Category: கோவில்கள்

கோவில்கள்

  • பள்ளி கொண்டு அருள் பாலிக்கும் சுருட்டப்பள்ளி சிவன் 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திரா எல்லையில் உள்ளது சுருட்டபள்ளி. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிவனை நின்ற நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தான் பார்த்திருப்போம்.

    பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை இங்கு தரிசிக்கலாம். இவரை பள்ளிகொண்டீஸ்வரர் என அழைக்கிறார்கள். சிவன் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடியபோது அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலங்கங்களும் நடுங்கத் தொடங்கின. பார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று யார் வேண்டியும் சிவன் கேட்பதாக இல்லை.

    சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். அவரிடம் சிவன் “ நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “ என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக் கொள்கிறேன் “ என்று நந்தி பதிலளித்தார். சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார். பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். சுருட்டப்பள்ளி சென்று வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை. கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ‘ சர்வமங்களா ‘ என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள்.

    அம்பாளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும். சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.
     

  • சக்தி வாய்ந்த சிவன் கோயில்கள்

    கபாலீசுவரர் சிவன் கோவில்

    சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் சிவன் கோயில் வீற்றுள்ளது.

    இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு, போர்ச்சுகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

     திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

    இந்த சிவன் கோவில் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

    இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும்.

    இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

    அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.


    நெல்லையப்பர் ஆலயம்

    இந்த சிவன் கோவில் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும்.

    இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது.

    இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.

    திருவொற்றியூர் தியாகராஜர் கோயில்

    இந்த சிவன் கோவில் சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது.

    இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது.

    இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.

    ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில்

    மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது.

    இந்தக் சிவன் கோவில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது.

    இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும்.

    இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.

    திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்

    திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

    அதாவது வடமொழியில் ‘அப்பு’ என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

    முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டதாகும்.

    இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

    பிரகதீஸ்வரர் கோவில்

    இந்த சிவன் கோவில் தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.

    வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

    வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனை சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.

    தில்லை நடராஜர் கோயில்

    மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது.தில்லை நடராஜர் கோயில்

    அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன.

    அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது.

    அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.

    மருந்தீஸ்வரர் கோயில்

    இந்த சிவன் கோவில் சோழ நாட்டை பல்லவம், ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச் சாலையாக உருமாறியுள்ளது.

    பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச் சூழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.

    ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில்

    இந்த சிவன் கோவில் ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது.

    மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம்.

    அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது.

    இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் ‘இராம+ஈஸ்வரம்’ இராமேஸ்வரம் ஆனது.

    அண்ணாமலையார் கோயில்

    இந்த சிவன் கோவில் எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது.

    இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வணங்கப்படுகிறார்.

    ஏகாம்பரநாதர் சிவன் கோவில்

    இந்த சிவன் கோவில் 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும்.

    இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

  • குழந்தை வரம் தரும் வள்ளி மலை முருகன் கோவில்

    ஒருசமயம் திருமால், முனிவர் வேடத்தில் பூலோகத்திலுள்ள ஒரு வனத்தில் தவமிருந்தார். அப்போது மகாலட்சுமி மான் வடிவில் அவர் முன்பு வரவே, முனிவர் மானை பார்த்தார். இதனால் கருவுற்ற மான், வள்ளிக் கொடிகளின் மத்தியில் ஒரு பெண் குழந்தையை ஈன்றது. அவ்வழியே வந்த வேடுவ தலைவன் நம்பிராஜன் குழந்தையை எடுத்து,வள்ளி என பெயரிட்டு வளர்த்தான். முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த ஜடாரி சேவை செய்யப்படுகிறது.

     கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.

    மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்;குமரி வள்ளிக்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

     பொதுவாக விமானத்தின் கீழ்தான் சுவாமி காட்சி தருவார். ஆனால், இங்கு முருகன் சன்னதிக்கு மேலே கோபுரம் இருக்கிறது. அருணகிரியாரால் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று  என்றழைக்கிறார்கள். இவ்விடங்கள் வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்போடு சென்றால் பார்த்து வரலாம். மலையடிவாரத்தில் ஆறுமுகன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இங்கிருந்து 50 கி.மீ., தூரத்தில் திருத்தணி இருக்கிறது.

    இத்தலத்து முருகப்பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள். எத்தனை கோபம் , மனக்குழப்பம் ஆகியவைகளோடு இருந்தாலும் இத்தலத்து முருகனை வணங்கினால் அத்தனை கோபமும் குழப்பங்களும் விலகிவிடுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்ககை.வேலூரில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் வள்ளிமலை இருக்கிறது. பொன்னை என்ற ஊருக்குச் செல்லும் பஸ்கள் இத்தலம் வழியே செல்கிறது.
     

  • கடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள்

    சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு அடுத்த பழைய சீவரத்தில் செய்யாறு, பாலாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமத்தில் ஆற்றங்கரையையொட்டியே கம்பீரமாக அமைந்துள்ளது ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் திருக்கோயில். இந்த கோயிலில், கையில் சங்கு, சக்கரம் இருப்பதால் விஷ்ணு ரூபமாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் இருப்பதால் சிவரூபமாகவும், கையிலும், திருவடியிலும் தாமரை புஷ்பம் இருப்பதால் பிரம்மரூபமாகவும் வெங்கடேச பெருமாள் காட்சி தருகிறார்.

    பெருமாளின் திருமார்பில் அலமேலு மங்கை ஒரு புறமும், பத்மாவதி தாயார் மறு புறமும் உள்ளனர். நாச்சியார், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு தனிக்கோயில்கள் உண்டு. மேலும் தாயார் அலமேலு மங்கை, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், கருமாணிக்க வரதர் மற்றும் கர்ண குண்டல அனுமார் சன்னதியும் இங்கு உள்ளது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் வரலாற்று சிறப்புக்கும் உரியதாகும். முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலைவணங்கவில்லை என்று தண்டன் தோட்டம் பட்டயம் கூறும் நந்திவர்ம பல்லவன் ஆண்ட காஞ்சியின் கிழக்கு திசையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கோயில் அருகே இரு குன்றுகளுக்கு இடையே பாய்ந்தோடும் நதி, முப்புறமும் பச்சைப்பசேல் என திகழும் வயல்வெளிகள் என உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் உள்ள இயற்கை எழில் எல்லோரையும் மயங்க வைப்பதாகும்.

    தொண்டைமான் சக்ரவர்த்தி, திருப்பதி சீனிவாச பெருமாள் மீது அளவுகடந்த பக்தி கொண்டு நாட்டை மகனிடம் ஒப்படைத்து விட்டு திருப்பதி செல்கிறார். அப்போது பெருமாள் அசரீரி குரலில் நாட்டுக்கு திரும்பிச் செல்லுமாறு மன்னனுக்கு கூறுகிறார். அதனை பொருட்படுத்தாமல் சீனிவாச பெருமாள் வசம் சரணாகதி அடைந்தார் மன்னன். அப்போது சீனிவாச பெருமாள் தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை அனுப்பி தொண்டமானின் நாட்டை காப்பாற்றினார்.

    அதன் பின் திருப்பதி செல்லும் போது பெருமாளின் சங்கு, சக்கரம் திருமுக்கூடல் ஆலயத்திலேயே தங்கி விட்டது. அதனால் தான் இன்றும் அந்த கோயில் சங்கு, சக்கரம் மட்டும் தனியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

    அப்பன் வெங்கடேச பெருமாள் :
    பிறகு பெருமாளின் கட்டளைக்கு இணங்க தொண்டமான் சக்கரவர்த்தி திருமுக்கூடலுக்கு திரும்பி அப்பன் சீனிவாச பெருமாளை வணங்க வந்தார். அப்போது சயன கோலத்தில் இருந்த பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்து பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளின் வடிவமாக ஒன்று கலந்து ஓருருவில் காட்சி கொடுத்தார். அதை பார்த்த தொண்டமான் சக்கரவர்த்தி, அப்பன் வெங்கடேசா என்று பெருமாளை கட்டித்தழுவி கசிந்துருகி வேண்டினர்.

    அதனால் தான் இங்குள்ள பெருமாளுக்கு ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்கு பிருகு முனிவரின் தவத்திற்கு பெருமாள் காட்சி அளித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.

    ஒப்பிலியப்பன் போல் பெருமாளின் திருவடியில் பூமாதேவியும், மார்க்கண்டேயனும் இங்கு தவம் செய்கிறார்கள். திருப்பதி சீனிவாச பெருமாளின் கையில் உள்ள சங்கு சக்கரமும் இங்கு உள்ளது.

    இத்தலத்தின் குறிப்பிடத்தக்க தனிச்சிறப்பு என்னவென்றால் இங்கு உறையும் பெருமாள் மார்க்கண்டேயனுக்கு நாதனாகவும், பூமாதேவிக்கு கண்ணனாகவும், காஞ்சியை ஆண்ட தொண்டைமானுக்கு திருப்பதி சீனிவாச பெருமாளாகவும் காட்சி கொடுத்தார் என்பதே.

    கடன் தொல்லை தீர :
    இங்குள்ள ஆஞ்சநேயர் கர்ணகுண்டல ஆஞ்சநேயராகவும் திருக்கோலம் பூண்டுள்ளார். இவருக்கு வடமாலைக்கு பதிலாக தென்குழல் மாலை சாற்றப்படுகிறது. இவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்பன் வெங்கடேசனை தொழுதாலும் கடன் சுமைகள் தீரும் என்பது ஐதீகம்.

    63 நாயன்மார்களில் ஒருவரான அப்பரும் (திருநாவுக்கரசர்) பழைய சீவர பெருமானை நெக்குருகி புகழ்ந்து பாடியுள்ளார். ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள் என்று அப்பரால் அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
    இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னிமரம். சந்தன மரம் ஆகும்.
     

  • குழந்தை வரம் அருளும் ஸ்ரீ பிரேமிக விட்டலா பெருமாள்….

    காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகில் உள்ள விட்டலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரேமிக விட்டலா பெருமாள் ஆலயம். விட்டலா பாண்டுரங்கன் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்த கொண்டைய தேவ சோழ மகாராஜாவின் கனவில் தோன்றிய பாண்டுரங்கன் அருள்பாலித்தப்படி, ஆற்றிலிருந்து விக்ரகத்தை எடுத்து வந்து கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்தக் கோயில் கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகா மண்டபம், மற்றும் ஆழ்வார்கள் சன்னதியுடன் உள்ளது. மூலவர் பிரேமிக விட்டலர், கிருஷ்ணர் வடிவத்தில், தாயார் ருக்மணி, சத்தியபாமா இருவருடன் காட்சியளிப்பது, இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். 

    மூலவருக்கு வலது புறத்தில் சந்தான லக்ஷ்மியும், இடது புறத்தில் ராமானுஜர், விஷ்வகேனர் மற்றும் சீனிவாச பெருமாள், லக்ஷ்மி தாயாருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. விட்டலர் விஷ்ணு, சிவன் பதிப்பாக இருப்பதால், இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை விட, சிவராத்திரி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இக்கோயிலுக்கு வந்து, பக்தர்கள் திரட்டுப்பால் வைத்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். குழந்தை வேண்டுவோருக்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குழந்தைகள் கல்வியில் முன்னேற பால் பாயாசம் படைப்பதும்  இத்திருத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலிலிருந்து, சதுரங்கப்பட்டினம் வரதராஜபெருமாள் கோயிலுக்கு பாதாள சுரங்க வழி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
     

  • நோய் தீர்க்கும் திருவெற்றியூர் பாகம்பிரியாள்!

    புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு தீர்க்காயுள் பெற்று வாருங்கள். ஆவணி மாத ஓணத்திருநாளுக்கும் இந்தக் கோயில் வரலாற்றுக்கும் சம்பந்தம் உள்ளது.

    தல வரலாறு:
    மகாபலி சக்கரவர்த்தி வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கியவன். குடிமக்கள் அவனைத் தங்கள் துன்பங்களை நீக்கவல்லவன் என்று பாராட்டினர். மூவுலகையும் அவன் வென்றான். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களை மதிக்காமல் ஆணவம் கொண்டான். இதனை அறிந்த நாரதர், சிவபெருமானிடம் முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான், ‘‘முற்பிறவியில் என்னுடைய சந்நிதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலி உருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல," என்றார்.

    இதையடுத்து திருமாலிடம் தனது கோரிக்கையை வைத்தார் நாரதர். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மகாபலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் மூன்றடி மண் கேட்டார். ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு, உலகை இரண்டடியால் அளந்து, மூன்றாம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான். மகாபலி பிறவிப் பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான்.

    தர்மதேவதை:
    இதனை அறிந்த தர்மதேவதை தன் ஒரு மகனை இழந்த துன்பத்தால் துடித்தாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு, புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் புலம்பினார் மகாவிஷ்ணு.

    இது கேட்ட சிவபெருமான் திருமாலிடம், ‘‘18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி, ஆடும் யானையும் தரிசித்த இடத்திலுள்ள ஆதி ரத்தினேஸ்வரரை தரிசித்து, தெற்கிலுள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராட வேண்டும். அங்குள்ள லிங்கத்தை தழுவி வழிபட்டால் புற்று நீங்கும்," என்று கூறி மறைந்தார்.

    இவ்வூரே திருவெற்றியூர் ஆனது.திருவெற்றியூர் வந்த மகாவிஷ்ணு சிவனை வழிபாடு செய்தார். புற்று மாயமாய் மறைந்துவிட்டது. எனவே இங்குள்ள சிவபெருமானுக்கு ‘பழம் புற்றுநாதர்’ என்றும், அம்பாளுக்கு ‘பாகம்பிரியாள்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று.

    சிறப்பம்சம்:
    குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கு மருந்து தரும் நாயகியாக விளங்குகிறாள் பாகம் பிரியாள். இவளது சந்நிதியில் தரும் தீர்த்தத்தை அருந்தினால், புற்றுநோய் தீரும் என்பது நம்பிக்கை. மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர். இங்குள்ள தலவிருட்சமான அரசமரத்தை சுற்றி வந்தால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. இவ்வூர் மக்கள் தங்கள் தாய்வழி சொத்தை அம்பாளுக்குரியதாக கருதி, மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர். இவ்வூர் அருகிலுள்ள திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் புகழ்மிக்கது.
     

  • எம்பெருமாள் சங்கு சக்கராயுதபாணியாக காட்சி தரும் தென் திருப்பதி பெருமாள் மலை

    திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் சாலையில் துறையூரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது பெருமாள்மலை. இங்கு கொல்லிமலை மற்றும் பச்சைமலை தொடரில் சுமார் 1800 அடி உயரத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது.

    இத்திருத்தலம் திருப்பதிக்கு ஒப்பானது. அதனாலேயே தென்திருப்பதி என்ற சிறப்பு பெயர் பெற்றது. திருப்பதியில் உள்ளதுபோல் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி திருமண கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார்.

    இதேபோல் அலமேலு மங்கை தாயார் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். அடிவாரத்தில் கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி, பிரமாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் ஏழுமலைகள் உள்ளது.

    திருப்பதிக்கு அருகில் நாகலாபுரம் என்று ஊர் உள்ளது. அதைப்போல் இங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் நாகலாபுரம் என்ற கிராமம் உள்ளது. இவற்றையெல்லாம் ஒத்திருப்பதால் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது.

    தலவிருட்சம் இலந்தை மரம், ஏழு ஸ்வரங்களின் ஒலி எழுப்பும் கருங்கல் தூண்கள், தசாவதாரங்களை தூண்களில் கொண்ட தசாவதார மண்டபம், வசந்த மண்டபம், ஏகாதசி மண்டபம், எங்கும் இல்லாத நரசிம்மர் அவதாரம் மிக துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட பெருமாள் மலை கோயிலுக்கு அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல 1564 படிக்கட்டுகள் உள்ளன.

    தல வரலாறு:

    ராஜராஜ சோழ மன்னனின் சந்ததியர் ஒருவரால் 11ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக தெரிகிறது. இம்மன்னன் தனது குருவின் உபதேசப்படி தான் இறைவனடி சென்று சேர ஏகாந்தமான இடத்தில் தவம் செய்யக்கருதி தனது ஆளுகைக்கு உட்பட்ட இப்பெருமாள் மலையில் இலந்தை மரத்தடியில் அமர்ந்து தவம் மேற்கொண்டான். இம்மன்னனின் தவத்தை மெச்சி சங்கு சக்கராயுதபாணியாக எம்பெருமாள் காட்சி தந்தருளினார்.

    இம்மன்னனின் வேண்டுதலுக்கிணங்க எம்பெருமாள் தனக்கு வலதுபுறம் பெரியபிராட்டிக்கும் இடதுபுறம் இம்மன்னனையும் தவநாயகராக இருந்து வர அருள்பாலித்ததாக வரலாறு கூறுகிறது. இம்மன்னரே கருப்பண்ணார் என்றும் வீரப்பசுவாமி என்றும் போற்றப்பட்டு இன்றளவும் சிறப்புற வழிபடப்பட்டு வருகின்றனர். வேறெந்த வைணவத் திருத்தலத்திலும் இல்லாத சிறப்பாக கருப்பண்ணசுவாமி சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மலைக்கோயிலில் தினமும் நித்தியபடி பூஜை நடத்தப்படும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும். பவுர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறும். பெருமாள்மலையில் புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் மிகவும் விஷேசமானது. இக்கோயிலில் 8க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வழிபாடு நடத்துகின்றனர். புரட்டாசி ஆரம்பித்தால் இந்த கிராமங்களின் தளுகை வந்த பின்னர்தான் சுவாமிகளுக்கு வழிபாடுதொடங்கும். கிராமமக்கள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி மலைபாதையில் விரித்துபோடப்பட்டிருக்கும் துணிகளில் கம்பு, சோளம் நெல் போன்ற நவதானியங்களை தூவிவருவர்.

    இவ்வாறு செய்தால் விவசாயம் செழிப்படையும் என்பது ஐதீகம்.திருப்பதி ஏழமலையான் தனக்கு செலுத்த வெண்டிய நேர்த்திக்கடன்களை தானே பிரசன்னமாக எழுந்தருளி இத்திருத்தலமான பெருமாள்மலையில் செலுத்த வேண்டும் என திருவுளம் கொண்டார். அதனாலேயே ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சேவார்த்திகள் இங்குவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர். கோயில் காலை 5 மணி முதல் 12 வரையும், மாலை 4 முதல் இரவு 7 மணி வரை யும் நடை திறந்திருக்கும். வாகனங்கள் மூலம் மலைக் கோயிலை சென்றடைய சுமார் 5 கி.மீ. தூரம் தார்சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

  • திருமலாபுரம் பசுபதேஸ்வரர் ஆலயம்

    திருமலாபுரம் பசுபதேஸ்வரர் ஆலயம்
    ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
    இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.
    தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே.
    நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.
    நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.
    முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.
    காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.
    சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். 
    பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.
    தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
    துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!
    சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

  • கடையம் வில்வவனநாதர் திருக்கோயில் 

    நெல்லை மாவட்ட கோயில்கள்
    கடையம் வில்வவனநாதர் திருக்கோயில் 

    வில்வவனநாதர் திருக்கோயில், நெல்லை மாவட்டம் கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறையவன் பெயர் வில்வவனநாதர், தாயார் நித்ய கல்யாணி. இங்குள்ள பீடத்தை தரணி பீடம் என்கிறார்கள். 

    இங்குள்ள வில்வ மரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.பிரம்மதேவருக்கு சிவபெருமான் ஒரு வில்வபழத்தைக் கொடுத்தாராம் அதை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றை கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார். அந்த துவாதசாந்தவனப் பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். இங்குள்ள வில்வ காய் உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த ஸ்தலத்தை பற்றி காபிலோ புராணத்தில் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. தேவர்களுக்கும் கம்பாசுரன் என்பவனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது, தேவேந்திரனுக்கு உதவியாக அயோத்தியை ஆண்ட தசரத மகாராஜா சென்றார். அசுரர்கள் பலரைக் கொன்றார். இதனால் தனக்கு தோஷம் ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய அவர் அகத்தியரால் உருவாக்கப்பட்ட தத்துவசாரா நதியில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார்.அந்த நதிக்கரையில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வில்வவனநாதரை வணங்கினார்.அவரது அருளால், ஸ்ரீமன் நாராயணனே அவருக்கு புத்திரராகப் பிறந்தார். 

    அயோத்தியில் ராமராஜ்யம் நன்றாக இருப்பதை கண்டு பொறமை கொண்ட சம்புகன், அங்கே அகால மரணம் ஏற்பட வேண்டும் என இறைவனை வேண்டி தவம் செய்தான். அவனை ராமபிரான் கொன்றுவிட்டார். அந்த தோஷம் நீங்குவதற்காக அவர் தத்துவசாரா நதியில் நீராடி, வில்வவனநாதரையும், அவரது தேவியான நித்ய கல்யாணி அம்பாளையும் வணங்கினார். ராமபிரான் நீராடிய பிறகு, இந்த நதிக்கு "ராம நதி' என்ற பெயர் ஏற்பட்டது. இப்போதும், இந்தப் பெயரிலேயே இந்த நதி ஓடிக்கொண்டிருக்கிறது

    இங்கு ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் பல இங்குள்ளன.. மகாகவி பாரதியார் இக்கோயில் முன்பு உள்ள தட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்' என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார்.

  • குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

    நெல்லை மாவட்ட திருக்கோயில்கள்
    குருவிகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இயற்கையாகவே எழில் நிறைந்த செழுமையான ஊராக குருவிகுளம் விளங்குகிறது. இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 

    மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.திருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். மேலும் நவக்கிரக பலன்கள் கிடைக்கும். செய்வினை மாந்தீரிகம், துஷ்ட சக்திகள், நம்பிக்கை மோசடியில் இருந்து தப்பிக்கலாம். 

    குடும்ப விருத்தி. குடும்ப ஒற்றுமை. பிரிந்தவர்கள் ஒன்றுசேர. வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் இந்த ஆலயத்தினை வணங்கி நிற்கலாம். வீடு, வாசல், மண்ணு, மனை, தொழில் விருத்தி அடைய இக்கோவிலில் அருளும் மீனாட்சியை வணங்கலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். கல்வி பெறவும், நோய் நொடிகள் தீரவும் இங்கு வந்து வழிபடுவது நன்மை தரும். 

    இக்கோவிலுக்கு வர  சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.