Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • adhi-sakthi-peedamaga-vilangum-dhara-dharani-koil

    ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹாம்பூருக்கு அருகில் பூர்ணகிரி மலைத் தொடரில் அமைந்துள்ளது தாராதாரிணி கோயில். ஒடிசாவின் தெற்கு பகுதி மக்களின் குலதெய்வமாக விளங்கும் இக்கோயில் ஆதி சக்தி பீடமாக விளங்குகிறது.

    பார்வதி தேவி, தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்கு அழையாத விருந்தாளியாக சென்று அவமானப்பட்டு கோபத்தில் யாக அக்னியில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். அப்போது பார்வதி தேவியின் மார்பு விழுந்த இடமே இந்த இடம்.

    பெர்ஹாம்பூரில் அமைந்துள்ள தாராதாரிணி ஆலயத்தில் இரண்டு தேவிகள் உள்ளனர். பெரியவளுடைய பெயர் தாரா, சிறியவள் தாரிணி. கல்லில் முகம் போன்று செதுக்கப்பட்டு உள்ள அந்த சிலைகளுக்கு அழகுற அணிகலன்கள் அணிவித்து பெண்ரூபமாக முதலில் அங்கு குடியேறி இருந்த ஆதிவாசிகள் வணங்கி வந்தனர்.

  • varalakshmi-viradha-poojai-muraigal

    மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்.
    வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

    பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

    இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
    கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
    எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
    கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

    பூஜைக்குத் தேவையானவை :
    மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.

    நிவேதனப் பொருள்கள்:
    பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.

    பழ வகைகள்:
    ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…

    பூஜைக்கான முன்னேற்பாடுகள்:
    வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.

    (சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)

    பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.

    விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.

    பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். பஞ்சாங்கம் பார்த்து, நாள், திதி, வருடம், பட்சம், மாதம் ஆகியவற்றை அறிந்து குறித்துக் கொள்ளவும்.

    மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.

  • arudhra-darisanam-endral-enna

    மாதங்கள் போற்றும் மாதமான மார்கழியின் மற்றொரு இனிய அங்கம், திருவாதிரைப் பண்டிகை. ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும், சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள்.

    “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

    ஆருத்ரா என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், “ஆ…ருத்ரா’ என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார். அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்… ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக.

    சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.

    அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.திருவாதிரைக் களி‘திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது.

  • thiruppavai-5

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
    தூய பெருநீர் யமுனைத் துறைவனை
    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
    தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
    தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
    தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

     

    பொருள்:

    வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

    விளக்கம்:

    “உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. “ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

  • indraya-rasi-palangal

    டிசம்பர் 20
    விளம்பி வருடம் – மார்கழி 5
    கார்த்திகை
    20-டிச-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி ம 3.30
    நட்சத்திரம் : கார்த்திகை இ 2.21
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி
    ரிஷபம் – தாமதம்
    மிதுனம் – சுகம்
    கடனம் – வரவு
    சிம்மம் – சிக்கல்
    கன்னி – முயற்சி
    துலாம் – எதிர்ப்பு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – ஆதரவு
    மகரம் – பயம்
    கும்பம் – நட்பு
    மீனம் – தடங்கல்

  • vinayakarai-pattriya-sila-vazhipadu-kurippugal

    விநாயகர் பற்றிய வழிபாட்டு குறிப்புகளை சிலவற்றை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

    விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

    யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

    அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

    விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

    கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

    விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

    முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

    சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.

    விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

    விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

    விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

    புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

    பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

    ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

    விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

    தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

    சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

    திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

    சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

    தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

    கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

    வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

    வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

    திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

    கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்பபடும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

    விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

    பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

    ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

    ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

  • jadaga-doshangali-theerkum-kadhi-narsinga-perumal

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ளது கொத்தப்புள்ளி கிராமம். இங்கு பழமை வாய்ந்த கதிர்நரசிங்க பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது.

    கதிர் என்றால் ஒளி என்று பொருள். இருளில் தத்தளிக்கும் பக்தர்களை மீட்டெடுக்கும் வகையில், ஒளி பொருந்திய பெருமாளாக அவர் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

    கோவில் கட்டிடக்கலை:

    பழமையை பறைசாற்றும் இந்தக் கோவில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டதாகும். இந்தக் கோவிலை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரத்தில் கோவிலின் கட்டிடக்கலையை பார்க்கும் போது, நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

    அதாவது கோவிலுக்கு உள்ளேயே, கருவறையை சுற்றி வருவதற்கு இடம் உள்ளது. அதற்கான நுழைவு வாயிலில் குனிந்தபடி உள்ளே சென்று, நிமிர்ந்தபடி வலம் வந்து மீண்டும் குனிந்து கொண்டே வெளியேறும் வகையில் ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கட்டிடக்கலை நாயக்கர் காலத்தை குறிப்பிடுவதாக உள்ளது.

    கோவில் கருவறையில் கதிர்நரசிங்க பெருமாள், கமலவல்லி தாயார்-லட்சுமியுடன் அருள்பாலித்து கொண்டிருக்கிறார். அவர்களின் முன்பு சுயம்புலிங்கம் உள்ளது. சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அற்புதமாக காட்சி அளிக்கின்றனர். அர்த்த மண்டபம், மகாமண்டம் உள் பிரகாரம் அமைப்புடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.

    ஜாதக தோஷங்கள் தீரும்

    பண்டைக்காலத்தில் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில், காலப்போக்கில் கன்னிவாடி ஜமீந்தார்களால் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் இந்த கோவிலை, 1964-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்தது. ரெட்டியார் சத்திரத்தில் உள்ள கோபிநாதசுவாமி கோவிலின் உபகோவிலாகவும் இது விளங்குகிறது.

    இங்கு வந்து, கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். கோவிலின் முன்புறத்தில், பிரமாண்டமான ராஜகோபுரம் உள்ளது. உள்ளே சென்றவுடன் வலதுபுறத்தில் அனுக்கிரக பைரவர், இடதுபுரம் வீரமகா ஆஞ்சநேயர் சன்னிதிகள் உள்ளன.

    அதற்கு அடுத்தப்படியாக கருடாழ்வார் சன்னிதி, மணி மண்டபம், அதன் உள்ளே முன்பக்கத்தில் 2 துவாரக பாலகர்கள் உள்ளனர். பெருமாளிடம் உங்கள் குறைகளை சொல்லுங்கள், அவைகளை அவர் தீர்த்து வைப்பார் என்று கூறுவதை போல துவாரக பாலகர்களின் தோற்றம் உள்ளது.

    இதோபோல் வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும் பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகுகாலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும்.

    ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கோவிலில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இவர் தான், சரஸ்வதியின் குரு, இவரை வழிபட்டால், கல்வி, செல்வம் பெருகும். ஆவணி திருவோண நாளில், ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஏலக்காய் மாலை சாற்றி இவரை வழிபடுகின்றனர்.

    ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும். கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகியவற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சித்திரை நட்சத்திர நாளில், இவருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்வதால் சகல நன்மைகளும் உண்டாகும்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

    கதிர்நரசிங்க பெருமாள் கோவிலின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது நெய் தீபம் ஏற்றுவதுதான். எண்ணெய் ஊற்றி இங்கு தீபம் ஏற்றுவதில்லை. திருமண தடை நீங்கவும், கணவர் பெற வேண்டியும் மன அழுத்தம் குறையவும் ஏராளமான பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

    திருவிழாக்கள்

    நரசிம்மன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருக்கார்த்திகை, புரட்டாசி 3-வது சனிக்கிழமை பூஜை, பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி பூஜை, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை கோவிலின் முக்கிய விழாக்கள் ஆகும். சித்திரைத்திருநாள் வருடபிறப்பு, ஆடி மாதம் 18-ம் நாள் ஆஞ்சநேயர் சிறப்பு திருமஞ்சனம், ஆவணி மூலம் ஹயக்ரீவர் திருமஞ்சனம், கோலாஷ்டமியன்று உறியடி உற்சவம் ஆகியவை நடைபெருகிறது.

    புரட்டாசி மாதம் முதல் வார சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம், 2-வது வாரம் வெண்ணை காப்பு, 3-வது வாரத்தில் பெருமாள் ஏகாந்த சேவை, ஆஞ்சநேயர்-காய்கறி அலங்காரம், பெருமாள் செங்கமலவல்லி தாயார்-திருக்கல்யாண உற்சவம், 4-வது வாரம் ஆஞ்சநேயர், பெருமாளுக்கு பழ அலங்காரம். 5-வது வாரத்தில் ஆஞ்சநேயர், பெருமாள்-புஷ்ப அலங்காரம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    இதேபோல் கார்த்திகை மதத்தில் தீபவழிபாடு, மார்கழி முதல் தனூர்மாத பூஜை, அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி, ஆஞ்சநேயர் திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி நாளில் பரமபதவாசல், திறப்பு, பெருமாள் உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது.

    திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில், பழனி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி செல்லும் பொதுமக்கள், பக்தர்கள் கதிர்நரசிக்க பெருமாளை தரிசித்து வருகின்றனர். குறிப்பாக அஞ்சநேயரின் அருளை பெற சனிக்கிழமைதோறும் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

  • thalai-ezhuthai-thiruthi-arulum-thruppatur-guru-bramha

    தலைஎழுத்தை மாற்ற கூடிய ஸ்தலம் திருபட்டூர் குரு பிரம்மா கோயில். யாருக்கு தலையெழுத்து மாற வேண்டும் என்ற விதி உள்ளதோ, அவர்களே இக்கோயிலில் பிரம்மனின் பார்வையில் படுவார்கள் என்பது ஐதீகம்.

    அதுபோல், தலையெழுத்து மாற தகுதியுள்ளவர்கள், குறைந்த பாவக் கணக்கில் இருப்பவர்கள், பக்திமான்களின் தலைவிதி மாற்றப்பட்டு விடுகிறது. உதாரணமாக நோய் தாக்க வேண்டும் என்ற விதி இருந்தால் அது மாறிப் போகிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விதியுள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும்.

    விரயச் செலவுகள் தடுக்கப்படும். பெயிலாகிக் கொண்டிருக்கும் மாணவன் நன்றாக படிக்க ஆரம்பித்து உயர்நிலைக்குச் செல்வான். நியாயமற்ற கோரிக்கைகளை பிரம்மன் கவனிப்பதில்லை என்பதுடன், மேலும் நமது நிலையை மோசமாக்கி விடுவார்.

    பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.

    இது தஞ்சாவூர் கோயிலுக்கும் முற்பட்டதாக தெரிய வருகிறது. இங்குள்ள நந்தியை தடவிக் கொடுத்தால், நிஜ காளையை தடவிக் கொடுத்த உணர்வு ஏற்படுகிறது, பிரதோஷ நாளில் இந்த நந்தியை மக்கள் மொய்ப்பர்.

    குரு பரிகார தலம்:
    அட்சமாலை மற்றும் கமண்டலத்துடன் பிரம்மா இங்கு இருக்கிறார். குருபகவானுக்குரிய அதிதேவதை பிரம்மா என்பதால், குரு தோஷ நிவர்த்திக்காக வியாழக்கிழமைகளில் விசேஷ பூஜை நடக்கிறது.

    மேலும், திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும். குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.

    குழந்தைகளுக்காக பைரவர் வழிபாடு:
    சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர்.

    அர்த்தஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச்சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை.

    ஞானஉலா அரங்கேற்றம்:
    சுந்தரருடன், சேரமான் கயிலாயம் சென்றபோது, சிவனை பெண்ணாக உருவகப்படுத்தி சிற்றிலக்கியம் இயற்றினார். அதை ஐயனார் இத்தலத்தில் அரங்கேற்றம் செய்தார். இவர், இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில் “ஞானஉலா அரங்கேற்றிய ஐயனார்’ என்ற பெயரில் அருளுகிறார்.

    ஆடி சுவாதியில் “திருக்கயிலை ஞானஉலா’ விழாவன்று சுந்தரருக்கும், சேரமானுக்கும் பூஜை நடக்கும். அன்று, சேரமான் கையில் ஞானஉலா சுவடி வைத்து, கயிலாயத்தில் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.

    ஏழாம் தேதி பிறந்தவரா?
    ராஜகோபுரத்தில் இருந்து 7 நிலைகளைக் கடந்து, 300 அடி தூரத்தில் பிரம்மபுரீஸ்வரர் இருக்கிறார். ஆனாலும், சுவாமி சன்னதிக்குள் சூரிய வெளிச்சம் இருக்கும்படியாக, கோயில் கட்டப்பட்டுள்ளது.

    சூரியனுக்குரிய ரதம் ஏழு குதிரைகள் பூட்டியது. இதன் மீது வரும் சூரியன், ஏழு நிலைகளையும் கடந்து, தினமும் பிரம்மபுரீஸ்வரரை தரிசிப்பதாக ஐதீகம். பங்குனியில் மூன்று நாட்கள் காலையில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும்.

    ஏழு நிமிடங்கள் இந்த ஒளி இருக்கும்.

    ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். ஏழாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தோருக்கான பரிகார தலமாகவும் இக்கோயில் உள்ளது.

    பிரார்த்தனை
    திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான். ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

    தலபெருமை:
    வித்தியாசமான அமைப்பு:

    குருர் பிரஹ்மா;
    குருர் விஷ்ணு; குருர் தேவோ மகேச்வர;
    குரு ஸாட்ஷாத் பர ப்ரஹ்மை
    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ”

    என்ற குருமந்திரப்படி அமைந்த கோயில் இது.

    கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.

    முருகன் வணங்கிய சிவன்:
    முருகப்பெருமான், அசுரர்களை அழிக்கச் செல்லும்முன் இத்தலத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வணங்கி, அதன்பின் படை திரட்டிச் சென்றாராம். இதனால் “திருப்படையூர்’ எனப்பட்ட தலம் “திருப்பட்டூர்’ என மருவியதாகச் சொல்வர். முருகன் வழிபட்ட சிவன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கிருக்கிறார்.

    எல்லாமே மஞ்சள் நிறம்:
    பிரம்மா மங்கலம் தந்து வாழ்க்கையை சிறக்கச்செய்பவர் என்பதால், பூஜையின்போது இவருக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து, மஞ்சள் பிரசாதம் தருகின்றனர். மற்ற சன்னதிகளிலும் மங்கல சின்னமாகிய மஞ்சள் நிற வஸ்திரங்களையே பயன்படுத்துகின்றனர்.

    பிரம்மன் வழிபட்ட பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணாசலேஸ்வரர், கைலாசநாதர், ஜம்புகேஸ்வரர், காளத்தீஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய லிங்கங்கள், சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தி உட்பட பெரும்பாலான பரிவார மூர்த்திகளுக்கும் மஞ்சள் வஸ்திரமே அணிவித்து பூஜிக்கின்றனர்.

    பிரம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் வியாழக்கிழமைகளில் காணப்படுகிறார். குருவுக்கு அதிதேவதை பிரம்மா. எனவே, வியாழன் இங்கு விசேஷம்.

    நரசிம்மர் மண்டபம்:
    நரசிம்மரின் லீலைகளை விளக்கும் வகையில் ஒரு மண்டபத்தில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், துரோபாவம் என்ற வகையில் நரசிம்மர் அவதாரமானது, இரண்யனுக்கு நல்லொழுக்கம் போதித்தது, அவன் கேட்காததால் சம்ஹாரம் செய்தது, பிரகலாதனுக்கு அருள் செய்தது ஆகிய காட்சிகள் சிற்பங்களாக எழிலுற வடிக்கப்பட்டுள்ளன.

    நாத மண்டபத்தில் ராவணன், அகந்தையினால் மேருமலையை சிவ, பார்வதியுடன் சேர்ந்து தூக்குவது போலவும், அது முடியாமல் போகவே சாமகானம் இசைத்து சிவனை வசப்படுத்தும் முயற்சியில் இம்மண்டபத்தில் இசைத்தூண்கள் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    பிரம்மன் வழிபட்ட சோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.

    எலும்பு நோய்க்கு பூஜை:
    பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது.

    அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது.

    சித்தர்பாடலில் இத்தலம் “பதஞ்சலி பிடவூர்’ எனக் கூறப்பட்டுள்ளது.
    மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

    பதஞ்சலியின் ஜீவசமாதி:
    ஜோதிடக்கலையின் தந்தையும், பாம்பு உடலைக் கொண்டவருமான பதஞ்சலி முனிவர் பத்து இடங்களில் ஜீவசமாதி அடைந்ததாக ஒரு தகவல் உண்டு. அதில் இத்தலமும் ஒன்று. பதஞ்சலி முனிவரின் சமாதி இக்கோயிலுக்குள் இருக்கிறது. அவர் யோகசூத்ரம் என்ற நூலை எழுதியவர். முக்தியடைந்தாலும் கூட இன்றும் உயிருடன் இருந்து அவர் அருள்பாலிக்கிறார்.

    வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். அது இங்கு தான் நிகழ்ந்திருக்குமோ என எண்ண வேண்டியுள்ளது. ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்.

    பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.

    தல வரலாறு:
    பிரம்மன் இவ்வுலகத்தை படைக்கும் ஆற்றலை சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்கு கொடுத்தார். படைப்புத் தொழிலில் அனுபவம் பெற்ற பிரம்மன், தன்னையும், சிவனையும் ஒன்றாகக் கருதி ஆணவம் கொண்டார்.

    அவருக்கு பாடம் புகட்ட விரும்பிய சிவன், “”ஐந்து தலை இருப்பதால் தானே அஞ்சுதல் இல்லாமல் இருக்கிறாய்,” எனக்கூறி, ஒரு தலையைக் கொய்து விட்டார். படைப்புத்தொழிலும் பறி போனது. நான்முகனான பிரம்மா, இறைவனிடம் தனது தவறுக்காக சாப விமோசனம் கேட்டார்.

    பூலோகத்தில் திருப்பட்டூர் என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும் தன்னை 12 லிங்க வடிவில் (துவாதசலிங்கம்) வணங்கி, சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்தார். மேலும், பிரம்மனின் தலையெழுத்தை மாற்றி, மீண்டும் படைப்புத்தொழிலை அருள்வதாகக் கூறினார்.

    பிரம்மனும், இங்கு வந்து துவாதச லிங்க வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றார். என்னை மகிழ்வித்த உன்னை வழிபடுகிறவர்களின் தீய தலையெழுத்தை மங்களகரமாக மாற்றுவாயாக,” என வரமும் கொடுத்தார்.

    அன்று முதல் இந்த பிரம்மன், தன்னை வழிபடும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றி அருள் செய்கிறார். பிரம்மன் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் பிரம்மபுரீஸ்வரர் என சிவனுக்கு பெயர் ஏற்பட்டது. அம்பாள் பிரம்மநயாகி அல்லது பிரம்ம சம்பத்கவுரி எனப்படுகிறாள்.

    இருப்பிடம் :
    திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் செல்லும் பஸ்களில் சென்று 30 கி.மீ., தொலைவிலுள்ள சிறுகனூரில் இறங்கி, அங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் 4 கி.மீ.,தூரம் சென்றால் திருப்பட்டூரை அடையலாம்.

  • thiruppavai-padal-4

    ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
    ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

     

    பொருள்:

    மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

    விளக்கம்:

    ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, “ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் “கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே “பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக “கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

  • indraya-naal-eppadi

    டிசம்பர் 19
    விளம்பி வருடம் – மார்கழி 4
    19-டிச-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி அ.கா 4.28
    நட்சத்திரம் : பரணி இ 2.38
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவலை
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – நன்மை
    கடனம் – பயம்
    சிம்மம் – சுகம்
    கன்னி – சிக்கல்
    துலாம் – ஆதரவு
    விருச்சிகம் – தோல்வி
    தனுசு – பணிவு
    மகரம் – லாபம்
    கும்பம் – செலவு
    மீனம் – சுபம்