Category: old…

old…

  • அர்த்தமுள்ள இந்து மதம் …….. அஷ்டமியும்,நவமியும் …….

    அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.

    நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .
    நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ? அதற்கு என்ன காரணம் ?
    அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

    கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

    ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!
    பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

    அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

    நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)
    நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.
    அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.
    சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

    அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.
    அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும்எதிரொலிக்கும்.
    பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

    அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

    நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

    அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

  • திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.
    திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.
    ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.
    இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.
    ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.
    பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
    உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.
    பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.
    ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?
    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.
    பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.
    சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.
    ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.
    ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.
    பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
    மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.
    அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.
    வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.
    மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.
    அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.
    திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.
    சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.
    ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.
    ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
    1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

  • கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோவில்

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது கொல்லிமலை. இயற்கை எழில் கொஞ்சும் மலையான இங்கு ஆச்சரியங்களும், அமானுஷ்யங்களும் கலந்த இம்மலையில் 18 சித்தர்களும் சூட்சுமமாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள அறப்பளீஸ்வரரை வணங்கினால் அனைத்தும் சிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு கீழே 1200 படிகளை கடந்து கீழிறங்கி சென்று இங்குள்ள புனித அருவியான ஆகாய கங்கை அருவியில் நீராடவேண்டும். வானில் இருந்து கொட்டுவதுபோல இருக்கும் ஆகாயகங்கை அருவியை பார்த்துக்கொண்டே இருப்பது கொள்ளை அழகு அவ்வளவு பிரமாண்டமான அருவி அது. இந்த ஆகாயகங்கையில் நீராடிவிட்டு 1200 படிகள் கடந்து மீண்டும் மேலேறி சென்று இங்குள்ள அறப்பளீஸ்வரரை வணங்கவேண்டும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

    அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திப்பது சிறப்பு. குடும்பப் பிரச்சனையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனஸ்தாபம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் ஒற்றுமையாக இருப்பர் என்பது நம்பிக்கை.

    உயிர்களின் வாழ்க்கை ஒளிபெற இறை வழிபாட்டில் இருந்த சித்தர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக, இருந்ததுதான் கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, “அறப்பளீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்து விட்டது.

    விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பட்டது. இந்த கோவில் சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும் பெற்றது.

  • திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்

    திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் மார்ச் 8–ந்தேதி துவங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான திருவிழாக்கள் நடக்கின்றன. அதில், தெப்ப உற்சவமும் முக்கியமான விழாவாகும்.
    இந்த ஆண்டுக்கான வருடாந்திர தெப்ப உற்சவம் வருகிற மார்ச் 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    8-ந்தேதி முதல் நாள் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் புஷ்கரணிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி 3 சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
    9-ந்தேதி 2-வது நாள் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியோடு சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
    10-ந்தேதி 3-வதுநாள் உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்று பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
    11-ந்தேதி 4-வது நாளும், 12-ந்தேதி 5-வதுநாளும் உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
    எனவே கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெற உள்ளதால், 12-ந்தேதி நடக்கும் கருட வாகன வீதி உலா ரத்து செய்யப்படுகிறது என்று திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா ….

    திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    மார்ச் 1 ஆம் தேதி புதன்கிழமை இரவு அனுக்ஞை, அங்குரார்ப்பணம், விநாயகர் உலாவுடன் விழா தொடங்குகிறது.
    அதனை தொடர்ந்து வியாழக்கிழமை காலை 5.30 மணி அளவில் கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு கேடய உலாவும் நடைபெறுகிறது. மார்ச் 3 ஆம் தேதி காலை வெள்ளி சூரிய பிரபையும், இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் உற்சவமும் நடைபெறுகிறது. மார்ச் 4 ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு ஆட்டு கிடாய் வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 5 ஆம் தேதி காலை பல்லக்கு சேவையும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும், மார்ச் 6 ஆம் தேதி காலை அன்ன வாகனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்திலும் உற்சவர் பவனி வருகிறார். மார்ச் 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்கத் தேரிலும், மார்ச் 9 ஆம் தேதி காலை யாளி வாகனத்திலும் உற்சவர் வலம் வருகிறார். மாலை 5 மணிக்கு ஆறுமுக சுவாமி கோயிலில் பாரிவேட்டையும், இரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் வள்ளியம்மை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
    மார்ச் 10 ஆம் தேதி காலை 6 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழாவும் இரவு 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவமும், மார்ச் 11 ஆம் தேதி காலை 5 மணிக்கு சண்முக சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவமும், மாலை 5 மணிக்கு கொடி இறக்கமும், மார்ச் 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சப்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    தினசரி மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

  • மகா பெரியவரை மயக்கிய நாகஸ்வர இசை..

    காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் திக்விஜயம் செய்து கொண்டிருந்த நேரம். மாயவரத்தில் பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் என்று சொன்னால் யானை, குதிரை எல்லாம் முன்னால் ஊர்வலமாக வரும். பரமாச்சாரியார் பல்லக்கில் வருவார்.

    தருமபுரம் மடம் வழியாக பரமாச்சாரியாரின் பல்லக்கு வந்தது. அங்கே பூர்ணகும்ப மரியாதையுடன் தருமபுரம் ஆதீனத்துக்கு விஜயம் செய்தார் அவர். பண்டார சந்நிதி அவரை மிகுந்த  மரியாதையுடன் மடத்திற்கு அழைத்துச் சென்றார். பிறகு மயிலாடுதுறைக்குள் நுழைந்தது பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேச ஊர்வலம்.

    நாகஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை பெயரில் மட்டுமல்ல, நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். அவருடைய லெட்டர்பேடில் “அகில உலக நாகஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள்’ என்றுதான் அச்சிடப்பட்டிருக்கும். கப்பல் போன்ற ஸ்டுடிபேக்கர் காரில்தான் பயணிப்பார். இந்த சந்தர்ப்பத்தில் வெளியூரில் கச்சேரி செய்துவிட்டு திருவாவடுதுறை திரும்பிக் கொண்டிருந்தார் டி.என்.ஆர்.

    அந்த நாளில் மாயவரத்தில் பிரபலமான காளியாக்குடி ஹோட்டல் அருகில் உள்ள மணிக்கூண்டு வழியாக சென்று கொண்டிருந்த டி.என்.ஆர். கூட்டத்தைப் பார்த்துவிட்டு “என்ன விசேஷம்?’ என்று வினவினார். பரமாச்சாரியாரின் பட்டணப் பிரவேசம் வந்து கொண்டிருக்கிறது என்றும் அடுத்த தெருவில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டவுடன் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தச் சொன்னார். சட்டையைக் கழற்றினார். அங்கவஸ்திரத்தை இடுப்பில் சுற்றிக் கட்டிக் கொண்டார். மணிக்கூண்டு அருகில் நின்று கொண்டு நாயனம் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.

    இவரது நாயன சங்கீதம் காதில் விழுந்தவுடன், “ராஜரத்தினம் வாசிப்பு போலிருக்கிறதே, அங்கே போங்கோ’ என்று பரமாச்சாரியார் உத்தரவிட, பட்டணப் பிரவேச ஊர்வலத்துடன் பல்லக்கு மணிக்கூண்டை நோக்கி நகர்ந்தது. இதைத்தானே ராஜரத்தினம் பிள்ளை எதிர்பார்த்தார்! அவருக்கு பரம சந்தோஷம். உற்சாகம் தாங்கவில்லை. அடுத்த ஒன்றரை மணி நேரம் மணிக்கூண்டு அருகில் நின்றபடியே வாசித்துக் கொண்டிருந்தார் டி.என்.ஆர். மாயவரம் நகரமே அங்கே கூடிவிட்டது.

    பரமாச்சாரியார் ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பை மெய்மறந்து கேட்டு ரசித்தார். அவருக்கு ஒரு சாத்துக்குடி பழத்தை ஆசிர்வாதமாக வழங்கினார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டு நாகஸ்வர சக்ரவர்த்தி சொன்னார்-
    “இந்த ஜென்மா சாபல்யம் அடைந்துவிட்டது!’

    – படித்ததில் பிடித்தது…

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 15

    அடர்ந்த காட்டுக்குள் சென்று கொண்டிருந்தோம். அரை மயக்கத்தில் இருந்தேன் நான். செல்லத் தூக்கம் கலைந்தபோது, வாகனத்தின் இருபுறமும் அகழி தென்பட்டது. ஒரு பக்கம் அசுரர்களும் மறுபக்கம் தேவர்களும் வாசுகிப் பாம்பைப் பிடித்துப் பாற்கடலைக் கடையும் சிற்பம் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. காலம் இந்தச் சிற்பங்களை சின்னாபின்னப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனாலும் என்ன, இன்னும் அதன் அழகு மிச்சமிருக்கிறது.

    அடர்ந்த காட்டுக்குள் பசுமையும் நீர்மையும் சூழ்ந்திருக்க, இலேசான தூறலுக்கு இடையே அந்தச் சிற்பங்களைக் கண்ணாடி வழியே பார்ப்பது கனவு போலிருந்தது. இறங்கிப் பார்க்க நேரப் பற்றாக்குறை இடங்கொடுக்கவில்லை. அது என்னவென்று தெரியாமலேயே அதை முன்பு படங்களில் பார்த்திருக்கிறேன். அருகில் வரும்போது அதை நிறுத்தி நிதானமாய்ப் பார்க்க வாய்ப்பு இல்லாமற் போனது வருத்தம்தான்.

    பிதுங்கிய விழிகளும் கீழ்நோக்கி வளைந்த வாய்களுமாக அசுரர்கள் வரிசையாக நின்றிருந்தனர். சலனமற்ற முகம் அமைதியில் ஆழ்ந்திருக்க, ஏகாக்கிரஹ சிந்தையோடு தென்பட்டனர் தேவர்கள். நாம் சிறுவயதில் படித்த கேலிச் சித்திரக் கதைகளில் வரும் சித்திரக் குள்ளர்களைப் போல அசுரர்கள் என் கண்களுக்குத் தென்பட்டனர்.  

    பாம்பு வடம் இடையிடையே உடைந்து தொடர்பு விட்டுப்போயிருந்தது. சாலையிலிருந்து பார்க்கும்போது பின்னணியில் வெள்ளக்காடும் காடும் மட்டும்தான் தெரிகிறது. எவ்வித மின்சாரக் கம்பங்களோ தொலைத் தொடர்புக் கோபுரங்களோ தெரியவில்லை. சற்றுத் தொலைவில் மழை பெய்து கொண்டிருந்தது புகைமூட்டம் போலிருந்தது. ஆகவே, அதன் பழமையை நன்கு அனுபவிக்க முடிந்தது எங்களால். அசுரர்களின் முகபாவம் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பக்கம் திரும்புவோம் என்பது போலிருந்தது.

    பாலம் போன்ற அந்த இடத்துக்கு நாக பாலம் என்றே பெயராம். அதைக் கடந்து வந்து வாகனத்தை நிறுத்தினார் ஓட்டுநர். இறங்கியதும் எங்கள் எதிரே தோன்றியது பாயோன் ஆலயம். என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது என்று சொன்னால், இதுவரை இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து வருபவர்கள் நம்புவீர்கள் என நம்புகிறேன். இதுவரை நாம் பார்த்தறியாத ஓர் உலகம் கண்முன் எழுந்து நின்றால் எப்படியிருக்கும் ?

    இந்தியக் கலைமனம் இதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஒரு வடிவத்தில் இருந்தது பாயோன் ஆலயம். நாங்கள் சென்ற நேரம் மழை பெய்திருந்தது. கோயிலுக்கு முன்னால் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இன்னுமொரு பாயோன் கோயில் கண்ணாடிப் பிரதிபலிப்பாய்த் தெரிந்தது. கற்பாளங்கள் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, கல்லில் படிந்த பாசி பூத்து, வெளுத்து, அப்படியே படை படையாய்ப் படர்ந்திருந்தது. புதிதாய் முளைத்துவரும் பாசி, மெல்லிய பச்சைப் போர்வை போல் சில இடங்களைப் போர்த்தியிருந்தது.

    இந்தக் கோயிலுக்கு, அங்கோர் வாட்டைப் போல் பெரிய மதில் சுவர் ஏதுமில்லை. ஏனென்றால், இது ஒரு மாபெரும் நகரின் நடுவில் உள்ள ஆலயம். நகருக்கான சுற்றுச்சுவரும் அகழியும் இருந்ததால், இதற்கெனத் தனியே சுற்றுச் சுவரும் அகழியும் இல்லை என்கிறது குறிப்பு. நாம் முதலில் கடந்து வந்த நாக பாலம், நகருக்கான அகழியைக் கடக்க உதவிய பாலமாக இருந்திருக்கலாம். அங்கோர் வாட் ஆலயத்தை அடர்நீல வெல்வெட் பெட்டிக்குள் வைத்த வைரம் என்று சொல்லலாம். முதலில் அது, நீண்ட பீடிகையோடு தன்னுடைய அழகை ஆராதிக்கத் தேவையான மனநிலைக்கு நம்மைக் கொண்டுவந்த பிறகுதான் தன்னுடைய முழு அழகை வெளிக்காட்டுகிறது.

    ஆனால் பாயோன் அப்படியல்ல. அது சூரிய வெளிச்சத்தில் திறந்து வைக்கப்பட்ட வைரம். பட்டை தீட்டப்பட்ட கரிய (பசும் ?) வைரம்.. ஆலயம், எந்த வடிவத்திலும் சேர்த்தியில்லாத ஒரு வடிவத்தில் தெரிகிறது தொலைவிலிருந்து பார்க்கும்போது. சதுரமா, செவ்வகமா, வட்டமா, கோளமா என்றால் எல்லாமும்தான் என்று சொல்லலாம். இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதா என்பதே சந்தேகம்தான் என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். கோயிலைச் சுற்றிலும் கற்கள், கற்கள், கற்கள் எண்ணற்ற கற்கள். 

    இப்போதுள்ள கோயிலைச் சுற்றி வேறு பெரிய கட்டுமானங்கள் இருந்தனவா.. இல்லை இதே கோயிலின் சில பகுதிகள் நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சிதைந்து விழுந்தனவா தெரியவில்லை. ஒவ்வொரு திசைக்கும் மூன்று வாயில்கள் இருந்தன. நடுவில் இருந்தது முக்கிய நுழைவாயில். எஞ்சியவை சிறிய பக்க வாயில்கள். ஒவ்வொரு வாயிலுக்கும் மேல் கோபுரம் போன்ற அமைப்பு. அதன் நாலுபக்கமும் நான்கு முகங்கள். அவலோகிதேஸ்வரர் முகங்கள்.

    பௌத்த நம்பிக்கையின்படி, கருணைக்கான போதிச்சத்துவர் இந்த அவலோகிதேஸ்வரர் என்கிறது விக்கிப்பீடியா. அவலோகிதேஸ்வரர் என்ற சொல்லுக்கு, ஜெயமோகன் அவ்வண்ணமே வந்தவர் என்று பொருள் தருகிறார். சொல்லை வெல்ல உதவுபவர் அவலோகிதேஸ்வரர் என்பது பௌத்த நம்பிக்கை என்கிறார் ஜெமோ. சமஸ்கிருதத்தில், கீழ்நோக்கிப் பார்க்கும் இறைவன் என்று பொருளாம். அதற்கு ஏற்றாற்போல் மேலிருந்து நாலாபக்கமும் கீழே பார்க்கும்படியாகத்தான் முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கருணையின் வடிவம்தான் இந்த அவலோகிதேஸ்வரர் என்பதை ஏற்கும்படியாகத்தான் சிலைகளின் முகபாவமும் அமைந்துள்ளது. அரைக் கண் மூடிய தியான நிலை. இதழ்க் கடையோரம் விரியும் இலேசான புன்னகை.. கம்போடியர்களுக்கு உரித்தான தடித்த உதடுகள். அகண்ட தட்டையான நாசி.. வடிந்த காதுகள். மூக்கில் வளையம் மாட்டுவதற்கான துளைகள் தெரிகின்றன. சில முகங்களில் இரண்டு துளைகள் உள்ளன. சிலவற்றில் ஒன்றுதான் தெளிவாகத் தெரிகிறது. தலையில் கிரீடம் தெரிகிறது. அடுக்கடுக்காக நான்கு கிரீடங்களும் இணையும் இடம் தாமரை மலரின் மடல்களோடு சேர்ந்து கொள்கிறது. முகங்களுக்கு மேல் உச்சியில் பெரிய தாமரைப் பூவின் மடல்கள் விரிந்த தோற்றம்.

    இந்த முகங்களுக்கு, “தென்கிழக்காசியாவின் மோனலிசா” என்ற பட்டப் பெயரும் உண்டு. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்,அய்யம்பேட்டைக்கு முன்னால், பசுபதிகோயில் என்று ஓர் ஊர் வரும். அதற்குச் சற்று முன்னால், இடப்பக்கம் திரும்பி வயல்களின் ஊடாகச் சென்றால் ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் திருப்புள்ளமங்கை என்னும் வயல்சூழ் கிராமம் வரும். அங்குள்ள முற்காலச் சோழர் கோயிலின் கருவறைக்குப் பின்னே இலிங்கோத்பவருக்குப் பக்கவாட்டில் பிரம்மனின் சிற்பம் ஒன்று இருக்கும். அதுவும் இப்படித்தான் மிக இலேசாக நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்.

    பிரம்மனின் நாசியும் கொழுமிய கன்னங்களும், தலை அலங்காரமும் நாள் பூராவும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொல்லும். “இவன் பிரம்மனா மன்மதனா? இப்படி மயக்குகிறானே” எனத் தோன்றும். சோழர் காலச் சிற்பங்களில் ஆகச் சிறந்த பத்தில் ஒன்றாக நான் அதைப் பட்டியலிடுவேன். சரி.. பசுபதிகோயிலில் இருந்து பாயோனுக்கு வருவோம்.

    12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. மஹாயான பௌத்தத்தைக் கடைப்பிடித்த மன்னன் ஏழாம் ஜெயவர்மன் கட்டிய கோயில் இது. தனது புதிய தலைநகர் அங்கோர் தாமில், அந்த மன்னன் நிறுவிய அதிகாரபூர்வ ஆலயம் பாயோன். அவலோகிதேஸ்வரரின் முகங்கள், உண்மையில் ஏழாம் ஜெயவர்மனின் முகம்தான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அரசனை ஆண்டவனாகக் கருதிய காலம் அது. ஏழாம் ஜெயவர்மன் சிலையில் உள்ள முகமும், பாயோன் ஆலய முகமும் பெரிதும் ஒத்துப் போவதை அதற்கான ஆதாரமாகக் காட்டுகின்றனர் ஒருசாரார்.

    கம்போடியத் தலைநகர் புனோம் பென் தேசிய அரும்பொருளகத்திலுள்ள ஒரு சிலை, ஏழாம் ஜெயவர்மனின் சிலை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதன் முகச் சாயலும், பாயோன் கல்முகங்களின் சாயலும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

    கடவுளின் அம்சமாகத் தன்னை முன்னிறுத்தினால்தான் குடிகளைத் தன்பிடியில் வைத்திருக்க முடியும் என்று மன்னர்கள் நம்பியிருக்கலாம். தாய்லந்தில், இன்னமும் மன்னரை இராமரின் அவதாரமாகவே கருதுகின்றனர் மக்கள். அண்மையில் மறைந்த மன்னர் பூமிபோன் அதுல்யதேயை ராமா ராமா என்றுதான் அழைக்கின்றனர் மக்கள்.

    கெமர் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான ஆலயங்களில் இருந்து பாயோனை வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கிய அம்சம் ஜீவகளை ததும்பும் இந்தக் கல்முகங்கள். பாயோன் ஆலயத்தில் இப்போது எஞ்சியுள்ள சுமார் 50 கோபுரங்களிலும் சேர்த்து இருநூற்றுக்கும் மேற்பட்ட முகங்கள் புன்னகையில் உறைந்துள்ளன. எல்லாத் திக்குகளையும் அந்த முகங்கள் பார்ப்பது போல் மன்னன் ஜெயவர்மனின் அரசு எல்லாத் திசைகளையும் தன் குடைக்கீழ் கொண்டுவந்து நிர்வகித்தது என்பதன் அடையாளமாகவும் இந்த முகங்கள் கருதப்படுகின்றன.

    உண்மையோ பொய்யோ !.. இந்தத் தகவலும் இந்த முகங்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், கெமர் பேரரசின் பொற்காலங்களில் ஒன்றின்போது கட்டப்பட்ட ஆலயம் இது. கெமர் பேரரசின் வரலாற்றில் அதிக வலிமை மிக்க மன்னர்களில் ஒருவர், ஏழாம் ஜெயவர்மன். அவரது ஆட்சிக் காலம் கி.பி. 1181 – 1218.

    அங்கோர் வாட், பாயோன் உள்ளிட்ட இவ்வளவு பெரிய, கலைநயமிக்க ஆலயங்களைக் கட்ட வேண்டுமானால், பெரும் பொருள் வசதி வேண்டும். போர் அச்சுறுத்தல் இல்லாத அமைதி நிலவ வேண்டும் உள்நாட்டில். எதிரிகளின் படையெடுப்பு அச்சுறுத்தல் உள்ள நாட்டில் இத்தனை பிரமாண்டமான பேராலயங்கள் எழுவது சாத்தியமல்ல.

    பாயோன் ஆலயம் மஹாயான பௌத்த ஆலயமாகக் கட்டப்பட்டாலும், ஏழாம் ஜெயவர்மனின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அங்கு இந்து சமய அம்சங்களையும், தேரவாத பௌத்த அம்சங்களையும் இணைத்தது. அதனால்தான் இது ஒரு கலவையான தோற்றத்தில் இருப்பதாக நினைக்கிறேன். 13-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், எட்டாம் ஜெயவர்மன் இந்து சமயத்துக்கு மாற, அதற்கேற்ப பாயோன் மாற்றமடைந்துள்ளது. அடுத்த சில நூற்றாண்டுகளில் தேரவாத பௌத்தம் செல்வாக்குப்பெற, அதற்கேற்பவும் ஆலயம் மாற்றப்பட்டது. நாளடைவில், காட்டுக்குள் ஆலயம் கைவிடப்படுகிறது. எப்போது, யாரால் ஆலயம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றிச் சரியான தகவல் இல்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்த ஆலயத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியது.

    பாயோன் ஆலயம், அங்கோர் வாட்டைப் போல இருந்தாலும், அங்கோர் வாட்டைப் போல இல்லை. முற்றிலும் மாறுபட்ட கலைநயம் தெரிகிறது இந்தக் கோயிலில். அங்கோர் வாட்டில் கட்டடக் கட்டுமானத்தில் ஒரு லயம் இருந்தது. ஆனால், இதில் அப்படி இல்லை. ஓர் ஒழுங்கற்றதன்மை உள்ளது இதில். அங்கோர் வாட், தோட்டத்தில் நட்டு வளர்த்து நறுக்கி விட்ட செடியைப் போன்ற ஓர் ஒழுங்கில் இருக்கிறது என்றால், பாயோன் கட்டற்று வளர்ந்து பெருகிக் காட்டை நிறைக்கும் மரம் போல ஒரு கவர்ச்சியோடு ஒளிர்கிறது. பிரமாண்டத்தை நான் சொல்லவில்லை. ஆலயத்தின் கட்டட அமைதியைச் சொல்கிறேன்.

    அங்கோர் வாட் உருவாக்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகள் கழித்து உருவான கோயில் இது. இந்தக் கோயில் எங்களுக்கு பிரமாண்டமான ஒன்றாகத் தென்படவில்லை. சிக்கலான கட்டட அமைப்பைக் காட்டி எங்களை மீண்டும் மீண்டும் வியக்க வைத்தது இது. இதன் கட்டுமான முறையை சிந்திக்க சிந்திக்க, எனக்கு வெறுமைதான் மிஞ்சியது.

    நிர்மலமான வானில், தெளிவாகத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்க்க நேர்கையில், வானியல் பற்றி நான் யோசிப்பதுண்டு. இப்போது நாம் பார்க்கும் நட்சத்திரப் பிரகாசமே ஏழெட்டு ஒளி ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து புறப்பட்ட வெளிச்சமாம். காற்றில் ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 3 இலட்சம் கிலோமீட்டர். ஓர் ஒளி ஆண்டு என்பது ஒன்பது டிரில்லியன் கிலோமீட்டர். அதை எட்டால் பெருக்கினால் எத்தனை பூச்சியம் வருமென நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நான் கணக்கில் புலியல்ல, பூனை…  பூமி, சந்திரன், சூரிய மண்டலம், நட்சத்திரங்கள், கிரஹங்கள், துணைக் கிரஹங்கள், நிலாக்கள், பால்வெளி, பிரபஞ்சம், கருந்துளை என்று கன்னாபின்னாவென யோசித்து அதற்கும் அப்பால்.. அதற்கும் அப்பால்.. என்று யோசித்து யோசித்து முடியாமல் களைத்துப் போய்க் கண்ணயர்ந்து விடுவேன்.

    அதுபோல் இந்தக் கோயிலின் நடுப்பகுதியில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் கட்டுமானம் என்னைத் தலைசுற்றிப் போக வைத்தது. எத்தனை கூரைகள் ? எத்தனை முகங்கள் ? எத்தனை பலகணிகள் ? எத்தனை நிலைவாசல்கள் ? எண்ண எண்ண வியப்பின் எல்லை விரிந்து கொண்டே போகிறது.

    அங்கோர் வாட்டாவது பெரிய அகழி, மதில் சுவர் என்று ஏக ஜபர்தஸ்துகளோடு நிற்கிறது. ஆனால் பாயோன் அடர்ந்த காட்டுக்குள் அம்மணமாய் நிற்கிறது. கோயிலின் எந்தப் பக்கம் போனாலும் மரக் கூட்டத்துக்குள் கொண்டுபோய் விடுகிறது பாதை. மரகதப் பொதிக்குள் கிடக்கிறது இந்த வைரக்கல்.

    மலைத்துப் போய் நின்றால் கதைக்கு ஆகுமா ? உள்ளே போவோம். நாங்கள் போய் இறங்கியது தெற்கத்தி வாசல். அங்கிருந்து வலப்பக்கமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினோம். அங்கோர் வாட்டைப் போல் பாயோனும் மூன்று நிலைக் கட்டுமானம். முதலிரண்டும் சதுர வடிவங்கள். கருவறை போன்ற நடுப்பகுதியோ, வட்ட வடிவத்திலானது. முதல் சுற்றுத் தாழ்வாரத்தில் நடக்கத் தொடங்கியதுமே எங்களுக்கு இடப்பக்கமாக புடைப்புச் சிற்பங்கள் வரத் தொடங்கின.

    அங்கோர் வாட் புடைப்புச் சிற்பங்கள், கூரையிட்ட தாழ்வாரத்தில் இருக்கும். ஆனால், இங்கே மேலே இருந்த கூரை இப்போது இல்லை. சிதைந்து போனதற்கான தடயங்கள் தென்படுகின்றன. ஒருவேளை இந்த முதல் சுற்றுத் தாழ்வாரத்தில் மரக்கூரை வேயப்பட்டிருக்கலாம் என்கிறது கம்போடிய சுற்றுலாத் துறைக் குறிப்பு. இந்த முதல் தாழ்வாரத்தில் போர்க்களக் காட்சிகளும், அன்றாட வாழ்க்கைக் காட்சிகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன. போர்க் காட்சிகளில், மாபெரும் படகுகளில் சென்று போரிடும் காட்சி மிக நீளமானது. இது கம்போடியர்களும் சாம் வீரர்களும் போரிடும் காட்சி. இன்றைய வியட்நாம்தான் அன்றைய சாம் அல்லது சம்ப்பா தேசம். பெரிய சுவர் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மேல்புறத்திலும் நடுவிலும் அடுத்தடுத்துப் படகுகளும் மீன்களும் வருகின்றன. கீழ்ப்புறத்தில் அன்றாட வாழ்க்கை… சந்தையில் பொருள் வாங்கும் காட்சி ஓரிடத்தில் தெரிகிறது.

    ஏதோ ஒன்றைத் தராசில் நிறுத்துத் தரும் காட்சி வருகிறது. அருகே வெட்டப்பட்ட மீன் தலை உள்ளது. மீன் அங்காடியாக இருக்கலாம். அருகிலுள்ள ஓரிரு உருவங்களில் சீனக் களை தெரிகிறது. அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னன் இரண்டாம் சூரியவர்மன், சீனாவோடு அதிகாரபூர்வ அரசதந்திர உறவு கொண்டிருந்ததற்குக் குறிப்புகள் உள்ளன.

    கெமர் பேரரசில் சீனப் பிரதிநிதிகள் இருந்ததை, 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீனக் குறிப்புகள் காட்டுகின்றன. கெமர் பிரதிநிதிகள் சீனப் பேரரசரைச் சந்தித்துப் பேசியதன் பதிவுகள் உள்ளன. இருநாட்டு வர்த்தகத்தில் நிலவிய பிரச்சினைகள் களையப்பட்டதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, பாயோன் ஆலயப் புடைப்புச் சிற்பங்களில் சீன முகங்கள் தென்படுவதில் வியப்பில்லை.

    தெற்குத் தாழ்வாரப் புடைப்புச் சிற்பங்களில், அதிர்வு தாங்கிகளுடன் கூடிய மாட்டு வண்டி தெரிகிறது. யானை மேல் பெரிய ஓலைக் கூடைகளை வைத்து அவற்றுள் செவ்வக வடிவில் ஏதோ ஒன்றை விற்கும் காட்சி உள்ளது. தென்னை மரத்தில் காய்த்துள்ள தேங்காயை நோக்கி இரண்டு விலங்குகள் போவது ஓரிடத்தில் உள்ளது. பன்றி காணப்படுகிறது. ஆமையைப் பிடித்தவாறு சந்தையில் ஒருவன் நிற்கிறான். தோளில் பிள்ளையைத் தூக்கிச் சுமக்கும் தாய். முதலை, மான், குரங்கு, அன்னம், இன்னும் என்னென்னவோ..

    எனக்கு அங்கோர் வாட்டில் படம் எடுத்து எடுத்துக் கண்கள் களைத்துவிட்டன. ஒரு கண்ணைச் சுருக்கி மறு கண்ணால் லென்ஸ் வழியாகக் காட்சிகளைப் பார்த்துப் படம் பிடித்து கண் தசைகள் வலிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, பாயோன் ஆலயத்துக்குச் செல்லும்போது அதிகமான படங்களை எடுக்க முடியவில்லை. இணையத்தில் ஏராளமான படங்கள் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடிப் பாருங்கள். அசந்து போவீர்கள்.. அங்கோர் வாட்டைப் போல் இதை ஒவ்வொரு தாழ்வாரமாகச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை. பாயோனுக்கு வந்து சேரும்போதே மாலை மணி ஐந்தை நெருங்கிவிட்டது. இருட்டுவதற்குள் இங்கிருந்து கிளம்ப வேண்டும். மழை வேறு இருட்டிக் கொண்டு வந்தது. ஆகவே, சற்று அவசர அவசரமாகத்தான் பாயோனைப் பார்த்தோம். அது மாபெரும் தவறு. என்னைப் பொறுத்தவரையில், அங்கோர் வாட்டுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை பாயோன்.

    சொல்லப் போனால் அங்கோர் வாட்டை விட ஒருபடி மேல் பாயோன். மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடும் கட்டுமானப் பொறியியல் கவர்ச்சியும் இங்குதான் அதிகம் என்பேன். ஒரு மாயலோகத்தினுள் நுழைந்தாற் போன்ற உணர்வு இங்கு வந்தது. இந்த வருணனையை இந்தத் தொடரில் நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன் என எனக்கே நன்றாகத் தெரிகிறது. ஆனால், அதுதான் உண்மை. ஆகவே மீண்டும் மீண்டும் அந்த ஒப்புமையைப் பயன்படுத்தத் தயக்கமில்லை எனக்கு. அங்கோர் வாட் அப்சரஸ்களைக் காட்டிலும் பாயோன் அப்சரஸ்கள் அழகோ அழகு. ஒற்றை அப்சரஸ், இரட்டை அப்சரஸ், மூன்று அப்சரஸ் எனத் தூண்களெங்கும் அப்சரஸ் மயம்தான் பாயோனில். மலர்ந்த தாமரை மலர் மீது நடமிடும் அப்ரசஸ்கள்.

    தென்புற வாயிலில் நுழைந்து வலப்பக்கமாகத் திரும்பிப் பின் இடப்பக்கமாக தாழ்வாரத்தைக் கடந்து கிழக்கு வாயில் வழியாக அடுத்தடுத்த தளங்களை அடைந்தோம். இரண்டாம் தளத்திலும் புடைப்புச் சிற்பங்கள் இருப்பதாக வழிகாட்டி சொன்னார். எங்களுக்கு நேரமில்லை. கடந்து நடந்தோம்.

    மிக ஒடுக்கமான தாழ்வாரங்கள் பாயோனில். இருவர் நெருங்கி நடக்கலாம். அவ்வளவுதான். வேகமாய் நடந்தால், பக்கவாட்டுக் கற்சுவரில் உடலை உரசிக் கொள்ள வேண்டி வரலாம். தாழ்வாரங்களை இணைக்கும் சந்திப்புகள் அங்கோர் வாட்டைப் போலவே கூட்டல் குறிபோல் இருந்தன. கூரை முகடும் வளைவான அங்கோர் வாட் பாணி முகடுதான். எந்த இணைப்புச் சாந்தும் இங்கேயும் கிடையாது. எல்லாம் கற்களை முட்டுக் கொடுத்து உருவாக்கிய கட்டுமானம்தான்.

    வலுவான லேட்டரைட் எனப்படும் செம்பூரான் கற்களுக்கு மேல் சிலை வடிக்கத் தோதான மணற்கல்லை ஒட்டிச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள் இங்கும். சின்னச் சின்னக் கற்பாளங்களை எப்படி இணைத்து ஓர் உருவத்தை அதில் உருவாக்கினார்கள் என்பது அதிசயம்தான். பெரிய பாளங்களில் அது எளிது. பாயோன் முகங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தீர்களென்றால் அதிலுள்ள இணைப்புகள் தெளிவாகத் தெரியும். ஆனால் தொலைவிலிருந்து பார்த்தால் வழுவழுப்பான முகம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்.

    அழகியல் அறுவை சிகிச்சையின்போது (பிளாஸ்டிக் சர்ஜரி), உடலின் இயற்கையான மடிப்புக்குள் அறுவைச் சிகிச்சைத் தழும்புகள் மறைந்து போவதுபோல் மருத்துவர்கள் சிகிச்சை செய்வார்களாம். அதுபோல் இயல்பான முகவாட்டத்தோடு பொருந்திப் போவதுபோல் கற்களை அடுக்கி முகங்களை உருவாக்கியிருக்கிறார்கள் இங்கே. ஜிக்சா புதிர்க் கற்களைப் போலக் கலைத்துப் போட்டால் எடுத்து, கொஞ்சம் யோசித்தால் எளிதில் அடுக்கிவிடலாம் போலிருந்தன முக இணைப்புகள்.

    மூன்றாம் தளத்துக்கு ஏறி வந்தபோது, கல்முகங்களை நேருக்குநேர் சந்தித்தோம். தொட்டுத் தடவிப் பார்க்கும் தொலைவில்… அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் திருச்சுழி என்ற ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு என் அப்பா துணைத் தாசில்தாராக வேலை பார்த்தார். பகவான் ரமண மகரிஷி பிறந்த ஊர் அது. ரமணர் பிறந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். என்னுடைய இரண்டாம், மூன்றாம் வகுப்புகள் அங்குதான் படித்தேன். ஷத்ரிய இந்து வித்தியாசாலா என் பள்ளியின் பெயர் என்று நினைக்கிறேன். அந்த ஊரில் தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில் ஒன்றுண்டு. பூமிநாதர் கோயில் என்று பெயர். யாரோ பாண்டிய மன்னன் எடுத்த கோயில்.

    சிறு வயதில் மிகப் பெரிய ஆலயமாகத் தென்பட்டது. ஆனால், வளர்ந்து பெரிய ஆளான பிறகு ஒருமுறை போயிருந்தபோது அது நடுத்தரக் கோயிலாகத்தான் இருந்தது. அந்தக் கோயிலுக்குள் சென்று வௌவால் புழுக்கை நாற்றமடிக்கும் பிரகாரங்களுக்குள் விளையாடுவது அப்போது எங்களுக்குப் பொழுதுபோக்கு. அங்கே சுவாமி வீதியுலாவிற்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒட்டடை படிந்த மயில், ஆட்டுக்கிடா, ரிஷபம் போன்றவற்றோடு பூதகணமும் இருக்கும்.

    என் பால்யத்தில் பதிந்து போன முகம் அந்த பூதகணம். மரச் சிற்பம்தான். அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கும். மனித உடலும் பூத முகமும்… இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஒரு காலை மடித்து நிலத்தில் ஊன்றி மறுகால் முழங்கால் போட்டு நிற்கும் தோற்றம். விழிகள் பிதுங்கித் தெறித்து விழுந்துவிடும்போல் இருக்கும். ஆஜானுபாகுவான ஒரு ஆள் நிஜத்தில் எதிரே கால்மடித்து எழத் தயாராய் இருப்பது போல இருக்கும்.

    பிற்காலத்தில் விஷ்ணு ஆலயங்களில், கருட வாகனமும் அதே கோலத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் என் திருச்சுழி பூதகணத்துக்கு உறைபோடக் காணாது அவையெல்லாம், அந்த பூதகணத்தைப் பார்த்த நினைவு மின்னலடித்தது எனக்கு பாயோன் ஆலயக் கல்முகங்களைப் பக்கத்தில் பார்த்தபோது… என் கண்களை நேரடியாகப் பார்க்கவில்லை என்றாலும் கூட என்னை ஊடுருவிப் பார்ப்பது போல்பட்டது எனக்கு. எத்தனை நூற்றாண்டுப் பார்வை அது ?….

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com

  • உலகின் மிகப்பெரிய ஆலயம் – 14

    சிறுவயதில் கடலில் குளிக்கும்போது கொஞ்ச நேரம் கழிந்ததுமே எங்களை அப்பா விரட்டத் தொடங்கி விடுவார். “போதும்.. போதும் வாங்க வெளியில..” என்று கடலில் இறங்கிய பத்தாவது நிமிடத்திலிருந்தே அதட்டத் தொடங்கி விடுவார். ஆனால், அவரும் எங்களோடு சேர்ந்து குளித்தால் அவ்வளவு சீக்கிரமாகக் கூப்பிட மாட்டார். ஆகவே, அம்மா கரையில் உட்கார்ந்திருக்க நான், இரண்டு அண்ணன்கள், அக்கா நால்வரும் எப்படியாவது அப்பாவைக் கடலுக்குள் இழுத்துப் போட முயல்வோம்.

    இல்லாவிட்டால் இந்த மனுசன் நம்மளைக் குளிக்க விடமாட்டார் என்று எங்கள் அனைவருக்குமே தெரியும். கடலுக்குள் இறங்கிவிட்டால் அப்பா வேற்று மனிதர். கரையில் சட்டை, கால்சட்டையோடு அதிகாரத்தையும் கழற்றி வைத்து விடுவார். கால்களையும் கைகளையும் மல்லாக்கப் பரப்பிக் கடல்பரப்பில் ஒரு சடலம் போல அவரால் மிதக்க முடியும். மூச்சை சீராக மெல்ல விட்டுக் கொண்டே அசையாமல் அலையின் தாளத்திற்கேற்ப ஏறி இறங்கிக் கொண்டிருப்பார். ஊரே வேடிக்கை பார்க்கும். நான் சிறுவயதில் செய்ய முயன்று தோற்ற கலை.

    பதின்ம வயதில் என்னாலும் அதைச் செய்ய முடிந்தது. ஆனால் காதுக்குள் கடல்நீர் போகாமல் இலாகவமாய்ச் செய்ய வேண்டும். உப்புநீரின் அடர்த்தி காரணமாக அவ்வாறு கடலில் எளிதில் மிதக்க முடியும். நன்னீர்க் குளங்களிலும் நகர்ப்புற நீச்சல் குளங்களிலும் அவ்வாறு மிதப்பது கடினம். கடலுக்குள் அப்பாவின் தோள் மீது ஏறிக் குதித்துக் கும்மாளம் போடுவது எங்களுக்குப் பிடித்தமான ஆட்டம். ஆனால், அப்படி அதிக சந்தர்ப்பங்கள் வாய்த்தது இல்லை.

    வருவாய்த் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து, நினைவு தெரிந்த காலம் முதலே மற்றவர்களை ஏவல் செய்து பழக்கப்பட்டவர் என் தந்தை. துளி எதிர்ப்பையும் அவரால் ஏற்றுக் கொள்ளவோ தாங்கிக் கொள்ளவோ ஒருக்காலும் முடியாது. விவரம் தெரிந்ததும் அடிக்கடி அப்பாவிடம் சொல்வோம்.. “அப்பா நாங்க ஒங்க பியூன் இல்லப்பா” என்று. அப்போதும் அவர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ( இப்போது 85 வயதில் முதுமையும் தாத்தா பதவியும் அவரைக் கனிய வைத்திருக்கிறது. இருந்தாலும் அதிகாரமுகம் அவ்வப்போது எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது..J)

    ஆகவே, கடலை விட்டு “வெளியே வாங்கடா” என்றதும் வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தமுறை கடற்கரைக்கு அழைத்துப் போகமாட்டார். இந்த அச்சத்தின் காரணமாக அப்பாவின் அதிகாரத்துக்கு உடனே பணிந்து விடுவோம். இருந்தாலும் கடல் எங்களைப் பின்னாலிருந்து அலைகள் மூலம் அறைந்து கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். பிரிய முடியாமல் பிரிந்து வருவோம். “இவர் கூட வந்ததுக்கு ஒரு தாசில்தார் கூட வந்திருந்தாக்கூட இன்னும் கொஞ்ச நேரம் கடல்ல ஆடவிட்ருப்பாரு..” என்று மனத்துக்குள் கறுவிக்கொண்டே கரையேறுவோம்.

    ஒருவகையில்,அந்த மனநிலையில்தான் இருந்தோம் நானும் பரணியும் அங்கோர் வாட்டின் உச்சியில்… உலக அதிசயங்களில் ஒன்றை நேரில் காணும் வாய்ப்பு எல்லாருக்குமா வாய்த்து விடுகிறது? ஏதோ எங்களுடைய நல்லூழோ.. எங்கள் மூதாதையர் நல்லூழோ.. எங்களுக்கு வாய்த்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து புறப்பட வேண்டுமா என்ற ஏக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை எங்களால்.

    பரணிக்குக் கோபமே வந்துவிட்டது. “இது என்ன இம்புட்டு அழகா இருக்கு இந்த இடம் !.. இதை விட்டுட்டு எப்படிங்க அரை நாள்ல கெளம்புறது ? ஒரு வாரம் இதுக்கு மட்டும் போட்ருக்கணும் மகா” என்று புலம்பிக் கொண்டே இருந்தார். என் நிலைப்பாடும் அதுதான்.

    ஆனால் என்ன செய்யமுடியும் ? புறப்பட்டே ஆக வேண்டும். நாளை மாலையில் எங்களுக்கு சிங்கப்பூருக்கு விமானம். இங்கிருந்து புறப்பட்டுப் பின்னிரவுக்குள் புனோம் பென் போனால்தான் தூங்கி எழுந்து நாளைக் காலையில் அரண்மனை, அரும்பொருளகம் எல்லாம் பார்த்துவிட்டு மாலை நாலு மணிக்கு விமானத்தைப் பிடிக்கலாம். புனோம் பென் இங்கிருந்து ஏழெட்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது. பாயோன் கோயில் வேறு அடுத்துப் பார்க்க வேண்டும். மனமின்றிக் கீழே இறங்கத் தொடங்கினோம்.

    செங்குத்தான படிகளைக் கவனமாகக் கடந்து கீழிறங்கினோம். ராஜூ, மகாதேவன், நவீன் கீழே எங்களுக்காகக் காத்திருந்தனர். ஐவரும் அப்படியே மூன்றாமடுக்கை மட்டும் ஒரு சுற்று சுற்றி வந்தோம். எங்கள் வலக்கைப் பக்கம் சின்னக் குன்றுபோல் ஆலயம் அமர்ந்திருந்தது. ஆங்காங்கே மேலே ஏறிச் செல்லப் படிக்கட்டுகள். கற்களுக்கு அடியில் கட்டுமானம் எப்படியிருக்கும் என்பதைக் காணும் வகையில் சில இடங்கள் தெரிந்தன. வெளித் தெரிந்த கற்களுக்குக் கீழே சில இடங்களில் கான்கிரீட் தூணால் முட்டுக்கொடுத்துள்ளனர்.

    தஞ்சைப் பெரிய கோயிலைப் போல் இதையும் எவ்விதக் கலவையும் வைத்து இணைக்காமல் கற்களை ஒன்றுக்கொன்று முட்டுக் கொடுத்தே கட்டியிருக்கிறார்கள். அகழியில் வெட்டியெடுத்த மண்ணை நடுவில் கொட்டி மேட்டை உருவாக்கி அதன் பக்கங்களில் கற்களை அடுக்கிக் கரைகட்டி மேலே மேருக்களை உருவாக்கியுள்ளனர்.

    பல்லாயிரம் டன் எடையுள்ள மண் சரிந்து போகாமலும், கல் கட்டுமானத்தின் எடையைத் தாங்கும் விதமாகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அங்கோர் வாட் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இதன் அருகில் நிற்கும்போதுதான் இதன் பிரமாண்டத்தையும் இதன் அருமையையும் தெளிவாக உணர முடியும். மற்றபடி எவ்வளவு வருணித்தாலும் அதை வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லிவிட முடியாது.

    எங்களுக்கு இடப்பக்கம் இரண்டாம் அடுக்கின் தாழ்வாரங்கள் வந்து கொண்டேயிருந்தன. நம்ம ஊர் தொட்டில் கம்பு போன்ற உருளைத் தூண்களோடு சாளரத்தின் பலகணிகள்… தில்லைப் பொன்னம்பலத்தை நினைவுறுத்தும் வளைந்த கூரைகள். ஆலயக் கட்டுமானத்தின் இடுக்குகளில் ஆங்காங்கே சில செடிகள் துளிர்த்திருந்தன. பெரும்பாலும் அரச மரச் செடிகள். பளீரெனச் சிரித்தன அரசிலைகள். இந்தச் சின்னச் சின்னச் செடிகள்தான் நாளை பெரிய விருட்சமாகி ஆலயத்தையே பிளந்துவிடும். உழவாரப் பணி செய்ய எந்த நாவுக்கரசர் கம்போடியாவில் இருக்கிறாரோ தெரியவில்லை.

    வெளிநாட்டுக்காரர்கள் வியந்து வியந்து பார்த்து மாய்ந்து மாய்ந்து நிழற்படம் எடுத்துக் கொண்டிருக்க, உள்நாட்டுப் பயணிகள் சிரித்துக் கும்மாளமிட்டு உள்ளே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அடிக்கடி வந்து சென்ற இடமாக இருக்கலாம். இதுபோன்ற வேறு பல ஆலயங்கள் இவர்கள் வீட்டுக்கு அருகிலேயேகூட இருக்கலாம். தோட்டத்து மூலிகைக்கு எப்போதுமே மவுசு கம்மிதானே ?

    ஐந்து மேருக்களையும் சுற்றிப் புறப்பட்ட இடத்துக்கே வந்தோம். வழியில் தென்பட்ட நான்கு திசை மேருக்களையும் கீழிருந்து பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. ஒவ்வொரு மேருவுக்கும் திசைக்கொன்றாக நான்கு வாயில்கள். அதன் இருபுறமும் துவாரபாலகர்களைப் போல அப்சரஸ்கள். அங்கிருந்து வெளியேறி வந்தால் ஆலயத்தின் நேர் பின்புறம் வந்துவிடும். இது கிழக்குப் பகுதி. ஆளரவமின்றி ஓய்ந்து கிடந்தது இந்த இடம். நடுவில் ஒன்றும் பக்கத்து ஒன்றுமாக மொத்தம் மூன்று நுழைவாயில்கள். நாங்கள் வலப்பக்கமாக உள்ள வாயிலின் வழியாக வெளியே வந்திருந்தோம்.

    இது சிவன் கோயிலாக இருந்திருந்தால் இது முக்கிய நுழைவாயிலாக இருந்திருக்கும். வெளியேறும் வாயில் பகுதி படிப்படியாக உயரம் குறைந்து வருகிறது. கடைசிப் படிக்கட்டை உள்நோக்கித் தள்ளினால், படிகளும் அவற்றை மூடியிருக்கும் மாடங்களும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து ரஷ்ய மட்ரியோஷ்க பொம்மைகள் போல் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி மடங்கிக் கொள்ளும் போலிருந்தன.

    இந்தப் பக்கத்திலிருந்த பலகணிகள் பலவும் சிமெண்ட் வைத்து அடைக்கப்பட்டிருந்தன. ஆலய வெளிப்பிரகாரத்தில் வலப்பக்க வாயிலின் அருகே வட்டக் கூம்பு வடிவத்தில் ஓர் அமைப்பு சின்னதாக இருந்தது. மேலே எல்லாம் புல் முளைத்துப் போயிருந்தது. அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ பௌத்தத் தூபி போலிருந்தது பார்க்க. கவிழ்த்த மணி போலவும் காம்புள்ள ஊமத்தம் பூவைப் போலவும் இருந்தது அதன் மேல்பகுதி.

    அதைக் கடந்து வந்தால், சுற்றுச்சுவர் போன்ற உயரம் குறைந்த நீண்ட சுவர். அதன் நடுவே ஏழு தலை நாகம் படம் எடுப்பது போல் இரண்டு வரவேற்பு அலங்காரங்கள். அகழியைத் தூர்த்து வெளிப்புறச் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது இந்த இடம். அங்கோர் வாட்டைப் பின்னணியாக வைத்து ஐந்து பேரும் ஒரு படம் எடுத்துக் கொண்டோம். இதைத் தாண்டிவந்து வாகனத்தில் ஏறப்போகும் முன்னால் மற்றொரு பழமையான கட்டடம். அங்கோர் வாட் ஆலயத்தின் ஒரு பகுதியைக் கன கச்சிதமாக அறுத்துப் புல்தரையில் வைத்ததுபோலிருந்தது அந்தக் கட்டடம்.

    அதே கட்டுமான பாணி. அதே போன்ற அப்சரஸ்கள். கைவிடப்பட்டுக் கிடந்தாலும் களையாக இருந்தது கட்டடம். முன்மண்டபத் தூண் சரிந்து மிக விரைவில் விழுந்து விடும் போலிருந்தது. கட்டடத்தின் பக்கவாட்டில் சுற்றுச் சுவர் தெரிந்தது. சந்தடியின்றி அமைதியாகக் காணப்பட்ட அந்த இடமே ஓர் அமானுஷ்யத்தன்மையோடு இருந்தது. நெடிதுயர்ந்த மரங்களுக்கு நடுவே அது நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறது. இங்கேயே உறைந்து போய்விட மாட்டோமா என்றிருந்தது.

    வேறு வழியின்றி என் காலை நிலத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து வாகனத்தில் ஏறினோம். வயிறு கடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை பசி தெரியவில்லை. பிற்பகல் மணி மூன்றைத் தாண்டி விட்டிருந்தது. காலை ஹோட்டலில் சாப்பிட்ட ஆம்லெட், ரொட்டி, பிரட்டிய சோறு, பழம், காஃபி எல்லாம் கரைந்து விட்டன. வாகனத்தில் அகழியின் அழகைப் பார்த்துக் கொண்டே ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள உணவகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

    நம் கிராமத்து உணவகம் போன்ற சூழல். ஆனால் பெரியது. மெனு கார்ட் எல்லாம் இருந்தது. முதலில் எல்லாரும் இளநீர் கேட்டு வாங்கிக் குடித்தோம். பெரிய கொப்பரைத் தேங்காய் போலிருந்தது இளநீர். ஒரு காயிலேயே இரண்டு, மூன்று குவளை இளநீர் இருந்தது. நல்ல இனிப்பு என்று சொல்லிவிட முடியாது. அதேவேளையில் உப்பு நீரென்று தள்ளவும் முடியாது. ஆனால், அப்போது எங்களுக்கு இருந்த தாகத்துக்கு அந்த இளநீர் தேனாய் இனித்தது. ஓர் அமெரிக்க டாலர் விலை. இங்கே உள்ளூர்க்காரர்களுக்கு ஒரு விலை. வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு விலை. அவர்களுக்குள் கம்போடிய நாணயத்தில் புழங்கிக் கொள்கிறார்கள். நமக்குத்தான் ஒன்றுமே புரிவதில்லை.

    சாப்பாட்டு மேசையில், நடுநாயகமாக அங்கோர் வாட் வந்து எங்களுக்கு முன் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டது. அவரவர் அனுபவத்தை விவரிக்கத் தொடங்கிப் பேசிக் கொண்டே இருந்தோம். இடையிடையே உணவு உள்ளே போய்க் கொண்டிருந்தது. இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் பார்க்க அரை நாளை மட்டுமே ஒதுக்கிய எங்கள் அறியாமையை நாங்களே நொந்து கொண்டோம்.

    அவரவர் குடும்பத்தோடு வந்து ஆற அமர இருந்து அங்கோர் வாட்டை அணுவணுவாய் ரசிப்பதென ஜமாத்தில் முடிவானது. அதன்பிறகுதான் பரணி ஒரு நிலைக்கு வந்தார். அவித்த கோழி சேர்த்துப் பிரட்டிய சோற்றை ஒரு வாய் அள்ளிப் போட்ட கையோடு “அந்தக் குதிரை வீரனைப் பாத்தீங்களா ? ஈட்டியை ஒரு கையில வைச்சிக்கிட்டு என்னவொரு ஆக்ரோஷமாப் பாயத் தயாரா இருந்தான்னுட்டு?” என்று ராஜூ ஆரம்பிப்பார். உடனே, மகாதேவன் “சான்ஸே இல்லை ராஜூ” என்பார். உடனே பரணி இணைந்து கொள்வார், “அந்த அப்சரஸ் முகத்தைப் பாத்தீங்களா ? எல்லாம் ஒரே போல ஒண்ணாசெஞ்சி வைச்சிருக்காய்ங்க” என்பார். உடனே ஏதோ நினைவு வந்ததுபோல், “ஏங்க இதை எப்புடீங்க பிளான் பண்ணிருப்பான் ஒருத்தன் ? எவ்வளவு மண்டை இருக்கணும் அவனுக்கு ?” என்பார்.

    ராஜூ ரத்தினச் சுருக்கமாய்ப் பேசி நிறுத்திவிடுவார். மகாதேவன் அதை ஆமோதிப்பதோடு சரி. நவீன் எல்லாத்துக்கும் மையமாய் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார். ஆனால், நானும் பரணியும்தான் ஓட்டைவாய்கள். லொட லொடவென்று எதையாவது பேசிக் கொண்டே இருப்போம். ஒருவர் பேசும்போது மற்றவர் குறுக்கே புகுந்தால், பேச்சின் ஓட்டம் தடைபடும் என்பதால் குறுக்கே புகமாட்டோம். எதையாவது ஒன்றை வருணிக்க வேண்டி வந்தால், படித்த பழைய புத்தகங்கள் ஞாபகத்துக்கு வந்துவிடும் பரணிக்கு. பிரபஞ்சனின் அந்தியந்த தாசர் பரணி.

    இலக்கியம் படிப்பது வாழ்க்கையின் பல தருணங்களை அழகாக்கி விடுவதை நாங்கள் இருவருமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம். கண்ணில் காணும் காட்சியை உடனே மனம் பழைய புத்தக இடுக்கில் தேடி எடுத்த வார்த்தைகளோடு கோத்துப் பரிணமிக்கச் செய்துவிடுகிறது. அடுத்தடுத்து வரும் சந்திப்புகளில் அங்கோர் வாட் பெரும்பகுதி இடத்தைப் பிடிக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டேன். எங்கள் அரட்டை நீள்வதைப் பார்த்து ஓட்டுநர் ரா, எச்சரிக்கை மணி அடித்தார். இன்னும் நாம் பாயோன் கோயில் பார்க்க வேண்டும். இருட்டுவதற்குள் சியாம் ரீப்பிலிருந்து புறப்பட வேண்டுமென்று.

    காலையில் எங்கள் அறையைக் காலி செய்து மூட்டைகளையெல்லாம் ஹோட்டலிலேயே விட்டுவந்திருந்தோம். நாங்கள் அங்கோர் வாட்டைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மறுபடி சென்று எல்லாப் பெட்டிகளையும் ரா எடுத்து வந்து வாகனத்தில் வைத்திருந்தார். சாப்பிட்டு முடித்து தெம்புடன் வேனில் ஏறி பாயோன் கோயிலை நோக்கிச் சென்றோம். அங்கோர் வாட்டிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவுதான். அங்கோர் தாம் என்ற பழம்பெரும் நகரக் கட்டமைப்பின் மையத்தில் உள்ளது பாயோன் ஆலயம்.

    பூமியும் சுவர்க்கமும் சந்திக்கும் இடத்தில் அந்தக் கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகச் சொல்கிறது வரலாறு. அங்கோர் வாட் ஆலயம் கட்டி முடிந்த சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் இந்த பாயோன் ஆலயம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. முதன்மையாக இது ஒரு பௌத்த ஆலயம்தான் என்றாலும் இந்து சமய அம்சங்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

    தஞ்சையில் எனக்கு சைவத்தில் பற்றுடைய புலவர் ஐயா ஒருவர் அறிமுகம் உண்டு. அவர் பெயர் புலவர் சொக்கலிங்கம். பாரதி பனியன் ஸ்டோர் இரத்தினம் மாமா மூலமாக அறிமுகமான பழுத்த சிவப்பழம். அவரோடு ஒருமுறை தஞ்சைப் பெரிய கோயிலைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு கதை சொல்வார். தஞ்சை, நாயக்க மன்னர்கள் வசம் வந்த பிறகு, அந்த ராசாவுக்கு மதுரையிலிருந்து பெண் கட்டி வந்தார்களாம்.

    பாண்டியகுமாரிக்குத் தஞ்சாவூர் அரண்மனையைச் சுற்றிக் காட்டிய மன்னர், “பார்த்தாயா நீ வாழப் போகும் அரண்மனை எவ்வளவு பெரியதென்று ?” எனச் சவடால் விட்டிருக்கிறார். உடனே மதுரைக்கார மகாராணி, இடுப்பில் ஒரு கையை வைத்து முகத்தில் ஏளனம் தொனிக்கச் சொன்னாளாம், “ஹூம், இதெல்லாம் ஒரு அரமணை ? எங்கப்பன் வீட்டுச் சலதாரைக்குக் காணாது ஓய் ஒம்ம மொத்த அரமணையும் !”

    ங்ஙொப்புரானே ! அதே மாதிரி ஒரு சம்பவம் எங்களுக்கு நடக்கப் போகிறது என்று நானோ, பரணியோ, மற்ற மூவருமோ கற்பனையும் செய்திருக்கவில்லை. எங்கள் ஐந்து பேரையும் வரவேற்க, எண்ணற்ற அவலோகிதேஸ்வரர்கள் இதழ்க் கடையில் உறைந்த புன்னகையோடு பாயோன் கோயில் கோபுரங்களில் காத்துக் கிடப்பது தெரியாமல், உண்ட மயக்கத்தில் கண்கள் செருக, இலேசான இளமழைக்கு இடையே வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம்…

    – பொன். மகாலிங்கம்

     

     

    பொன். மகாலிங்கம் – சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள – ponmaha2000@yahoo.com