Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய…

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2018ஆம் ஆண்டுக்கான தினசரி அபிஷேக முன்பதிவு தொடங்கியது. புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு நாள்தோறும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 1008 வடைமாலை, வாசனைத் திரவியங்களைக் கொண்டு அபிஷேகத்துக்கு செய்யப்படும் செலவை பக்தர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். தற்போது ஒரு நாளுக்கான செலவை 5 பக்தர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான அபிஷேகத்துக்கான முன்பதிவு கோயில் செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலையில் கோயில் வளாகத்தில் தொடங்கியது. 2018ஆம் ஆண்டின் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த நாள்களுக்கு ஒரே நாளில் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. இதுவரையில் 640 பேர் தினசரி அபிஷேகத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதர நாள்களுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • நாம் ஏன் கோவிலுக்குப் போகணும்?

     

    கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படுகின்றன. அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்படுகின்றன. முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

    இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

    மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

    மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது. அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

    மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

     

  • திருவிளக்குத் துளிகள்!

     

    கார்த்திகை மாதம் பிறந்தாலே வீடுகள்தோறும், ஆலயங்கள்தோறும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்தச் சமயத்தில் விளக்கு பற்றிய பல தகவல்கள்!

    உலகெங்கும் விளக்குகள் உண்டு. ஆதிகாலம் தொட்டு உலகத்திலுள்ள எல்லா மக்களுமே விளக்கு இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொடுப்பதால் அதைப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தமிழர்கள் இதிலிருந்து மாறுபட்டவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் ‘திரு’ என்னும் அடைமொழி கொடுத்து ‘திருவிளக்கு’ என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் விளக்கைத் தெய்வாம்சமாகத்தான் பார்க்கிறார்கள்.

    எந்த ஒரு பிரார்த்தனையும், தபசும், யாகமும், பூஜையும் விளக்கு இல்லாமல் முழுமை அடையாது. ஏனென்றால் பஞ்சபூதங்களில் ஒன்றான இந்த உலகில் உள்ள எந்த ஒரு சக்தியையும் ஆண்டவனிடம் எடுத்துச் செல்லும் ஆற்றல், சக்தி விளக்கிற்கு உண்டு. விளக்கு ஒன்றே மேல் நோக்கி எரியக்கூடியது. ஒரு விளக்கு எத்தனை ஆயிரம் ஒளியை ஏற்றினாலும் தன் ஒளியை இழப்பது இல்லை. தோஷங்களை நீக்கும் சக்தி விளக்குக்கு உண்டு.

    திருக்கார்த்திகை தீபம்: கார்த்திகைத் திங்களில் கொண்டாடப்படும் தீபத்திருநாளே திரு விளக்கின் சமயத்தொடர்பை விளக்கும். அக்னி தலமான திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றப்படுவதும் திருக்கார்த்திகை தினத்தில்தான். கார்த்திகைப் பெண்கள் குழந்தை முருகனை எடுத்து வளர்த்ததால் கிருத்திகை முருகனுக்கு உரிய நடசத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. கிருத்திகை தினத்தில் எல்லா ஆலயங்களிலும் தீபத்திருநாள் நடைபெறும். ஐப்பசி, கார்த்திகை மாதம் மழைக் காலம். இந்தச் சூழலில்தான் அதிகமான பூச்சிகள், நோய்க் கிருமிகள் பரவும். இதனைப் போக்கத்தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டின் முன் வாசலிலும், புழக்கடையிலும் விளக்கேற்றி வைப்பர். பூச்சிகள் விளக்கு சுடரில் பட்டு இறந்துவிடும். 

     

    விளக்கும், பெண்ணும்: பழங்காலம் முதல் பெண்தான் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள். திருமணமாகிப் பெண் முதன் முதலில் வீட்டுக்கு வந்தவுடன் விளக்கேற்றச் சொல்கிறோம். வெளிச்சத்தைக் கொண்டு வரும் அடிப்படை ஆதாரம் விளக்கு. இருளைப் போக்கும் பொருள். பெண் குடும்பத்தின் விளக்காக இருக்கிறாள். எனவே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்னொரு காரணம், ஒரு பெண்ணுடைய சிக்கனக் குணம், கையாளும் தன்மை, பதற்றமற்ற நிலை, நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முறையைக் கவனிக்கவும், கற்றுக் கொடுக்கவும்தான். குடும்பத்தில் என்றென்றும் ஒளி பிறக்கச் செய்கிற பொறுப்பு, கடமை, அவளிடம் உள்ளது என்பதைக் குறிக்கத்தான். 

    தீபம் ஏற்றும் நேரம்: தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாகக் கருதப்படுவது, அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்), மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரையும்தான் (சூரிய அஸ்தமத்திற்குப் பின்).
    காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் வெற்றி பெறும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் தீபமேற்றினால் திருமணத் தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதிகம். மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். 

    விளக்கு குளிரவைத்தல்: விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக் கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருக்கக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிரவைப்பதே நன்மை தரும். 

    விளக்கு துலக்க உகந்த நாட்கள்: குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்குக் காரணம், திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கைக் கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதிகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்க நிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

    திருவிளக்குத் துளிகள்: 

    * வாரம் ஒருமுறையாவது விளக்கைக் குறிப்பிட்ட தினத்தில் துலக்க வேண்டும்.
    * திருவிளக்குக்கு சந்தனம், குங்குமம் வைத்து பொட்டிட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும்.
    * விளக்கில் குளம் போல் எண்ணெய் இருக்க வேண்டும். 
    * எக்காரணம் கொண்டும் தெற்கு முகமாக விளக்கு ஏற்றக்கூடாது.
    * வீட்டில் காலை மாலை விளக்கேற்றுவதால் சகல நன்மைகளும் கிட்டும். 
    * அகல் விளக்கு ஏறுவதற்கு மண் அகல் விளக்கே விசேஷம். 
    திருவிளக்கின் முக்கியத்துவம் அறிந்து, முறையாக விளக்கேற்றி, பகவானின் பூரண அருளைப் பெறுவோம்.

  • திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

     

     

    அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.
    இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

    மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

    இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது.

    அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

    நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

    இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது.

    விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
    1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

    2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

    3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி(அநாகதம்) தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையேகட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

     

  • பெண்கள் ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?

     

    ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

    முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய் விட்டது.

    இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

    இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்கு கூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

    * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமானஎண்ணங்களும் தேன்றுகின்றன. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப் படுகிறது.

    * ஊஞ்சல் ஆடுவதால் மனச் சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

    * கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

    * தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதய நோய் கட்டுப்படும்.

    * ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

    * சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

    வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

    * பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

    * இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப் பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

    இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும்,குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் பொருந்தும்.

     

  • நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல !!

     

    நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களை பற்றி ஆராய்ந்தால் ஒரு உண்மை தெரியவரும் அது யாதெனில் ஒவ்வொரு ஆலயமும் அமைய பெற்ற இடமானது ஒரு அறிவியல் சார்ந்த அல்லது அறிவியலுக்கு நேர்மாறான ஏதாவது ஒரு விஷயம் கண்டிப்பாக இருக்கும் எடுத்துக்காட்டாக திருநள்ளாறு, சிதம்பரம், போரூர் போன்ற இடங்களில் அமைய பெற்ற ஊர் மற்றும் ஆலயங்களை எடுத்துகொள்ளலாம்.

    இவ்வாறு அமைய பெற்ற ஆலயங்களில் மூலவராக அமைக்கப்படும் சிலைகள் சாதாரண கல்லாக இருக்க வாய்ப்பு இல்லை. பெரும்பாலான கோவில்களின் மூலவர்கள் சிலாதோரணம், ஸ்படிகம், நவபாசனம், தசபாசனம், மாணிக்கம், மரகதம், ஐம்பொன், என்று இன்னும் கிடைபதற்கரிய பெயர் தெரியாத பலவிதமான பொருட்க்களால் செய்யப்பட்டவையே. அல்லது கதிர் வீச்சு சார்ந்த அறிவியல் உள்ள இடத்தில் மட்டுமே மூலஸ்தானம் அமைக்கப்படும்.

    இப்படி அமைக்கப்பெற்ற மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருள்களும் மாறுபடுவதை காணலாம். குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் நீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் அதன் அருகில் உள்ள குளத்தில் கலக்கும் வண்ணம் அமைக்க பட்டு இருக்கும்.

    ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம். நம் முன்னோர்கள் இதை எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ… ஆனால் விஞ்ஞானிகள் இந்த உண்மையை சமீபத்தில்தான் கண்டுபிடித்து ஒப்புக் கொண்டுள்ளனர்.

    நமது பழமையான ஆலயங்களில் உள்ள மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளால் உருவாக்கப்பட்டதாகும். அவற்றின் அடியில் சக்தி வாய்ந்த மந்திர தகடு பதித்து இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மந்திர தகடும், மூலிகையும் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்தும். அபிஷேக தீர்த்தத்தை நம் மீது தெளித்துக் கொண்டாலும், சிறிதளவு குடித்தாலும் நமக்கு அபரிதமான புத்துணர்ச்சி கிடைப்பது இதனால்தான்.

    தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

    அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    மேலும் அபிஷேகத்தின் போது ஓம் என்று தொடங்கி குருக்கள் சொல்லும் மந்திரம் கற்சிலை மீது பட்டு வெளியில் அலையாக வரும்போது தெய்வீக ஆற்றலை கொடுக்கிறது.

    முன்னோர்கள் (சித்தர்கள்) குறிப்பிட்ட நோய்க்கு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று குறிப்பிட்ட பொருளால் அபிஷேகம் செய்து குறிப்பிட்ட நாட்கள் அதனை பிரசாதமாக சாப்பிட்டால் நோய் தீரும் என சொல்ல நாம் கேட்டு இருக்கலாம்.

    ஆனால் இன்று கால மாற்றாத்தினால் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இது தெரியாத பல அறிவீலிகள் நாம் அபிஷேகம் என்ற பெயரில் அனைத்தையும் வினாக்குவதாக கேலி செய்துகொண்டு திரிகின்றன. 

    மீண்டும் சொல்கிறேன் நாம் வணங்குவது வெறும் கல்லோ / ஐம்பொன்னோ அல்ல அறிவியலை !!

     

  • பள்ளி கொண்டு அருள் பாலிக்கும் சுருட்டப்பள்ளி சிவன் 

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திரா எல்லையில் உள்ளது சுருட்டபள்ளி. 1000 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோவில் பார்வதி தேவிவுடன் சிவ பெருமான் சயனகோனத்தின் பள்ளி கொண்ட ஈஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிவனை நின்ற நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தான் பார்த்திருப்போம்.

    பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை இங்கு தரிசிக்கலாம். இவரை பள்ளிகொண்டீஸ்வரர் என அழைக்கிறார்கள். சிவன் ஒரு முறை கோபத்தில் ருத்ர தாண்டவம் ஆடியபோது அதன் உக்கிரம் தாங்காமல் அனைத்து உலங்கங்களும் நடுங்கத் தொடங்கின. பார்வதிதேவி தேவர்கள் யோகிகள் ஞானிகள் என்று யார் வேண்டியும் சிவன் கேட்பதாக இல்லை.

    சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். அவரிடம் சிவன் “ நான் எங்கே போய் ஆடுவது?” என்று கேட்க “ என் தலையில் ஏறி ஆடுங்கள் நான் தாங்கிக் கொள்கிறேன் “ என்று நந்தி பதிலளித்தார். சிவனும் நந்தியின் இரு கொம்புக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடி கோபம் தணிந்தார். பிரமாண்ட வடிவம் கொண்டு பார்வதியின் மடியில் ஆனந்த புன்னகையுடன் சிவன் சயனத்தில் உள்ளார். சுருட்டப்பள்ளி சென்று வணங்கினால் மாங்கள்ய பாக்கியம் நிலைக்கும் என்பது பெண்களின் தீராத நம்பிக்கை. கர்ப்பக்கிரக சுவரில் தேவர்கள் ரிஷிகள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். ‘ சர்வமங்களா ‘ என்ற பெயருடன் அம்பாள் பார்வதி விளங்குகிறாள்.

    அம்பாளை வணங்கும் பெண்களுக்கு சர்வ மங்களமும் குறிப்பாக மாங்கல்ய பாக்கியம் அமையும். சிவன் பள்ளி கொண்ட நிலையில் அருள் புரியும் தலம் என்பதால் பள்ளிகொண்டேஸ்வரர் கோயில் என்றும் சுருட்டப்பள்ளி கிராமத்தில் இருப்பதால் சுருட்டப்பள்ளி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனுக்கு எதிரிலுள்ள சின்ன நந்திக்கு பிரதோஷ பூஜையும் சிவராத்திரியன்று உற்சவருக்கு நான்கு கால அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பாக நடக்கும். இதைத் தவிர தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.

  • ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்

    ஏழுமலையானை தரிசிக்க திருமலை – திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் 52 ஆயிரம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று திருமலை – திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கான 52,190 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதனை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு, இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்க பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இதனைப் பெற்ற பக்தர்கள் 3 நாள்களுக்குள் தங்களது டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு வழங்கும் நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான் !!!

     

    கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன.

    இதைக் கண்ட கண்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்து விடு, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன்.

    இவ்வளவு சிறந்த கொடையாளியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் காலை கிணற்றடியில் எண்ணெய் தேய்த்து முழுக கர்ணன் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

    இடக் கையில் வைத்துக் கொண்டிருந்த எண்ணெயைக் கிண்ணியிலிருந்து எண்ணெய்யை எடுத்து உடம்பில் பூசிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஏழை அங்கு வந்து கர்ணனிடம் தனக்கு ஏதேனும் உதவி செய்யக் கோரினான். அடுத்த கணமே இடது கையில் ஏந்தியிருந்த தங்கக் கிண்ணியை அந்த ஏழையிடம் கர்ணன் கொடுத்து விட்டான்.

    அங்கிருந்த நண்பர் ஒருவர் கர்ணனைக் கேட்டார். கர்ணா! தர்மம் என்றாலே கர்ணன் என்று தான் பெயர். ஆனால் கொடுக்கும் தர்மத்தை வலது கையால் தான் கொடுக்க வேண்டும் என்ற முறை உனக்குத் தெரியாதா?

    சிரித்துக் கொண்டே தெளிவாக கர்ணன் பதில் சொன்னான். நீர் சொல்வது சரிதான். வாழ்க்கை என்பது எப்பொழுதும் முன்னெச்சரிக்கை கொடுக்காது. ஆகையால் தான் இடக்கையிலிருந்து வலக்கைக்குக் கிண்ணம் மாறுவதற்குள் ஏதேனும் எனக்கு நிகழ்வதற்குள் உடனேயே அந்தத் தர்மத்தைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் தான் இடக் கையாலேயே கொடுத்து விட்டேன்.

    மூட்டையாகச் சுமக்கும் போது அது பாரம். போட்டியாகச் சுமக்கும் போது அது பொய். வாட்டமாகச் சுமக்கும் போது அது வாழ்க்கை. நாட்டமாகச் சுமக்கும் போதுதான் அது ஞானம். மொத்தத்தில் யோசிக்காமல் கொடுப்பதே தானம் என்றானாம்.

    கர்ணன் பொதுவாகவே இடது கையால் தானம் அளிப்பதர்க்குக் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது : எப்போதும் தானம் செய்பவர் கைகள் மேலேயும், தானம் பெறுபவர் கைகள் கீழேயும் இருப்பது வழக்கம். ஆனால் கர்ணன் தானம் செய்யும் போது அவன் கைகள் கீழேயும், மற்றவர்கள் கைகள் மேலேயும் இருந்து பெற்றுக் கொள்வார்கள். இது பற்றி கர்ணனிடம் கேட்ட போது, ” நானும் முறைப்படித் தான் நடந்து கொண்டு வருகிறேன், எனக்கு தானம் செய்யும் புண்ணியத்தைத் தருபவர்கள் கைகள் மேலேயும், அப்புண்ணியத்தைத் தானமாகப் பெரும் எனது கைகள் கீழேயும் தானே இருக்கின்றன? ஆகவே நான் விதியை மீறவில்லை” என்றான் கர்ணன்.

     

  • நீரில் நனையும் சிவலிங்கங்கள்..!

     

    வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவது போல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன. 

    ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்கா ஆலயத்தில் அருள்புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருக்கும். லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத் தான் தரிசிப்பார்கள்.

    சீர்காழி திருக்காளமுடையார் கோவிலிலும் லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம். திருவேடகம் திருத்தலத்தில் மூலவர் லிங்கத்தின் முடியிலுள்ள பள்ளத்திலிருந்து தண்ணீர் ஊறி வெளிவந்து கொண்டிருக்கும்.

    தஞ்சை பெரிய கோவில் மூலவர் பெரிய திருவுருவில் அருள்புரிகிறார். கருவறையைச் சுற்றி சந்திரகாந்தக் கற்கள் அமைந்திருப்பதால், கோடைக் காலத்தில் கருவறையின் உட்சுவர்களில் நீர்த்துளிகள் படிந்து, சிவலிங்கம் குளிர்ச்சியாக இருக்கும். மேலும், பெரிய கோவிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தக் குளத்தின் நடுவில் ஒரு லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் தீர்த்தக்குளத்தில் மூழ்கியே இருக்கும். கடுமையான கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மட்டும் லிங்கத்தை தரிசிக்கலாம்.

    கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கருவறையின் மேல் தளம் சந்திரகாந்தக் கற்களால் அமைந்துள்ளதால், எப்பொழுதும் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் சிவலிங்கத்தின் மீது விழுந்த வண்ணம் உள்ளது.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மூலவரின் திருவடியில் தேவதீர்த்த நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.