Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..?

    நவகிரக பரிகார கோயில்கள்:

    1.சூரியன்:
    சூரியனார் கோவில்;
    இங்கு வந்து முதலில் நவக்கிரகங்களுக்கு அருள் புரிந்த திருமங்கலங்குடி ஸ்ரீ பிராண நாதேஸ்வரரை வழிபட்டு பின்பு சூரியனார் கோவில் சென்று கருவறையில் சூரிய சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சூரியனை வழிபடுவதாலும் இங்குள்ள நவக்கிரகங்கள் வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர். ஞாயிறு வழிபாடு சிறப்பு.
    வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
    திருவலஞ்சுழி;
    தஞ்சாவூர் அருகிலுள்ள திருவலஞ்சுழியில் உள்ள சுபர்தீஸ்வரர் கோவிலில் சூரியன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் நேருக்கு நேர் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருவரும் நட்பு நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள் சூரியன் மற்றும் சனி பகவானால் ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இத்திருக்கோவில் சென்று அர்ச்சனை செய்தால் தோஷம் நிவர்த்தியாகும்.
    சூரக்குடி;
    சூரியனுக்கு சாபம் நீக்கி அருள் தந்த சுந்தரேசர் சன்னதி. சூரிய, சனி தோஷங்களை நீக்கும் ஸ்தலம்.
    வழித் தடம்; குன்றக்குடி கிழக்கே 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
    2. சந்திரன்:
    திங்களுர்;
    தாய்க்குப்பீடை நோய், மன நிலை பாதிப்பு, சந்திரன் ஜாதகத்தில் நீசம், மறைவு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும்.
    வழித் தடம்; கும்பகோணம்- திருவையாறு சாலையில் உள்ளது.
    3.செவ்வாய்:
    வைத்தீஸ்வரன் கோவில்;
    ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு, திருமணத்தடை, தொழில் சிக்கல், வீடு, மனை வாங்க, அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் திசை நடைபெறும் காலங்களிலும் இங்கு தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோசமும் நீங்கும்.
    வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது
    பழநி- திருவாவின்குடி;
    செவ்வாய்க்கிழமை மதியம் உச்சிகால பூஜையில் முருகனுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட தோசம் நீங்கும்.
    வழித் தடம்; திண்டுக்கல்லிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திலுள்ள பழனியில் அடிவாரத்திலுள்ள கோவில்.
    4. புதன்:
    திருவெண்காடு; குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை, தடங்கல்கள் ஏற்படும் போது இங்குள்ள புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதா ரண்யேஸ்வரரையும் தரிசித்து பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோசங்கள் நீங்கும்.
    வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையிலுள்ளது.
    5.குரு:

    ஆலங்குடி; திருமணத்தடை, புத்ர தோஷம், குடும்ப ஒற்றுமை நிம்மதி குறைவு, ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர் வியாழக்கிழமை இங்குள்ள குரு பகவானை நெய் தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
    வழித் தடம்;
    கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் உள்ளது.
    தென்குடி திட்டை; அருள் மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜ குருவாக நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். எனவே, இத்தலமே குரு பரிகாரம் செய்வதற்கு சிறந்த தலம் என்பது பெரியோர் கருத்து.
    வழித் தடம்; தஞ்சாவூர்- திருக்காவூர் சாலையில் பள்ளி அக்ஹாரம் வழியாக மெலட்டூர் செல்லும் பாதையில் உள்ளது.
    தாருகாபுரம்;
    இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி பாதத்தில் சுற்றிலும் ஒன்பது நவகிரகங்கள் உள்ளன. இவரை வழிபட்டால் குரு எந்த ராசிக்கு மாறினாலும் நற்பலன் கிடைக்கும்.
    வழித் தடம்; ராஜபாளையம் அருகிலுள்ள வாசுதேவ- நல்லூரிலிருந்து பேருந்து வசதி உண்டு.

     

    6. சுக்கிரன்;
    கஞ்சனூர்;
    சுக்கிர தோஷம், பலஹீன, உள்ளவர் இங்குள்ள மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக் கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
    வழித் தடம்: சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ளது.
    திருநாவலூர்;
    இங்குள்ள பார்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும். சுக்கிர திசை பாதிப்புக்கும் உரிய ஸ்தலம்.
    வழித் தடம்; விழுப்புரம்- உளுந்தூர் பேட்டை சாலையில் உள்ளது.
    7. சனி :
    திருநள்ளாறு;
    ஜாதகப்படி 7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம் சனி ஏற்படும் காலங்களில் இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரையும் போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கும்.
    வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ளது.
    குச்சனூர்;
    7 1\2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷடம சனி , கண்டச்சனி ஆரம்பிக்கும் பொழுது இங்கு சுயம்புவாய் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சனி பகவானின் பிரம்ம ஹாத்தி தோசம் நீங்கிய ஸ்தலம்.
    வழித் தடம்; தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ளது.
    சேந்தமங்கலம்;
    சனி நடைபெறும் காலங்களிலும்சனி திசை, சனி புத்தி நடைபெறும் காலங்களிலும் இங்குள்ள தத்தகிரி முருகன் கோவிலில் உள்ள சனீஸ்வரரை சனிக்கிழமை வழிபட வேண்டும்.
    வழித் தடம்;
    சேலம், நாமக்கல் அருகில் கொல்லிமலை செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.
    திருவாதவூர்;
    சனி பாதிப்புள்ளவர் இங்குள்ள சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபட வேண்டும். சனி, ஈஸ்வரனைப் பிடிக்க முயன்ரு, கால் முடமாகி, கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம்.
    வழித் தடம்; மதுரை மேலூர் சாலையில் உள்ளது.
    ஸ்ரீ வைகுண்டம்;
    மனிதனின் மன நிம்மதியை நிர்ணயிப்பவர் சனி பகவான். அவரவர் செய்யும் வினையைப் பொறுத்து நல்லதையும் கெட்டதையும் தருவார். சனிபகவானின் அம்சத்துடன் சிவ பெருமான் இத்தலத்தில் காட்சி தருகிறார்.
    இத்தலத்தில் சனி திசையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பரிகாரம் செய்தால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும், இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.
    திருநல்லாறு சனீஸ்வரன் திருக்கோவிலுக்கு ஈடானது இக்கோவில்
    வழித் தடம்;திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
    திருநாரையூர்;
    சனீஸ்வரர் தனது இரு மனைவிகள் மந்தா தேவி. ஜேஷ்டா தேவி ஆகியோருடன் இவ்வாலயத்தில் அருள் பாலிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடி மரம் இங்கே சனீஸ்வரருக்கு உண்டு. பலிபீடமும், காகவாகனமும் கொண்டது சனீஸ்வரரின் தனிச்சிறப்பு.
    தம்பதி சமேதராய் மட்டுமல்ல, இவ்வாலயத்தில் சனீஸ்வரர் தனது இரு மகன்களுடன் [குளிகன், மாந்தி] குடும்ப சமேதராய் அருள் புரிகிறார்.
    வழித் தடம்; கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்கு பக்கத்தில் திருநாரையூர் உள்ளது.
    8. ராகு:
    திருநாகேஸ்வரம்;
    ராகுவினால் ஏற்படும் அனைத்து தோசங்களினால் திருமணத்தடை, பத்ர தோசம், மாங்கல்ய தோசம் ஏற்படும். இங்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி, ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுவிற்கு பாலாபிசேகம், அர்ச்சனை செய்து வழிபட நாக தோசம் நீங்கும்.
    வழித் தடம்; கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:
    ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீமத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள இத்தலம் சென்று நெய் தீபம் ஏற்றி, ஸ்ரீமத் ராமானுஜரையும், ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் ஸ்ரீ யதிராஜ நாதவல்லித் தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷமும் நீங்கும்.
    வழித் தடம்; செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது.
    கதிராமங்கலம்;
    இங்குள்ள வன துர்க்கை முன் பக்கம் பார்ப்பதற்கு பென் உருவமாகவும் பின்பக்கம் பார்ப்பதற்கு நாகம் படம் எடுத்தது போன்றும் தோன்றும். கம்பர் வழிபட்ட ஸ்தலம். ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர் துர்க்கைக்கு அபிசேகம் செய்து வழிபட கிரக தோஷம் நீங்கும். இத்துர்க்கை ல்லித சகஸ்ர நாமத்தில் வரும் வித்யா வன துர்க்கையாகும்.
    வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ. தூரம்
    9.கேது:
    திருக்காளத்தி;
    பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம். கண்ணப்பனுக்கு காட்சி தந்த ஸ்தலம். இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ரா பிசேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம்.
    வழித் தடம்; திருப்பதிக்கும் சென்னைக்கும் நடுவில் உள்ளது
    கீழ்ப்பெரும் பள்ளம்;
    இங்குள்ள நாகநாத சாமி கோவிலில் தனி சன்னதியில் உள்ள கேதுவை வழிபட கேதுவினால் ஏற்படும்  தோஷம் நீங்கும்.

     

  • தோஷங்களை நீக்குவது தான் பிரதோஷ வழிபாடு!

    பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 

    பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார். ஈசனை வணங்குவது மட்டுமல்லாமல் நந்தியின் வழிபாடு  பிரதோஷத்தின் பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் – என்றால் துக்கம். ரன் – என்றால் ஓட்டுபவன். ருத்ரன் – என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள் ஆகும். நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது. பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

     

    தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். 

    பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும். 

    பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். எனவே, பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். குறிப்பாக சாயும்காலம் (மாலை) வழிபாடு மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.

  • ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது? ஏன்?

     

    ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாகவே இருக்கிறது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்ய, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான உகந்த நேரம் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது.

     ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றன என்பதை புராணங்கள் கூறுகின்றன. அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ‘ராகு காலம்’ என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் ‘எமகண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கிறோம்.

    அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிப்பட்டால் சிறப்பு பலன்களை தருகிறது. அதிலும் செவ்வாய் கிழைமை ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது.

    செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையை வழிபடுவது நற் பலன்களை தரும்.

    துர்க்கையை நோக்கி தீபத்தினை ஏற்றி வழிபடலாம். அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது சிறப்பு மிகுந்தது. ராகு கால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள்  அவரவர் வீட்டில் விளக்கினை ஏற்றி வழிபடலாம்.

     

    ராகு கால துர்க்கை பூஜை வாரத்தில் அனைத்து நாட்களிலும் ,ராகு கால நேரத்தில் துர்க்கையை வழிபட்டு அம்மனின் அருளை பெறலாம். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர இந்த தினங்களில் வணங்குவது சிறப்பு ஆகும்.

    அதன்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

    அனைவரும் முடிந்த வரை ராகு கால பூஜையை மேற்கொண்டு துர்க்கையின் அருளை பெற்றிடுங்கள்.

  • ஏகாதசி விரதத்தின் சிறப்பு!

     

    காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை…
    தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
    காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை.

    ஏகாதசி’ என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில், `பதினொன்று’ என்று பொருள். அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்த 11-வது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது `ஏகாதசி திதி விரதம் என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும்.

    வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது_நம்பிக்கை. வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட_ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ என்வும் அழைக்கப்படுகிறது.

    அதுமடும்லாமல் இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசி யன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது .ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

     

    ஏகாதசி எப்படி உருவானது

    சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களைதுன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள்படும் துன்பத்தைஎடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர்புரிந்தார். இந்த போர் பல வருடங்கள்தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒருகுகையில் நன்றாகஉறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒருபெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்குசென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.

     தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்ததேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டதுஎன்பதையும் உணர்ந்து, அந்ததேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.

     “நீ தோன்றிய இந்தநாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகலநன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசிவழங்கி, பிறகு அந்தஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக் கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.

     ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்

    ஏகாதசி அன்று உணவினை உண்ணாமல் இருப்பது நல்லது. உண்ணாமல் இருக்க முடியாதவர்கள்  பழங்கள் மற்றும் பால் உண்ணலாம்.இரவு முழுவதும் உறங்காமல் விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.ஏகாதசிக்கு அடுத்த நாள்  துவாதசி வருகிறது . துவாதசி அன்று அதி காலையில் பெருமாள்  கோவிலுக்கு சென்று  வந்த பிறகு  உணவினை உண்ணலாம்.

    ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

  • ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்!

    கல்லினுள் தேரை முதல் கருப்பை உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் ஈசன். அதனை நினைவுகூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்களிலம் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம். அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய ணேவ்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.
    அது என்ன சாபம்?
    தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார். கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!
    ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. ஐப்பசி மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினார்கள்.

  • சிங்க சிற்பத்திற்குள் ஒரு அதிசயம்!

     

    மிகப்பெரிய பிரம்மாண்ட கற்கோவில்களை அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. அதுபோல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாறு சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.  சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும்  அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம்.  ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.   அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது   அதுபோல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர்.   அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும்.  வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.  அதுபோல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படை வீர்ர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.

     

  • திருமலையில் கோலாகலமாக நடைபெற்ற படி உற்சவம்

    திருமலை திருப்பதி தேவஸ்தானமும், தாசா சாகித்ய அமைப்பும் இணைந்து நடத்திய படி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. 3 மாதங்களுக்கு ஒருமுறை திருப்பதியில் படி உற்சவத்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி அலிபிரியில் உள்ள பாதாள மண்டபத்தில் படி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தாசா சாகித்ய அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ வித்யாவல்லப தீர்த்தஸ்வாமிஜி அலிபிரியில் உள்ள முதல் படிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மலர் மாலை அணிவித்து தூப, தீப, கற்பூர ஆரத்தி காட்டி ஆராதனை செய்தார். தாசா பக்தர்கள் அங்கு அமர்ந்து நாம சங்கீர்த்தனை, பஜனை பாடல்கள் பாடினர். பின்னர் பக்தர்கள் அனைவரும் படியேறி திருமலை சென்று ஏழுமலையானைத் தரிசித்தனர்.

  • துறையூருக்கு அருகே…பத்துமலை முருகன்!

     

     

    தமிழ் கடவுள் முருகன், குன்று இருக்கும் இடத்திலெல்லாம் இருப்பார் என்பது ஐதீகம்! மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது. அந்தக் கோயிலைப் போலவே திருச்சி – துறையூரிலும் பத்துமலை முருகனாய் அழகுறக் காட்சி தந்துக் கொண்டிருக்கிறான்.
    திருச்சி நகரிலிருந்து துறையூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது கூலிப்பட்டி முருகன் கோயில்.
    ஒரு சிறிய மலையின் மீது அமைந்திருக்கும் துறையூர் முருகன் கோவில் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இந்த கோவில் 600 வருடங்களுக்கு முன்பு சுயம்பாக உருவானதாம். பத்து வருடங்களுக்கு முன் வலம்புரி விநாயகர், ஐயப்பன், சனிஸ்வரர் போன்ற பரிவார தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர்!

    முருக பெருமான் ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் எழுந்தருளியுளார். இரண்டு பக்கமும் சூரியனும் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி உள்ளனர். சக்தி சூரியன் என்ற பெயரில் சூரியனும், பக்தி சண்டிகேஸ்வர் என்ற பெயரில் சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர்.
    கருவறையைச் சுற்றிலும் முருகனின் அறுபடை தலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வலம்புரி விநாயகர், சுவாமி ஐயப்பன், நவகிரகம், நாகதேவதை, பரமேஸ்வரன் மற்றும் -பரமேஸ்வரியை தரிசிக்கலாம். சனி பகவான் கையில் ருத்திராட்சம் ஏந்தி சாந்த ஸ்வருபமாக காட்சி தருகிறார்.
    தைப்பூசத்தன்றும் தை மாத செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் ஆறுகால பூஜை மற்றும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். சைவ கடவுளான முருகப் பெருமானுக்கு சிறப்பு விரத தினமாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. அன்று கோயிலின் அருகில் உள்ள மூங்கில் தெப்பகுளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு பூஜையும் அபிஷேகமும் செய்யப்படுகிறது. அந்த நாளில், இந்தக் கோயிலில் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பங்குனி உத்திரத்தன்று மயில் காவடி எடுத்து வருவது விசேஷம். பங்குனி உத்திரத்தன்று ஊர் மக்கள் தண்ணீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

     

    கந்த சஷ்டி அன்று பாலபிஷேகம் செய்யப்படும் பாலில் கற்கண்டு, குங்குமப் பூ சேர்த்து காய்ச்சி கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடுகிறது. சூரசம்ஹார விழாவில் முருகபெருமான் பராசக்தி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அப்பொழுது மூலவர் முருக பெருமானின் மேனியில் வியர்வைத் துளிகள் உண்டாகும் என்று சொல்லி சிலிர்க்கின்றனர் பக்தர்கள்!
    மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை போல இந்த கோவிலில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்துடன் கூடிய 52 அடி உயரமுள்ள முருகன் சிலை வடிவமைத்து உள்ளனர். இந்த சிலை மலை மேல் அமைக்கப்பட்டதால் 32 அடி உயரத்தில் சிலையும், 22 அடி உயரத்தில் பீடமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இங்கு உள்ள அறுபடையப்பன் குழுவினர் முருக பெருமான் மேல் அதீத பக்தி கொண்டு உள்ளனர். அவர்கள் ஒரு முறை மலேசியா சுற்றுலா சென்று வந்தபோது, அங்கே இருந்த முருகன் சிலையைக் கண்டு ஈர்க்கப்பட்டதாம்! அதேபோல் நம்மூரிலும் ஒரு சிலை அமைக்க வேண்டும் என முடிவு எடுத்து ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழு சார்பில், மலேசிய பத்துமலை முருகன் போன்ற வண்ண சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் துறையூர் அருகில் உள்ள பத்துமலை முருகனை வணங்கி வளம் பெறுவோம்!

  • திருமாலுக்கு தசாவதாரம் போல, சிவனுக்கு அவதாரம் இல்லையா?

     

     

    தசாவதாரம் என்பது திருமாலின் பத்து அவதாரங்கள் ஆகும். காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நலவாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். அவையே தசாவதாரம் அல்லது திருமாலின் பத்து அவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    தசம் என்றால் பத்து என்று பொருள். தீமைகளை விலக்கி உலக உயிர்களின் நல்வாழ்வுக்கு இறைவனின் பத்து அவதாரங்களாவன (தசாவதாரம்) மச்ச அவதாரம்,கூர்ம அவதாரம், வராக அவதாரம்,நரசிம்ம அவதாரம்,வாமன அவதாரம்,பரசுராமர் அவதாரம்,இராம அவதாரம்,பலராம அவதாரம்,கிருஷ்ண அவதாரம்,கல்கி அவதாரம் ஆகியவை ஆகும்.

    தாசாவதார திருக்கோயில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர். மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன. வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன. கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், மதில்சுவர் கட்டுமானப் பணிகளை செய்த திருமங்கையாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தில் இரங்கநாதர் பத்து அவதார திருக்கோலத்திலும் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது.

    திருமாலுக்கு தசாவதாரம் போல, சிவனுக்கு அவதாரம் இல்லையா? இன்று பலர் மனதில் இந்த வினா உள்ளது. இதற்கு ஆன்மீக அறிஞர்கள் கூறியதாவது.

    அவதாரம் என்பது தன் நிலையிருந்து கீழிறங்கி உதவுதல் ஆகும். சரபேஸ்வரர்,பைரவர்,கங்காதரர், தட்சிணாமூர்த்தி என சிவனுக்கும் வடிவங்கள் உள்ளன. திருமால் மனிதனாக பிறந்ததால் அவதாரம் என குறிப்பிடப்படுகிறார். சிவன் பிறப்பு இல்லாமல் நேரடியாக தோன்றுவதால் அவதாரம் எனச் சொல்வதில்லை என்பதாகும்.

     

     

     

  • 30 வகை முஹூர்த்தம்!

     

    பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ரசம்ஹிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

    1.ருத்ர முஹுர்த்தம் – 06.00 am – 06.48 am

    2.ஆஹி முஹுர்த்தம் 06.48am – 07.36am

    3.மித்ர முஹுர்த்தம் – 07.36am – 08.24am

    4.பித்ரு முஹுர்த்தம் – 08.24am – 09.12am

    5.வசு முஹுர்த்தம் – 09.12am – 10.00am

    6.வராஹ முஹுர்த்தம் -10.00am – 10.48am

    7.விச்வேதேவாமுஹுர்த்தம் -10.48am – 11.36am

    8.விதி முஹுர்த்தம் – 11.36am – 12.24pm

    9.சுதாமுகீ முஹுர்த்தம் – 12.24pm – 01.12pm

    10.புருஹூத முஹுர்த்தம் -01.12pm – 02.00pm

    11.வாஹிநீ முஹுர்த்தம் – 02.00pm – 02.48pm

    12.நக்தனகரா முஹுர்த்தம் – 02.48pm – 03.36pm

    13.வருண முஹுர்த்தம் – 03.36pm – 04.24pm

    14.அர்யமன் முஹுர்த்தம் – 04.24pm – 05.12pm

    15.பக முஹுர்த்தம் – 05.12pm – 06.00pm

    16.கிரீச முஹுர்த்தம் – 06.00pm – 06.48pm

    17.அஜபாத முஹுர்த்தம் – 06.48pm – 07.36pm

    18.அஹிர்புத்ன்ய முஹுர்த்தம் – 07.36pm – 08.24pm

    19.புஷ்ய முஹுர்த்தம் -08.24pm – 09.12pm

    20.அச்விநீ முஹுர்த்தம் – 09.12pm – 10.00pm

    21.யம முஹுர்த்தம் – 10.00pm – 10.48pm

    22.அக்னி முஹுர்த்தம் – 10.48pm – 11.36pm

    23.விதாத்ரு முஹுர்த்தம் – 11.36pm – 12.24am

    24.கண்ட முஹுர்த்தம் – 12.24am – 01.12am

    25.அதிதி முஹுர்த்தம் – 01.12am – 02.00am  

    26.ஜீவ/அம்ருத முஹுர்த்தம் – 02.00am – 02.48am

    27.விஷ்ணு முஹுர்த்தம் – 02.48am – 03.36am

    28.த்யுமத்கத்யுதி முஹுர்த்தம் – 03.36am – 04.24am

    29.பிரம்ம முஹுர்த்தம் – 04.24am – 05.12am

    30.சமுத்ரம் முஹுர்த்தம் – 05.12am – 06.00am