Category: கோவில்கள்

கோவில்கள்

  • கடன் தொல்லை தீர்க்கும் ரிணவிமோசனர்!

    தமிழகத்து ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு தனிச்சிறப்புகள் உண்டு. அந்த வகையில், கடன் தொல்லை தீர்க்கும் தலமாகத் திகழ்வது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்சேறை செந்நெறியப்பர் சிவாலயமாகும். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தென்கரைத்தலங்களுள் ஒன்றாக, இச் சிவாலாயம் விளங்குகிறது.

    மனிதனுக்குச் செம்மை தரும் நெறியை முத்திநெறியை அளிக்கும் தலமாக விளங்குவதால், இறைவனுக்குச் செந்நெறியப்பர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும் முற்பிறவிக் கடன் தீர்க்கும் தேவாரத்தலமாகவும் விளங்குகிறது.கடன் பிரச்சனையை போக்கும் ரிணவிமோசனர் வாழும் தலமாகவும் இக்கோவில் போற்றப்படுகிறது.இக்கோவிலில் மூலவராக ரிணவிமோசனர் அருள்பாலிக்கிறார். 

    மேலும் எந்தச் சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்குள்ள பைரவர் தனது இடது மேல்கரத்தில் சூலம் போட்ட மணியுடன் காட்சி தருகின்றார். மேலும் சிவதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என்னும் மூவகை தேவியர்கள் இத்திருத்லத்தில் வீற்றிருக்கிறார்கள். மேலும் ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தர்சஷ்டி, பிரதோஷம் போன்ற சிறப்பு நாட்களில் இங்குள்ள மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். எண்ணற்ற சிறப்பம்சமுள்ளது இத்திருத்தலம்.

  • முக்திதரும் குமரக்கோட்டம்…..

    அறிவால் அறிந்து உன்னிரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!

    ஆறுமுகனே உன் தாள் சரணம்! 

    படைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை  கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக்  கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய்வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். விரைந்து செல்லும் காரணம் கேட்டார். அப்படியே பேச்சு நீள, பிரணவத்தைக்கொண்டே தாம் படைப்புத் தொழிலைச் செய்வதாக பிரம்மன் கூறினார். 

    பிரணவத்தின் பொருளை முருகன் கேட்க, நான்முகன் விழித்தார். பொருள் தெரியாமல் தலைகுனிந்தார். சுட்டிக் குழந்தையான முருகன், படைக்கும் கடவுளான பிரம்மன் தலையில் குட்டி, அவரைச் சிறையில் அடைத்தார். அதுமட்டுமா? தானே படைக்கும் தொழிலையும் மேற்கொண்டார். 

    நான்முகனின் இந்த நிலையை தேவர்களின் வழியே அறிந்துகொண்ட சிவபெருமான் முருகனைக் கண்டித்து, நான்முகனை சிறையிலிருந்து மீட்டார். பிரணவத்தின் பொருளை மண்டியிட்டு முருகப்பெருமானிடமிருந்து ஈசனும் கேட்டுக்கொண்டார். என்னதான் திருவிளையாடல் என்றாலும், குருவின் அம்சமான ஈசனையே சீடனாகக்கொண்டது தோஷம் என்று அன்னை சக்தியின் மூலம் அறிந்தார் முருகப்பெருமான். 

    தனக்கேற்பட்ட தோஷம் நீங்குவதற்காக, நகரங்களில் சிறந்ததும் புண்ணியம் மிகுந்ததுமான காஞ்சி நகருக்கு வந்தார். அங்கே ஒரு மாமரத்தடியில் சிவலிங்கத்தைப்  பிரதிஷ்டை செய்து வழிபட்டார். முருகர் வழிபட்ட ஈசன் சேனாபதீஸ்வரர் என்று போற்றப்பட்டார். அந்தத் தலமும் சேனாபதீஸ்வரம் என்று உருவானது. மாமரத்தடியில் வழிபட்ட குமரக்கோட்டம் முருகன் மாவடி கந்தன் எனப் பெயர் பெற்றார்.

    ஈசனை, தவ வேடத்தில் முருகப்பெருமான் வழிபட்டதால் இங்கு வள்ளி, தெய்வயானை சந்நிதிகள் தனியே உள்ளன. முருகப்பெருமானும் நான்கு கரங்களுடன்  ஜபமாலை, கமண்டலம் ஏந்தி தவக்கோல மூர்த்தியாகக் காட்சிதருகிறார். குமரக்கோட்ட முருகப்பெருமான் முக்திதரும் மூர்த்தியாக இங்கு அருள்பாலிக்கிறார். இங்குள்ள `அனந்த சுப்ரமண்யர்’ என்ற உலா மூர்த்தி வடிவம் மிகச் சிறப்பானது. இவருக்கு ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்தபடி இருக்கிறது. இந்த மூர்த்தியை தரிசித்து வழிபட்டால் நாக தோஷங்கள் விலகும் என்கிறார்கள். அதுபோலவே வள்ளி, தெய்வயானை உலா மூர்த்தத் திருமேனிகளிலும் மூன்று தலை நாகம் குடை பிடித்தபடி உள்ளன. 

    வைகாசி விசாகமும், ஐப்பசி கந்தசஷ்டித் திருவிழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றன. தீபாவளி நாளைத் தவிர இங்கு எல்லா நாள்களிலும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அதில் தேன் அபிஷேகம் விசேஷமானது. இந்தக் கோயிலின் சிறப்பான அம்சம் இங்குதான் கந்தபுராணம் அரங்கேறியது என்பதுதான். காஞ்சியில்  வாழ்ந்த கச்சியப்ப சிவாசார்யார் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தன்னைப் பற்றிப் பாடுமாறு பணித்தார். திகட சக்கரச் செம்முகம் என்று முதலடி எடுத்துக் கொடுத்து, தமிழின் அழகான காவியமான கந்தபுராணத்தை அரங்கேற்றச் செய்தார் ஆறுமுகப்பெருமான். கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் இங்குள்ளது. அதுமட்டுமா? சிறுவனின் வடிவில் வந்து பாம்பன் ஸ்வாமிகளுக்கு வழிகாட்டி ஆட்கொண்ட தலமும் இதுதான். 
     

  • இழந்த பதவியை மீட்டுத் தரும் பஞ்சநத நடராஜர் …..

    திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோயில். இந்த கோயிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர்.

    பஞ்சநத நடராஜர் சிலையின் மகிமை…
    ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.

    பாறைகளின் சிறப்புகள்
    ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது.
    நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன.
    சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கோயில் பஞ்சநத நடராஜர் கோயில் என அழைக்கப்படுகிறது.

    அழகே வடிவான இறைவி சிவகாமி அம்மை….
    இந்த கோயிலில் இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இது காண்போரை மெய்மறக்க செய்கிறது.

    பஞ்சநதன நடராஜர் ஸ்தல வரலாறு…
    பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது).

    ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.

    தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம்….

    ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

    அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

    நோய் நீக்கும் நடராஜர்….

    சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

    இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்……….

    ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

    இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.

    மாற்று திசையில் நந்தி தேவர்….
    மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.

    அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.
     

  • மருதமலை முருகப்பெருமான் பற்றிய சில தகவல்கள்!

    முருதமலை 837 படிகளுடன் அமைந்த மலைக்கோயில்.

    இங்கு வரதராஜப் பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. 

    பாம்பாட்டிச்சித்தர் சன்னதி செல்லும் வழியில் சப்தகன்னியர் சன்னதி உள்ளது. ஆடிப் பெருக்கின்போது இங்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

    பாம்பாட்டிச்சித்தர் சன்னதியிலுள்ள பாறையில் நாக வடிவம் இருக்கிறது. இந்த நாகத்தின் வடிவிலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார்.

    மருதமலையில் முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது.

    விநாயகர், முருகனை வேண்டி மரத்தில் மாங்கல்யக்கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால்  திருமண, புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை 

    வைகாசி விசாகத்தன்று மருதமலை முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடைபெறும். 

    மருதமலையில் தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

    தைப்பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். அன்று சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருள்வார்.

    மருதமலையில் தினமும் மாலையில் தங்க ரதத்தில் முருகப்பெருமான் வலம் வருகிறார்.

    மருதமலையில் விநாயகர், முருகன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள்.

  • கல்வியில் சிறந்து விளங்க வைக்கும் சரஸ்வதி தேவி கோயில்

    திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் வெண்ணிற ஆடையில் வெண் தாமரையில் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் ஞானக் கண்ணுடன் சரஸ்வதி தேவி அருள்பாலித்து வருகிறாள். சரஸ்வதிக்கான பிரத்யேகமான தலங்களில் இது முக்கியமானது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர். கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள், சரஸ்வதி. வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருக் கிறாள். 

    ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். முதன் முதலாக அட்சராப்பியாசம் என்கிற கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் இங்கு வந்து ஆரம்பிக்கிறார்கள்.

    தேவிக்கு சிவபெருமானைப் போல மூன்று கண்கள் காணப்படுகின்றன. நெற்றியில் உள்ள மூன்றாவது கண் ‘ஞானக் கண்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி தேவியை வழிபாடு செய்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம். இத்தலம் மயிலாடுதுறை -திருவாரூர் சாலையில் 20 கி.மீ. தொலை விலுள்ள பூந்தோட்டம் எனும் தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
     

  • பெண் பெருமை போற்றும் கும்பகோணம் நாச்சியார் கோவில்

    பெருமாள் தலங்கள் அனைத்திலும் பெருமாளுக்கே முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கபடுகிறது. ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதைக் காட்டும் வண்ணம் இப்பெயர் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி இங்கு தாயார் முன்னே செல்ல பெருமாள் தாயார் பின்னே சென்று எழுந்தருளுவது, பெண்ணுக்கு முன்னுரிமை தருவதைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது.

    கல் கருடன் ஊர்வலம்
    கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். இந்த திருத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கல் கருட சேவை. மார்கழி மற்றும் பங்குனிகளில் மிகவும் சிறப்பாக இருக்கும். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். 

    நான்கு டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். நாகதோஷம், சகல தோஷம், எல்லா விதமான மன நோய்களும் விலக நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடன், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வரலாம்.

    தோஷம் நீக்கும் கல்கருடன்
    நாச்சியார் கோவிலில் உள்ள கல்கருடன் உடலில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் அமைந்துள்ளது. இவருக்கு பூஜை செய்தால் நாகதோஷம் நீங்கும். இந்த கருடனுக்கு கஸ்தூரி, குங்குமப்பூ, புணுகுசட்டம், முதலியவற்றை வாழைச்சாற்றில் கலந்து இவரது திருமேனியில் சாற்றுவோர் எல்லா இஷ்ட சித்திகளையும் பெறுவர்.

    சுமங்கலி பாக்கியம் 

    ஆடி மாதத்தில் வரும் சுக்ல பஞ்சமி திதியில் வணங்குபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவனும் கிடைப்பார். திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கருடனின் திரு நட்சத்திரமான சுவாதி அன்று, இங்குள்ள கல் கருடனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

    சிரவண தினத்தில் மோட்சம்

    இக்கோவில் நந்தவனத்தில் இரண்டு கருட பட்சிகள் வசித்து வந்தன. தினமும் கோவில் பூஜை நேரத்தில் இக்கருட பட்சிகள் பெருமாள், தாயார், கருடன் பூஜை முடியும் வரை கோவிலிலேயே பிரகாரத்தின் சுவர்கள் மீது அமர்ந்திருந்து பூஜை முடிந்தவுடன் சென்றுவிடும்.

    சிரவண தினத்தில் மோட்சம்

    1999 ஜனவரி 18ஆம் தேதி காலை பூஜைக்கு இவ்விரு பட்சிகள் வரவில்லை. பதைத்துப்போன அர்ச்சகர்கள், பக்தர்கள் கருட பட்சிகளை தேடிச் சென்ற பொழுது கோவில் தல விருட்சமான மகிழ மரத்திற்கு கீழே இவ்விரு கருட பட்சிகளும் ஒன்றை அணைத்தவாறு பகவானுக்கு உகந்த தினமான சிரவண தினத்தன்று மோட்சம் அடைந்தன. இதனை சிறப்பிக்க தனி சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர்.

  • 16 கரங்களுடன் கீழப்பாவூர் நரசிம்மர்

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது.

    திருநெல்வேலி மாவட்டத்தில் எவ்வித சிரமமும், பயமும், தயக்கமும் இன்றி சுலபமாக தரிசனம் செய்வதற்காக, கீழப்பாவூரில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளார். இந்த ஆலயத்தில் அருள்புரியும் நரசிம்ம மூர்த்தியானவர், 16 கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் விதமாக திரிபங்கி நிலையில் அபூர்வ வடிவத்தோடு சிறப்புடன் காட்சியளிக்கிறார். சூரியனும், சந்திரனும் வெண் சாமரங்கள் வீச, வெண் கொற்றக் குடையுடன் தியானித்தபடி இவர் வீற்றிருக்கிறார்.

    ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர்.

    நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நிதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம்.

    சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவிவழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.

    இந்த க்ஷேத்திரத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நிதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்மப் புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருள்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும்.

    ஒரு ஆலயத்திலுள்ள சுவாமிக்கு எந்தளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது.

    இத்தலம் தென்காசி-திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர் சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.
     

  • விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தரும் திருநின்ற நாராயண பெருமாள்

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோயில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும். 

    திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

    சித்ரா பௌர்ணமி, வைகாசி வசந்தோத்சவம், ஆனி பிரமோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உத்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. 

    தல வரலாறு…

    இந்த கோயிலில்  மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

    திருத்தங்கல்லில் உள்ள ‘தங்காலமலை’ என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோயில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை. 

    இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோயிலில் முதல் நிலை கோயிலில் மூலவரான ‘நின்ற நாராயணப்பெருமாள்’ நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2ம் நிலை கோயிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
     

  • தடைகளை தவிடுபொடியாகும் கெம்பநாயக்கன்பாளையம் அருள்மிகு பாலதண்டாயுத பாணி….. 

    ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி, கொம்பநாயக்கன்பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் முருகன் அவரது கனவில் தோன்றி,  ‘இந்த ஊரின் வடபகுதியில் உள்ள கானகத்தில் என் கால்பட்ட இடம் ஒன்று உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பி வழிபடு!’ என்று கூறினார். 

    அடுத்த  நாளே ஆலயம் கட்டும் பணியில் இறங்கினார் குப்பண்ணன். அப்போதைய ஆங்கிலேயர் கெடுபிடி இருந்தது. குப்பண்ணனின் முயற்சிக்கு இடையூறாக இருந்த  ஆங்கிலேய அதிகாரிக்கு திடீரென பார்வை முற்றிலும் போய், உடல் அரிப்பும் ஏற்பட்டது. 

    தன் தவறை உணர்ந்த அவர் குப்பண்ணனிடம் மன்னிப்பு கேட்க, அவரும் முருகனை மனமுருகி வேண்டிக் கொள்ள, அதிகாரியின் குறைகள் நீங்கின. அவரே கோயிலுக்கு வரவேண்டிய மரச்சட்டங்களைப் பாதுகாப்பாகப் போய்ச் சேர உதவினார். அந்த பாலதண்டாயுதபாணி, இன்றும் பக்தர்களுக்கு நேரும் தடைகளை எல்லாம் விலக்கி அவர்கள் வாழ்வில் இனிமை சேர்க்கிறார் – குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெற வேண்டி ஒவ்வொரு ஆண்டும் இங்கே ‘சுயம்வரா பார்வதி யாகம்’ நடத்தப்படுகிறது.

    இதில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. யாக பூஜையில் கலந்து கொண்டால், பாலதண்டாயுதபாணி திருவருளால் திருமணம் 48 நாட்களில் நிச்சயமாகிறது என்கிறார்கள். ஒவ்வொரு வைகாசி 26ம் தேதியன்று கோயில் ஆண்டு விழாவை ஒட்டி சுயம்வரா பார்வதி யாகமும் அன்னதானமும் நடத்தப்படுகின்றன. 

    இங்கே தரப்படும் பிரசாதம் பல நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை பெற்றது. மனநோயாளிகளும் நலம் பெறுகிறார்கள். வேலை மாறுதல் விரும்புகிறவர்களும் இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள். யாக பூஜையில் கலந்துகொள்ள வருபவர்கள் கால் கிலோ உதிரிப்பூவும், இரண்டு முழம் பூச்சரமும், ஓர் எலுமிச்சம் கனியும் கொண்டு வருகிறார்கள். ஜாதகத்தை இறைவனின் காலடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
     

  • வேண்டிய வரம் தரும் வயலூர் முருகன்

    குன்றுதோறும் குமரன் இருப்பது வழக்கம். அப்படி ஒரு குன்றுமீதுதான் ஏற இருக்கிறோம் என்ற எதிர்பார்ப்போடு எங்களின் வயலூர் பயணம் இருந்தது. திருச்சியில் இருந்து மேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது வயலூர். அந்த ஊருக்கு இட்டுச் செல்லும் பாதையும் வயல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நெல்லும், வாழையும், தென்னையுமாக செழித்து நிற்கிறது ஊர்.. நாங்கள் காரில் சென்று கொண்டிருந்தோம். போகப் போக…. பசுமை கண்களை குளிர்வித்துக்கொண்டே வந்தது. ரசித்துக்கொண்டே சென்றபோது …என்ன இன்னும் எந்த குன்றையும் காணவில்லையே தப்பான வழியில் போகிறோமோ என்று சந்தேகம் வேறு.. இதோ வந்தேவிட்டது வயலூர்..

    வழக்கமாக குன்றின்மேல் குடியிருக்கும் முருகன் இங்கு குன்றில்லாத சமவெளியில் குடியிருக்கிறான். அழகான ஆலயம். 

    இனி கோயிலை பற்றி…

     

    இந்த திருத்தலத்தின்பெருமை ஞானம் விளையும் திருத்தலம் என்பது.  ஆ என்ற காமதேனுவும், சோமன் வழிபட்ட சோமரசம்பேட்டையும் சூழ இருக்கிறது வயலூர். இங்கு கந்தன் தனது வேலால் குத்தி ஒரு திருக்குளத்தை உருவாக்கி தந்தையாகிய சிவபெருமானை வழிபட்டதாக கூறுகிறது புராணம்.  அக்னித்தீர்த்தம் என்று அழைக்கப்படும் அந்த தீர்த்தம் அக்னித்தேவனும் வழிபட்டதால் ஆலயத்தின் சிவபெருமான் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி முன்னிலை நாயகி என்று அழைக்கப்படுகிறார்.

    உறையூரை தலைநகராக கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலம் அது.. வேட்டைக்குச்சென்ற சோழ மன்னன் தாகத்தோடு ஓரிடத்தில் அமர, அங்கு 3 கிளைகளுடன் காட்சி தந்ததாம் ஒரு கரும்பு. அதனை ஒடித்தபோது ஒரு கரும்பில் இருந்து ரத்தம் கொட்ட பதறிப்போனான் மன்னன். உடனடியாக அந்த இடத்தைத் தோண்ட அங்கு லிங்க ரூபத்தில் எழுந்தருளினார் சிவபெருமான். அவருக்கு கோயில் கட்ட நினைத்த மன்னனின் ஆசை ஈடேறவில்லை. அதன் பின்னர் சிறு கோயிலாக எழுந்தது இந்த ஆலயம்..

    ‘அருளில் சீர் பொய்யாத கணபதி

    திருவக் கீசன் வாழும் வயலியில்

    அழகு கோயில் மீதில் மருவிய பெருமானே ’

    இந்த பாடலின் அழகும் அருணகிரி நாதரின் வாக்கும் இனிமையே இங்குள்ள முருகனைப்போல. வயலூரின் சிறப்பே, அருணகிரிநாதருக்கு முருகன் மயில் மீது அமர்ந்து காட்சி கொடுத்து திருப்புகழ் பாட வைத்ததுதான். சும்மா இரு. சொல்லற என்று சொல்லி, வா என் புகழ் பாடு என அருள் சுரந்து அருணகிரிநாதருக்கு முன்மொழிந்து தந்த இடம் வயலூர் என்கிறது இந்த கோயிலின் தல வரலாறு. அவர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர்.

    அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம். இந்த ஞானவரோதயர், கந்தபுராணத்தில் 7 ஆவது காண்டமாகிய உபதேச காண்டம் பாடியவர். விராலிமலைத் தலப்புராணமும் இவர் பாடியிருக்கிறார்.

    தாய், தந்தையை வழிபட்டு அனைவருக்கும் வழிகாட்டுகிறான் இந்த வயலூர் முருகன்.  அதனால் கோயிலுக்குள் சென்றதும் நாம் எதிர்கொள்வது சிவ சொரூபமே.

    .பிள்ளையாரப்பாவுக்கு இல்லாத முதல் வணக்கமா? இந்த திருத்தலத்தில் உள்ள கணபதி பொய்யாக்கணபதியாக பெயர் கொண்டுள்ளார். இவரிடம் வேண்டினால் பொய்க்காது என்பது வாக்கு. இவர் சந்நிதிக்கு அருகே அருணகிரி நாதருக்கு பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்புறம் கல்லால மரத்தடியில் தட்சிணாமூர்த்தியின் தவக்கோலக்காட்சி. பொய்யாக்கணபதி சந்நிதியை அடுத்து முத்துகுமார சாமி. மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள முருகனைக்காண கண் கோடி போதுமோ? இந்த ஜென்மம்தான் தீருமோ?

    அடுத்து முத்துகுமார சுவாமியை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சகிதமாக காட்சியளிக்கிறார். வடபுற மூலையில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறார். வயலூர் முருகனை தரிசிப்பவருக்கு எனது அருள் கண்டிப்பாக உண்டு என்பதுபோல காட்சி தருகிறாள் மகாலட்சுமி..

    கோயிலின் வெளியே கல்லால மரத்தடியில் வேல் வடிவில் உள்ள தோற்றத்தை இடும்பன் கோயில் என்றும், கிராம தேவதைக்கோவில் என்றும் சொல்கிறார்கள். முருகன் கை வேலின் வடிவமாகிய தேரடியான் கோயிலும் வந்தோர்க்கு வளம் தரும் அம்சமாக காட்சியளிக்கிறது.

    வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.

    திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என  வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.

    இந்த கோயிலுக்கும், கிருபானந்த வாரியருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த கோயில் கோபுரம் அமைக்க வாரியார் நிதி திரட்ட பெரும் முயற்சி செய்தார். இதனால் கோயில் அறக்கட்டளைக்குழுவில் கிருபானந்தவாரியார் இருந்தார்.

    கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான். அந்த அனுபவம் பெற்றது பெரும் பேறு.