Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • கார்த்திகை மாத சோமவார சிவ பூஜையில் சங்காபிஷேகம்!!

     

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது.

    பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். 

    சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.

    அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் யாருக்கும் தெரியாமல் இப்படி மழுவியது.

    சங்கின் குணம் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.

    இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருகுவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

    சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.

     

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

    ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.

    இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

    ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

    கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

     

     

  • கார்த்திகை சோமவாரம் ஏன்… சிறப்பு வாய்ந்தது தெரியுமா ?

    கார்த்திகை திங்கள். அதாவது கார்த்திகை சோமவாரம். சிவவழிபாட்டுக்கு  மிக உகந்த திருநாள்.  ஏன் தெரியுமா?சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய நாளான திங்கள்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
    க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
    சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.
    இந்த நாட்களில் சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.
    கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும். குறிப்பாக இறைவன் சிவனார், சந்திரனின் பெயரை ஏற்று அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பது விசேஷம். 

     

  • ஸ்ரீரங்கம் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நவம்பர் 23-ந்தேதி நடக்கிறது.
    பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் டிசம்பர் 3-ந்தேதி திருக்கார்த்திகை திருநாள் நடக்கிறது. அன்று இரவு 8.30 மணிக்கு கோவிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்று காலை 8 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கார்த்திகை கோபுரவாயில் முன்பு 20 அடி உயர தென்னை மரத்தில் 15 அடி சுற்றளவுடன் பனை மட்டைகளால் வேயப்பட்ட சொக்கப்பனையில் நம்பெருமாளிடம் இருந்து பந்தத்தில் தீபம் ஏற்றி வைக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சொக்கப்பனை நிகழ்ச்சியை தரிசிப்பதன் மூலம் இருள் நீங்கி பிரகாசமான வாழ்வு அமைய பெறுவது இத்திருநாளின் சிறப்பு அம்சமாகும். அதன்படி அன்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. 8 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்தல் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு 2-ம் புறப்பாடும் நடக்கிறது. பின்னர் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது. அன்று மாலை 4.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. திருக்கார்த்திகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் மகர லக்கனத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது.

  • துறையூர் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை

    திருச்சி மாவட்டம், துறையூரில் நந்திகேசுவரர் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    துறையூர்-ஆத்தூர் சாலையிலுள்ள ஸ்ரீ நந்திகேசுவரர் கோயிலில் கார்த்திகை முதல் தேதியையொட்டியும், பக்தர்கள் தடையின்றி விரதமிருந்து சபரிமலை சென்று வர வேண்டியும் சிறப்பு கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து விநாயகருக்கும், ஐயப்ப சுவாமி சிலைக்கும் நெய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பழங்கள், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஐயப்ப பக்தர்களுக்கு கோயில் குரு க்கள்பஞ்சாபிகேசனும், குருசாமிகளும் மாலை அணிவித்து விரதம் கடைபிடிக்கும் முறையை கூறினார்.

  • ஆடியில் மட்டும் நடைசாத்தும் அம்மன் கோவில்

     

    சாயல்குடி அருகே எஸ். தரைக்குடியில் பழமை வாய்ந்த உமைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. நிழல்தரும் மரங்கள் கோயிலை சுற்றி பூஞ்சோலையாக உள்ளது. இரண்டு புறமும் 22 அடி உயரமுள்ள முனீஸ்வரர் காவல் தெய்வமாக கம்பீரமாக காட்சி தருகிறார்.  ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் நாள் கோயில் நடைசாத்தப்பட்டு, ஆவணி முதல் தேதியன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனின் முதல் நாள் பார்வை, காட்சிதரும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடந்து வருகிறது. பொதுவாக எல்லா அம்மன் கோயில்களிலும் ஆடி முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கூழ் காய்ச்சியும், பொங்கல் வைத்தும் வழிபாடு செய்வர். இக்கோயிலில் மட்டும் இதற்கு விதிவிலக்காக நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். மூலவரான உமையநாகிய அம்மன் சன்னதியில் மேற்கூரை எதுவும் கிடையாது. முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பொன்னு பெருமாள் கூறுகையில், ஆடி மாதம் முழுவதும் அம்மன் இங்கிருந்து, நடைபயணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று, அங்குள்ள அக்னிதீர்த்தக்கடலில் தீர்த்தமாடி விட்டு ஆவணி முதல் தேதியன்று மீண்டும் கோயிலுக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இதுபோன்ற நடைமுறை காலந்தொட்டு பின்பற்றப்படுகிறது. குலதெய்வமாக கொண்ட வெளியூரில் உள்ள பக்தர்கள் ஆயிரக்கணக்கில் முதல்நாள் பார்வை நிகழ்ச்சியில் பங்கேற்க வருகின்றனர். ஆவணி கடைசி புதன்கிழமையன்று வடமாடு எருதுகட்டு விழா நடக்கும், என்றார்.

     

  • கார்த்திகை அமாவாசையின் சிறப்பு!  

     

    நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், திருவிசநல்லூர் கோவிலில் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.

    கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.

    இத்தல ஈசனின் திருநாமம் சிவயோக நாத சுவாமி என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இவர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சங்களாக அரசு, வில்வம் உள்ளன. சம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.

    திருவிசநல்லூர் பகுதியில் சிறந்த சிவ பக்தரான மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் என்பவர், சவுந்தர நாயகி சமேத சிவயோகிநாத சுவாமி திருக்கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் கூட தவறியதில்லை. ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினம் அன்று இவர் தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

    அன்று காலையில் சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் இல்லத்து வாசலுக்கு வந்து, தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது தருமாறு வேண்டினான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய மகான், இல்லத்தில் சிரார்த்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளித்தார்.

    அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’ என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்.

    ‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே!’ என்று மகான் வருந்தினார். இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்’ என்னும் துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.

     

    இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.

    காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது.

    ஏழையாக வந்து, அய்யாவாள் வீட்டில் திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், ஸ்ரீதர அய்யாவாளை போற்றிப் புகழ்ந்தனர்.

    இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

    மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.

    இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள். 

    பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.

    கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது. 

     

  • நரசிம்மர் காட்சியளித்த இடம்  சோளிங்கர்!

     

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் விசேஷமான திருத்தலம். மலையின் மீது அமர்ந்து நம் மலை போலான துக்கங்களை பனி போல் ஆக்குகிறார் நரசிம்மர்!

    சிறிய மலை பெரியமலை என உண்டு இங்கே! பெரிய மலைக்கு எதிரில் இயற்கை அழகோடு 406 படிகள் அமைந்து அழகிய குன்றின் மீது அமைந்துள்ளது யோக ஆஞ்ச நேயர் கோயில். யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம், மற்ற இரு கைகளில் ஜபமாலை உள்ளன.

    சிறிய மலையிலிருந்து பார்த்தால் யோக ஆஞ்சநேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி அமைந்துள்ளது.பேய் பிசாசு பிடித்தவர் தீராத நோயினால் வருந்துபவர்கள் இம்மலைச் சுனையில் (குளம்) நீராடி, வாயு மைந்தனை வணங்கினால், பூரண குணம் பெறலாம்!

    இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டுதோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை.

    இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து, பார்க்கமுடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தொட்டாச்சார்யருக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

       

    சப்தரிஷிகள்… ஆஞ்சநேயர்!

    வேலூர் – திருத்தணி வழியில் இருக்கிறது சோளிங்கர். சென்னையிலிருந்து அரக்கோணம் வரை ரயில் பயணம் செய்து அங்கிருந்து சோளிங்கருக்கு பேருந்து மூலம் செல்லலாம். சோளிங்கருக்கு வேலூர், திருத்தணி மற்றும் திருவள்ளூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

    தொண்டை நாட்டு 22 திவ்யதேசங்களில் ஒப்பற்ற திவ்யதேசம் இது. காஞ்சிபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம்! சப்தரிஷிகளுக்காக கோபம் தணிந்து யோக முத்திரையுடன் நரசிம்மர் காட்சியளித்த இடம்.

    சுவாமி உட்கார்ந்திருக்கும் பாறை அடிவாரம் வரை ஒரே மலையைச் சேர்ந்த குன்று என்பது அதிசயம். மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலம். மனஅமைதி தரும் அற்புதமான பூமி!

    இந்த மலையில் உள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்னை விரைவில் குணமாகிறது.

    பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். விஸ்வாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு வரம் பெற்றாராம். அதேபோல் தங்களுக்கும் பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டு அவர்கள் இங்கு தவமிருந்தனர்.

    ராமாவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் ஆஞ்சநேயரிடம், “”இந்த மலையில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது. அதைப் போக்கி வை” என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்ய, அது முடியாமல் போனதால் ஸ்ரீராமனை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து ரிஷிகளை காப்பாற்றினார் என்கிறது ஸ்தல புராணம்.

    கடைசியில் ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை தரிசித்துப் பூரித்த ஆஞ்ச நேயரிடம், ”நீ எனக்கு முன்பாக கையில் சங்கு சக்கரத்துடன் யோகத்தில் அமர்ந்து என் பக்தர்களின் குறைகளை போக்கி அருள்வாயாக!” என அருளினார்!

    அதன்படி நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் யோக ஆஞ்சநேயராக சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

     

  • தோஷம் போக்கும் குளியல்!

     

    ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கும் தோஷங்களை நீக்குவதற்கு, நாம் அனைவரும் வழிபட வேண்டியது நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கோள்களையே. ஜாதக தோஷம் இருப்பவர்கள், தினமும் குளிக்கும் போது, நீரில் சில பொருட்களை கலந்து குளிப்பதன் மூலமாக அந்த தோஷங்களை நீக்கிக்கொள்ள முடியும் என்கிறார்கள். அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

     

    சூரிய தோஷம்

    குளிக்கும் தண்ணீரில் சிவப்பு வண்ண மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ சிறிதளவு போட வேண்டும். நான்கு அல்லது ஐந்து குவளை நீரை மொண்டு குளிக்க வேண்டும். அதன்பிறகு சாதாரண தண்ணீரில் குளிக்கலாம். இவ்வாறு செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

     

    சந்திர தோஷம்

    ஒரு சிலர் முக அழகுக்காக, தயிரை முகத்தில் பூசிக்கொள்வார்கள். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும், இதைத் தான் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பாக கொஞ்சம் தயிர் எடுத்து, அதனை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

     

    செவ்வாய் தோஷம்

    திருமணத் தடை ஏற்படுவதற்கு செவ்வாய் முக்கிய காரணமாக இருக்கிறது. செவ்வாய் தோஷத்தால் திருமணத்திற்கு பிறகும் கூட ஒரு சிலருக்கு நிறைய பிரச்சினைகள் வந்து சேரலாம். இதற்கு சிறந்த குளியல் பரிகாரம் ஒன்று இருக்கிறது. வில்வம் பழக் கொட்டையை நன்கு பொடி செய்து, குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும். நான்கைந்து குவளை நீரை இதுபோல் குளித்துவிட்டு, பிறகு சாதாரண தண்ணீரில் நீராடலாம். இதனால் செவ்வாய் தோஷம் அகலும்.

     

    புதன் தோஷம்

    இந்த தோஷம் நீங்குவதற்கு கடல் நீரோ அல்லது கங்கை நீரோ தேவைப்படும். மஞ்சள் மற்றும் கடுகு ஆகிய இரண்டையும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, அதில் தேனை கலக்க வேண்டும். தொடர்ந்து இந்தக் கலவையை சிறிதளவு கடல் நீர் அல்லது கங்கை நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் குளிக்கும் நீரில் இதனை கலந்துவிட்டு நீராட வேண்டும்.

     

    குரு தோஷம்

    கருப்பு ஏலக்காயை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அதனை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வருவதன் மூலமாக வியாழ பகவான் என்று அழைக்கப்படும் குருவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

     

    சுக்ர தோஷம்

    பச்சை ஏலக்காயை நீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை, நாம் அன்றாடம் குளிக்கும் நீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக சுக்ர தோஷம் விலகும்.

     

    சனி தோஷம்

    கருப்பு எள் வாங்கி அதனை நீரில் நன்கு கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் சனி தோஷம் நீங்கப்பெறலாம்.

     

    ராகு-கேது தோஷம்

    அருகம்புல்லை, நீரில் நன்றாக கொதிக்கவைத்து, பின்னர் அதை குளிக்கும் தண்ணீரில் கலந்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதால் ராகு-கேது தோஷம் அகலும்.

  • தேவியரின் திருவருளை பெற சிவசக்தி தீபம்

    தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

  • முத்துப் பல்லக்கில் பத்மாவதி தாயார் பவனி!

    திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று மழை வெளுத்துவாங்கிய நிலையிலும் பத்மாவதித் தாயார் முத்துப்பல்லக்கில் பவனி வர, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பதி அடுத்துள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்ஸவ விழாவின் 3ம் நாளான இன்று, முத்துப்பல்லக்கு வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருடந்தோறும் வெகு விமரிசையாக இந்த பிரம்மோத்ஸவ விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்தியா முழுவதும் இருந்து, இந்த பிரம்மோத்ஸவ விழாவில் கலந்து கொண்டு, தாயாரைத் தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்ஸவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 3ம் நாளான இன்று காலை கொட்டும் மழையில் முத்துப்பல்லக்கு வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாது பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர்.
    இதனைத் தொடர்ந்து இன்று இரவு சிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு காட்சியளிகும் வைபவம் நடைபெறுகிறது.