சில்லரை தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமத் துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக இ-உண்டி வசதி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி நடை சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 20-ம் தேதி இந்தாண்டின் மகர விளக்கு விழா நிறைவு பெறும்.
இந்த 3 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரத மிருந்து மாலையணிந்து, சபரி மலைக்கு வருவார்கள். கோயிலில் உண்டியல் காணிக்கையும் செலுத்துவார்கள்.
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதில் சிரமம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு சபரிமலை அய்யப்பன் கோயிலில் மின்னணு முறையில் காணிக்கை செலுத்துவதற்கான இ-உண்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘‘டெபிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்த எந்த வரம்பும் இல்லை. கிரெடிட் கார்டு மூலம் ஒரு கோடி ரூபாய் கூட, பக்தர்கள் செலுத்தலாம். மின்னணு முறையில் காணிக்கை பெறும் திட்டம், லட்சக்கணக்கான பக்தர்களுக்குப் பயன்படும். விரைவில் மற்ற இடங்களிலும் இவ்வசதி செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: old…
old…
-
சபரிமலையில் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தலாம்
-
உலகின் மிகப்பெரிய ஆலயம் – 12
பயணங்களின் அழகே அப்போது நாம் பார்க்கும் புதிய இடங்களும் சந்திக்கும் புதிய மனிதர்களும்தான். பழக்கமில்லாத இடம், மொழி, மனிதர், தட்பவெப்பம், உணவு, பார்த்திராத கட்டடக்கலை அம்சமுள்ள ஆலயங்கள், அரண்மனைகள், கோட்டை-கொத்தளங்கள்… இவைதான் நம்முடைய பயணங்களைச் சுவாரஸ்யமாக்குகின்றன.
பழக்கமான இடத்தில் என்னதான் சுற்றிச் சுற்றி வந்தாலும் நம்முடைய மனமும் உடலும் ஓய்வை உணருவதில்லை. அதனால்தான், இந்தியாவில் பக்கத்து மாநிலத்திற்குப் போனால்கூட நமக்கு விநோதமாகப்படுகிறது. முற்றிலும் புதிய இடத்தில்தான் மனம் ஓய்வை உணர்ந்து புத்துணர்ச்சி பெறுவதாக முன்பு ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன்.
வாரவிறுதியின்போது அருகிலுள்ள இடங்களுக்குச் சிறு-சுற்றுலா செல்வதற்கும், வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கும் உள்ள வேறுபாடு கணிசமானது. இதை அனுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். சிங்கப்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் நீளமே உள்ள கடற்பாலத்தைத் தாண்டி மலேசியாவுக்குள் நுழைந்ததுமே வரும் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்வும் வார்த்தைகளில் வடிக்க இயலாதது.
அதற்காக சிங்கப்பூர் தாழ்த்தி என்றில்லை. சொர்க்கமாகவே இருந்தாலும் தொடர்ந்து அனுபவிக்கும்போது வரும் செல்லச் சலிப்பு அது. இங்கே பார்ப்பதற்கு வேலை எதுவும் இல்லை. விடுமுறைக்காக வந்திருக்கிறோம். ஊரைச் சுற்றி உண்டு களித்து உறங்க வேண்டியது மட்டும்தான் வேலை என்ற எண்ணமே அந்த விடுதலை உணர்வைக் கொடுக்கிறது.
என்னைப் பொறுத்தவரை உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தர் அதிகமான பயணங்கள் மேற்கொள்பவரே. தினமும் காலையில் ஒரு புதுநிலத்தில் கண்விழிப்பவர் பேறுபெற்றவர். 1984-இல் நான் சீர்காழிக்கு அருகிலுள்ள புத்தூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கும்போது விகடனில் ஒரு நகைச்சுவைத் தொடர்வந்தது. மெரீனா எழுதியது. தலைப்பு எங்கம்மா என்று நினைவு. அதில் வரும் முக்கியக் கதாபாத்திரம் காசிக்கும் திரிவேணி சங்கமத்துக்கும் தீர்த்தயாத்திரை போய்விட்டு வந்து பேசுவதாக மெரீனா எழுதிய வசனம் இப்போது நினைவுக்கு வருகிறது.
“அகலமான கங்கயைப் பார்த்தப்போ மனுஷாள்லாம் எவ்வளவு அற்பம்னு தோணிடுத்து. இந்தச் சின்ன வாழ்க்கைக்குள்ள எவ்வளவு சண்டை, சச்சரவு..” என்ற தொனியில் இருக்கும் அந்த வசனம். உண்மை. பயணங்களே நம்மைப் பரிசீலனை செய்ய உதவுகின்றன. நாம் வாழும் நாட்டின் நிலையை, புதிய தேசத்தோடு நம்முடைய ஆழ்மனம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறது.
“அடடா இந்த ஊரில் பிறக்கவில்லையே” என்று ஒரு கணமும், “நல்லவேளை ! இந்த ஊரிலெல்லாம் நாம் பிறக்கவில்லை” என்று மறு கணமும் மனம் நினைக்கும். இரண்டுமே ஒருவகையில் நம்மைப் பண்படுத்தும். பிள்ளைகளுக்குக் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைப்பதைக் காட்டிலும் அவர்களின் இளவயதில் ஏராளமான பயணங்களுக்கு அழைத்துச் செல்வதே பெற்றோர் செய்ய வேண்டியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. பயணங்களால் மனம் விசாலமடைகிறது.
அந்த வகையில், எங்கள் அனைவருக்குமே கம்போடியப் பயணம் முக்கியமானது. இந்தியாவுக்குக் கிழக்கே பல்லாயிரம் மைல் தொலைவில் ஒரு தேசம் இந்தியப் பண்பாட்டை, ஆன்மிகப் பாதையை ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருவது ஆச்சர்யம்தான். கம்போடிய மங்கல விழாக்களிலும், அமங்கல நிகழ்ச்சிகளிலும் இரண்டு விதமான வைதிகர்களும் இடம்பெறுகிறார்களாம் இன்றளவும். அதுபற்றி அடுத்த பயணத்தில் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக அளவில், யோகாசனங்கள் அதிகப் பிரபலமாகி வரும் காலம் இது. அத்தோடு யோகாசனம் பிறந்த நாட்டின் மீதும் சிலருக்கு ஈடுபாடு வந்துவிடுகிறது போலும். அங்கோர் வாட்டில் நாங்கள் சந்தித்த பெண்மணி அந்த வகையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். முதல் சுற்றுத் தாழ்வாரங்கள் பார்த்து முடித்து இரண்டாம் சுற்றுக்குள் நுழையும்போது அந்தப் பெண்மணியைச் சந்தித்தோம்.
இந்தியப் பண்பாட்டின்மீது ஆர்வமுள்ள பிறநாட்டவரோடு பேசுவது எப்போதுமே எனக்குப் பிடித்தமான ஒன்று. இந்தியாவைப் பற்றி அதன் பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் பற்றி அவர்கள் என்ன புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் எனக்கு. சிங்கப்பூர் வருமுன், எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக உரையாடிப் பழக்கமில்லை. இருந்தாலும் சமாளிப்பேன்.
1988-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், பகுதிநேரப் பொறியியல் கல்வி வகுப்பு முடிந்து தினமும் இரவு தஞ்சாவூருக்கு ஒரு பாசஞ்சர் ரயிலில் நண்பர்களோடு திரும்பிச் செல்வேன். இரவு ஒன்பது மணிக்கு வகுப்பு முடிந்ததும், அவசர அவசரமாக இரவு உணவை முடித்துக் கொண்டு 9.20க்குக் கிளம்பும் ரயிலில் ஏறி உட்கார்ந்தால், பின்னிரவு ஒன்றரை மணிக்குத் தஞ்சாவூர் வந்துவிடும். அப்படி ஆறு மாதம் வரை சென்றிருக்கிறேன். அந்தப் பயணத்தில் ஒருமுறை ஆஸ்திரேலியப் பயணி ஒருவர் வந்தார். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவரோடு சற்று நேரம் உரையாடினேன். அவர் பேசிய ஆங்கிலத்தைப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமம் இருந்ததால் எங்கள் பேச்சு அதிக நேரம் நீடிக்கவில்லை. என்ன பேசிக் கொண்டோம் என்பதும் இப்போது நினைவிலில்லை.
ஆனால் இப்போது நிலைமை வேறு. என்னால் தைரியமாக ஆங்கிலத்தில் உரையாட முடிகிறது. வெள்ளைக்கார ஆங்கிலமும் ஓரளவு புரிகிறது. அந்த தைரியத்தில் அந்தப் பெண்மணியோடு பேச்சுக் கொடுத்தேன். அவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார். யோகாசனம் பற்றிப் படித்து அதைப் பயிற்சி செய்கிறார். அப்படியே இந்தியாவைப் பற்றிக் கேள்விப்பட்டு இந்தியாவில் சில இடங்களுக்குச் சென்று பார்த்து வந்திருக்கிறார்.
உலக அதிசயம் என்பதாலும் இந்தியப் பண்பாட்டுடன் தொடர்புடையது என்பதாலும் அங்கோர் வாட்டைப் பார்க்க வந்ததாகச் சொன்னார். அவருக்கு நான்கு வருணங்கள், நான்கு வேதங்கள், மும்மூர்த்திகள் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. மகாபாரத, ராமாயண இதிகாசங்கள் பற்றிய அறிமுகம் உள்ளது.
ஆகவே, அங்கோர் வாட்டைத் தம்மால் ரசிக்க முடிவதாகச் சொன்னார். தொடர்ந்து இந்தியாவில் பயணம் செய்ய ஆர்வமிருப்பதாகவும் அந்தப் பெண்மணி பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இவர்களைப் போன்றவர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன்.
நாங்கள் சந்தித்த பெண்மணிக்கு 40, 45 வயதிருக்கலாம். தன்னந்தனியாக அறிமுகமில்லாத ஒரு ஆசிய நாட்டுக்குப் புறப்பட்டு வந்து தான் விரும்பியதைப் பார்த்து ரசித்துவிட்டுப் போகிறார். மகனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமே ! மகளுக்கு 200 பவுன் நகை போட்டுக் கட்டிக் கொடுக்க வேண்டுமே ! என்ற கவலையெல்லாம் இவர்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன்.
நாம்தான் நமக்காக வாழாமல், நம் சந்ததிகளுக்காக சொத்துச் சேர்த்து வைத்து மறைந்து போகிறோமோ ? வாழையடி வாழையாக நம் குடும்பங்களில் இதுதான் நடக்கிறதோ ? யோசிப்போம். பிள்ளைகள் முக்கியம்தான். ஆனால், நாம் நமக்காக வாழ்வதும் எவ்வளவு முக்கியம் ? பயணங்களும் அது தரும் அனுபவங்களுமே ஈடில்லாத மகிழ்ச்சியை அளிக்கின்றன என்ற எண்ணத்தை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்திக் கொண்டேன்.
முதல் சுற்றுத் தாழ்வாரத்தின் வடக்குப் பகுதியில், கடவுள்கள் சண்டை போடும் காட்சிகள் ஏராளமாக இருந்தன. எது எது எந்தெந்தக் கடவுள் என்பதைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்குள் போட்டியே உருவானது. பிள்ளையார் இருந்தார். சிவன் ரிஷபத்தின் மேலேறியவாறு இருந்தார். கருடனின் மேல் அமர்ந்த விஷ்ணு இருந்தார். யாளி போன்ற இரண்டு உருவங்கள் இருந்தன. அன்னப் பறவை இருந்தது.
மயில் மீதமர்ந்து ஆறுமுகன் வில்லில் அம்பு தொடுக்கும் சிற்பமும் இருந்தது. போர்க்களக் காட்சிகள் எல்லாம் உக்கிரமாக இருந்தன. கருடனின் முகபாவம் போரில் கத்திக் கூச்சலிடும் பாவத்தில் இருந்தது. கிழக்குப்புறத் தாழ்வாரத்தில் இருந்த சிற்பங்களைக் காட்டிலும் இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் சற்று நெருக்கமாகச் செதுக்கப்பட்டிருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.

மேலும் இந்தப் பக்கத்திலிருந்த சிற்பங்களில் வழுவழுப்புத்தன்மை அதிகமிருந்தது. அது பயணிகளின் கைபட்டு உருவான வழவழப்பா இல்லை இயல்பே இப்படித்தானா என்று தெரியவில்லை. ஆடை, ஆபரண வடிவங்களும் சற்றுத் துல்லியமாகத் தெரிந்தன இந்தச் சிற்பங்களில். அவரவருக்குப் பிடித்த சிற்பங்களின் அருகே நின்று கூடுதல் நேரம் செலவிட்டதால், நாங்கள் ஐவருமே தள்ளித் தள்ளி நின்று கொண்டிருந்தோம். கேமராவில் படம்பிடிக்க முடியாமல் எல்லாருமே திறன்பேசிகளைத் தஞ்சமடைந்திருந்தோம்.
இந்தப் பக்கத்துச் சிற்பங்கள் ஓரளவு நன்கு அடைபட்டன படக்கருவிகளுக்குள். ஐவரும் ஓரிடத்தில் ஒன்றுதிரண்டு, வழிகாட்டியோடு இரண்டாம் சுற்றுத் தாழ்வாரத்தை இணைக்கும் பாதைக்குள் புகுந்து இரண்டாம் சுற்றை அடைந்தோம். இங்கே தூண்களில்தான் புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. முதலில் நினைத்ததுபோல் இங்குள்ள சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் இல்லை. இந்தப் பகுதியைச் சுற்றி வரும்போதே நடுவிலுள்ள மூன்றாவது முக்கிய அடுக்கு, பலகணி வழியாக வந்து வந்து சென்றது. இந்தச் சுற்றை வேகமாகவே வலம் வந்துவிட்டோம்.
உயரம் இப்போது அதிகரித்துவிட்டபடியால், சுற்றிலுமுள்ள இடங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. ஒரே பார்வைக்குள் அடங்கும் ஆலயத்தின் அளவு அதிகரித்திருந்தது. அது ஒரு புதுக் கோணத்தைத் தந்தது எங்களுக்கு. இப்போது முக்கிய மூன்றாவது அடுக்கின் கீழ்ப் பகுதிக்கு வந்துவிட்டோம். இங்கேயும் இரண்டு நூலக இடிபாடுகள் இருந்தன வடக்கிலும் தெற்கிலும். அதற்குள் ஏறிப் பார்க்கவில்லை.
திசைக்கு ஒன்றாக நான்கு மேருக்கள். நான்கு பக்கத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட செங்குத்தான படிகள் மேல்புறத்தை நோக்கிச் சென்றன. பக்கத்து மூன்று விகிதத்தில் மொத்தம் 12 படிக்கட்டுகள் இருக்குமென நினைக்கிறேன். படிக்கட்டுகளை ஏறிக் கடக்கும்போது பக்கவாட்டிலுள்ள கைப்பிடிகளைப் பிடித்தவாறுதான் செல்ல முடியும். அவ்வளவு செங்குத்தான படிகள். பொதுவாகப் படிக்கட்டுகள் 45 டிகிரி சாய்மானத்தில் கட்டப்படும். அதற்கும் கீழான சாய்மானம் என்றால் சறுக்குப் பாதை மாதிரி எளிதில் ஏறிவிடலாம். ஆனால் 45 பாகையைத் தாண்டிவிட்டால் படிக்கட்டுகளை ஏறுவதில் சிரமம் அதிகரித்துக் கொண்டே போகும்.
அதை ஈடுகட்ட படிக்கட்டுகளின் உயரத்தைக் குறைத்தாலும் பத்தாது. மகாமேருவை நோக்கிய அங்கோர் வாட் ஆலயப் படிக்கட்டுகள் அநேகமாக 60 அல்லது 70 பாகைக் கோணத்தில் இருக்குமென்பது என்னுடைய ஊகம். படிகளின் எண்ணிக்கையும் அதிகம். மூன்று, நான்கு மாடி உயரத்துக்குப் படிகள் இருந்தன. அவற்றுள் கிழக்குப் புறத்தில் மட்டும் ஓரிடத்தில் கற்படிகளுக்கு மேலே மரப்படிகள் அமைத்து ஏறிச் செல்ல வழிவைத்துள்ளனர். எஞ்சிய எல்லாப் படிக்கட்டுகளையும் வேலி போட்டு மறித்துள்ளனர்.

ஏறுவதற்கு ஒன்று. இறங்குவதற்கு ஒன்று என இரண்டு படிக்கட்டுகள். ஏனென்றால், ஒரே படிக்கட்டில் ஏறுபவரும் இறங்குபவரும் சந்தித்தால் விபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம். பிள்ளைகளைப் படிக்கட்டில் விளையாட வேண்டாம் என்று எச்சரித்துதான் மேலே அனுப்புகிறார்கள். வயதானவர்களைக் கூடவே ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வது நல்லது. ஒவ்வொரு படியிலும் நின்றே அடுத்தபடியில் ஏற முடிகிறது.
இப்படி நாம் முதலில் ஏறி அடைவது வடகிழக்கு மூலையிலுள்ள மேருவின் கீழ்ப்பகுதி. அதன் வாசலின் மேலே உள்ள நிலைப் பகுதியில் நாக தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம ஊர் கோயில்களில் யாளி, மகர தோரணம் இருக்கும் பெரும்பாலும். இங்கே எல்லா வாயில்களுக்கு மேலேயும் நாக தோரணம்தான். தோரணத்துக்கு உள்ளே பெரும்பாலும் போர்க்களக் காட்சிகள். விலங்குகள். பக்கவாட்டுத் தூண்களில் அப்சரஸுகள். நான்கு திசைகளிலும் உள்ள நான்கு மேருக்களையும் இணைக்கும் தாழ்வாரம் இரண்டு விதமான உயரங்களில் உள்ளது.
அந்தத் தாழ்வாரத்துக்கும் நடுவிலுள்ள மகாமேருவுக்கும் இடைப்பட்ட இடம் ஒவ்வொரு திசையின் நடுப்பகுதியிலிருந்து மேருவை நோக்கிச் செல்லும் இணைப்புச் சாளரங்களால் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த இடத்தில் நான்கு தொட்டி போன்ற பகுதி உருவாகிப் பள்ளமாக இருக்கிறது. மேலிருந்து பார்க்கும்போது ஏராளமான கற்கள் பெயர்ந்து கிடப்பது தெரிகிறது. நிலநடுக்கத்தின் பாதிப்பா அல்லது காலப் போக்கில் தானாக இடிந்து விழுந்தவையா என்பது தெரியவில்லை.

இந்தப் பகுதியிலுள்ள ஒரு மண்டபம் வானம் பார்க்கத் திறந்து கிடந்தது. ஆலயத்தின் முன்புறமும் பின்பிறமும் நீண்ட பாதைகள் தெரிந்தன. சுற்றிலும் பசுமை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பசுமை.. பசுமையைத் தவிர வேறில்லை. மேலே வந்ததும் காற்று பலமாக வீசத் தொடங்கியது. வியர்வையில் ஊறியிருந்த சட்டை உலரத் தொடங்கியதால் புதுத் தெம்பு வந்தது போலிருந்தது எல்லாருக்கும். ஒவ்வொரு திசையிலும் தெரிந்த காட்சி, ஏற்கனவே பார்த்த காட்சியை விடவும் மேம்பட்டதாக இருப்பது போலிருந்தது எங்களுக்கு.
எதிரே அடுக்கடுக்காகத் தெரிந்த கோபுரங்கள் கேரள பாணிக் கோயில்களை நினைவுபடுத்தின. நான்கு மூலைகளிலும் தாழ்வாரங்கள் முடியும் இடத்தில் அடுக்கடுக்காக எழுந்து மேரு உருவாகியிருந்தது. இன்னமும் அந்த இடங்களைச் சீரமைக்கும் பணி தொடர்கிறது. ஆலயப் பகுதிகளை மூடி வைத்து உள்ளே வேலை நடப்பதைப் பார்க்க முடிந்தது.
கீழே இருந்த மண்டபங்கள் இடைவெளியோடு கூடிய பாதைகளால் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு பார்வையில் அந்த மண்டபங்கள் நமது ஊர் தெப்பக்குளங்களின் நடுவே காணப்படும் நீராழி மண்டபங்கள் போலிருந்தன.
இந்த உயரத்திலிருந்து தென்படும் காட்சி என்னை என்னவோ செய்தது. பாழடைந்து சிதிலமாகிப் போன ஒரு பேராலயத்தின் மேலே நிற்கிறோம். இதைக் கட்டி முடித்தபோது இந்த இடம் எவ்வளவு புதுக்கருக்குடன் இருந்திருக்கும் ? இரண்டாம் சூரியவர்மனும் இந்த இடத்தில் நின்று பார்த்திருப்பார்தானே ? அப்போது அவர் மனத்தில் என்னென்ன நினைத்திருப்பார் ? உலக அதிசயமொன்றை உருவாக்கிவிட்டோமென்பதை அப்போது அவர் உணர்ந்திருப்பாரா ? அதற்காகப் பெருமைப்பட்டிருப்பாரா ?
கீழே கற்கள் சிதறிக் கிடந்தன. மேலிருந்து பார்க்கும் கோணத்தில் கோயில் அலங்கோலமாகக் கிடப்பது போல் பட்டது எனக்கு. தொலைவில், மண்ணிலிருந்து மொத்தமாகப் பார்க்கும்போது இருந்த வடிவமைதி இப்போது காணாமற் போயிருந்தது. கோயிலின் சில பகுதிகளில் ஆங்காங்கே பச்சைப் பாசி படர்ந்திருந்தது. காரணமின்றி என்னைச் சோகம் கப்பிக் கொண்டது. மிகப் பழமையான இடங்களில் இருக்கும்போது மட்டுமே என்னால் உணரக் கூடிய வகையான சோகம்….
– பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com
-
ஸ்ரீரங்கம் கோயிலில் இ-உண்டியல் சேவை ….
பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புதிதாக இ-உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசிக்க நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல்கள் மாதம் ஒரு முறை திறந்து எண்ணப்படுகிறது. இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பக்தர்கள் நலன்கருதி கோயில் நிர்வாகம் சார்பில் இ-உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் ஏடிஎம் இயந்திரம் போல பயன்படுத்தலாம். இதில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் குறைந்த பட்சம் ரூ.100 முதல் அதற்கு மேற்பட்ட தொகையை இந்த இயந்திரத்தில் டெபாசிட் செய்யலாம். அப்படி செய்யும் போது அதற்கான ரசீதும் அதிலேயே தானாக வழங்கப்படும். மேலும் இந்த இ-உண்டியல் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் டெபாசிட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தியும் காணிக்கை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
சபரிமலை கோயில் பெயர் மாற்றம்
கேரளாவில் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சபரிமலை ஶ்ரீஐயப்ப சுவாமி கோயில் என அழைக்கப்படும் என திருவாங்கூர் தேவசம் அறிவித்துள்ளது.
திருவாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பழைய பெயர் உடனடியாக மாற்றப்பட்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.
திருவாங்கூர் தேவசம் நிர்வாகத்தின் கீழ், பல்வேறு சாஸ்தா கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக சபரிமலை ஶ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் மட்டுமே ஐயப்பன் இன்றளவும் வாழ்வதாக நம்பப்படுகிறது. அதனால், ‘சபரிமலை தர்ம சாஸ்தா’ என்னும் பெயரை, மாற்றி ‘சபரிமலை ஶ்ரீஐயப்ப சுவாமி கோயில்’ என்று புதிதாக மாற்றப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோயில் பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக பம்பையில் இருந்து சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோயில் வரை உள்ள அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர போர்டுகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்றன. -
நோய்களை குணமாக்கும் பஞ்சநத நடராஜர் …..
திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோயில். இந்த கோயிலில் உள்ள நடராஜர் ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்டவர்.
பஞ்சநத நடராஜர் சிலையின் மகிமை…
ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது என்று கூறப்படுகிறது.பாறைகளின் சிறப்புகள்
ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்பது சிற்பக்கலை வல்லுநரால் கூறப்பட்டுள்ளது.
நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன.
சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் இவ்வூர் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த கோயில் பஞ்சநத நடராஜர் கோயில் என அழைக்கப்படுகிறது.அழகே வடிவான இறைவி சிவகாமி அம்மை….
இந்த கோயிலில் இறைவி சிவகாம சுந்தரியின் உருவ அமைப்பு வணங்குவதற்கு மட்டுமில்லாமல் ரசனைக்குரியதாகவும் இருப்பது தனிச்சிறப்பு. அந்த அன்னை தன் முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இது காண்போரை மெய்மறக்க செய்கிறது.பஞ்சநதன நடராஜர் ஸ்தல வரலாறு…
பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியை அடுத்து பாடாலூரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள திருஊற்றத்தூர் (தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது).
ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம்….
ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.
அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.நோய் நீக்கும் நடராஜர்….
சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்……….
ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.
இக்கோவிலில் சுத்தரத்தினேஸ்வரர், அகிலாண்டேசுவரி, பரிவாரங்கள், விநாயகர், சூரியன், தட்சிணாமூர்த்தி, ஐந்து நந்திகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், 63 நாயன்மார்கள், கோடி விநாயகர், இரட்டை லிங்கம், அதிகார நந்தி, கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, கோரப்பல்லுடன் கூடிய துர்க்கை, விஷ்ணு, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, வீரபத்திரர், பைரவர், நவக்கிரகங்கள் மற்றும் மிக அழகான தோற்றம் உள்ள பல தெய்வங்களின் சிலைகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது.மாற்று திசையில் நந்தி தேவர்….
மற்ற சிவ தலங்களில் இல்லாத விசேஷமாக இங்கு நந்திதேவர் கிழக்கு முகமாக படுத்து உள்ளார். கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவிரி, சிந்து, துங்கப்பத்திரா ஆகிய நதிகளில் யார் பெரியவர்? என்ற தகராறு ஏற்பட்டு இங்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும்படி சிவ பெருமான் நந்திதேவருக்கு கட்டளையிட்டார்.அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கி விட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும் அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும், கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. இதனால் கோவில் அருகே ஓடும் சிறிய ஆறு நந்தியாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கடலுடன் கலக்கிறது.
-
திருவண்ணாமலை கார்த்திகை தீப கொடியேற்றம்…
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா நவம்பர் 30-ஆம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, டிசம்பர் 1-ஆம் தேதி இரவு பிடாரியம்மன் உற்சவமும், டிசம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெறுகின்றன.
டிசம்பர் 3-ஆம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தனுர் லக்கினத்தில் கோயில் தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதன் பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
டிசம்பர் 8-ஆம் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகின்றன. டிசம்பர் 9-ஆம் தேதி காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து, இரவு 10 மணி வரை பஞ்சரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
12-ல் தீபத் திருவிழா: டிசம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.
3 நாள் தெப்பல் உற்சவம்: தொடர்ந்து, டிசம்பர் 13-ஆம் தேதி இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், டிசம்பர் 14-ஆம் தேதி ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 15-ஆம் தேதி ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், தீபத் திருவிழாவுக்கான பத்திரிகைக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் புதன்கிழமை இரவு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இதன்பிறகு பக்தர்களுக்கு தீபத் திருவிழா பத்திரிகையை விநியோகம் செய்யப்பட்டது. -
ஐயப்பனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!
பதினெட்டு என்பது வரலாற்றில், புராண இதிகாசங்களில் குறிப்பிடத்தக்க ஒரு எண்ணாகவே இருந்திருக்கிறது.
இந்தியா தேவாசுர யுத்தம் 18 ஆண்டுகள் நடந்தது. ராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்தது. பாண்டவ கொளரவ யுத்தம் 18 நாட்கள் நடந்தது. குருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடைபெற்றது அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதன் அடிப்படையில் 18 நாட்கள் நடைபெற்ற போரை குறிப்பிடும் படியாக அதன் அடையாளமாக 18 படிகள் அமைக்கப் பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.
குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.
லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.
மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.
மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.
டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.
அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.
சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.
ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.
தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.
ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.
மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.
அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.
கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.
காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.
மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.
நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.
மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.
இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.
-
ஐயப்பனுக்கு விரதம் இருக்கும் முறை….
ஐயப்பனுக்காக மாலை அணிந்த நாள் முதல் விரத நாட்களின் எண்ணிக்கை தொடங்கி விடும். விரத நாட்கள் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் தன் விரத நாட்களில் அனுசரிக்க வேண்டிய கடைபிடிக்க வேண்டிய முறைகள் இருக்கின்றன.
இதை ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கண்டிப்பாக தன் விரத நாட்களில் பின்பற்றியே ஆக வேண்டும்.
விரதம் இருக்கும் பக்தன் அதிகாலை சூரிய உதயத்திறகு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, பச்சைத் தண்ணீரில் குளித்து விட வேண்டும் .
குளித்து முடித்து விட்டு திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும் .தேவைப் பட்டால் சந்தனத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்
பிறகு விளக்கு ஏற்றி வைத்து ஐயப்பனின் 108 சரணத்தையும் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும்.
ஐயப்பனை வணங்கி விட்டு விளக்கை அணைத்து விடக் கூடாது குறைந்தது ஒரு மணி நேரம் விளக்கு எரிய வேண்டும் அணைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பச்சைத் தண்ணீரில் குளித்து முடித்து விட்டு காலையில் எழுந்து செய்தது போலவே செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சிறிது நேரம் கோயிலிலேயே அமர்ந்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஐயப்பன் கோயில் இருந்தால் அங்கு சென்று வணங்கலாம். ஐயப்பன் கோயில் இல்லையென்றால் வேறு ஏதேனும் ஒரு தெய்வம் உள்ள கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்கலாம்.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஐயப்பன் கோயிலுக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். -
ஐயப்ப மாலை அணியும் முறை….
ஐயப்பனுக்காக விரதம் மேற்கொள்ளும் துவக்க நாளன்று ருத்ராட்சக் கொட்டைகளினால் செய்யப் பட்ட மாலையையோ அல்லது துளசி மணிகளால் செய்யப் பட்ட மாலையையோ கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும்.
கழுத்தில் பெரிய மாலை சிறிய மாலை என்று இரண்டு விதமான மாலைகளை ஐயப்ப பக்தர்கள் அணிகிறார்கள் சிறிய மாலை துணைமாலை என்றும் அழைக்கப் படுகிறது
பெரிய மாலை 108 எண்ணிக்கை கொண்ட பெரிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ அல்லது 108 எண்ணிக்கை கொண்ட பெரிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ பெரிய மாலை இருக்கும்
சிறிய மாலையில் 108 எண்ணிக்கை கொண்ட சிறிய துளசி மணிகள் கொண்ட மாலையாகவோ அல்லது 108 எண்ணிக்கை கொண்ட சிறிய ருத்ராட்சக் கொட்டைகள் கொண்ட மாலையாகவோ சிறிய மாலை இருக்கும்
பெரிய மாலையிலும் சிறிய மாலையிலும் ஐயப்பனின் படமும், விநாயகரின் படமும் கொண்ட டாலர் மாட்டப் பட்டிருக்கும். -
திருக்கார்த்திகை முருகபெருமான் வழிபாடு….
திருவிளக்கு வழிபாட்டை முடித்து மறுதினம் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் மெழுகி, கழுவிச் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும்.
இல்லத்துப் பூஜையறையில் விநாயகப் பெருமான் படத்தோடு அருகில் முருகப்பெருமான் படத்தையும் வைத்து அதற்கு மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமானதாக அமையும்.
காலையில் விரதமிருப்பது நல்லது. இரவு விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். கார்த்திகையன்று விரதமிருந்து முத்துக்குமரனை வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும்.
பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனைவி அமையவும் குழந்தைச்செல்வம் பெறவும், பெற்ற குழந்தைகள் கல்விச் செல்வம் பெறவும், அறிவு வளரவும் இந்த விரதம் பலன் தருகின்றது.
இந்த விரதத்தின் மூலம் தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இரவு வரை விரதமிருக்க முடியாதவர்கள் ஒரு நேரம் மட்டும் விரதமிருப்பதும் உகந்ததாகும்.
அமாவாசை விரதம் போல, கார்த்திகை விரதமன்றும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகே நாம் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பகலில் பசும்பால் மட்டும் அருந்தலாம். பழம் சாப்பிடலாம். அன்று மாலை பால், பழம், பருப்பு பாயசம் சாப்பிடலாம்.
மறுநாள் பச்சரிசி சாதம், பருப்பு, வாழைக்காய் அவியல், கூட்டு ஆகியவற்றை உட்கொள்வது நல்லது.
கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பம், இனிப்பு உருண்டைகளை நைவேத்தியமாக வீட்டில் வைத்து கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்வது நல்லது. அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று கந்தன் சன்னிதியில் கைகூப்பித் தொழுவது நல்லது. மேலும், இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.