Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • garuda-dharisanamum-palangalum

    ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி, எனப் பலபெயர்கள் உண்டு.

    கச்சபர்-விநதை தம்பதிக்கு ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார் கருடன். இவருடைய அண்ணன் அருணன். இரண்டாவதாகப் பிறந்த கருடாழ்வார் மகாபலமும், சர்ப்பங்களை விழுங்கும் சக்தியும், அழகான முகமும், குவிந்த இறகுகளையும், உறுதியான நகங்களையும், சிறந்த கூர்மையான கண்களையும், பருத்த கழுத்தையும், குட்டையான கால்களையும், பெரிய தலையையும், உடையவன். எல்லா திசைகளிலும் வேகமாகப் பறக்கும் ஆற்றலைப் பெற்றவன். கருடனுக்கு ருத்ரை, சுகீர்த்தி என இரு மனைவிகள் உண்டு. மாற்றாந்தாயான கத்ருவிடம் அடிமைப்பட்டிருந்த தன் தாய் விநதையின் அடிமைத்தனத்தை, இந்திரலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டுவந்து போக்கினான் கருடன்.

    கருட வாகனமும் கருடக் கொடியும்:
    ஒரு சமயம் கருடன் இந்திரனுடன் போரிட்டபோது, திருமால் உபேந்திரனாக இருந்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். திருமால் கருடனின் கர்வத்தை அடக்கி, தனக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வரமளித்தார்.

    கருட தரிசனப்பலன்:
    கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நன்மையைத் தரும். பலன்களும் கிடைக்கும். அவை,

    ஞாயிறு நோய் நீங்கும்.

    திங்கள், செவ்வாய் – அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.

    புதன், வியாழன் – பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.

    வெள்ளி, சனி -ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.

    அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம். கருட தரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டுமென்று கூறப்படுகிறது.

    கருட சேவை:
    பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருடவாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம். இதனை "ஆனை துயரம் தீரப்புள்ளூர்ந்து நின்றாழி தொட்டானை' என்கிறார் திருமங்கையாழ்வார்.

    கருட சேவையின் போது காக்க நீ வருவாயே கருடனேறி, என்று பக்தர்கள் பாடுவர். ஆசித் எனப்படும் சப்பரத்தின்மேல் சித் எனப்படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமானைச் சுமந்து வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருட சேவையாகும். கருட சேவையை பெரிய திருவடி சேவை என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோயில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருட சேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

    கருட வியூகம்:
    கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.

    கருட மந்திரம் :
    "குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
    விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'
    என்னும் கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.

    கருடாழ்வானின் பகவத் தொண்டு:
    ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான மூவரில் அனந்தன், விஷ்வக்சேனர்களுடன் கருடாழ்வானும் ஒருவன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான். அதுவே கருடாத்ரி என்பதாகும்.

    எம்பெருமான் திருக்கோயில்களில் கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமானைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும என்பது நெறிமுறையாகும்.

    கருடனும் அஹோபிலமும்:
    கருடன், அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப் போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுக்கோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார்.

    கருட புராணம்:
    ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகிறது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்.

  • garudan-vazhipatta-9-narashima

    அகோபில நரசிம்மர்: உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

    பார்க்கவ நரசிம்மர்: மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

    யோகானந்த நரசிம்மர்: மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள்ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

    சத்ரவத நரசிம்மர்: கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

    க்ரோத (வராக) நரசிம்மர்: பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர்.

    இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

    கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

    மாலோல நரசிம்மர்: “மா’ என்றால் லட்சுமி.”லோலன்” என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார்.

    அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

    பாவன நரசிம்மர்: பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

    ஜ்வாலா நரசிம்மர்: மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

    சிங்க முகமும், மனித உடலுமுள்ள நரசிம்மருக்குப் பொதுவாக இருப்பது ஒரு தலை, நான்கு கைகளே. இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்குக் காட்சி தந்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.

    இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் லட்சுமி நரசிம்மர், சித்தனைவாடி நரசிம்மர் ஆகிய தலங்கள் அமைந்துள்ளன.

    யோக நரசிம்மரின் சிறப்பு :
    குழந்தையை சீர்திருத்திட சீற்றம் கொள்ளும் தாய் ஒரே நொடியில், கோபம் தணிந்து, குழந்தையைக் கொஞ்சிப் பராமரிக்கிறாள். இது போலவே தான், இரண்யனைத் திருத்த, உக்ரவடிவமாக வந்த நரசிம்மரும் சீக்கிரமே யோகத்தில், அமைதியில் ஆழ்ந்து விடுகிறார்.

    விஷ்ணுவை போகமூர்த்தி என்றே பரவலாக கருதினாலும், அவர் தக்ஷிணமூர்த்தி போல தன்னுள்ளேயே நிறைவு காணும் ஞானமூர்த்தியாக, தரிசிப்போர் ஞானநிலை அடைய உதாரணமாக இருப்பதே யோக நரசிம்ம ரூபம் ஆகும்.

    பூஜை முறை :

    நரசிம்ம ஜெயந்தி விரத முறை ஏகாதசி விரத முறையை ஒத்தது ஆகும். இந்நாளில் பகவான் நரசிம்மரை அவர் தோன்றிய சந்தியாகாலத்தில் , அதாவது பிரதோஷ வேளையில் (மாலை 4.30 – 6) இவரை விரிவாக பூஜிக்க வேண்டும்.

    நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

    எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு.

    பலன்கள் :

    பகவான் நரசிம்மரை வழிபடுவதால் நமது ஆன்மீகப் பாதையில் உள்ள தடைகளை நீக்கி ஞானத்தை வழங்க வல்லவர். அது மட்டுமின்றி, அனைத்து விதமான தீய சக்திகளிடமிருந்தும் பாதுகாப்பு அளிக்க வல்லவர். நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளில் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

    நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்ம மூர்த்தியை வழிபாடு செய்பவர்கள் தம் பகைவர்களை எளிதில் வெல்ல முடியும்.

  • navagragha-dhosham-nivarthiyagum-ukira-narasimmar

    சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்.

    வசிஷ்டர் தவம் இருந்த இடம் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரேநாள் நரசிம்மர் வழிபாட்டில் மூன்றாவதாக நிறைவாக செல்ல வேண்டிய ஆலயமாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் இத்தலம் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது.

    புராண காலத்தில் கிருஷ்ணா ரண்யசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கிரிகுடி கோவிலில் சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா, மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசியன்று மாலையில் கருட சேவை மாட்டுப்பொங்கலன்று தீர்த்தவாரி நடத்தப்படுகிறது.

    வசிஷ்டர் சிங்கிரிக் குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். பாவன விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் பிரகலாத வரதன் அருள்பாலிக்கிறார். கருவறை மட்டும் பழமையானது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முழுமையடையாத கல்வெட்டு ஒன்று கோவில் தூணில் கண்டறியப்பட்டுள்ளது.

    இக்கோவில் நரசிம்ம அனுஷ்டுப்பு மந்திரத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்டது என்பதை சிறப்பாகச் சொல்கிறார்கள். இங்கு வைகானச ஆகம விதிப்படி பூசைகள் நடைபெறுகின்றன. மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.

    இத்தலத்தில் பாவன விமானத்தின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் தாங்கியுள்ள ஆயுதங்கள்: 1. பாதஹஸ்தம், 2. பிரயோக சக்கரம், 3. ஷீரிகா என்ற குத்துக்கத்தி, 4. காணம், 5. அரக்கனின் தலை அறுத்தல், 6. கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், 7. இரணியனின் காலை அழுத்திப் பிடித்தல், 8. இரணியனின் குடலைக்கிழிப்பது (இடது கை), 9. இரணியனின் குடல் மாலையைப் பிடித்திருப்பது, 10. சங்கம், 11. வில், 12. கதை, 13. கேடயம், 14. வெட்டப்பட்ட தலை, 15. இரணியனின் தலையை அழுத்தி பிடித்திருப்பது, 16. இரணியனின் குடலைக் கிழிப்பது ஆகியனவாகும். இது ஒரு பரிகாரத் தலம். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது.

    புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.

  • sri-rangam-ranganathar-sorga-vasal-thirappu

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.

    நேற்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின்னர் அவர் காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி அளிக்கவில்லை.

    இன்று வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.

    இதனையொட்டி இன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார்.

    திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

    இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டபோது கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

  • thiruppavai-padal-3

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

     

    பொருள்:

    சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

    விளக்கம்:

    திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 18
    விளம்பி வருடம் – மார்கழி 3
    வைகுண்ட ஏகாதசி, குற்றாலம் சிவன் தேர்
    18-டிச-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி அ.கா 4.57
    நட்சத்திரம் : அசுவினி இ 2.27
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தாமதம்
    ரிஷபம் – சுகம்
    மிதுனம் – வரவு
    கடனம் – சிக்கல்
    சிம்மம் – முயற்சி
    கன்னி – எதிர்ப்பு
    துலாம் – வெற்றி
    விருச்சிகம் – கவலை
    தனுசு – பயம்
    மகரம் – நட்பு
    கும்பம் – தடங்கல்
    மீனம் – களிப்பு

  • vaikunda-egadasi-virdha-murai

    ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

    துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை’ என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

    அனுஷ்டிப்பது எப்படி?

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

  • vaikunda-ekadasi-varalaru

    ஒரு காலத்தில் அம்பரீஷன் என்ற சக்கரவர்த்தி, ஏகாதசி விரதத்தை தவறாது கடைப்பிடித்தான். ஒருமுறை, ஏகாதசி முடிந்த மறுநாள் துவாதசியன்று, யமுனை நதிக்கரையில் துர்வாச முனிவரை சந்தித்தான். அவருக்கு பாதபூஜை செய்து, அவரையும் தன்னோடு உணவு உண்ண வரும்படி அழைத்தான்.

    யமுனையில் நீராடிவிட்டு வருவதாகச் சென்ற துர்வாச முனிவர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அங்கிருந்த மற்ற ரிஷிகள், ‘அம்பரீஷா! துளசி தீர்த்தத்தை அருந்தி விரதத்தை முடித்துக்கொள். துர்வாசரை விட்டு சாப்பிட்டால்தான் தவறு. தீர்த்தம் அருந்துவதில் தவறில்லை” என்று கூறினர்.

    தன்னை எதிர்பார்க்காமல் அம்பரீஷன் மட்டும் துளசி தீர்த்தம் உண்டதைக் கேட்டு துர்வாசர் கோபம் கொண்டார். அம்பரீஷன் மீது சடைமுடி ஒன்றை ஏவிவிட்டார். அது பூதமாக உருமாறி அம்பரீஷனைத் துரத்தியது இதை அறிந்ததும் பக்தனை காப்பதற்காக, அந்தப் பூதத்தின் மீது மகாவிஷ்ணு சுதர்சனச் சக்கரத்தை எறிந்தார். அச்சக்கரம் பூதத்தையும் துர்வாசரையும் துரத்தியது. பாற்கடலுக்கு ஓடி, மகாவிஷ்ணுவிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டினார்.

    ‘துர்வாசரே! ஏகாதசி நாளில் என்னைக் குறித்து யாரொருவர் பக்தியோடு விரதம் இருக்கிறார்களோ, அவர்களுடைய இதயத்தில் நான் குடியிருக்கிறேன். அவர்களை காப்பது என் கடமை. அம்பரீஷனிடம் மன்னிப்பு கேளுங்கள். அப்போதுதான் சக்கரத்திடமிருந்து விடுதலை பெறுவீர்கள்’ என்றார் மகாவிஷ்ணு.

    அம்பரீஷனிடம் தன்னை மன்னிக்குமாறு துர்வாசர் வேண்டியதோடு, அவனுக்குப் பல்வேறு வரங்களையும் தந்து அருளினார். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

  • thirupathy-devasthanam-nadathum-arakattalai

    ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
    ‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964-ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.

    மாற்றுத் திறனாளிகளுக்கான அறுவைசிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை.
    இந்த அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பானவற்றுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது.

    ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக்கட்டளை
    இந்த அறக்கட்டளை, கோயில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
    2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாசாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
    வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.

    பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
    திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
    புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
    சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளவை முழுமையான அறப்பணிகள் அல்ல. முக்கியமான அறப்பணிகள் அவ்வளவே.

  • thiruppavai-padal-2

    வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
    செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையத்துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

     

    பொருள்:

    திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

    விளக்கம்:

    ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.