Author: சக்தி ஆன்லைன் டீம்

  • vaikunda-egadasikku-thirupathy-pogathittama

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கருட சேவை தினத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    18-ந் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட உள்ளது. அன்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 16-ந்தேதி நள்ளிரவு 12.30 முதல் வைகுண்டம் காத்திருப்பு அறை 1 மற்றும் 2-ல் அனுமதிக்கப்படுவார்கள்.

    அந்த அறைகள் நிரம்பியதும் ஆழ்வார் குளம் தரிசன வரிசை, நாராயணகிரி தோட்டத்தில் உள்ள நிழற்பந்தலில் காத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். அவை நிரம்பியவுடன் மேதரமிட்டா அருகில் உள்ள எண்.1 கதவு வழியாக மாடவீதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தலிலும், அது நிறைந்தவுடன் வெளிவட்டச் சாலையில் உள்ள தரிசன வரிசைகள் என ஒவ்வொரு பகுதியாக பக்தர்கள் காத்திருக்க அனுமதிக்கப் படுவார்கள். சரியாக 28 மணி நேரம் காத்திருப்பை அடுத்து 18-ந்தேதி காலை 5.30 மணிக்கு தர்ம தரிசனம் தொடங்கும்.

    அதன்பின் தரிசன வரிசை நகர தொடங்கும். 19-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் வைகுந்த வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் வருகைக்கு ஏற்றவாறு குடிநீர், சாப்பாடு பானங்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • srivilliputhur-thiruppavai-thiruvizha

    ஆண்டாளின் அவதாரத் தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரில், மார்கழி மாதத்தில் நடைபெறும் திருப்பாவைத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    அதிகாலை நேரத்தில், திருப்பள்ளியெழுச்சி, திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்கள் ஆண்டாள் முன்பாக பாடப்படுகிறது. அதன் பிறகு காலைநேர விஸ்வரூப தரிசனம் முடிந்தவுடன், ஸ்ரீ ஆண்டாளுக்கு நடைபெறும் ஆராதனைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவை.

    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். எப்படி இந்த நோன்பு ஆரம்பித்தது? ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் ‘பாவை நோன்பு’ என்றும் கூறப்படுகின்றது.

    கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) ‘திருப்பாவை’ யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய ‘திருவெம்பாவை’யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.

  • margazhi-month-sirappugal

    மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் அருள்கிறார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. நாம் குறிப்பிடும் ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள், அந்த நாளின் அதிகாலைப் பொழுது மார்கழி! தேவர்களது பிரம்ம முகூர்த்த காலமாகிய மார்கழியில், இறைவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    ‘மார்கழி’ என்னும் பெயருக்கு என்ன பொருள்? ‘மாரி’ என்ற வார்த்தையிலிருந்து உண்டானது ‘மார்’ என்பது. ‘மாரி’ என்றால் மழை என்று பொருள். ‘கழி’ என்றால் ‘கழிந்த’ அல்லது ‘பின்னர்’ என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.

    மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

    மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

    மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

    தமிழ் மாதமாகிய மார்கழி பிறந்துவிட்டாலே நமக்கு நினைவு வருவது, ஆருத்ரா தரிசனமும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும் தான். எனவேதான் ஆண்டாளும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து, திருப்பாவை நோன்பு ஏற்றாள்.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 15
    விளம்பி வருடம் – கார்த்திகை 29
    15-டிச-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி இ 3.16
    நட்சத்திரம் : பூரட்டாதி இ 10.56
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – பயம்
    மிதுனம் – பீடை
    கடனம் – ஆதரவு
    சிம்மம் – மகிழ்ச்சி
    கன்னி – தோல்வி
    துலாம் – லாபம்
    விருச்சிகம் – செலவு
    தனுசு – சுகம்
    மகரம் – கவலை
    கும்பம் – வெற்றி
    மீனம் – சிக்கல்

  • vaikunda-prapthiyalikkum-egadasi-viradham

    நமது இந்து மதத்தில் அனேக விரதங்கள் இருந்த போதிலும், காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை… ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். ஏகாதசி என்பது ஒரு மாதத்தில் அமாவாசையிலிருந்து 11வது நாளையும், பவுர்ணமியிலிருந்து 11வது நாளையும் குறிக்கும்.

    ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்தது இந்த ‘ஏகாதசி திதி’ ஆகும். அசுவமேத யாகத்திற்கு நிகரான ஏகாதசி விரதத்தை நாம் கடைப்பிடித்தால், நம்முடைய சகல பாவங்ளும் நீங்கும்.

    சராசரியாக ஒரு வருடத்தில் வரும் இருபத்திநான்கு அல்லது இருபத்திஐந்து ஏகாதசிகளில், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசிக்கு சிறப்பு அதிகம். மார்கழிமாத சுக்லபக்ஷ ஏகாதசியன்று, வைகுண்டம் சென்று நாராயணனை வணங்கி தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறினார்கள் பிரம்மா மற்றும் தேவர்கள். எம்பெருமானும் அவர்களுக்கு தரிசனமளித்து அவர்களின் துன்பங்களை போக்கினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.

    மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் இருக்கும் என்பது ஐதீகம்.

    ஓம் நமோ நாராயணாய…

  • thiruparankundram-koil-nadai-thirappu-neram-maatram

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைதிறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை முதல் ஜன.14 ஆம் தேதி வரை கோயிலில் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல திருநகர் சித்தி விநாயகர் கோயில் மார்கழி மாதப்பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 10.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்பு மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இவு 8 மணிக்கு நடை சாத்தப்படும்.

  • chidambaram-arudhra-kodiyetram

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 8.30 மணிக்கு மேல் கொடியேற்றத் துடன் தொடங்கியது. கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சார்யர் நடராஜ தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.

    வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) முக்கிய விழாவான தேர்திருவிழா நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் கோயில் சித்சபையில் இருந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூர்த்தி தேரில் எழுந்தருள்கின்றனர். பின்னர் தனித்தனி தேர்களில் வீதியுலா நடக்கிறது.

    23ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.00 மணிக்கு மேல் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகாபிஷேகமும் 10 மணிக்கு மேல் திருவாபரண அலங்காரமும், மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 24ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.

  • vaikunda-egadasi-histroy

    மூவுலகையும் தனது கொடூரச் செயல்களினால்,துன்புறுத்தி வந்த முரன் என்னும் அசுரனை அழித்து,மக்களைக் காக்க மகாவிஷ்ணு முடிவு செய்தார். முரனுடன் 1000 ஆண்டுகளாக நடந்த கடுமையான போரில் ,மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

    இதையே தனக்கு சாதகமாக்கி கொண்ட’முரன்’ பகவானை கொல்லத் துணிந்தான். அப்போது அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

    விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு ‘ஏகாதசி’எனப் பெயரிட்டு, உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்தார். தனக்குள் மீண்டும் அந்த சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி அன்று விழிப்புடன் இருந்து விரதம் கடைபிடித்தால் நாராயணனின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

    ஒரு சமயம் பிரளயம் ஏற்பட, அதில் மூழ்கிய பூலோகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பி, திருமால் நான்முகனைப் படைத்தார். நான்முகனை அழிக்க தோன்றிய மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்களையும், தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். திருமாலின் கையால் மோட்சம் பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று மன்றாடினார்கள்.

    அந்த வேண்டுகோளை ஏற்று திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார். அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள் “மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கும் ஆசி வழங்கினார். அந்த திருநாள் தான் வைகுண்ட ஏகாதசித் திருநாளாக வைணவத் திருத்தலங்களில் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.

  • sri-rangam-vaikunda-egadasi

    கலியுகம் பிறந்ததும், வைகுண்டத்தின் காவலர்களான ஜய, விஜயர்கள் வைகுண்டத்தின் வாசலை மூடினார்கள். இதனைக் கண்ட பெருமாள் காவலர்களிடம் ‘‘வைகுண்ட வாசலின் கதவை ஏன் மூடினீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு காவலர்கள், ‘‘கலி பிறந்துவிட்டது. இனிமேல் அதர்மம் தலை தூக்கும்; தர்மம் நிலை குலையும்; பாவங்கள் பலவிதங்களில் பெருகும். அந்தச் சூழலிலிருந்து மானிடர்கள் யாரும் தப்ப முடியாது. அதனால் வைகுண்டத்திற்கு யாரும் வரமாட்டார்கள்,’’ என்றார்கள்.

    உடனே பெருமாள் சொன்னார்: ‘‘கலியுகத்தில் பக்தி பெருகும். தர்மம் செய்பவர்கள் பெருகுவார்கள். அப்படி சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கட்டும்,’’ என்று அருளினார். இப்படி பெருமாள் அருளியது, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில். இப்படி பல புராண வரலாறுகள் இருந்தாலும், வைணவ ஏகாதசி அன்று சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இருக்கும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பெரும்பாலான வைணவக் கோயில்களில் பரமபதவாசல் என்று ஒரு சந்நதி இருக்கும். இந்த வாசல், வடக்கு நோக்கி இருப்பதைக் காணலாம். இது மூடப்பட்டே இருக்கும். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி திதி அன்று மட்டும் இந்தக் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசல் வழியாக அன்று பெருமாள் பிரவேசிக்கும்போது, பக்தர்கள் பின்தொடர்ந்து செல்வார்கள். இதனால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற ஸ்ரீரங்கத்துக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள்.

  • indraya-rasi-palan

    டிசம்பர் 14
    விளம்பி வருடம் – கார்த்திகை 28
    சுபமுகூர்த்த நாள்
    14-டிச-2018 வெள்ளி
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 1.45
    நட்சத்திரம் : சதயம் இ 8.51
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – லாபம்
    மிதுனம் – வரவு
    கடனம் – செலவு
    சிம்மம் – கவலை
    கன்னி – துயரம்
    துலாம் – பயம்
    விருச்சிகம் – ஆதாயம்
    தனுசு – தனம்
    மகரம் – குரோதம்
    கும்பம் – அன்பு
    மீனம் – சுகம்