Blog

  • ore-alayam-onbathu-naracmmar

     

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் சுமார் 25 கிமீ தொலைவில் இருக்கிறது ஆவணியாபுரம். இங்கு சிறு குன்றின் மேல்,  நவ நரசிம்மர் ஆலயம் குடைவரைக் கோயிலாகக் காணப்படுகிறது.

    சிங்க முகத்துடன் நாராயணன் அருள்பாலிப்பதால் ஆவணிநாராயணபுரம் என்பதே இவ்வூரின் திருப்பெயர். திருவண்ணாமலை மாவட்டத்தின் மையமாக பாய்ந்தோடும் செய்யாற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது இந்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். திருப்பதியில் வெங்கடாஜலபதி, திருவரங்கத்தில் அரங்கநாதர், காஞ்சிபுரத்தில் வரதராஜபெருமாள், சோளிங்கரில் யோக நரசிம்மர், ஆவணியாபுரத்தில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இந்த நகரங்கள் பஞ்ச திருப்பதிகள் என பக்தர்களால் போற்றப்படுகிறது. பஞ்ச திருப்பதிக்கும் நேரில் சென்று சேவித்த பேரின்பத்தை, ஆன்ம நிறைவை, அகத்தின் மகிழ்வை ஓரிடத்தில் ஒருங்கே பெற முடியும் என்றால் விந்தையாக  தான் இருக்கும்.

     

    அறுபது வருடங்களுக்கு ஒரு முறை, சர்வதாரி வருஷத்தில், தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து உற்சவம் நடக்கிறது. இதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். பிரம்மா நாராயணனைக் குறித்து யாகம் செய்தபோது, யாகத் தீயிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்டாராம். அப்போது அவர் முகமற்று இருந்ததைக் கண்ட தாயார் மஹாலஷ்மி, முகமில்லாது பக்தர்களுக்கு எவ்வாறு தரிசனம் அளிப்பது என்று கேட்டு நரசிம்மரின் சிங்க முகத்தை தமக்கு அளிக்குமாறு வேண்ட, அவ்வாறே சிங்க முகம் பெற்றதாகச் சொல்கிறார்கள். அவ்வாறே அறுபது வருடங்களுக்கு ஒரு முறை ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயாருக்கு சிங்க முகம் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.

      

    ஆவணியாபுரத்து மலை உச்சியில் ஸ்ரீரங்கநாதரும், ஸ்ரீவெங்கடாஜலபதியும், ஸ்ரீவரதராஜபெருமாளும், யோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழ்மலையில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். பஞ்ச திருப்பதியின் நாயகர்களும் ஓரிடத்தில் எழுந்தருளிய புண்ணிய பூமியாக, ஆவணியாபுரம் திகழ்கிறது. ஆவணியாபுரத்து மலைமீது அமைந்துள்ள கோயில் கருவறையில் அமர்ந்த நிலையில் எழுந்தருளும் நரசிம்மருக்கு மட்டுமல்ல, அவரது இடபாகம் எழுந்தருளி திருமுகம் காட்டும் தாயாருக்கும் சிம்மமுகம். உற்சவரும் நின்றதொரு திருக்கோலத்தில் சிம்ம முகம். சன்னதியின் எதிரில் எழுந்தருளும் கருடாழ்வாருக்கும் சிம்ம முகம். இச்சிறப்பு வேறு எங்கும் காணக்கிடைக்காத பெரும் பேறு. இத்திருதலத்துக்கு மேலும் பல சிறப்புண்டு. நவ நரசிம்மரை சேவித்த பலனை இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெறுகின்றனர். லட்சுமி நரசிம்மர் கருவறையில் மூன்று நரசிம்மரும், தாயார் சன்னதி அருகே பஞ்ச நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மருமாக 9 நரசிம்மர் இக்கோயிலில் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர்.

    இரண்டு அடுக்காக திருக்கோயில்கள் அமைந்துள்ளன. முதலில் சுமார் எழுபது படி ஏறியதும், யோக நரசிம்மர் தரிசனம் பெறலாம். பின்னர், மேலும் நூறு படிகள் கடந்தால், ஸ்ரீனிவாச பெருமாளை நின்ற திருக்கோலத்தில் தரிசிக்கலாம். தாயாரின் திவ்யநாமம் அலர்மேல் மங்கை என்பதாகும். தாயாரை மலையடிவாரத்தில் சேவிக்கலாம்.  இவற்றைத் தவிர, பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் சந்நதியும் அமைந்துள்ளது.

    தாயாருக்கும், கருடாழ்வாருக்கும் சிங்க முகம் தரித்துச் சேவை செய்வது இந்த ஒரு கோயிலில்தான் என்று கூறுகிறார்கள். இக்கோயிலில் வழிபடுவது பல நன்மைகளைப் பயக்கும் என்பது நம்பிக்கை. திருமண பிராப்தி, புத்திர பாக்கியம், கடன் தொல்லையிலிருந்து விடுபடுதல் போன்ற பலவற்றிற்கும் இங்கு வந்து நரசிம்மருக்கும், கருடாழ்வாருக்கும் நிவேதனம் செய்து வழிபடுதல் வழக்கமாக உள்ளது. இதற்கான சடங்குகளை கோயில் அர்ச்சகர்களிடமிருந்து அறியலாம்.  ஒன்பது நரசிம்மர்களைக் கொண்ட தஷிண அகோபிலம் என்றும் இது அறியப்படுகிறது.

    ஓம் நமோ நாராயணா!

  • pengal-manjal-pusa-vendiyathu-avaciyuma

     

    கந்தகச் சத்து மிகுந்த மஞ்சளை ஒரு பெண் பூசுவதால் தன் கணவனை அன்யோன்யப்படுத்திட முடியும். நெற்றிப்பொட்டில் மஞ்சள் பொடியை இடும் பெண்களுக்கு ஆக்ஞா சக்கரம் மெதுவாகத் திறக்கப்பட்டு ஆன்மிகச் சக்தி பெருக் கெடுக்கிறது. கர்ப்ப காலத்திலும் மஞ்சளைப் பெண்கள் பூசுவதாலும் அருகில்  வைத்துக் கொள்வதாலும்,தீயசக்திகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.மஞ்சளில் விரளி,கஸ்தூரி,காஞ்சிரை என்ற மூன்று வகை உண்டு. காஞ்சிரை மஞ்சளை  மனநிலை சரியில்லாதோர் துர்சக்தி பாதிப்படைந்தோர் பயன்படுத்த, பூரண குணம் அடையலாம். மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த  கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது  அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள்  வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. லலிதா பரமேஸ்வரிக்கு ‘ஹரித்ரான்னைக ரஸிகா’ என்ற பெயர் உண்டு.மஞ்சள் சாதத்தை அதிகம் விரும்புபவள் என்ற பொருள். பெண்கள் ஹரித்ரா பயன்படுத்தினால் தரித்திரம் போய்விடும்.

  • chevvai-vellikizhamaigalil-panam-kodukka-kudathu-yanbathu-yen

     

    செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பதற்கான அர்த்தம் …

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.

    இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

    இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

    எனவே முடிந்தளவு, அதற்க்கு முந்தைய நாளோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ செலவை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணப்பற்றாக்குறையினை தவிர்க்கலாம் என்பது நம்பிக்கை.

  • astami-pairavarin-sirappu

     

    சிவலாயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. இவர் நாயை வாகனமாகக் கொண்டவர்.சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது பைரவர் என்ற திருநாமம். ‘பீரு’ என்றால் பயம் என்று பொருள்.பயம் தரக்கூடியவர்,எதிரிகளை அஞ்ச வைப்பவர் பைரவர்.

     இறைவனின் அம்சமாக, அவதாரமாக இருக்கும் பைரவருக்கு தேய்பிறையில் வரும் அஷ்டமி வழிபாடு மிக சிறப்பானதாகும். பைரவர் வழிபாடு ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்டு காலம், காலமாக நடைபெற்று வருகிறது. பைரவ மூர்த்திகளில் 64 திருவடிவங்கள் உள்ளதாகவும் மேலும் 108 வரை உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஒவ்வொரு பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் வடகிழக்குப் பகுதியில் பைரவருக்கு தனி சந்நதி இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் காலையில் சிவபூஜை சூரியனிடமிருந்து தொடங்கி அர்த்த ஜாமத்தில் பைரவருடன் முடிவடைகிறது.

    அஷ்டமி சிறப்பு!

    நட்சத்திரம், திதிகள் இணைந்து வருவதும், தனியாக வருவதும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்ததாகும். பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி சிறப்பானதாகும். கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

     

    நவக்கிரக பைரவர்!

    பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

    அஷ்டமி செவ்வாய்!

    தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்கியங்கள் கூடிவரும்.

    இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள்.அன்றைய தினம்  பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.

     

     

  • athisaya-kovil-aunduku-oru-murai-mattume-thirakkum

     

    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலின்  கொடி மரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன்,சிவபெருமான் அருள்பாலிக்கிறார். ஈசனுடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறான்.இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப், போல அம்பாளை முன்னிறுத்தும் ஆலயமாகும்.

    இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல்வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

    கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டமின்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.

    கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் ஹாசன் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். அத்துடன் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்பட வெளிமாநில பக்தர்களும், வெளிநாட்டை சேர்ந்தவர்களும் இங்கு வந்து அம்மனை வழிபட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தார்கள்.

    இந்த ஒன்பது நாட்கள்  மட்டும் திறக்கப்படும் கோவிலுள்ள அம்பாளை வழிபாடு செய்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

  • 2017-11-06-15-51-45

    சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக தலங்களில் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலும் ஒன்று. இங்கு நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 15-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. 40 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையில் அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். மண்டல பூஜைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் அங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை பிரசாதமான அப்பம், அரவணை தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

  • 2017-11-06-15-42-32

    திருப்பதியில் திருப்பதியில் பக்தர்களுக்கு சுடுநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருமலை-திருப்பதி தேவஸ்தான அனைத்துத்துறை தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது திருப்பதி அலிபிரி நடைபாதையில் உள்ள லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலில் இருந்து மோகாலிமிட்டா வரை நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு வாகனங்களால் எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏழுமலையான் கோவில் உள்ளே மகா துவாரத்தில் இருந்து தங்கக்கொடி மரம் வரை பக்தர்களுக்கு மழை, வெயிலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும். அலிபிரி மலைப்பாதைகளில் மண், கற்கள், பாறைகள் சரிந்து விழுவதை தடுக்க ஐ.ஐ.டி.நிபுணர்களை வரவழைத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. திருமலையில் வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து மின் கம்பங்களிலும் எல்.இ.டி. பல்புகளை பொருத்த வேண்டும். கோவிலில் வழக்கம்போல் மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும். கோவிலில் உள்ளே சீனிவாச கல்யாண உருவப்படங்கள், விமானப் பிரகாரம், கல்யாண மண்டபம், வண்டிகாகிலி ஆகிய பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். அன்னப்பிரசாதம் கொடுக்கும் இடத்தில் தரை வழுக்குவதாக பக்தர்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர். அந்த இடத்தில் தரையை சுத்தம் செய்ய வேண்டும். கைக்கழுவும் இடத்தில் பக்தர்களுக்கு சுடுநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தரிசனத்துக்காக வரும் பக்தர்களையும், அவர்களின் பைகளையும் தீவிர பரிசோதனை செய்ய வேண்டும். திருமலையில் ஜனவரி மாதத்துக்குள் மின்வயர் பொருத்தும் பணியை முடிக்க வேண்டும். ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்களை தேவஸ்தான அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

  • 2017-11-06-15-14-31

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2018ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடங்கியது. புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு நாள்தோறும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 1008 வடைமாலை, வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகத்துக்கு செய்யப்படும் செலவை பக்தர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். தற்போது ஒரு நாளுக்கான செலவை 5 பக்தர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான அபிஷேகத்துக்கான முன்பதிவு கோயில் செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் கோயில் வளாகத்தில் தொடங்கியது. 2018ஆம் ஆண்டின் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த நாள்களுக்கு ஒரே நாளில் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. இதுவரையில் 640 பேர் தினசரி அபிஷேகத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதர நாள்களுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • nam-yen-koviluku-poganum

     

    கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படுகின்றன. அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்படுகின்றன. முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

    இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

    மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

    மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது. அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

    மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

     

  • thiruvilakku-thuligal

     

    கார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்கள்!

    உலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள்.

    எந்த ஒரு பிரார்த்தனையும், தபசும், யாகமும், பூஜையும் விளக்கு இல்லாமல் முழுமை அடையாது. ஏனென்றால் பஞ்சபூதங்களில் ஒன்றான இந்த உலகில் உள்ள எந்த ஒரு சக்தியையும் ஆண்டவனிடம் எடுத்துச் செல்லும் ஆற்றல், சக்தி விளக்கிற்கு உண்டு. விளக்கு ஒன்றே மேல் நோக்கி எரியக்கூடியது. ஒரு விளக்கு எத்தனை ஆயிரம் ஒளியை ஏற்றினாலும் தன் ஒளியை இழப்பது இல்லை. தோஷங்களை நீக்கும் சக்தி விளக்குக்கு உண்டு.

    திருக்கார்த்திகை தீபம்: கார்த்திகைத் திங்களில் கொண்டாடப்படும் தீபத்திருநாளே திரு விளக்கின் சமயத்தொடர்பை விளக்கும். அக்னி தலமான திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றப்படுவதும் திருக்கார்த்திகை தினத்தில்தான். கார்த்திகைப் பெண்கள் குழந்தை முருகனை எடுத்து வளர்த்ததால் கிருத்திகை முருகனுக்கு உரிய நடசத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை தினத்தில் எல்லா ஆலயங்களிலும் தீபத்திருநாள் நடைபெறும். ஐப்பசி, கார்த்திகை மாதம் மழைக் காலம். இந்தச் சூழலில்தான் அதிகமான பூச்சிகள், நோய்க் கிருமிகள் பரவும். இதனைப் போக்கத்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டின் முன் வாசலிலும், புழக்கடையிலும் விளக்கேற்றி வைப்பர். பூச்சிகள் விளக்கு சுடரில் பட்டு இறந்துவிடும். 

     

    விளக்கும், பெண்ணும்: பழங்காலம் முதல் பெண்தான் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள். திருமணமாகிப் பெண் முதன் முதலில் வீட்டுக்கு வந்தவுடன் விளக்கேற்றச் சொல்கிறோம். வெளிச்சத்தைக் கொண்டு வரும் அடிப்படை ஆதாரம் விளக்கு. இருளைப் போக்கும் பொருள். பெண் குடும்பத்தின் விளக்காக இருக்கிறாள். எனவே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு காரணம், ஒரு பெண்ணுடைய சிக்கனக் குணம், கையாளும் தன்மை, பதற்றமற்ற நிலை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முறையைக் கவனிக்கவும், கற்றுக் கொடுக்கவும்தான். குடும்பத்தில் என்றென்றும் ஒளி பிறக்கச் செய்கிற பொறுப்பு, கடமை, அவளிடம் உள்ளது என்பதைக் குறிக்கத்தான். 

    தீபம் ஏற்றும் நேரம்: தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாகக் கருதப்படுவது, அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்), மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையும்தான் (சூரிய அஸ்தமத்திற்குப் பின்).
    காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் வெற்றி பெறும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் தீபமேற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதிகம். மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். 

    விளக்கு குளிரவைத்தல்: விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக் கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருக்கக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிரவைப்பதே நன்மை தரும். 

    விளக்கு துலக்க உகந்த நாட்கள்: குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்குக் காரணம், திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கைக் கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதிகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்க நிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

    திருவிளக்குத் துளிகள்: 

    * வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.
    * திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
    * விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும். 
    * எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.
    * வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும். 
    * அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம். 
    திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.