Author: சக்தி ஆன்லைன் டீம்

  • 2016-07-27-05-28-39

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சிறப்புப் பூஜைகளுடன் உண்ணாமுலையம்மன் சன்னிதியில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ம் தேதி வரை தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், ஸ்ரீபராசக்தி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாலை கோயில் வளைகாப்பு மண்டபத்தில் ஸ்ரீபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், வளைகாப்பு உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே தீ மிதி திருவிழா நடைபெறுகிறது. இத்துடன், இந்தக் கோயிலின் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • 2016-07-27-05-39-48

    ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் விழா கோலம் பூண்டுள்ளது. கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 5ம் படைவீடாக திகழும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி முதலான விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

    28ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா, தெப்பத்திருவிழாவும் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இன்று ஆடி பரணியும், 28ம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.

  • 2016-07-26-02-24-44

    கர்நாடகாவின் சிறந்த சுற்றுலா தளமான கூர்க் பகுதிக்கு செல்பவர்கள் அவசியம் அங்குள்ள திபெத்திய கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும். அது நிச்சயம் உங்கள் வாழ்நாளில் ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும். மைசூரில் இருந்து குடகின் தலைக்காவிரி உற்பத்தியாகும் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஊர்தான் குஷால்நகர்.  இந்த குஷால்நகருக்கு அருகில் உள்ள பைலகுப்பா பகுதியில் இருக்கிறது ஒரு குட்டி திபெத். இங்கு பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Namdroling Monastry என்ற திபெத்திய கோவிலுக்குள் சென்றால் கிழக்காசிய தேசம் ஒன்றில் இருப்பதைப் போல் இருக்கிறது.

    திபெத்துக்கு அடுத்தபடியாக புத்த துறவிகள் அதிகம் இருப்பது இந்த பகுதியில் தான் என்றும் சுமார் 7000 புத்த துறவிகள் இங்கு இருப்பதாகவும் சொல்கிறார்கள். இங்கிருக்கும் புத்த மடாலயங்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது.

    திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும்போது பைலகுப்பே பகுதிக்கும் பலர் குடிபெயர்ந்தனர். புத்த சமயத்தை பரப்புவதற்காக  Penor Rinpoche என்பவரால் 1963ஆம் ஆண்டு கூர்க்கில் ஒரு மடம் உருவாக்கப்பட்டு சன்னியாசிகள் மற்றும் துறவிகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்த மடத்தின் முழுப் பெயர் “Thekchog Namdrol Shedrub Dargye Ling” சுருக்கமாக “Namdroling”.

    இங்கு உள்ள 60 அடி உயர தங்க புத்தர் சிலை, பத்மசாம்பவா சிலை, அமித்யாயுஸ் சிலை ஆகியவை தங்க முலாம் பூசப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் தகதகவென மின்னுகின்றன. நடுவில் இருக்கும் புத்தர் நமக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். வலப்பக்கம் இருக்கும்  பத்மசாம்பசிவா “இரண்டாவது புத்தர் ” என்று திபெத்தியர்களால் அழைக்கப்படுகிறார். இவர்தான் புத்த சமயத்தை திபெத் மக்களிடம் பரப்பியவர். இடப்பக்கம் இருக்கும் புத்த அமித்யாயுஸ், அரசராக இருந்து பௌத்த மதத்தை தழுவியவர். இவருடைய சிலையை நிறுவியவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோல இந்த கோவிலின் கோபுரங்களுக்கும் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த கோவிலே கெகஜ்ஜோதியாக காட்சியளிக்கிறது.

    கோவிலுக்குள் உள்ள சுவர்களில் புத்த மத இதிகாச சம்பவங்களை நினைவு கூறும் பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு இருப்பது நம்முடைய கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இப்படி ஆர்வமாக கோவிலை சுற்றிப் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, வழிபாடு செய்யும் நேரம் வந்தது. வழிபாட்டை தொடங்குவதற்கு முன் பச்சை துணி போர்த்தியிருக்கும் மிகப்பெரிய மணியை அடிக்கிறார்கள். சத்தம் கேட்டதும் ஆங்காங்கே குழுமியிருக்கும் துறவிகள் ஒன்று சேர தொடங்குகிறார்கள். வழிபாட்டுக்கு செல்லும் போதே அத்தனை பேரும் வரிசையாக அணிவகுத்து தான் செல்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் நேர்த்தியை கடைபிடிப்பது இங்கிருப்பவர்களின் சிறப்பு.

    மணி அடித்ததும் 100க்கணக்கான புத்த துறவிகள் கோவிலுக்குள் வந்து கீழே அமைக்கப்பட்டு இருக்கும் அவரவர் இடத்தில் அமர்ந்து வழிபாட்டை தொடங்குகிறார்கள். அனைவரும் ஒரு சேர தங்கள் முன் வைத்திருக்கும் புனித நூலில் இருக்கும் வரிகளுக்கு ஏற்ப இசையுடன் வழிபாடு நடத்தியது பார்ப்பதற்கே பரவச அனுபவமாக இருந்தது. இந்த வழிபாட்டை நாம் அருகில் இருந்தே பார்க்கலாம். ஆனால் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. வழிபாட்டின் நடுவே அனைவருக்கும் அருந்துவதற்காக பால் வழங்கப்படுகிறது.

    கோவிலை சுற்றிலும் பச்சை பசேலென்று பூங்காவை அமைத்து வெகு அழகாக பராமரித்து வருகிறார்கள். அனைத்தும் அத்தனை நேர்த்தியாக இருக்கிறது.. 

    கோவிலுக்கு உள்ளே திபெத்தில் உள்ள PALYUL MONASTRY இன் மினியேச்சரை அமைத்திருக்கிறார்கள். மலை முகட்டில் குட்டி குட்டியாய் வீடுகள் அந்த அழகிற்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகு சேர்க்கின்றன. அமைதியை விரும்புவர்கள் இந்த கோவிலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள். ஆழ்ந்த அமைதியுடன் நானும் என் கணவரும் நிம்மதியாக ரசித்தோம்.

    கோவிலுக்கு உள்ளேயே சில கடைகள் இருக்கின்றன. இங்கு பாரம்பரிய திபெத் உடைகள், பொருட்கள், சிலைகள், நகைகள், சந்தன சோப்பு வகைகள், சென்ட் வகைகள் என பல்வேறு பொருட்கள் இருப்பதால் ஆன்மீகத்துடன் சேர்ந்து ஆனந்தமான ஷாப்பிங் அனுபவமும் கிடைக்கிறது.

    – ஹேமா ராக்கேஷ்

    தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர். ஆவணப் பட இயக்குனரும் கூட.. தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பூந்தளிர்கள் என்ற ஆவணப்படம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. முகநூலில் சாதனை பெண்களை அடையாளப்படுத்த ஆராதனா என்ற பக்கத்தில் பல சாதனை பெண்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

  • 10

    வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஆடிக்குண்டம் விழா துவங்கியதை அடுத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீமிதித்து அம்மனை வழிப்பட்டனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 24ம் தேதி கொடியேற்றப்பட்டு, நேற்று பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை, 3 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினார்.

  • 27

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் உள்ள காந்திமதியம்மன் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன் சன்னதியில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி ஜூலை 27 ஆம் தேதி காலை 6.15 முதல் 7.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன்பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற உள்ளது. இம் மாதம் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு காந்திமதியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். பத்தாம் திருநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் இக் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாளும், அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடுகளும் நடைபெற உள்ளன.

  • 2016-07-26-16-22-36

    திருப்பதி ஏழுமலையானை உடனடியாக தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்கும் முறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    சென்னை, கோவை, ஐதராபாத், புதுச்சேரி போன்ற நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர அரசின் சொகுசு பேருந்துகளில் செல்லும் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

    ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட் பெறும் திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலமும், திருப்பதி மற்றும் தேவஸ்தானம் அங்கீகரிக்கப்பட்ட கோயில்களிலும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இப்போது கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

  • 28

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி முதல்முறையாக லட்ச ருத்ர பாராயணம், கோடி அர்ச்சனை வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது.

    இந்த பாராயணம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை 50 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி தொடங்கும் பாராயணம் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். இந்த பாராயணத்தில் 100 தீட்சிதர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், 100 பேர் கோடி வில்வ அர்ச்சனை செய்ய உள்ளனர்.

    நிறைவு நாளான செப்டம்பர் 15ஆம் தேதி லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறும். ஹோமத்துக்கு கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, காவிரி, சிந்து உள்ளிட்ட சப்த நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் கொண்டு வரப்படும்.

  • 2016-07-25-17-00-54

    அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் 30-ஆம் தேதி வரை ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

    இக்கோயிலில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை திருவிழா செவ்வாய்க்கிழமை ஆடி அஸ்வினியுடன் தொடங்குகிறது. 27-ஆம் தேதி ஆடி பரணியும், 28-ஆம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.
    அன்று மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் மலைக்கோயிலில் இருந்து முருகப்பெருமான் மலையடிவாரத்தில் உள்ள சரவணப்பொய்கையில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.
    இரவு 7 மணிக்கு முதல்நாள் தெப்பத் திருவிழா நடை பெறுகிறது. 29-ஆம் தேதியன்று இரண்டாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் இன்னிசை கச்சேரியும், 30-ஆம் தேதியன்று மூன்றாம் நாள் தெப்ப நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு ஸ்ரீ குருமண்டலம் வீரமணிதாசன் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

  • 2016-07-24-01-26-11

     ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம், பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆவார். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம். ஆதிபரம்பொருளாகிய இறைவன் தன் சக்தியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என மூன்று அம்சங்களாகப் படைத்தார். பிரம்மதேவர் படைப்புத் தொழிலில் தனக்கு உதவிபுரிய சப்த ரிஷிகளை உருவாக்கினார். அந்த ஏழு ரிஷிகள் மூலம் மனித, அசுர இனங்கள் தோன்றின. அந்த ஏழு ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன்தான் பிரகஸ்பதி எனும் வியாழ பகவான்.

    வியாழ நோக்கம்:

    திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குரு பார்வை என்று சொல்லப்படும் வியாழ நோக்கம் திருமணத்துக்கு முக்கியமாக தேவைப்படுகிறது. வியாழ நோக்கம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்க முடியும்.

    குருவின் பலம்:

    குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

    குரு மாற்றம்:

    நிகழும் மங்களகரமான 1191ம் ஆண்டு ஸ்வஸ்திஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம் க்ரீஷ்மரிது ஆடி மாதம் 18ம் நாள் – இங்கிலீஷ் ஆகஸ்டு 2ம் தேதி 2016 – செவ்வாய்கிழமை அமாவாசையும் பூசம் நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் சதுஷ்பாத கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை மணி 9.53க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    பெயர்ச்சியாகும் குரு பகவான் ஹேவிளம்பி வருடம் – ஆவணி மாதம் 17ம் தேதி – இங்கிலீஷ் 02 செப்டம்பர் 2017 வரை – கன்னி ராசியில் இருந்து அருள் வழங்குகிறார்.

    கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு குரு பகவான் மாறும் முன்ஹேவிளம்பி வருடம் – ஆடி மாதம் 11ம் தேதி – இங்கிலீஷ் 27 ஜூலை 2017 அன்று – ராகு கடக ராசிக்கும் – கேது மகர ராசிக்கும் மாறுகிறார்கள். சனிப் பெயர்ச்சி இல்லை.

    பொது பலன்கள்:

    கன்னிக்கு மாறும் குருபகவான் கன்னியா லக்னத்திலேயே மாறுகிறார். கன்னிக்கு அதிபதி புதன். சூரியன் நக்ஷத்ரமான உத்திர நக்ஷத்ரத்தின் சாரத்தில் குரு பகவான் இருக்கிறார். குருப் பெயர்ச்சியின் போது சனி பகவான் குரு பகவானிற்கு தைரிய வீர்ய ஸ்தானத்திலும் – கேது ரண ருண ரோக ஸ்தானத்திலும் – ராகு விரையஸ்தானத்திலும் இருக்கிறார்கள். தொழில் துறை வளர்ச்சியடையும். பொருளாதாரம் நல்ல நிலையை அடையும். கல்வி சார்ந்த விஷயங்களில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்படும். அரசு எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு ஆதரவாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறை ஏற்றம் பெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு நன்மக்கள் கிடைப்பார்கள். வயிறு சம்பந்தமான புதிதான வியாதி ஒன்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். திருமணம் அதிகமாக இருக்கும். தன்னுடைய வீட்டை குரு பார்க்க இருப்பதால் தெய்வம் சம்பந்தமான அனைத்து காரியங்களும் நல்லபடியாக நடக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அன்னிய செலவானி அதிகரிக்கும்.

    பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

    ஏற்றம் பெறும் ராசிகள்: ரிஷபம் – மகரம் – மீனம்

    நடுத்தரமாக பலன்கள் பெறும் ராசிகள்: மிதுனம் – சிம்மம் – கன்னி – விருச்சிகம் – தனுசு

    பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் – கடகம் – துலாம் – கும்பம்

     குரு பகவானின் நக்ஷத்ர சஞ்சாரம்:

    ஸ்ரீதுன்முகி வருஷம்:

    ஆடி மாதம் 18ம் தேதி – நாழிகை 8.33 – உத்திரம் 2ம் பாதம் – சூரியன் சாரம்

    ஆவணி மாதம் 03ம் தேதி – நாழிகை 35.04 – உத்திரம் 3ம் பாதம் – சூரியன் சாரம்

    ஆவணி மாதம் 19ம் தேதி – நாழிகை 55.22 – உத்திரம் 4ம் பாதம் – சூரியன் சாரம்

    ஆவணி மாதம் 26ம் தேதி – நாழிகை 26.00 – மேற்கே அஸ்தமணம்

    புரட்டாசி மாதம் 4ம் தேதி – நாழிகை 32.52 – ஹஸ்தம் 1ம் பாதம் – சந்திரன் சாரம்

    புரட்டாசி மாதம் 20ம் தேதி – நாழிகை 13.31 – ஹஸ்தம் 2ம் பாதம் – சந்திரன் சாரம்

    புரட்டாசி மாதம் 25ம் தேதி – நாழிகை 26.00 – கிழக்கே உதயம்

    ஐப்பசி மாதம் 05ம் தேதி – நாழிகை 55.36 – ஹஸ்தம் 3ம் பாதம் – சந்திரன் சாரம்

    ஐப்பசி மாதம் 22ம் தேதி – நாழிகை 51.46 – ஹஸ்தம் 4ம் பாதம் – சந்திரன் சாரம்

    கார்த்திகை மாதம் 10ம் தேதி – நாழிகை 20.57 – சித்திரை 1ம் பாதம் – செவ்வாய் சாரம்

    மார்கழி மாதம் 02ம் தேதி – நாழிகை 19.38 – சித்திரை 2ம் பாதம் – செவ்வாய் சாரம்

    தை மாதம் 03ம் தேதி – நாழிகை 52.13 – சித்திரை 3ம் பாதம் – செவ்வாய் சாரம்

    தை மாதம் 20ம் தேதி – நாழிகை 26.00 – வக்ரம் ஆரம்பம்

    மாசி மாதம் 26ம் தேதி – நாழிகை 20.20 – சித்திரை 2ம் பாதம் – செவ்வாய் சாரம்

    பங்குனி மாதம் 26ம் தேதி – நாழிகை 53.11 – சித்திரை 1ம் பாதம் – செவ்வாய் சாரம்

    ஸ்ரீஹேவிளம்பி வருஷம்:

    சித்திரை மாதம் 21ம் தேதி – நாழிகை 57.42 – ஹஸ்தம் 4ம் பாதம் – சந்திரன் சாரம்

    வைகாசி மாதம் 18ம் தேதி – நாழிகை 26.00 – வக்ர நிவர்த்தி

    ஆனி மாதம் 32ம் தேதி – நாழிகை 17.12 – சித்திரை 1ம் பாதம் – செவ்வாய் சாரம்

    ஆடி மாதம் 26ம் தேதி – நாழிகை 57.58 – சித்திரை 2ம் பாதம் – செவ்வாய் சாரம்

    ஆவணி மாதம் 17ம் தேதி – நாழிகை 8.32 – சித்திரை 3ம் பாதம் – செவ்வாய் சாரம்

                    

                    

     

     

  • 2016-07-24-07-06-38

    ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
    ஆடிப் பெருக்கு விழாவினை கொண்டாட, மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளார் .

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக விடுவிக்கப்பட்டுவரும் 2000 கனஅடி நீருடன் கூடுதலாக ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படும் என கூறியுள்ளார்.

    இதன்படி நாளை முதல் நான்கு நாளுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதமும், அதன்பிறகு 3 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 1000 கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.