Category: old…

old…

  • கந்தனுக்கு உகந்த கார்த்திகை மாதம்….

    சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை…..
    சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை….
    முருகனுக்கு உகந்த மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதத்தில் கந்தவேலன் மீது நம்பிக்கை வைத்தால் பார்த்த இடங்களில் எல்லாம் பாராட்டும், புகழும் கூடும். நிம்மதியோடு இருக்க, சூழ்ச்சிகளிலிருந்து விடுபட சுப்ரமணியரை வழிபட வேண்டிய மாதம் கார்த்திகை. முருகப்பெருமானை துதித்து வழிபட உகந்த நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும்.
    கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒரு மிகப்பெரிய பெருமை உண்டு.
    ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையைத்தான் ‘திருக்கார்த்திகை’ என்றும், ‘பெரிய கார்த்திகை’ என்றும் அழைக்கின்றோம்.
    சிறப்பான ஸ்தலங்கள் அமைந்த ஊர்களின் பெயர்களுக்கு ‘திரு’ என்ற அடைமொழி சேர்ந்திருப்பது போல நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று சேர்த்துக் கொண்டாடுவது கார்த்திகை மாதம் மட்டும்தான்.
    ஐப்பசி மாதக் கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கொண்ட வேலன் வெற்றிக்களிப்போடு இருக்கும் மாதம் இது.
    இந்த ஆண்டு திருக்கார்த்திகை, கார்த்திகை மாதம் 27-ந் தேதி திங்கட்கிழமை (12.12.2016) அன்று வருகின்றது.

  • ஐயப்ப பக்தர்களே….

    சபரி மலை யாத்திரைக்கு அதாவது சபரிமலைக்கு புனிதப் பயணம் மேற்கோள்ளும் ஒவ்வொரு பக்தரும் சில விரத முறைகளை பின்பற்ற வேண்டும்.
    ஐயப்பனை வணங்கச் செல்லும் பக்தர்கள் தூய்மையை கடைப்பிடித்தல் முக்கியம்.
    வாக்கு, சரீரம் இவற்றை சுத்தமாய் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஐயப்பன் வடிவை உள்ளத்தில் பதித்து, விரதமிருக்க வேண்டும்.
    ஐயனை தரிசிக்க செல்பவர்கள் முறையாக விரதமிருந்து மாலை அணிய வேண்டும். மாலையணிந்த நாள் முதல் நெறிமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பது முக்கியம்.
    சபரி மலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் முதலில் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் கடினமான விரதம் மேற்கொள்ள வேண்டும் ஐயப்பனுக்காக மேற்கொள்ளப் படும் விரதத்தின் நாட்கள் 41 நாட்களாகவோ அல்லது 45 நாட்களாகவோ கணக்கில் கொண்டு ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும்
    41 நாட்களைக் கூட்டினால் 5 வருகிறது 5 என்பது பஞ்ச பூதங்களை குறிப்பதால் 41 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்
    45 நாட்களைக் கூட்டினால் 9 வருகிறது 9 என்பது நவ கிரகங்களைக் குறிப்பதால் 45 நாட்களை ஒரு மண்டலமாகக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் 45 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள்.

  • சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை திறப்பு

    மண்டல பூஜை காலத்துக்காக, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை (நவம்பர் 15)நடை திறக்கப்படுகிறது.
    சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை 1-ஆம் தேதி முதல் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும்.
    இந்த ஆண்டு, வரும் 16-ஆம் தேதி மண்டல காலம் தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு, மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து, ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றுவார்.
    இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கு மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி மனுகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18-ஆம் படி ஏறி கோயில் முன்புறத்துக்கு வருவர். மாலை, 6.30-க்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து, கோயிலுக்கு அழைத்து செல்வார். இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும்.
    நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஐயப்பன் சன்னதி நடைதிறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.
    தொடர்ச்சியாக, 41 நாள்களும் அதிகாலை, 3 மணிக்கு நடை திறந்து, பூஜைகள் நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை அடைப்பு நடைபெறும். டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.

  • சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

    தானத்தில் சிறந்தது அன்னதானம்….
    ஒருவனுக்கு எதைக் கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் வராது. ஆனால், சோறு எனப்படும் அன்னம் மட்டுமே போதும் என்று சொல்ல வைக்கும்…. நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

    சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?
    எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக வேதத்திலே கூறப்பட்டுள்ளது.
    அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
    ஐப்பசி மாத முழுநிலவு நாளில் அஸ்வினி நட்சத்திரம் கூடி வரும் வேளையில் உலகெங்கும் உள்ள சிவ ஆலயங்களில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது மரபு.
    ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் ஒவ்வொரு அபிஷேகம் சிறப்பாகும். ஐப்பசி மாத பவுர்ணமியில் உலகம் முழுவதையும் காத்து படி அளக்கும் சொக்கநாத பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகச்சிறப்பாகும்.
    பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
    அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
    இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
    அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
    அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
    ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

    அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகிறது?
    ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.
    இவ்வளவு மகிமை வாய்ந்த அன்னாபிஷேகம் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாது அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறைவனின் அன்னாபிஷேக கோலத்தை தரிசித்து மகிழுங்கள்! இறையருள் பெறுங்கள்!

  • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தினசரி அபிஷேக முன்பதிவு….

    நாமக்கலில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் 2017-ஆம் ஆண்டு தினசரி அபிஷேகத்துக்கான முன்பதிவு வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி தொடங்குகிறது.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு 1,008 வடைமாலை சாத்தப்படும்.

    அதன் பின்னர் நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமண பொருள்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
    இதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    அபிஷேகத்திற்கான செலவை பக்தர்கள் ஏற்று நடத்தி வருகின்றனர். இதுவரை அபிஷேக செலவை 3 பேர் ஏற்கும் வகையில் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது தினசரி அபிஷேகத்துக்கு ஒரு நபருக்கு தேவஸ்தான கட்டணமாக தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் பூஜை பொருள்கள் வாங்குவதற்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.12 ஆயிரம் வசூல் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் முந்தைய ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் முன்பதிவு தொடங்கும். அதன்படி 2017ஆம் ஆண்டுக்கான முன்பதிவு வருகிற டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பு கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஒருநாள் அபிஷேகத்தில் 5 நபர்கள் பங்கேற்கலாம் எனவும், தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • திருத்தணி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு

    திருத்தணி முருகனை தரிசிக்க இனி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திகழ்கிறது திருத்தணி முருகன் கோயில்.
    கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
    இவர்கள் கட்டணம் தரிசனம், இலவச தரிசன வழியாக சென்று முருகனை தரிசனம் செய்கின்றனர்.
    இந்த நிலையில், ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி பஞ்சாமிர்தம் அபிகேஷகத்துக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பால் அபிஷேகம் 100, சந்தன காப்பு 4 ஆயிரம், கல்யாண உற்சவம் 2 ஆயிரம், தங்கத்தேர் இழுக்க 2 ஆயிரம், வெள்ளித் தேர், வெள்ளி மயில்வாகனம் 3,500, கேடய உற்சவம் 1000, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்க 500, சிறப்பு தரிசன டிக்கெட 100, குளிர்சாதன அறை வாடகை ஒரு நாளைக்கு 1500, சாதாரண அறை 450, சாதாரண குடில் 900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய www.tirutanigaimurugan.tnhrce.in என்ற முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்…

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நவம்பர் 13ம்தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10.29 மணிக்கு தொடங்கி, 14ம்தேதி இரவு 8.09 மணிக்கு நிறைவடைகிறது.

  • அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம்…

    திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு வரும் 13 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
    ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடைபெறும். அதன்படி வரும் நவம்பர் 13ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது.
    அன்னாபிகேஷம் நடைபெறுவதையொட்டி வரும் 13ம்தேதி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    தொடர்ந்து, மாலை 6.01 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பவுர்ணமியை முன்னிட்டு வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.50 கட்டண தரிசனம், பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். 3ம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    எனவே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் வாய்ப்புள்ளது.

     

  • காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா….

    காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
    51 சக்தி பீடங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயில் 1841 ஆம் ஆண்டும், 1941-ஆம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    இதையடுத்து 1976, 1995ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் புனரமைப்புப் பணிக்காக ரூ.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கருவறையின் மேல் உள்ள தங்க விமானத்திற்கு ரூ.20 கோடி செலவில் 60 கிலோ தங்கத்திலான 5 அடுக்கு தங்கம் ஒட்டப்பட்டு மிளிரும் வகையில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

  • திருப்பதி ஆன்லைன் தரிசனத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்!

    ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கு அறைகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தேவஸ்தானம் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு ஆகியவற்றுக்காக ஆதார் அட்டை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தைக் காண்பிக்கலாம்.
    ஆன்லைன் முன்பதிவின் போது பக்தர்களின் புகைப்படம் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் முதியோர், மாற்று திறனாளி பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அவர்களது உதவிக்காக பேட்டரி கார்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெள்ளி வாசல் முதல் தங்க வாசல் வரை ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆலோசித்து வருவதாகவும் விரைவில் கூட்டநெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.