ஆந்திர மாநிலத்தில் திருமலையில் குடிகொண்டு அருள் பாலித்து வருபவர் ஏழுமலையான். இதேபோன்று தெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில் யாதாத்ரி குட்டா எனும் இடத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மலைமீது அமைந்துள்ள இக்கோயிலை திருப்பதி ஏழுமலையான் கோயில் போன்று புதுப்பிக்க வேண்டுமென தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் விரும்பினார். இதன் காரணமாக இக்கோயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மூடப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. இக்கோயிலை சுற்றிலும் உள்ள 7 கிராமங்களை அரசு கையகப்படுத்தியது. மொத்தம் 14,000 ஏக்கரில் இங்கு சுற்றுலா மையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆன்மீக சொற்பொழிவு மையங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள், பஸ் நிலையம், அரங்குகள், உட்பட அனைத்து வசதிகளும் உருவாகி வருகிறது. கோயில் மட்டும் 11 ஏக்கரில் உருவாகி வருகிறது. இதில் முகப்பு ராஜ கோபுரம் மட்டும் 9 நிலைகளுடன் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிப்பார்கள் என்றும், ஆண்டு வருமானம் ரூ. 200 கோடியை தாண்டும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் 2.7 கி.மீ தொலைவிற்கு கிரிவலம் செல்ல வசதியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சாலையும் புதுப்பிக்கப்பட்டு, குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதிகள், மின் வசதி போன்றவை செய்யப்பட்டு வருகிறது.
Blog
-
சஷ்டி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய மந்திரம் …
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே
திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே. -
வேறு எங்கும் இல்லாத அதிசயம் இங்கு!
வேறு எந்த கோவிலும் காணாத அதிசியம் இக்கோவிலில்
முருகன் என்றாலே,திருச்செந்தூர்,பழனி,திருபரங்குன்றம்,பழமுதிர்ச்சோலை,திருத்தணி,சுவாமி மலை என்ற அறு படை வீடுகள் தான் நம் நினைவுக்கு வரும். அதை தவிர குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும். குன்று இருக்கும் இடமெல்லாம் தலம் தோறும் வீற்றியிருந்து. தம்மை நாடி வருவோரின் துயர் தீர்த்து நன்மை அளிக்கிறான் குமரன்.
அத்தகைய சிறப்பு மிக்க முருகன்,பல்வேறு தலங்களில்,பல்வேறு அருட்கோலங்களுடன் காட்சி தருகிறான்.அவற்றுள் முக்கியமான ஒன்றாக விளங்குவது இரத்தினகிரி.
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ளது இரத்தின கிரி மலை. இந்த ஐயர் மலையை இரத்தின கிரி, மாணிக்க மலை, சிவாய மலை, ஆராதனசலம், திருவாட்போக்கி மலை ,இதனால் ஐவர் மலை என்றும் அழைப்பார்கள்.இந்த ரத்தின கிரி மலையில் எழுந்தருளியுள்ளதால் இம்மலை உலக புழழ் பெற்றது.
மேலும் இம்முருகன் கோவிலை 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
இம்மலையில் முருகன் அருள் பாலிக்கதா இடமே இல்லை என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு முருகன் அருள் எங்கும்,எதிலும் நிரந்து பரவியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலயம் அமைந்து இருக்கும் மலையின் மீது,வேறு எங்கும் இல்லதா அதிசியமாக காகங்கள் பறப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் இது சனி தோஷ நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது.மேலும் ஒரு அதிசியம் இங்குள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால்,சில மணி துளிகளிலேயே அந்த அபிஷேக பால்,தயிராக மாறி பக்தர்களை அதிசயிக்க வைக்கிறதாம்.
-
குருபகவனாக வீற்றிருக்கும் ஈசன்!!
நவ கயிலாயத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த ஆலயத்திற்கு உள்ளது.அது என்ன வென்றால்,சிவபெருமான் ,குருபகவனாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு அம்சமாகும். நவ கயிலயங்களில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு. இந்த கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது.
வியாழபகவனாய் வீற்றிருக்கும் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவில் தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைத்துள்ளன. இங்கு கயிலாசநாதாரகவும்,அம்பாள் சிவகாமியாகவும் அருள் பாலிக்கிறார்கள்.
புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு,வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடினால் காசியில் நீராடுவதற்கு சமம் ஆகும். அது மட்டுமல்லாது, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இக்கோவிலில் உள்ளது. இதனால் இந்தியாவிலேயே மிக சிறப்பு மிக்க இடமாகும்.
முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபதுமனின் வழியில் வந்த அரக்கன் ஒருவன் இந்த பகுதயில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடுமையான தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.அத்துன்பத்தை தாங்க முடியாமல் அனைவரும் கயிலாயத்தில் ஈசனிடம் சென்று முறைப்படி முறையிட்டனர். சிவபெருமான் உள்ளம் உருகி முனிவர்களுக்கு அருள்பாலித்தார்.முறைப்படி முறையிட்ட காரணத்தால் தான் இத்தலம் முறைப்படு நாடு என பெயர் பெற்றது. நாளடைவில் முறப்பநாடு என்றானது.
இக்கோவிலில் கருவறை சுவர் அருகே பஞ்ச லிங்கமும்,தென்மேற்கு மூலையில் கன்னி விநாயகரும் உள்ளனர்.வடமேற்கில் சுப்பிரமணிய சுவாமி,வள்ளி- தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.,இதனுடன் சனிஸ்வரர்,சண்டேஸ்வரர், கால பைரவர் சிலை உள்ளது. இங்கு பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். வாகனம் நாயுடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும்,வாகனம் இல்லாமல் காட்சி தரும் பைரவர் வீரபைரவர் என அழைக்கப்படுகின்றனர்.
இங்குள்ள கயிலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் ,மஞ்சள் வஸ்திரம் சாத்தி,கொண்டைகடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது. சிவராத்திரி,குருப்பெயர்ச்சி,திருக்கார்த்திகை,ஆடி அமாவாசை,தை அமாவாசை போன்ற நாட்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
இங்குள்ள இறைவனையும்,அம்பாளையும் வழிப்பட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். உடல் ஆரோக்கியம் கிட்டும்,நல்ல குடும்பம் அமையும் என்பது பக்தர்களின் ஐதிகம். இத்தலத்தில் உள்ள இறைவனை வழிப்பட்டால் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருபகவானை(சிவபெருமானை) வழிப்பட்டதற்கு சமம் ஆகும்.
-
திருப்பதி போறீங்களா? முதலில் இத படிங்க?
திருப்பதி திருமலை ஏழுமலையான், பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். ஏழுமலையான் குறித்த புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தை எடுத்துக்காட்டுகின்றன. சரி, எந்த ஊராக இருந்தாலும், தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் பணம் செலவாகுமே? ஆனால் திருப்பதியில் அப்படி இல்லை. திருப்பதி ஏழுமலையானுக்கு குவியும் காணிக்கைகள் கொண்டு பல்வேறு திட்டங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது… அதன்படி திருமலை-திருப்பதியில் என்னவெல்லாம் இலவசம் என்று பாருங்கள்…
• திருப்பதி பஸ்-ஸ்டாண்டின் எதிர்புறம் இருக்கும் சீனிவாசன் காம்ப்ளக்ஸில் இலவசக் குளியலறைகள், கழிவறைகள் உள்ளன. இவை தவிர நமது லக்கேஜ் பையை வைக்க, இலவச லாக்கர்களும் உள்ளன. அதில் நாம் கொண்டு போன லக்கேஜ்களை வைத்துவிட்டு, அங்கிருக்கும் ஹாலில் ஓய்வெடுக்கலாம். இரவு நேரம் என்றால் அங்கேயே படுத்து உறங்கலாம். சுத்தமாகவும் சிறப்பாகவும் அவை பராமரிக்கப்படுகின்றன. கீழ்த் திருப்பதியிலிருக்கும் கோவிந்தராஜ சுவாமி கோயில், அலமேலு மங்காபுரம் ஆகிவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம்.
• ரயிலில் வருபவர்களுக்கு வசதியாக ரயில் நிலையம் எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்திலும் இதே போல் வசதிகள் உள்ளன.
• கீழ்த் திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்துசெல்ல விரும்புபவர்களுக்கு வசதியாக அலிபிரிக்கும், ஶ்ரீவாரிமெட்டுக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இலவச பஸ் வசதி உண்டு.
• திவ்ய தரிசனம் செய்ய, நடந்தே மலையேறி வருபவர்களுக்கு வசதியாக அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை இலவசமாகக் கொண்டு செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லட்டு ஒன்று இலவசமாக வழங்கப்படுகிறது.
• திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல இடங்களிலும் இலவச லாக்கர் வசதி உண்டு. இதில் நம் லக்கேஜ்களை வைத்துச் செல்லலாம். ஆனால், மிகவும் காஸ்ட்லியான நகைகள், அளவுக்கு அதிகமான பணம் இவற்றைத் தொடக்கத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.
• திரும்பிய பக்கமெல்லாம் இருக்கும் இலவசக் கழிப்பறைகள், பக்தர்கள் காலைக் கடன்களை முடிக்க எளிதாக உதவக்கூடியவை.
• உங்களின் செல்போன், காலணிகளைப் பாதுக்காப்பாக வைப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அங்கு வைத்து டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.
• ‘கல்யாணக்கட்டா’ என்று சொல்லப்படும் முடிக்காணிக்கை செய்யும் இடத்தில் முடிக்காணிக்கைக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. இங்கு சந்தனம் மற்றும் புதிய பிளேடு ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
• சர்வதரிசன க்யூவில் சென்று சுவாமி தரிசனம் செய்தால், தரிசனம் செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது. செவ்வாய், புதன்கிழமைகளில் கூட்டம் மிகவும் குறைவாக இருக்கும். தரிசனத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் பொங்கல், சாம்பார் சாதம், உப்புமா இவற்றில் ஏதேனும் ஒன்று இலவசமாக வழங்கப்படும். சிலவேளைகளில் பசும்பால் வழங்கப்படும்.
•தரிசனம் முடித்து வரும் அனைவருக்கும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். இல்லாவிட்டால், பொங்கல், புளியோதரை, மிளகு சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும்.
• கோயிலின் பிரதான வாசலைத் தாண்டி வெளியே வந்தால், தரிகொண்டா வெங்கமாம்பா இலவச அன்னதானக்கூடம் இருக்கிறது. இங்கு வேண்டுமளவு சாதம் சாம்பார், ரசம், மோர், பொரியல் துவையலுடன் இலவசச் சாப்பாடு வழங்கப்படுகிறது.
• இதையெல்லாம் தாண்டி மலை முழுவதும் சுற்றி வர, இலவச பஸ் ஆரஞ்சு நிறத்தில் ரதம்போல பவனி வருகின்றது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு பஸ் என காலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரை மலையைச் சுற்றி வருகிறது. இதில் ஏறி நாம், திருமலையில் எந்த இடத்தில் இறங்க வேண்டுமோ அங்கு இறங்கிக் கொள்ளலாம்.
• இது தவிர இலவச மருத்துவமனை ஒன்றும் 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. -
தெய்வீக வாழ்வு வாழ அருள் பாலிக்கும் கந்த சஷ்டி விரதம்
கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர்.
தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.
பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும். -
தீபாவளி பலகாரங்களை பாரம்பரியத்துடன் செய்வது எப்படி?
1.முள்ளு முறுக்கு
என்னென்ன தேவை?
பச்சரிசி – 3 கப்,
கடலைப் பருப்பு – 1 கப்,
பயத்தம் பருப்பு – 1/4 கப்,
எள் தேய்த்து காய்ந்தது – 1/2 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
கட்டி பெருங்காயம் – சிறிதளவு,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
வி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து செய்யவும்.
2. மைசூர் பாக்கு
என்னென்ன தேவை?
கடலை மாவு – 1 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – 3 கப்,
தண்ணீர் – 1 கப்.எப்படிச் செய்வது?
கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும். அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாக்காக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

3.அதிரசம்
என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு – 2 கப்,
வெல்லம் – 2 கப்,
தண்ணீர் – 1 கப்,
எண்ணெய் – தேவைக்கு,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.எப்படிச் செய்வது?
வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும். ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
(பச்சை அரிசியை ஊற வைத்து வடித்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்து அதிரசம் செய்தால் மிருதுவாக இருக்கும். அதிரசத்துக்குப் பாகுதான் முக்கியம். ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.
4.முந்திரி கத்லி
என்னென்ன தேவை?
முந்திரிப் பருப்பு – 1 கப்,
சர்க்கரைத் தூள் – 1 கப்,
ரோஸ் எசென்ஸ் – சில துளிகள்,
சில்வர் பேப்பர் – அலங்கரிக்க,
நெய் – 2 டீஸ்பூன்.எப்படிச் செய்வது?
முந்திரிப் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். ஓர் அடிகனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்துக் கை விடாமல் கிளறவும். சுருண்டு வரும்போது எசென்ஸ் சேர்க்கவும். உடனே இறக்கி மீண்டும் கிளறவும். 1 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும். சில்வர் பேப்பரால் அலங்கரிக்கவும்.
இன்னொரு செய்முறை
முந்திரிப் பருப்பை உலர வைத்து மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும். அத்துடன் தண்ணீர், சர்க்கரை சேர்த்து ஒரு கம்பி பாகுப் பதத்துக்கு காய்ச்சவும். அதில் முந்திரிப் பொடியை கொட்டி, கிளறி இறக்கவும். எசென்ஸ் சேர்த்து சூடாக இறக்கியப் பின் கிளறி, தட்டில் நெய் தடவி ஊற்றி ஆறியதும் துண்டுகள் போடலாம். சுலபமாக செய்யலாம் இந்த கத்லி.
5.ரவா லட்டு
என்னென்ன தேவை?
பாம்பே ரவை – 1/2 கிலோ,
சர்க்கரை – 1/2 கிலோ,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
முந்திரி, திராட்சை – தலா 50 கிராம்,
நெய் – 1/4 கிலோ அல்லது தேவைக்கு.எப்படிச் செய்வது?
ரவையை வெறும் கடாயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்து உடைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூளுடன் கலக்கவும். இப்போது வறுத்த ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள், உடைத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.
(ரவையை பொடித்தும் ரவா லாடு செய்யலாம். இத்துடன் சிலர் 1/2 கப் வறுத்துப் பொடித்த பாசிப் பருப்பு தூள் சேர்த்தும் செய்கிறார்கள். சிலர் வறுத்த தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். ஆனால், உருண்டை பிடிக்க நெய் சூடாக இருக்க வேண்டும்.
6.சோமாஸ்
என்னென்ன தேவை?
மேல் மாவுக்கு…
மைதா – 250 கிராம்,
ரவை – 1/2 கப்,
நெய் – 1 டீஸ்பூன்.பூரணம் செய்ய…
கசகசா – 1 டேபிள்ஸ்பூன், பொடித்த பொட்டுக் கடலை – 1/2 கப், பொடித்த சர்க்கரை – 1 கப், வறுத்து நறுக்கிய முந்திரி – தேவைக்கு, கொப்பரை தேங்காய் – 1 மூடி (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய் – தேவைக்கு, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
மேல் மாவுக்குக் கொடுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஈரத் துணி போட்டு மூடி வைக்கவும். கசகசாவை வறுத்து பொடிக்கவும். அத்துடன் பூரணத்துக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை பூரிகளாக இட்டு, சோமாஸ் அச்சில் வைத்து சோமாஸ் வடிவம் கொடுக்கவும். இதனுடன் தேவையான பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.(அச்சு இல்லாமலும் செய்யலாம். அல்லது பூரியின் மத்தியில் வைத்து மடித்து, சோமாஸ் கட்டரால் ஓரங்களை வெட்டியும் செய்யலாம். இதுதான் பாரம்பரிய சோமாஸ்.
7.தேங்காய் பர்பி
என்னென்ன தேவை?
தேங்காய்த் துருவல் – 2 கப்,
சர்க்கரை – 2 கப்,
நெய் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
பால் – 1 டீஸ்பூன்.எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி, அதில் 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் பால் விட்டு பொங்கி வரும்போது கசடை எடுக்கவும். பின் சர்க்கரை சேர்ந்து கொதித்து கம்பிப் பதம் வந்தவுடன் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் நெய், ஏலக்காய் தூள் போட்டு சுருள வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.
(தேங்காயை அடி வரை துருவாமல் மேலோட்டமாகத் துருவிச் செய்ய வேண்டும். இப்படி செய்தால் பர்பி வெள்ளையாக இருக்கும். கலர் சேர்த்தும் கலர் பர்பி செய்யலாம்.
8.கோதுமை அல்வா
என்னென்ன தேவை?
சம்பா கோதுமை – 1/4 கிலோ,
சர்க்கரை – 1/2 கிலோ,
நெய் – 1/4 கிலோ,
முந்திரி – 25,
ஏலக்காய் தூள் – சிறிதளவு,
ஆரஞ்சு கலர் பவுடர் – சிறிது.எப்படிச் செய்வது?
சம்பா கோதுமையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் வடிகட்டி, பால் எடுக்கவும். அந்தப் பாலை 8 மணி நேரம் பாத்திரத்தில் அப்படியே வைத்தி ருக்கவும். அடியில் கெட்டியாக தங்கி, நீர் மேலே தெளிந்து நிற்கும். அந்த நீரை எடுத்து விடவும். கோதுமைப் பாலில் சர்க்கரை சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கரண்டியில் ஒட்டும் போது கலர் பவுடர் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ருசியான கோதுமை அல்வா ரெடி.
9.அச்சு முறுக்கு
என்னென்ன தேவை?
மைதா – 1 கப்,
சர்க்கரை – 1/2 கப்,
தேங்காய்ப் பால் – 1 கப்,
எசென்ஸ் – 1 டீஸ்பூன் அல்லது ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்,
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?மைதா மாவுடன் எண்ணெயை தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு நீர்க்க மாவாகக் கரைக்கவும். எண்ணெயை காய வைத்து, அதில் அச்சு முறுக்கு கரண்டிகளை வைத்துச் சூடாக்கவும். இந்த சூடான கரண்டிகளை மாவில் முக்கால் பாகம் மூழ்கும் அளவுக்கு நனைக்கவும். ஒட்டிக் கொண்ட மாவுடன் திரும்பவும் கரண்டியை எண்ணெயில் விடவும். ஒட்டிய பாகம் வெந்து வெளியில் வந்து விடும். திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
(மாவில் எசென்ஸ் சேர்த்ததும் புது மணத்தோடு இருக்கும். சுட்டெடுக்க தீ மிதமாக இருக்க வேண்டும். நன்கு சலித்த பச்சரிசி மாவு 2 கப், சர்க்கரை
1 1/2 கப், உளுந்து மாவு 1/2 கப், ஏலக்காய் தூள் சேர்த்தும் செய்யலாம். பல முறை சலித்து, கரைத்து அல்லது அரிசியை வெண்ணெயைப் போல் அரைத்து கலந்து செய்ய வேண்டும்.
10.பூந்தி
தேவையானவை: கடலை மாவு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றேகால் கப், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, பைனாப்பிள் ஜூஸ் – கால் கப், பைனாப்பிள் எசன்ஸ் – சில துளிகள், எண்ணெய் – பொரிக்க.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர், சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி, ஆறியதும் அதில் பைனாப்பிள் ஜூஸ், எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடலைமாவு மற்றும் சமையல் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் எண் ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியை எண்ணெயின் மேலே தூக்கி பிடித்து மாவை ஊற்றி வேறு ஒரு கரண்டியால் தேய்த்துவிடவும். பூந்தி முக்கால் பதம் வெந்ததும் எடுத்து, தயார் செய்துள்ள பாகில் சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஊறியதும் பரிமாறவும்.
-
நரகாசுரனை கொன்றது மட்டுமா தீபாவளி?
தீபம் என்றால் ஒளி, விளக்கு என்றால் ஆவளி வரிசை, வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கும் பண்டிகையே தீபாவளி ஆகும்.தீபத்தில் பரமத்துமாவும்,நெருப்பில் ஜீவாத்துமாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதிகம்.. ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை,தலைக்கணம் போன்ற இருட்டுகளை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்திட வேண்டும். தீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாப்படும் ஒரு இந்து பண்டிகை ஆகும்.
தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.
தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. , கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணுவராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன்.
ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான். நாளடைவில் நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யதான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, “அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்” என்றார்.
“நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்” என்றான். அதற்கு “உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்” என்றார். அதனால் அவன் “ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது” என்று வரமருளக் கேட்டான்.
வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான்.
இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். “கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்” என்றார் கிருஷ்ணர்.

ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.
கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு “முராரி” என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ”கதையை” வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா?
எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள்,”என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.
நரகாசுரன் கொல்லப்பட்ட அந்நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடி வருகின்றோம். உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் அந்த தீயவனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார்.
அதனால் தோன்றியதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றலானது.
தீபாவளியை இப்படியும் சொல்லாம்!
நரகாசுரன் கொல்லப்பட்ட அத் தினத்தையே தீபாவளிப்பண்டிகையாகக் கொண்டாடுவதாகப் புராணங்கள் விளக்குகின்றன. அதனால், இத்தினத்தை, நரக சதுர்த்தி என்றும் அழைப்பார்கள்.
கிருபானந்த வாரியார், ” பார்வதி தேவியர் கேதார கெளரி விரதம் இருந்து, சிவபெருமானின் இடப்பக்கத்தில் இடம்பெற்ற திருநாளே தீப விழாவாகக் கொண்டாடப்படுகிறது ” என்றுரைக்கிறார்.
தீபாவளித் திருநாளில், திருக்கயிலாயத்தில், சிவனும், பார்வதியும் சொக்கட்டான் விளையாட்டு ஆடியதாக ஒரு புராணக் குறிப்பு உண்டு. இதை நினைவூட்டும் விதத்தில் குஜராத்தில் தீபாவளி தினத்தில் இந்து மக்கள் சொக்கட்டான் விளையாட்டு ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கானக வாழ்வு முடிந்து அரக்கன் இராவணனை அழித்து, சீதையை மீட்ட இராமபிரான், வெற்றித் திருமகனாக அயோத்தி திரும்பிய திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்கள் தோறும் தீபங்களை ஏற்றிவைத்து மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்களாம். அதுவே தீபத் திருநாளாக மாறியது என்று உரைக்கும் சான்றோரும் உண்டு.
இப்படி பலவிதமான காரணங்கள் கொண்டு தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டாலும், அத்திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான். ” தீமைகள் என்னும் இருள் அகன்று, உலகம் முழுவதும் பக்திப் பேரொளியைப் பெற வேண்டும் ” என்பதே அது. எனவே, தீபாவளித் திருநாளில், பெரியவர்கள் வகுத்துத் தந்த வழியில், முறையாக இறைவனைப் பூஜித்து அவனது அருள் பெற வேண்டும்.
-
தீமை அழிந்த நாளே தீபாவளி திருநாள்
பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் தீபஒளியின் அழகோடு, வான வேடிக்கை, பலவகையான இனிப்பு தின்பண்டங்கள் என கோலாகல உற்சாகம் தான் தீபாவளி. ஆனால் இது மட்டும் காரணம் இல்லை. மற்ற பண்டிகைகளில் இருந்து தீபாவளி வேறுபட இன்னும் ஒரு காரணம் உண்டு. ஒருவன் இறந்த நாளை சந்தோஷமாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிதான். நரகாசுரன் என்ற அரக்கன் இறந்த நாளான நரக சதுர்த்தியதைதான் தீபாவளியாக கொண்டாடுகின்றோம்.
ஹிரண்யாட்சனை சம்ஹரிக்க, திருமால் எடுத்த வராக அவதாரத்தில்,பூமி தேவிக்கும் திருமாலுக்கும் பிறந்தவன் தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனிடம் தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்கிற வரத்தை பெற்று இருந்தான்.
பௌமன் எனும் அந்த நரகாசுரன் ,காமரூபம் என்னும் நாட்டை ஜ்யோதிஷபுரம் என்னும் நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். பெயருக்கு ஏற்றார் போல் ஜ்யோதிஷபுரம் ஒளிபொருந்திய நகரமாக விளங்கியது.
எல்லா உலகத்தையும் தன் வசப்படுத்த நினைத்த நரகாசுரன் , கெட்ட சகவாசத்தால்,எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி, குரு, போன்றவர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.
பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்த நரகாசுரன்,“நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது” என்று வரம் கேட்டான். பிரம்மாவும் ,“நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்”எனக்கூறி வரத்தை கொடுத்து விட்டார்.
வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு அசுரக் குணம் தலைக்கேற தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர்.
தன் தாய் பூமாதேவியினால் மட்டுமே தன்னை அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர். போர் ஆரம்பித்தது.
சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள் என்பதால், சாரதியாக சத்தியாபாமாவை கண்ணன் அழைத்தார். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு ‘முராரி’என்ற பெயர் வந்தது. நடந்த கடும்போரில், நரகாசுரன் தன் ‘கதையை’ கண்ணன் மேல் வீச, மாயக் கண்ணனும், மயங்கி விழுந்ததுபோல் நடித்தார்.
சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு, நரகாசுரன் மேல் சரமாரியாக அம்பை எய்ய அவனும் மாண்டான்.அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.

நரகாசுரன் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். சாகும் தருவாயில்,கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டான், தன்னை சம்ஹாரம் செய்த அந்த நாளில் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பம் தீர்ந்தது என தலையில் எண்ணை தேய்த்துக் கங்கையில் நீராடினால் அவர்களுடைய துன்பங்களும், பாவங்களும் தீர்க்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் எல்லோரும் அன்றைய தினம் புத்தாடை அணிந்து. தீபமேற்றி, வெற்றித் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். “அப்படியே ஆகட்டும்”என கிருஷ்ணர் வரமளித்தார். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
நம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை தீப ஒளியாக ஏற்றி வைப்போம். தீபத் திருநாளை கொண்டாடுவோம்.
-
சனிப்பெயர்ச்சி விழா தயாராகும் திருநள்ளாறு….
திருநள்ளாறு கோயில் முக்கிய சுவாமி சன்னிதிகளில் 15 லட்ச ரூபாய் செலவில் பித்தளைத் தகடு பதிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவுக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், பைரவர் உள்ளிட்ட சன்னிதிகளில் பித்தளைத் தகடு பதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டி கடந்த மே மாதம் முதல் சன்னிதிகளில் தகடு பதிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஸ்ரீ ஆதி கணபதி, ஸ்ரீ சொர்ண கணபதி ஆகியவை ஒரே சன்னிதியில் இக்கோயிலில் உள்ளன. இது ஸ்ரீ சொர்ணகணபதி சன்னிதி என்ற பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. உத்ஸவம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது சொர்ணகணபதிக்கு தங்கக் கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்படும். சன்னிதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் ஆன்மிக வேலைப்பாடுகளுடன் பித்தளைத் தகடுகள் முதல்கட்டமாக விநாயகர் சன்னிதியில் பதிக்கப்பட்டது. அடுத்ததாக ஸ்ரீ சுப்ரமணியர் சன்னிதிக்கு பதிக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது. தற்போது தர்பாரண்யேசுவரர் சன்னிதிக்கு செல்லும் முகப்புப் பகுதியில் உள்ள 5 கருங்கல் தூண்கள், முகப்புப் பகுதி மற்றும் படிகளுக்கு தகடு பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஸ்ரீ பைரவர் சன்னிதிக்கு தகடு தயாரிப்புப் பணி நடந்துவருகிறது. ஒட்டுமொத்தப் பணிகளும் ரூ.15 லட்சத்தில் நன்கொடை மூலம் செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதற்குள் முடிக்கப்பட்டுவிடும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.