Blog

  • சபரிமலை அக்டோபர் 16ல் நடைதிறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோயில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரநாமம், களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகின்றன. மேலும் இந்த 5 நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி நடை சாத்தப்படுகிறது.

  • நீங்கள் தீபம் ஏற்றும் முறை சரியா?

    தினந்தோறும் காலையும், மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவற்றின் பலன்கள் பற்றியும் தெரியும்?
    தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தைமட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
    சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
    திரிகளின் வகைகளும் அதன் பலன்களும்:
    1. பஞ்சுத்திரி – சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
    2. தாமரைத் தண்டு திரி – முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
    3. வாழைத்தண்டு திரி – மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
    4. வெள்ளெருக்குப் பட்டைத் திரி – செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.
    5. தம்பதிகள் மனமொத்து வாழவும், மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.

  • சபரிமலை மேல்சாந்தி தேர்வு அக்டோபர் 17ல் நடக்கிறது

    சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி தேர்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் கோயில் மேல்சாந்திகள் ஆண்டுதோறும் புதிதாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியின் பொறுப்பு ஐப்பசி மாத பூஜைகளுடன் நிறைவு பெறுகிறது. கார்த்திகை முதல் தேதியில் இருந்து புதிய மேல்சாந்திகள் ெபாறுப்பு ஏற்கவேண்டும்.

    இதையொட்டி புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்ய திருவிதாங்கோடு தேவஸம் போர்டு நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல்சாந்தி பொறுப்புக்கு 67 பேரும், மாளிகைப்புரத்து அம்மன் கோயிலுக்கு 44 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு கடந்த 5, 6ம் தேதிகளில் நடந்தது. இதில் சபரிமலை மேல்சாந்திக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 14 பேரும், மாளிகைப்புரத்துக்கு 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து தலா ஒருவர் வரும் 17ம் தேதி குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  • கல்விக்காக அமைந்த முதல் கோவில் எது தெரியுமா?

    முதல் கோவில் கல்வி தெய்வத்திற்கு கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ளது.

    இது ஹயக்ரீவரின் முதல் கோவில் ஆகும். இந்த கோவிலின் சிறப்பு அம்சமே பிரார்த்தனைக் கிணறு இருக்கிறது.

    அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.விஷ்ணு தன்னை வழிபட்டு வரும்படியும்,தக்க சமயத்தில் உதவுவதாகவும் வாக்களித்தார்.அதன் படி ,சக்கராயுதத்தை ஏவினார்.அது அசுரர்களை அழித்தது.

    தேவர்களுக்கு மும்மூர்த்தி வடிவில் இத்தலத்தில் விஷ்ணு காட்சியளித்தார்.தேவர்களின் தலைவன் என்ற பொருளில் தேவநாத சுவாமி என பெயர் ஏற்பட்டது.

    ஒரு முறை விஷ்ணுக்கு தாகம் ஏற்பட்ட பொது,கருடனிடம் தண்ணீர் கொண்டுவரப் பணித்தார்.அவர் எடுத்த வர தாமதம் ஆனதால் ஆதி

    சேஷனிடம் கேட்டார். அவர் தன் வாலால் தரையில் அடிக்க தீர்த்தம் பீறிட்டது. தெற்கு பிரகாரத்தில் கிணறாக உள்ளது.

    இத்தீர்த்தம் சேஷ தீர்த்தம் எனப்படுகிறது. பிரார்த்தனைக் கிணறாக இருக்கும் இதில் உப்பு,மிளகு வெல்லமிட்டு பிரார்த்தனை செய்கின்றனர்.

    இங்கு வழிபட சர்ப்ப தோஷம் விலகும்.திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    இத்தலத்திற்கு அருகில் பிரம்மாச்சலம் மலை உள்ளது. இது 73படிகளை கொண்டது. இங்கு லட்சுமி ஹயக்ரீவருக்கு தனி  சன்னதி உள்ளது.

    வேதாந்த தேசிகன் மலை மீது தவம் புரிந்து ஹயக்ரீவர், கருடாழ்வார் அவர்களின் தரிசனத்தை பெற்றார். வியாழக்கிழமை தோறும் மாணவர்கள் ஹயக்ரீவருக்கு துளசி,கல்கண்டு,தேன் படைத்து வழிபடுகின்றனர்.

     

  • பெருமாளின் ஆர்த்தியை கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா?

    பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு காட்டப்படும் ஆர்த்தியை தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்ளலாமா?

    கூடாது……

    பெருமாள் கோவிலை பொருத்தமட்டில், பெருமாளுக்கு காட்டப்படும் ( ஆர்த்தியை ) தீபாராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை , கர்பக்கிரகத்திலேயே ஆராதகர் வைத்து விடுவார்கள். அது தான் சரியான முறையாகும்.

    ஆனால் தற்போது சில சந்தர்ப்ப சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வருகிறார்கள். ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வந்தாலும் , நாம் அதை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வது கூடாது. அது தவறாகும்.

    பெருமாள் கோவிலை பொருத்த மட்டில், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டும் தான் முக்கியம். பெருமாள் கோவிலை பொருத்த மட்டில் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக ஆராதகரின் தட்டு , தீபம் , எதையும் பக்தர்கள் தொடுவது கூடாது.

    சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், என்கிறார்கள். இவ்வளவும் சொல்வதற்கு முக்கிய காரணம்,….எந்த கோவிலுக்கு செல்கிறோமோ, அந்த கோவிலின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும்.

    எனவே, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, ……. பெருமாள் கோவில் முறைக்கும், சிவன் கோவில் முறைக்கும், வித்தியாசங்கள் நிறைய உள்ளன. அவைகளை நன்கு தெரிந்து கொண்டு, அந்தந்த முறைகளை, அந்தந்த கோவில்களில், சரியாக பயன்படுத்த வேண்டும். முறைகளை மாற்றம் செய்தீர்கள் என்றால் ,அந்த கோவிலின் பலன் உங்களுக்கு கிடைக்காது. என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

     

     

  • கார்த்திகை  விரதம் முருகனுக்கு உகந்தது ஏன்?

     

    கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம். 

    அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

    உணவின் மீது ஆசைப்படும் நாம் ஏதேனும் ஒரு நாளில் விரதமிருந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது. என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.அது இறைவனுக்கு உகந்த நாளாக இருப்பது உத்தமம். இதனால்  இறையருளுக்கும் பாத்திரமாக முடிகின்றது. ஆரோக்கியத்திற்கு வித்திட்டு பலத்தையும் கொடுக்கின்றது. அன்றைய தினம் முழுவதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் ,அவை புத்துணர்ச்சியும் பலமும் பெறுகின்றன.அதனால் உடல் ஆரோக்கியம் பெறுகின்றன.

    கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும். இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

    ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.. இவ்வளவு பெருமை வாய்ந்தது கார்த்திகை விரதம்.

  • ராகு தோஷம் நிவர்த்தி தரும் கோவில் இது…..

    ராகு  பகவானுக்கு உரியதலம்  தமிழகத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில் தான் அனைவருக்கும் நினைவுக்கு  வருவது. அதே போன்று ராகு  தோஷம் நிவர்த்தி தரும் கோவில் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். திருநாகேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட சக்தி வாய்ந்த ராகு யந்திரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

     இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் ராகு தோஷம் நிவர்த்தியாகிட சிறப்பு அபிஷேகங்கள்,வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.  ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்த பொருளை நோயில் இருந்து நிவாரணம் பெற வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் அருந்துகின்றனர்.

     இக்கோவிலில் பக்தர்களே நாம் கொண்டு போகும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறார்கள். அதனுடன் பிரசாதத்தை ராகு பகவானுக்கு படைத்து பின்னர் தங்களுடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

     ராகு பகவானுக்கு உரிய அதிதேவதையான ,துர்க்கையின் அம்சமான கருமாரி அம்மன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால் விரைவாக  தோஷங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். அதனால்  இத்தலத்திற்கு வந்து ராகு பகவானை வழிபட்டால்  திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானை வழிபட்ட பலனை  அடையலாம். ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி நன்மை பெற  ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிப்பட்டு செல்கிறார்கள்.

     

  • துளசி ஏன்? பெருமாளுக்கு உகந்தது!

     

     பெருமாளுக்கு உகந்த துளசி திர்த்தம், எதற்காக உகந்தது என்றால் துளசி இலையின் நுனியில் நான் முகனும்,மத்தியில் திருமாலும்,அடியில் சிவனும்,மற்றைய பகுதிகளில் பனிரெண்டு ஆதித்யர்களும் பதினோரு ருத்திரர்களும் எட்டு வசுக்களும்,இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

    துளசி  பெருமாளுக்கு உகந்தது. துளசிக்கு பிருந்தை என்ற பெயரும் உண்டு. அதோடு விஷ்ணுபிரியா, ஹரிப்ரியா என்ற பெயர்களும் துளசிக்கு உரியவை. வைணவத்திருத்தலங்களில், பெருமாள் கோவில்களில் தரப்படும் துளசி தீர்த்தம், மிக விஷேசமான ஒன்று, பச்சைக்கற்பூரம் உடன் சேர்ந்த அதன் நறுமணமும், உடலுக்கு தரும் புத்துணர்ச்சியை தர வல்லது.பெருமாளுக்கு உகந்த தெய்வீகத்தன்மையுள்ள துளசி, காயகற்ப மூலிகையென, சித்தர்களால் போற்றப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் பூஜை செய்யும் பொது  அர்ச்சனைக்காகவும்,அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும் துளசி இலை முக்கியத்துவம் பெறுகிறது.

    பெருமாள் கோவிலில் பெருமாளை தரிசனம் செய்த பிறகு தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று கூறுகின்றனர். துளசியின் மகிமையை உணர்ந்தவர்கள் வீடுகளில் துளசியை இறைவனுக்கு சமமாக கருதி துளசிச் செடியை நட்டு வழிபடுகிறார்கள்.

    கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தம் மருத்துவ குணங்கள் உடையது. சுத்தமான நீரைவிட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நன்மை தருவதாகும்.துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

    பழங்காலத்திலிருந்தே துளசி மாடம் அமைத்து வழிபடும் வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. துளசி பெருமாளுக்கு மிகவும் பிரியமானதாக சொல்லப்படுவதால் எல்லா வைணவ தலங்களிலும் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். எனவேதான் துளசி நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பாக சொல்லப்படுகிறது.

     

    துளசி ஆராதனை துதி!

    நாபிக்கமல மம்மா நல்லவனின் தேகமம்மா
    நான்முகனும் தஞ்சமென நாடியங்கு வீற்றிருப்பான்
    கோபிக் கமலனிகள் கூட்டுதனை விரும்புகின்ற
    கோவிந்தன் கொண்டாடும் கொள்கை துளசியம்மா!

  • சிவன் அருள் கிடைக்க வழிபடும் முறை…

    சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் ராஜகோபுரத்தை தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும். எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும். இந்த கொடிக்கம்பத்தில் தான் கோயிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள். அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.
    கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும். கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

  • விபூதி – மூன்று கோடுகளின் மகிமை

    விபூதியால் நெற்றியில் போடும் மூன்று கோடுகளுக்கும் மகிமை உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.
    முதல் கோடு
    அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
    இரண்டாவது கோடு
    உகாரம், தக்ஷிணாக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
    மூன்றாவது கோடு
    மகாரம், ஆஹவனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.