவானி கூடுதுறை, திருச்சி அருகில் உள்ள முக்கொம்பு, மயிலாடுதுறை, காவிரிக்ரை மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள திருராமேஸ்வரம் ஆகிய தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.

                                                                     

    அவ்வாறு புனித தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,வீட்டில்  உயிர் நீத்த பெரியவர்களின்  படத்தை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து பொட்டு வைக்க வேண்டும். முன்னோர் பெயரைச் சொல்லி எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.

     

    பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் அமாவாசை  மற்றும் தர்ப்பண தினங்களில் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம். இது போல் நாம் செய்யும் பித்ரு தர்ப்பண பூஜையின் போது மனிதர்களுக்கு  செய்யப்படும் உணவு தானத்தைப் போன்று, காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு, இறைகின்ற அரிசி எள் என மற்ற உயிர்களுக்கும் தானம் இடும் புண்ணியத்தைப் பெறுகிறோம். தர்ப்பண  காலங்களில் பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கலாம்.

     

    இப்படி நம்மால் எந்த வகையில் செய்ய முடியுமோ ,அந்த வகையில் நம் முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தாம் தவறாமல் செய்ய வேண்டும். இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் மட்டும் போதாது, நம் முன்னோர்களின் அருளும் ஆசியும் வேண்டும். அந்த ஆசியை நாம் அனைவரும் பெறுவோம்.

     

  • திருவண்ணாமலையில் நவராத்திரி விழா…

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 20-ந் தேதி மாலையில் பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து அம்மனுக்கு 21-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 22-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 24-ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும், மாலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது. 25-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 26-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 28-ந் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரமும், மேலும் அன்று சரஸ்வதி பூஜையும், மாலையில் உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும், 29-ந் தேதி விஜயதசமியான அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், காலையில் பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் அருணாசலேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • முன்னோர்களின் பரிபூரண ஆசி தரும் மஹாளய அமாவாசை ….

    மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து, பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து நீர்நிலைகளில் நீராடி, எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கின்றனர். சரி மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். மஹாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது. மஹாளய பட்சத்தில் அனைத்து நாட்களுமே தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் மஹாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடன் தர்ப்பணம் செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

  • பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்

     

    வைணவக் கோயில்களில் பெருமாளை  சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி?. பெருமாளை சேவிக்கிறோம், துளசி தீர்த்தம் ஆனப் பிறகு, சடாரி வைத்துக் கொள்கிறோம். அதன் பின்னணியை பற்றி அறிந்துக் கொள்வோம்.

    ஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன், வழக்கத்துக்கு மாறாக  தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார். ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால், அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, “கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?” என்று கேட்டன. “இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்” என்றன பாதுகைகள். பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை. உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன்,  “நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான். ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள்தான்” என்று பதிலுக்கு வாதிட்டன.

    கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி காத்து நின்றன. பகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. “இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தர்மத்தை நிலைநாட்ட ,ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது” என்றார் பகவான்.

     

                                                                           

     

    பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய  ‘நான்’ என்ற  ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்,என்பதே  சடாரி சாதித்தலின்  பின்னணியில் உள்ள தாத்பரியம்.

    இனி நாம் கோவிலுக்கு செல்லும் போது,இதை நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.நம் இந்து மதத்தின் சம்பிரதாயங்களுக்குப் பின் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துப் போற்ற வேண்டும்.

  • பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை விரதம்…

    புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.
    பெருமாளுக்குரிய கிரகமான புதன் கன்னி ராசியில் புகுவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நிகழ்கிறது. அதே நேரம் புரட்டாசி மாதத்தில்தான் சூரியனும் கன்னி ராசியில் புகுகிறது. ஆகவேதான் புரட்டாசி சனிக்கிழமைகள் அன்று விரதம் மேற்கொள்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. அதுவும் சாத்வீகமான எளிய உணவாக இருத்தல் வேண்டும். மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் வேண்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நீராடி புருஷோத்தமனை வணங்கிய பின்பு சாதாரணமான உணவுகளை உண்ணலாம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதியாகவம், லக்னங்களில் ரிஷபம், கன்னி, துலாம், கும்பத்திற்கு யோகாதிபதி ஆகவும் விளங்குகிறார். இவர்கள் தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் அவரால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ளவும். தவறாமல் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

  • வறுமைகள் நீங்க புரட்டாசி மகாலட்சுமி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

  • காவிரி மகா புஷ்கரம் கோலாகலம் ….

    புரட்டாசி மாத பிறப்பான இன்று காவிரி மகாபுஷ்கரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ விழா ஆகும். இந்த விழாவின்போது பக்தர்கள் காவிரி நதியில் புனித நீராடினால் கங்கையில் குளித்த பயனை அடைவர் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ, அந்த ஆண்டு அந்த ராசிக்கான நதியில் புஷ்கரம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் நேற்று திருக்கணித பஞ்சாங்கப்படி துலா ராசியில் இடம் பெயர்ந்துள்ளார். இதனால் துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புனித நீராடுவது சிறப்பு. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆறு துலா கட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காவிரி தாய் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பையொட்டி, 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் திரண்டனர். காவிரி தாய்க்கு ஆரத்தி எடுக்கும் விதமாக வெற்றிலையில் பூஜை பொருள்களை வைத்து கற்பூரம் ஏற்றி ஆற்று நீரில் மிதக்க விட்டனர். புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் காவிரி நீரில் நீராடினர்.

  • வெற்றியை தரும் விஜயதசமி நன்னாள்

     

    நவராத்திரி நாள்களில்,மற்ற நாட்களைக் காட்டிலும் தேவியரை அதிகமாக பூஜிக்க, வேண்டும்.கல்வி, செல்வம், வீரம் என்ற முப்பெரும் செல்வங்களை நமக்கு குறைவில்லாமல் அருளும் தேவியர்களை வழக்கத்தை விட இந்த நாட்களில் இன்னும் அதிகமாக கொண்டாடுவது தான் சிறப்பு. விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான்  துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

     

                                                                  

    இதையே கொல்கட்டா போன்ற வடமாநிலங்களில் துர்கா பூஜையை  விஜயதசமியாகவும்,கொண்டாடுகிறார்கள். தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலகம் போற்றும்  மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மைசூரூ தசரா பண்டிகையில்,இடம்பெறும்  ரத ஊர்வலத்தைக் காண நம்மூரில் இருந்து  மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவது சிறப்பு.

    சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ,ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது  ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன்,ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.

    ஆதிசங்கரர், ஒருமுறை தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது மண்டனமிஸ்ரர் என்னும் ஞானியுடன் விவாதம் செய்து, வெற்றி பெற்றார். மண்டனமிஸ்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார்.

    அப்போது மண்டனமிஸ்ரரின் மனைவியான சரசவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூற , ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று மறுத்தார். சரசவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.

    அப்படியில்லாமல் அவர்கள் திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை என்றும் கூறவே, அதன்படியே பயணம் தொடருகிறது. சிருங்கேரி  மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் மேலும் பயணத்தைத் தொடரும் முன்னால் அங்கே ஒரு கர்ப்பிணியான தவளை பிரசவித்துக் கொண்டிருக்க, அந்தத் தவளைக்கு வெயில் தாக்காதபடி ஒரு பாம்பு படம் உயர்த்தி குடை பிடிக்கும் அற்புதத்தைப் பார்க்கிறார்.

    அந்தப் புனிதமான இடம் மகான் ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் எனப் புரிந்து கொண்ட ஆதிசங்கரர் இந்த இடமே தானும் தன் சிஷ்யர்களும் தங்கியிருக்கத் தகுந்த இடம் எனத்தீர்மானத்து திரும்பிப் பார்க்கவே, சரசவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவாகி நின்று விடுகிறாள். அத்துடன் அவள் ஆதிசங்கரரிடம் அசரீரியாக, சாரதை யாக தான் இங்கேயே இருப்பதாகவும், இந்தத் தலத்தில் தன்னைப் பூஜித்து வருபவர்களுக்கு, தன்னுடைய அருள் பரிபூரணமாகக்கிட்டும் எனவும் கூறிகிறாள்.

    அப்படி சிருங்கேரியில் சாரதை குடிகொண்டநாள்  தான் விஜயதசமி எனவும், அன்று அவளைப் பூஜித்து குழந்தைகளின் கல்வியை  ஆரம்பித்தால், சாரதையின் அருள் பரிபூரணமாகக்கிட்டும் என்பது ஐதீகம்.

     விஜயதசமி தினத்தன்று பண்டாசுரனுடனான போரில், தேவி அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட, அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சாய்த்து, அசுரனைச் சங்காரம்  செய்தாள். இதனை ஞாபகப்படுத்தும் விதமாக விஜயதசமியன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம் நடைபெறுகிறது.

     தேவியின் வெற்றி விழாவான விஜயதசமியில் நாமும் நற்செயல்களை தொடங்கி வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வை காண்போம்.

     

  • திருப்பதி திருக்குடையை தரிசிக்க தயாரா?

    சென்னையில் இருந்து செப்டம்பர் 21ஆம் தேதியன்று திருக்குடை ஊர்வலம் புறப்படுகிறது என்று ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது தமிழகத்தில் இரண்டு மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை, கிளி, வஸ்திரம். இவற்றை சூடிக்கொண்டுதான் பக்தர்களுக்கு காட்சி தருவார் ஏழுமலையான். மற்றொன்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக பாரம்பரியமிக்க திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆண்டும் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது. சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் வருகிற 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. திருக்குடை ஊர்வலமானது 26ஆம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

  • திருப்பதி செப். 23 பிரம்மோற்சவம் துவக்கம்…

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழாவை ஒட்டி அக்டோபர் 1ந் தேதி வரை 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் பவனி வருகிறார். திருப்பதி ஏழுமலையான்கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி செப்டம்பர் 19-ந் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 22-ந் தேதி அங்குரார்ப்பணமும் நடக்கிறது. அதனை தொடர்ந்து 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையும் மொத்தம் 16 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் உலா வருகிறார். 23-ந் தேதி மாலை துவாஜரோகணம் எனும் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு 9 மணி முதல் 11 மணி வரை பெரியசே‌ஷ வாகன வீதி உலா நடக்கிறது. 24-ந் தேதி காலை 9 மணிக்கு சின்னசே‌ஷ வாகனத்திலும், இரவு 9 மணிக்கு அம்ச வாகனத்திலும், 25-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 26-ந் தேதி காலை 9 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு 9 மணிக்கு சர்வபூபால வாகனத்திலும் வீதிஉலா நடக்கிறது. 27-ந் தேதி காலை மோகினி அவதாரத்திலும், இரவு 7.30 மணிக்கு கருடவாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா வருகிறார். 28-ந் தேதி காலை அனுமந்த வாகனத்திலும், மாலை 5 மணிக்கு ஸ்வர்ண ரதோட்சவத்திலும், இரவு 9 மணிக்கு கஜவாகன வீதி உலாவும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 9 மணிக்கு சூரியபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. அக்டோபர் 1-ந் தேதி காலை 6 மணிக்கு சக்ரஸ்நானம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு துவாஜரோகனம் நடக்கிறது.