Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Sri Biravar Arulasi Pera Vazhipadu

    ஸ்ரீ பைரவரின் அருளாசியைப் பெறவும், பைரவரின் காட்சி பெறவும், உங்கள் துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நீங்கவும், உங்களின் நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற இதனை பின்பற்றி பாருங்கள்.

    தொடர்ந்து ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் சன்னிதானத்திற்கு செல்லுங்கள். 

    இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, அருகிலே அமர்ந்து குறைந்தது பதினைந்து நிமிடமாவது உங்களுடைய பிரார்த்தனை அல்லது கோரிக்கை மனதில் நிறுத்தி தியானம் செய்யுங்கள்.

    பிரார்த்தனை செய்து முடித்தப்பின்னர், பிரசாதத்தில் பாதியை அங்கே இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். மீதியை நீங்கள் வீட்டுக்குக் கொண்டு செல்லுங்கள்.

    அடுத்த சில மணித்துளிகள், நாட்கள், வாரங்களில் உங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறிவிடும். முடிந்தால் இத்துடன் மரிக்கொழுந்து, செவ்வரளி, அவல்பாயாசத்துடன் பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.
     

  • Anjaneyar Jayanthiku 1 lakh Vadai Malai

    அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சார்த்துவதற்காக ஒரு லட்சத்து எட்டு வடை கொண்ட மாலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர அனுமன் சிலை கை கூப்பியபடி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக் கோயிலில் வரும் சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள்  நடைபெறவுள்ளது.

    காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெறும். விழாவுக்காக வடை  தயாரிக்கும் பணி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று  வருகிறது. 

    இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்க , 2 ஆயிரத்து 250 கிலோ வடை மாவு, 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம், 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 

    இந்தப் பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்து மாவு அரைத்து வடை தயாரிக்கும் பணி இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. இவை அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு சாத்தி பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

  • Dhoshangalai Neekum Pradhosham

    இன்று குருவாரப் பிரதோஷம். ஈசனை வழிபட மானிடர்களுக்கு குறிக்கப்பட்ட காலமே இந்த பிரதோஷ காலம். 

    ஏனைய நாட்களில் சிவனை மட்டுமே பிரதானமாக வணங்கும் நாம் ,பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவானும் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களின் வேண்டுதல்களை இறைவனிடம் கொண்டு சேர்ப்பார்.அன்று தன்னை வணங்குபவர்களுக்கு எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்களது கோரிக்கைகள் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

    ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதிப் பிரதோஷம் என்றும், திங்களன்று வரும் பிரதோஷம் சோமவாரப் பிரதோஷம், செவ்வாய்க்கிழமை பிரதோஷம் மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம்,சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம் சனிப் பிரதோஷம் என கூறப்படுகிறது. அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் சனி பகவான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. 

    பிரதோஷ நாளில், விரதம் இருப்பவர்கள் ,காலையில் இருந்து பிரதோஷ காலம் வரை எதுவும் சாப்பிடாமல்,மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்வார்கள். பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடலும்,மனமும் நலம் பெறும்.

    சிவப் பெருமான் அபிஷேகப் பிரியன் என்பதால், அபிஷேகத்திற்கு கறந்த பசும்பால், இளநீர் வாங்கித் தரலாம். ஈசனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். வில்வ இலை மற்றும் தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    பிரதோஷ கால வழிபாடு நம்முடைய எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டும். தென்னாட்டுடைய சிவனே போற்றி – எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

  • Thiruppavai padal

    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
    மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
    தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.

    பொருள்:

    “”குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?

    விளக்கம்:

    பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம்.”நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து “நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கிசைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் “நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.
     

  • January 3 Rasi Palangal

    ஜனவரி 3 
    விளம்பி வருடம் – மார்கழி 19
     பிரதோஷம் 
    03-ஜன-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    திரையோதசி    அ.கா    4.58
    நட்சத்திரம்    :    அனுஷம்    ம    1.21
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   உயர்வு 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – லாபம் 
    கடனம் –  அன்பு 
    சிம்மம் – இன்சொல் 
    கன்னி – வரவு
    துலாம் –  தடங்கல்
    விருச்சிகம் – பகை 
    தனுசு – ஆசை
    மகரம் – சுபம்  
    கும்பம் – வாழ்வு 
    மீனம் – சாதனை

  • 20 Types of Pradhoshams

    சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது. 

    குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும்] நன்றாகும்..

    20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

    1.தினசரி பிரதோஷம் :
    தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

    2. பட்சப் பிரதோஷம் :
    அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

     
    3. மாசப் பிரதோஷம் :
    பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

    4. நட்சத்திரப் பிரதோஷம் :
    பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

    5. பூரண பிரதோஷம் :
    திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

    6. திவ்யப் பிரதோஷம் :
    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    7.தீபப் பிரதோஷம் :
    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

    8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :
    வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

    9. மகா பிரதோஷம் :
    ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

    குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.
     
    10. உத்தம மகா பிரதோஷம் :
    சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

    11. ஏகாட்சர பிரதோஷம் :
    வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

    12. அர்த்தநாரி பிரதோஷம் :
    வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

    13. திரிகரண பிரதோஷம் :
    வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

    14. பிரம்மப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

    15. அட்சரப் பிரதோஷம் :
    வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

    16. கந்தப் பிரதோஷம் :
    சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    17. சட்ஜ பிரபா பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    18. அஷ்ட திக் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    19. நவக்கிரகப் பிரதோஷம் :
    ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    20. துத்தப் பிரதோஷம் :
    அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்…
     

  • viralimalai murugan temple padi poojai

    விராலிமலை முருகன் கோயிலில் திருப்புகழ், திருப்படித் திருவிழாவும்  நடைபெற்றது. அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி  வழங்கியதாக கூறப்படும் விராலிமலை முருகன் கோயிலில் நால்வர் திருவருட் சங்கப்பேரவை சார்பில் திருப்படித் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை மலைமேல் முருகன் வள்ளி  தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    நேற்று காலை திருப்புகழ் திருப்படித்திருவிழா துவங்கியது. முருகன் வள்ளி தெய்வானைக்கு 32 சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு முருகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு வெள்ளி கவச மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். அதை தொடர்ந்து மலை அடிவாரத்தில் படி வாசலில் திருவடிப்பூஜை நடைபெற்றது.

    பின்னர் பேரவையினறும் பக்தர்களும் திருவிளக்கு பூஜையும், கோமாதா பூஜையும் செய்து தோரோடும் திருவீதி வலம் வந்து அடிவாரத்தில் இருந்து ஒவ்வொரு படிக்கும் பூஜைகள் செய்து திருப்புகழ்  பாடி மலைமேல் வந்து முருகனை வழிபட்டனர். தொடரந்து முருகனுக்கு சிறப்பு மஹாதீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது.
     

  • Samayapuram Mariamman Koil Thaipoosa thiruvizha

    சக்தி தலங்களில் ஆதிபீடமாகவும் விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    12-ந் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் சென்றடைகிறார். இதேபோல் வருகிற 20-ந் தேதி வரை மாலையில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்மன் தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு, இரவு 11 மணிக்கு வீதியுலா வந்து ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார்.

     21-ந் தேதி காலை 7 மணிக்கு அம்மன், தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம் வழியாக வட திருக்காவேரிக்கு சென்றடைகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடக்கிறது. இரவு 10 மணி முதல் 11 மணிவரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 22-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    காலை 6 மணிக்கு வட காவேரியில் இருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி, இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தை அடைகிறார். இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் வீதியுலா சென்று, அர்த்தஜாம பூஜை நடைபெற்று கோவில் நடை சாத்தப்படுகிறது.

  • Kanchi Maha Periyava Aradhanai Vizha

    காஞ்சி மகாபெரியவரின் ஆராதனையையொட்டி இன்று காஞ்சி சங்கரமடம், அங்கே உள்ள அதிஷ்டானம் மற்றும் பல ஊர்களிலும் காஞ்சி மகானுக்கான சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன. இதையொட்டி அவருக்கான சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் வழிபாடுகளும் விமரிசையாக செய்யப்பட்டன.

    காஞ்சிபுரத்தில், மகாபெரியவரின் அதிஷ்டானம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல், திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் உள்ளது. இங்கு மகாபெரியவரின் ஆராதனை விழா, விமரிசையாக நடத்தப்பட்டது. இதையொட்டி, ஆஸ்ரமத்தில் அதிருத்ர மகா யக்ஞ பூஜை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
     

  • Kanchi Maha Periyaval Photos

    காஞ்சி மகாபெரியவா காணக்கிடைக்காத புகைப்படங்கள்