Author: சக்தி ஆன்லைன் டீம்

  • kandha-sasti-thonriya-kadhai

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)

    அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

    காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

    தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை.

    தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

    முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

    கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

     

  • variyarin-anmeega-arulurai

    நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும்.

    பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.

    மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.

    கட்டை அல்லது துணியைக் கொளுத்தினால் முடிவில் கரி சாம்பல் மிஞ்சும். கற்பூரத்தைக் கொளுத்தினால் தீயில் கரைந்து மறைந்து விடுகிறது. ஜீவன் (மனிதன்) சிவத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற உண்மையை நாம் உணரும் பொருட்டுக் கற்பூர தீபம் காட்டுகிறார்கள். கோயிலில் தரிசனம் செய்பவர்கள் இந்த உண்மைகளை அறிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.

  • thirichanur-padmavati-koil-annadhana-koodam

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருச்சானூர் பத்மாவதி கோவிலில் ரூ.6.75 கோடி அன்னதான கூடம் திறக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்னதான கூடம் உள்ளது. இங்கு தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழா காலங்களிலும், பக்தர்கள் அதிகம் வரும் நேரங்களிலும் அன்னதான கூடத்தில் கடும் கூட்டம் ஏற்படுகிறது.

    இதையடுத்து, 2-வது வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அருகே புதிய அன்னதான கூடம் கட்டப்பட்டது. பிரமாண்டமாக கட்டப்பட்ட இந்த அன்னதான கூடத்தில் 1½ லட்சம் பக்தர்கள் உட்க்ராந்து சாப்பிடலாம்.

    இந்நிலையில், திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோவிலில் சுமார் 6.75 கொடி ரூபாய் மதிப்பில் புதிய அன்னதான கூடம் இன்று திறக்கப்பட்டது. இந்த அன்னதான கூடத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுதாகர் திறந்து வைத்தார். இதன்மூலம் பக்தர்கள் சிரமமின்றி அன்னதானத்தை சாப்பிடலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • thiruchendurin-baktharkal-kootam

    அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழா. இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 6 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினந்தோறும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கோவில் யாகசாலையில் சிறப்பு வேள்வி பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கந்த சஷ்டி விழாவை ஒட்டி விரதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதில், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். கோயிலின் உள் பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் விடுதிகளில் தங்கி பக்தர்கள் 6 நாள் விரதத்தை கடைபிடித்து வருகின்றனர்.

    கந்த சஷ்டி விரதத்தில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோயிலின் வெளி பிரகாரங்களில் 5 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விதமாக 8 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கியும், தனியார் விடுதிகளில் தங்கியும் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

    அதிகாலை 5 மணிக்கு எழுந்து கடலில் புனித நீராடும் பக்தர்கள், உள்பிரகார யாகசாலை மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு நடைபெறும் யாகம், அபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அதனை தொடர்ந்து, ஓம் சரவணபவ என்று எழுதியும், நாள் முழுவதும் முருகனை வழிபட்டும் விரதம் மேற்கொள்கின்றனர்.

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 13ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. அந்த நிகழ்வு முடிந்தவுடன் கடலில் நீராடி, பக்தர்கள் சஷ்டி விரதத்தை நிறைவு செய்துக்கொள்வார்கள். அதற்கு மறுநாள், அதாவது 14ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்வுடன் கந்த சஷ்டி விழாவும் நிறைவு பெறும்.

  • indraya-naal-eppadi

    நவம்பர் 10
    விளம்பி வருடம் – ஐப்பசி 24
    10-நவ-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை இ 11.22
    நட்சத்திரம் : கேட்டை இ 11.33
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : கார்த்திகை,ரோகிணி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – காரியசித்தி
    ரிஷபம் – நற்சொல்
    மிதுனம் – சினம்
    கடனம் – கவனம்
    சிம்மம் – பாராட்டு
    கன்னி – பாசம்
    துலாம் – நலம்
    விருச்சிகம் – நிம்மதி
    தனுசு – வரவு
    மகரம் – லாபம்
    கும்பம் – பக்தி
    மீனம் – மறதி

  • murugaperuman-thiruthala-swarasiyangal

    அதிசய நாவல் மரம்
    சோலைமலை முருகன் கோவிலுக்கு ஸ்தல விருட்சமாக விளங்குவது நாவல் மரம். இந்த அதிசய நாவல் மரம் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கது. ஔவைக்கு முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட அதிசய நாவல் மரம் இன்றும் இந்த கோவில் அருகிலேயே உள்ளது. இந்த நாவல் மரம் ஐப்பசி மாதம் பழம் பழுக்கும் தன்மை உள்ளது. மற்ற நாவல் மரங்கள் எல்லாம் ஆடி மாதம் பழுக்கும் தன்மை கொண்டது என்பார்கள்.

    உப்பு, புளி, காரம் இல்லாத நைவேத்தியம்!
    திருச்செந்தூரில் மூலவர் துறவுக் கோலத்தில் இருப்பதால் அவருக்குப் படைக்கப்படும் உணவில் உப்பு, புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கலே இடம் பெறுகிறது. ஆறுமுகப்பெருமான் இல்லறக் கோலத்தில் இருப்பதால் ஆறுமுக அர்ச்சனை முடிந்தபின் பால்பாயாசம், தேங்காய் சோறு, புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் ஆகிய ஆறுவகை நிவேதம் படைக்கப்படுகிறது.

    மூன்று முறை சூரசம்ஹாரம்
    முருகப்பெருமான் கோவில் கொண்டு உள்ள எல்லா புண்ணிய தலங்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அருள் ஆட்சி புரியும் சுப்பிரமணிய சுவாமிக்கு மட்டும் ஆண்டுக்கு ”மூன்று” முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவின் போதும், தைமாதம் தெப்பத்திருவிழாவின் போதும், பங்குனி மாதம் பெரு விழாவின் போதும் சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது. இந்தத் தலத்தின் மூலவரான முருகன் தேவசேனாபதிக்கு கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய 4 வாகனங்கள் இருப்பதைக் காணலாம்.

    கிளி வாகனத்தில் முருகப்பெருமான்!
    சிதம்பரம், இரத்தினகிரி, வேலூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பிராணமலை, செட்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் யானை வாகனத்தில் முருகன் காட்சி தருகிறார். அதேபோல், திருப்போரூர் கோவிலில் வலம் வரும் போது ஆட்டு வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனத்துடன் கூடிய முருகனை தரிசிக்கலாம்.

    முருகன் கோயில் படிக்கட்டுகள்
    60 தமிழ் வருடங்களை நினைவு கூறுமுகமாக 60 படிகளை கொண்டது சுவாமி மலை. 365 நாட்களை நினைவு படுத்தும் விதமாக 365 படிகளை கொண்டது திருத்தணி.

    படி பாயசம்
    தென்காசி அருகே ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படிபாயாசம் நிவேதனம் செய்வார்கள். 1 படி முதல் 12 படி வரையில் அரிசி பாயாசம் செய்து குழந்தைகளுக்கு வழங்குவர்.

    சுருட்டு நிவேதனம்
    விராலிமலையில் இரவு பூஜையின் போது முருகனுக்கு சுருட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. இங்கு அருளும் முருகனின் மூன்று முகங்களை நேரடியாகவும், மற்ற மூன்று முகங்களை கண்ணா டியிலும் தரிசிக்காலம்.

    சங்கு சக்கரத்துடன் முருகப்பெருமான்
    அரிசிக் கரைப்புதூர் முருகன் மகாவிஷ்ணுவைப் போல் சங்குக் கரங்களுடன் காட்சி தருகிறார். அதேபோல், இலஞ்சி திருக்கோயிலின் நுழைவு வாயிலில் பத்து தலைகளுடன் முருகன் அமர்ந்துள்ள திருக்காட்சியைக் காணலாம்

  • sankara-narayanan-swamy-koilil-kandha-sasti

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 6 நாட்கள் கந்தசஷ்டி திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டின் கந்தசஷ்டி திருவிழா இன்று சங்கரநாராயணசுவாமி கோயிலின் சண்முகர் சன்னதியில் கோலாகலமாக துவங்கியது. சண்முகர் சன்னதி முன்பாக உற்சவ சண்முகருக்கு மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், விபூதி, இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சண்முகர், தெய்வானை, வள்ளிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வேதவிர்ப்பணர்கள் வேதமந்திரங்கள் முழங்க சண்முகார்ச்சனை செய்யப்பட்டு சண்முகரின் 6 முகங்களுக்கும் மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.

    இன்று துவங்கியுள்ள கந்தசஷ்டி திருவிழாவில் தினமும் மாலை கோயிலில் இருந்து முருகப் பெருமான் ரதவீதி உலாவும், முருகப்பெருமானுக்கு முன்பாக சூரர்கள் நடனமாடி செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான வருகிற 13ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் நகரின் வடக்கு ரதவீதியில் வைத்து சண்முகர் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.

  • vazhi-vidu-murugan-koil-kandha-sasti-vizha

    ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற வழிவிடு முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து வழிவிடு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

    விழாவையொட்டி தினமும் ஆன்மிக சொற்பொழிவு, பாராயணம், இசை சொற்பொழிவு, வாரவழிபாடு போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந்தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து 14-ந்தேதி காலை 11 மணிக்கு மேல் வழிவிடு முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

    இதேபோல ராமநாதபுரம் அருகே உள்ள பெருவயல் கிராமத்தில் அமைந்துள்ள ரணபலி முருகன் கோவிலில் நேற்று மாலை 5 மணியளவில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை போன்றவை நடைபெற்றது. 13-ந்தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 14-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

  • indraya-rasi-palan

    நவம்பர் 9
    விளம்பி வருடம் – ஐப்பசி 23
    09-நவ-2018 வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை இ 10.28
    நட்சத்திரம் : அனுஷம் இ 10.08
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – செலவு
    கடனம் – அமைதி
    சிம்மம் – பரிசு
    கன்னி – கவனம்
    துலாம் – கீர்த்தி
    விருச்சிகம் – நஷ்டம்
    தனுசு – ஆக்கம்
    மகரம் – பாராட்டு
    கும்பம் – லாபம்
    மீனம் – தெளிவு

  • sri-rangam-kovilil-unjal-thirunal

    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் 10 ம் தேதி தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    ஊஞ்சல் திருநாளையொட்டி ஸ்ரீரெங்க நாச்சியார், 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேருகிறார். இரவு 7 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் ஆரம்பமாகி 8 மணிக்கு நிறைவு பெறும். 8.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 16-ந்தேதி மட்டும் வழக்கம் போல் மாலை 5.30 மணிக்கு புறப்பாடாகி இரவு 9.30 மணிக்கு படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஊஞ்சல் திருநாள் நடைபெறும் நாட்களில் தாயார் சன்னதி வளாகத்தினுள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சலில் தாயார் எழுந்தருளி தீபாராதனை பூஜை நடக்கிறது. தினமும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை தாயார் மூலஸ்தான சேவை கிடையாது.