Category: old…

old…

  • சரஸ்வதி பூஜைக்கு… சரஸ்வதி தேவி காயத்திரி மந்திரம்

    கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியின் அருள் வேண்டும். வித்தை உள்ள இடங்களிலும், கல்விச் சாலைகளிலும், இசை அரங்குகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சரஸ்வதிதேவி வாசம் செய்கிறாள். ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையில், இந்த அன்னையை வேண்டி நாம் வழிபாடு செய்கிறோம்.
    சரஸ்வதிதேவியை வழிபடும் வேளைகளில் சரஸ்வதிக்கு உரிய காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் நன்மைகள் பல மடங்காக கிடைக்கும்.

    சரஸ்வதி காயத்திரி மந்திரம் :

    ‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
    பீதவர்ணாயை தீமஹி தன்னோ
    பிராம்ஹீ ப்ரசோதயாத்’

    சரஸ்வதிதேவியை பூஜை செய்து வழிபடும்போது, அன்னையின் பல்வேறு மந்திரங்களின் கூட, மேற்கண்ட சரஸ்வதி காயத்திரி மந்திரத்தையும் 108 முறை சொல்லி வந்தால் சிறப்பான பலன்களை நான்முகன் தேவி நமக்கு தந்தருள்வாள். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், கல்வியில் சிறந்து விளங்கலாம். வித்தைகள் வளரும். தொழில் சிறக்கும். லாபம் உண்டாகும். உயர் பதவிகள் தேடி வரும். வாக்கு வன்மை சிறக்கும். ஞானம் கிட்டும்.

  • ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி சேவை

    ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெற்றது.
    108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமாக விளங்குவது ஸ்ரீரங்கம் கோயில். இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி விழா சிறப்புமிக்க ஒன்று. ஆண்டு முழுவதும் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெற்றாலும், இந்த நாளில் மட்டும்தான் ரங்கநாயகித் தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசிக்க முடியும்.
    நவராத்திரி ஏழாம் நாளான சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து திருவடி சேவையுடன் புறப்பட்டு கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.
    தாயாரின் திருவடிசேவை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கநாச்சியார் கொலு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து தயார் திருவடி சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

  • சகல காரிய விருத்திக்கு விஜயதசமி….

    நவராத்திரியில் வரும் தசமி திதியும் விசேஷமானது. இது விஜயதசமி எனப்படுகிறது.
    சைக்கிள் முதல் பஸ், லாரி முதலிய அனைத்து வாகனங்களையும் சுத்தம் செய்து பூ, மாலை அணிவித்து, பூசணிக்காய், எலுமிச்சம்பழம் சாற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்வார்கள். இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். விஜயதசமி நாளானது சகல காரிய விருத்தியையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய நாள். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும் வந்து சேரும்.

    இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபாடுகள் செய்வது உகந்ததாகும்.

  • தடைகள் நீங்கி நலங்கள் பெருக ‘ஆயுத பூஜை’

    நவக்கிரகங்கள் நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவநிதிகள் ஆகிய எல்லாமே ஒன்பது ஒன்பதாக உள்ளன.
    இந்த வரிசையில் உள்ள நவராத்திரியும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அதிலும் நவராத்திரியில் வரும் நவமி திதி மிகவும் விசேஷம். தடைகள் நீங்கி நலங்கள் பெருக இந்த நவமி திதியானது ‘ஆயுத பூஜை’ என்றும் ‘சரஸ்வதி பூஜை’ என்றும் கொண்டாடப்படுகிறது. நமது கல்விச் செல்வம் பெருக வேண்டியும் தொழில் வளம் அதிகரிக்க வேண்டியும் இந்த நாளில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்களை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

  • கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்…

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டிசம்பர் 12ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீப திருவிழா முக்கிய திருவிழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் நிறைவாக மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அன்று சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று மகாதீபத்தை தரிசிப்பார்கள்.

    இந்த ஆண்டிற்கான தீப திருவிழா வருகிற டிசம்பர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 12-ந் தேதி மகா தீப திருவிழா நடைபெறும்.
    கார்த்திகை தீபதிரு விழாவிற்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
    தொடர்ந்து தீபதிருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்சரதங்கள் பழுது நீக்கி தேரோட்டத்திற்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

  • குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா

    குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா அக்டோபர் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    8 ஆம் தேதி காலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் திருவிலஞ்சி குமாரர் வருகை நடக்கிறது. திருவிழாவின் நான்காம் நாளான 11–ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெறும் என்றும், 12–ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல அக்டோபர் 14–ந் தேதி காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 15–ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 17–ந் தேதி காலை 10 மணிக்கு மேல் விசு தீர்த்தவாரி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் திருவிலஞ்சி குமாரர் பிரியாவிடை நடக்கிறது. விழாவின் 10 நாட்களும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை, தேவி உலா நடக்கிறது.

  • ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதி சென்றது

    ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் பரிவட்டம், திருமலை திருவேங்கடமுடையானுக்கு புரட்டாசி பிரமோற்சவத்தின் 5-ம் திருநாளில் அணிவிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதியில் நடைபெற்று வரும் புரட்டாசி பிரமோற்சவத்தில், ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை அனுப்புவது வழக்கம்.
    இதற்காக ஆண்டாளுக்கு மாலை, பரிவட்டம், கிளி உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கோவில் தக்கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கோவில் ஸ்தானிகம் ரெங்கராஜன் என்ற ரமேஷ் தலையில் பட்டர்கள் ஏற்றி வைத்தனர். அதைத் தொடர்ந்து அவை, மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தனி காரில் திருப்பதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • திருப்பதியில் பிரம்மோற்சவம் தொடங்கியது….

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் புற்று மண் சேகரிக்கப்பட்டு அதில் நவதானியங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷ்வ சேனாதிபதி உற்சவர், 4 மாட வீதிகளில் பவனி வந்தார். முதல் நாளான அக்டோபர் 3 ஆம் தேதி மாலை, மகாவிஷ்ணுவின் வாகனமான கருடர் உருவம் வரைந்த பிரம்மோற்சவ கொடி மேளதாளங்கள் முழங்க மாட வீதிகளில் எடுத்து வரப்பட்டு மாலை 6.15 மணிக்கு மீன லக்னத்தில் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம முறைப்படி பிரம்மோற்சவ கொடியை கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் அர்ச்சகர்கள் ஏற்றினர்.

    இதைத்தொடர்ந்து 11ம்தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கொடியேற்றத்தை தொடர்ந்து முதல் உற்சவமாக இன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பவனி வருகிறார். 2ம் நாளான அக்டோபர் 4 ஆம் தேதி காலை சிறிய சேஷ வாகன உற்சவம். இரவு அன்னவாகன உற்சவம். 3ம்நாள் காலை சிம்ம வாகன உற்சவம். இரவு முத்துபந்தல் வாகன உற்சவம். 4ம்நாள் 6ம்தேதி காலை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி தாயார்களுடன் எழுந்தருள்கிறார்.

    அன்றிரவு ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது. 5ம்நாள் காலை (7ம்தேதி) மோகினி அலங்கார உற்சவம். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் அன்றிரவு நடக்கிறது. அன்று ஏழுமலையானுக்கு மூலவருக்கும் அணிவிக்கப்படும் மகர கண்டி, லட்சுமி ஆரம், சகஸ்கர நாம மாலை ஆரம் அணிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்படும் துளசி மாலை மற்றும் புதிய குடை கருட வாகனத்தில் அலங்கரிக்கப்படும் ஆண்டாள் சூடி கொடுத்த கிளியுடன் கூடிய மாலை சுவாமிக்கு அணிவிக்கப்படவுள்ளது.

    6ம்நாள் காலை (8ம்தேதி) அனுமந்த வாகன உற்சவம். இரவு தங்க யானை வாகன உற்சவம். 7ம்நாள் காலை (9ம்தேதி) தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 8ம்நாள் காலை (10ம்தேதி) ரத உற்சவம் நடக்கிறது. இரவு மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 9ம் நாள் காலை (11ம்தேதி) சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. அன்றிரவு வேத மந்திரங்கள் முழங்க கொடி இறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றம்

    குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
    மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
    அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா நடந்தது. பின்னர் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து 8.45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், யூனியன் கவுன்சிலர் அம்மன் நாராயணன், மாநில இந்து முன்னணி துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், தூத்துக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், மகுட இசை போன்றவை நடக்கிறது. இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    தசரா திருவிழாவின் பத்தாம் நாளான அக்டோபர் 10 ஆம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளும் அம்மன் மகிசாசூரனை வதம் செய்கிறார்.

  • திருப்பதியில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்….

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைப்பாதை மார்க்கங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ சமயத்தில் சுமார் 7 லட்சம் லட்டுகள் இருப்பில் வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருப்பதியில் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கருட சேவையின் போது மட்டும் கூடுதலாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏதுவாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 537 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆம்புலன்சுகள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா தொடர்பாக, பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஆலோசனைகளை வழங்க 1800-425-111111 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.