Category: old…

old…

  • மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5 மணியளவில் மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து 6.30 மணியளவில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தங்கக்கவசம் அணிவிக்கப் பட்டது. பின்னர் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு தங்கக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் மற்றும் வெள்ளிக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் மேள, தாளம் முழங்க முருகன் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினார்கள். தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
    அதனை தொடர்ந்து சரியாக 7.45 மணியளவில் மயில் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்ட ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் ஏற்றி வைத்து பங்குனி உத்திர விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு 24 வகையான தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • சபரிமலை கோயில் ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷு சிறப்பு பூஜை

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடத்தப்படும். இந்த வருட பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி ஆறாட்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும். ஏப்ரல் 9ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். சித்திரை விஷு தினத்திற்காக மறுநாள் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஷு கனி தரிசனமும் நடைபெறும். அதன்பின் ஏப்ரல் 18ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.

  • மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 9-ந்தேதி அறுபத்து மூவர் விழா

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் 9-ந்தேதி அறுபத்து மூவர் விழா நடக்க உள்ளது. பங்குனி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
    மயிலாப்பூரில் பிரம்மனின் அகம்பாவத்தைகளையும் வண்ணம் சிவபெருமான் அவருடைய ஒரு தலையை கொய்து கபாலத்தைக் கையில் ஏந்தியிருக்கும் ஈசுவரர் கபாலீசுவரராக காட்சி அளிக்கிறார். இங்கே உமா தேவி மயில் உருவெடுத்துப் பெருமானைப் பூசித்தார்.

    இத்தலம் நோய் தீர்க்கும் திருத்தலமாகவும், ஆயுள் விருத்திக்கான திருத்தலமாகவும் பெண்களுடைய வரங்களை நிறைவேற்றும் தலமாகவும் போற்றப்படுகிறது. இச்சிவலிங்கம் சத்யோஜாத மூர்த்தமாக இருப்பதால் வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் திருத்தலமாகவும் விளங்குகின்றது.

    இத்தலத்தில் நடைபெறும் பங்குனிப் பெருவிழா மிகுந்த சிறப்புகள் கொண்டது.

    இத்திருவிழா பங்குனி பவுர்ணமியை இறுதி நாளாகக் கொண்டு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    விழா நாட்களில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பஞ்ச மூர்த்திகளின் உற்சவர் திருமேனிகள் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு ஒவ்வொரு நாளும் பல வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். இந்த உலா ஒளிவிளக்குகளோடும், நாதஸ்வர இன்னிசை யோடும், வேதமுழக்கம், தேவாரப் பாடல்களோடும் நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாகும்.

    பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முதல் நாள் (சனிக்கிழமை) அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம். ஆராதனைகள், மண விருந்தும் நடைபெறும். அன்றைய தினம் திருக்கோயிலின் கிராம தேவதையான அருள்மிகு கோலவிழி அம்மனுக்கு பஞ்சமூர்த்திகளின் புறப்பாடுக்கு முன்பே புறப்பாடு செய்யப்படுகிறது.

    2-ந்தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கும். தினமும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும்.

     

    எட்டாம் நாள் திருவிழா அன்று காலை சிவநேசர், திருஞனசம்பந்தர், அங்கம் பூபாவை உற்சவர்கள் மேற்கு மாட வீதிகுளக்கரைக்கு எதிரில் திருமஞ்சனத்திற்கு எழுந்தருளுவர். சிவநேசருக்கும் சம்பந்தருக்கும் மகா அபிஷேகம் நடை பெறும்.

    சிவநேசர், சம்பந்தருடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளி இறைவனிடம் உத்தரவு பெற்று அங்கம்பூம்பாவையின் எலும்புடன் கூடிய குடத்தை குளக்கரைக்கு எடுத்துச் சென்று மதியம் சுமார் 12.00 மணி அளவில் திருஞானசம்பந்தரின் மட்டிட்ட என்று தொடங்கு பதிகத்தைப் பாடி எலும்பைப் பெண்ணுருவாக்கி அற்புதம் நிகழ்த்திய காட்சி விழாவாக நடைபெறும்.

    பிறகு மண்டகப்படி முடித்துக் கொண்டு மாட வீதி வலம் வந்து பதினாறு கால் மண்டபம் சேருவர். அப்போது 3 மணிக்கு அருள்மிகு கபாலீசுவரர் வெள்ளி விமானத்தின் மீது எழுந்தருளி சிவநேசர், திருஞானசம்பந்தர், அங்கம் பூம்பாவை மற்றும் 63 நாயன்மார்களுக்கும் காட்சி அளிப்பார். இவ்விழா உலகப் பிரசித்தி பெற்ற மிகச் சிறப்பானதாகும்.

    பின்னர் திருவீதி உலா நடைபெறும். இவ்விழாவின் போது பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இவ்விழாவின் போது பக்தர்கள் பலரும் மண் பானைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம், சாக்லெட், பிஸ்கட், மிட்டாய்கள் போன்ற இனிப்பு வகைகளை இறைவனுக்கு படைத்து வினியோகம் செய்வர்.

    மேலும் பொதுமக்கள் பலர் தாமாகவே முன்வந்து நீர், மோர் மற்றும் அன்ன தானம் வழங்குவர். அருள்மிகு கபாலீசுவரர், பஞ்சமூர்த்திகளுடனும் அறுபத்து மூன்று நாயன்மார்களுடனும் காட்சி கொடுத்தருளும் ஐதீகம் நடைபெறும்.

    பின்பு வீதி வலம் வந்து பதினாறு கால் மண்டபத்தில் தீபாராதனையும் அறுபத்து மூன்று நாயன்மார் வலம் வரும் காட்சியும் நடைபெறும்.

    பத்தாம் நாள் காலை நடராஜபெருமானுக்கு அபிஷேக ஆராதனை விழா நடைபெற்று பிறகு தீர்த்தவாரி நடைபெறும். பின் திருவீதி உலா உற்சவம் நடைபெறும்.

    பஞ்சமூர்த்திகளுக்கு குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு திருவீதி உலா உற்சவம் நடைபெறும். மாலையில் கபாலீசுவரர் கோவிலுக்குள் புன்னை வனநாதர் சன்னதியில் கற்பகாம்பாள் மயிலுருவாக இருந்த சாபம் நீங்கப்பெற்று இறைவனைப் பூஜித்து கபாலீசுவர் திருக்காட்சி பெற்றுத் தன் சுயஉருவடைந்து திருக்கல்யாணம் நடைபெறும்.

  • பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்டகொடியேற்றம்

    திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்வட்டம், அருள்மிகு பிரம்மசம்பத்கெளரி உடனாய பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேரோட்டகொடியேற்றம் ஏப்ரல் 31 ஆம் தேதி நடைபெற்றது.
    சோழவளநாட்டின் பொன்னி நதி எனும்காவேரியின் வடகரையில்திருச்சிராப்பள்ளி்ககு 25 கிமீ தொலைவில்சேக்கிழாரின் பெரியபுராணம், சுந்தரரின்ஷேத்திரக்கோவையிலும் வைப்பு தலமாக பாடல் பெற்று விளங்கக்கூடியதும்,திருப்பிடவூர் எனும் திருப்பட்டூர் சித்தர்களின்சுவாச புண்ணிய பூமியிலே பிரம்மனுக்கு அருள்புரிந்தவரும், திருமால், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சூரியபகவான் ஆகியோரால்வழிபடபட்டவராகிய பேரருளாளன், பிரவூரன்பிரம்மபுரீஸ்வரருக்கு ஏப்ரல் 8-ம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோயிலின் முதல்நாளான இன்று 31 -ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8.42 மணிக்குள்கொடியேற்றம் நடைபெற்றது.
    விழாவில் கோயில் செயல் அலுவலர் ச.முத்துராமன் மற்றும் கோயில்பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
    இதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்குகேடயத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடும்நடைபெறுகிறது தொடர்ந்து 31-ம் தேதி முதல் 7- ம் தேதி தினசரி காலை 10 மணிக்கு பல்லாக்கும்தினசரி இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில்புறப்பாடும் வாகனங்களில் புறப்பாடும்நடைபெறுகிறது.
    ஏப்ரல் 8-ம் தேதி காலை 7. 35 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத் தேரோட்டம் வடம்பிடித்தல்நடைபெறுகிறது.

  • கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

    கோவில்பட்டி அருகே புகழ்பெற்ற தென்பழனியான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகரமான தேரோட்டம் ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது.
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை. இங்கு தமிழகத்தின் தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோவில் உள்ளது. குடவரை கோவிலான இந்த திருத்தலத்தில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான திருவிழா மார்ச் 31 ஆம் தேதி அன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடைபெறும். விழாவின் சிகரமான கருதப்படும் திருத்தேரோட்டம் ஏப்ரல் 8ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜை நடக்கிறது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மேற்கொள்ளப்படும். காலை 8 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார். தொடர்ந்து 10.45 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • விநாயகரின் ஆறுபடை வீடு

    ஆறுபடை வீடு என்று சொன்னாலே முருகன் தான் நினைவிற்கு வருவார். ஏன்னென்றால் முருகனுக்குத்தான் திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை என்னும் ஆறுபடை வீடு உள்ளது. ஆனால் முருகன் மட்டுமின்றி விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    திருவண்ணாமலை :

    இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்”. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

    விருத்தாசலம் :

    இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ‘ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

    திருக்கடவூர் :

    இங்கு எழுந்தருளும் பிள்ளையாருக்கு ‘கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். இவரை வணங்க நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    மதுரை :

    இங்கு அமைந்துள்ள பிள்ளையாருக்கு ‘சித்தி விநாயகர்” என்று பெயர். நினைத்தது நிறைவேற இவரை வணங்கலாம்.

    பிள்ளையார்பட்டி :

    இங்கு அருள் புரிபவர் பிள்ளையார்பட்டி ‘கற்பக விநாயகர்”. இவரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    திருநாரையூர் :

    இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு ‘பொண்ணாப் பிள்ளையார்” என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

    ஆறுபடை விநாயகரை போற்றி வணங்கினால் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். சித்தி பெற்ற விநாயகாரை நாளும் போற்றி நன்மைகளை பெறுவோம்.

  • திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் ஈசனை வணங்கும் சூரியன்

    திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சூரியன் ஈசனை வணங்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த அதிசயம் இரண்டு நாட்களுக்கு நிகழும். சூரிய உதயத்தின் போது அதன் கதிர்கள் ஈசன் மேல் விழுந்து ஜோதி ஸ்வரூபமாய் காட்சி அளித்திடும்.
    திருப்பட்டூர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபட்டால் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக குறையும் ஏன் என்றால் அங்கு சிவபெருமான் பிரம்மனுக்கு வரம் கொடுத்த இடம் எதற்கு வரம் கொடுத்தார் சிவபெருமான் என்றால் அதாவது மனிதன் பிறக்கும் போது அவனுக்கு எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும் என்று பிரம்மன் நம்முடைய தலையெழுத்தை எழுதி விடுகிறார் அதன் பிறகு அவனுக்கு வரும் துன்பம் எதுவாக இருந்தாலும் அதை போக்க திருச்சி அருகே உள்ள சிருகனூர் அருகில் இருக்கும் திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் சென்று அங்கு நம்முடைய ஜாதகம் வைத்து அர்ச்சனை பிரம்மனுக்கு செய்து வந்தால் துன்பம் எல்லாம் கண்டிப்பாக குறையும் .
    முதலில் திருப்பட்டூர் அதாவது திருச்சி டு சென்னை பைபாஸ் ரோடில் சமயபுரம் கோவில் இருந்து சுமார் 15 கி . மீ . சென்றால் இடதுபுறத்தில் 5 கி மி. சென்றால் திருப்பட்டூர் ஊர் வரும் அங்கு தான் இந்த கோவில் அமைந்துள்ளது .
    முதலில் சிவன் கோவிலில் இருந்து 1.5 கி.மி தூரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சென்று அங்கு உள்ள வியக்ரபாரதர் ஜீவா சமாதியை வணங்கி சிறிது தியானம் செய்து பின்பு சிவன் மற்றும் பார்வதியை தரிசனம் செய்து பின்பு அங்கு இருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவில் வர வேண்டும் .

    அதன் பின்பு சிவன் கோவில் சென்று முதலில் சிவனை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும் அதன் பிறகு பிரம்மனுக்கு அர்ச்சனை தட்டு வாங்கி அதன் உடன் உங்களது ஜாதகத்தையும் சேர்த்து அய்யர் இடம் கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து தரும் படி கொடுக்கவும் அவர் உங்கள் ஜாதகத்தை பிரம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு உங்களிடம் கொடுப்பார். பின்பு அங்கு இருக்கும் பதஞ்சலி முனிவர் உள்ள ஜீவ சமாதி சென்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொஞ்ச நேரம் தியானம் செய்து பின்பு அங்கு உள்ள அம்பாள் வழிபட்டு பின்பு அங்கு உள்ள சிவலிங்கம் எல்லாவற்றையும் கும்பிட்டு வரவும் .
    அப்புறம் உங்கள் குறைகள் எல்லாம் கண்டிப்பாக கதிரவன் கண்ட பனி போல் கொஞ்சம் கொஞ்சம்மாக குறையும் அதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம்.

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 1-ஆம் தேதி கொடியேற்றதுத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 9-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் பெருமாள் எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இத்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரின் திருமகளாய் ஸ்ரீஆண்டாள் அவதரித்தார். திருப்பாவை என்னும் பாமாலையும், பூமாலையும் சூடிக் கொடுத்தார். ஸ்ரீஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்து எம்பெருமான் இத்தலத்திற்கு எழுந்தருளி பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீஆண்டாளை திருமணம் செய்தருளினார்.
    இதையொட்டி, நிகழாண்டில் ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை 7.35 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 9-ஆம் திருநாளான ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. உற்சவ நாள்களில் சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்று பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளுவர்.

  • திருப்பதி தரிசனத்தை எளிமையாக்கும் புதிய மொபைல் ஆப்

    தரிசனத்திற்கு முன் பதிவும் செய்யவும் காணிக்களை செலுத்தவும் திருப்பதி கோவில் நிர்வாகம் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. தெலுங்கு வருட பிறப்பையொட்டி யுகாதி நெய்வேத்தியம் படைத்து, இந்த ஆண்டுக்கான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோவிந்தா – திருமலா திருப்பதி தேவஸ்தானம் (Govinda – Tirumala Tirupati Devasthanam) என்ற பெயரில் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி தரிசன டிக்கெட், அறைகள் ஆகிவற்றுக்கு முன் பதிவு செய்யலாம். மேலும் இ- உண்டி, இ- நன்கொடை செலுத்தும் வசதிகளும் உள்ளன.

  • யுகாதி விரத வழிபாடு முறை

    யுகாதி அன்று விரதமிருந்து வழிபாடு செய்வது எப்படி?
    ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.
    பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.
    காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.
    விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.
    யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.