Author: cmsadmin

  • திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு….

    திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறையில் விரைவில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
    மலைப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 6 முதல் 15 மணி நேரத்திற்கு மேலாகவும், இலவச தரிசன பக்தர்கள் 10 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாகவும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    இதையடுத்து கடந்த ஆண்டு முதல் ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 1 மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் என ‘டைம் ஸ்லாட்’ முறை பின்பற்றப்படுகிறது.
    அந்த டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சுமார் 1 மணி முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
    இந்நிலையில், மலைப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டால், பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடியும் என தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
    அதன்படி, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில், பாதயாத்திரையாக வந்து, திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், நேரம் ஒதுக்கீடு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
    அதற்கான மென்பொருட்கள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் மலைப்பாதையில் வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, வைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திவ்ய தரிசன டிக்கெட்டுக்கான வரவேற்பு அறைக்கு சென்றால், சுமார் 1 மணி அல்லது 2 மணி நேரத்தில் சுலபமாக சுவாமி தரிசனம் செய்யலாம்.

  • திருப்பதி ஆன்லைன் தரிசனத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்!

    ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கு அறைகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தேவஸ்தானம் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு ஆகியவற்றுக்காக ஆதார் அட்டை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தைக் காண்பிக்கலாம்.
    ஆன்லைன் முன்பதிவின் போது பக்தர்களின் புகைப்படம் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் முதியோர், மாற்று திறனாளி பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அவர்களது உதவிக்காக பேட்டரி கார்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெள்ளி வாசல் முதல் தங்க வாசல் வரை ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆலோசித்து வருவதாகவும் விரைவில் கூட்டநெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • செந்தூர் முருகனுக்கு திருக்கல்யாணம்…

    திருச்செந்தூர் கோயிலில் நவம்பர் 6 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சனிக்கிழமை மாலை கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருக்கோவில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடக்கிறது.

    தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளத்தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு சேர்கிறார். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு வந்து, தெற்குரதவீதி-மேலரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமி-அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நள்ளிரவு திருக்கோவிலில் வைத்து திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

  • வெற்றி வேல் வீரவேல் முழக்கத்துடன் சூரசம்ஹாரம்

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் முழக்கமிட சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது. அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
    கந்த சஷ்டியை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
    அப்போது பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் என்று முழக்கமிட்டனர்.

  • சூரசம்ஹாரம் இல்லாத முருகன் தலம்….

    முருகனின் அறுபடை வீடுகளுள் ஐந்தாம் வீடாக விளங்குவது திருத்தணி. இக்கோயிலின் சிறப்பம்சம் சரவணபொய்கை ஏரி. முருகன் கார்த்திகேயனாக அவதாரம் எடுத்ததும் இந்த ஏரியில்தான் என்ற வரலாறும் உண்டு.
    ஆண்டுதோறும் முருகன் தலங்களில் கந்தசஷ்டி தினத்தன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெறும்.
    ஆனால், முருகன் கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் திருத்தணி முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் செய்யவதில்லை.
    அன்றைய தினம் முருகனை குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படும். அப்போது 1000 கிலோ எடையுள்ள பூக்கள் பயன்படுத்தப்படும்.
    இக்கோயிலில் சந்தனக்காப்புக்கு சாதாரண சந்தனம் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, இந்திரனே காணிக்கையாக செலுத்தியதாக கருதப்படும் சந்தனக்கல்லில் அரைக்கப்பட்ட சந்தனத்தால்தான் இங்கு சந்தனக்காப்பு செய்யப்படும்.

  • திருச்செந்தூரில் நவம்பர் 5 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, யாக சாலை பூஜையுடன் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை)நடைபெறுகிறது.

    இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது திருச்செந்தூர் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    திருச்செந்தூரில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

     

  • தாயார் ரங்கநாயகி தாயாருக்கு புதிதாக திருமாங்கல்யம்

    108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் அரங்கநாதர். தாயார் ரங்கநாயகி. தற்போது தாயாருக்கு புதிதாக திருமாங்கல்யம் சாத்தப்பட உள்ளது. இத்திருமாங்கல்யத்தை தமிழகத்தில் உள்ள பிரபல நகைக் கடையின் உரிமையாளர் வழங்குகிறார்.

  • திருமலையில் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகாந்த சேவை….

    திருப்பதி திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தம் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகாந்த சேவை தொடங்கியது.
    அஞ்ஜனாத்திரி மலையில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி தீர்த்தக்கரையில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலில், திருமலைக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ஆஞ்சநேயரை வணங்கிச் செல்வது வழக்கம்.
    தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோயில் திறந்திருக்கும். அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல தேவஸ்தானம் படிகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் இதுவரை ஏகாந்த சேவை நடத்தப்படவில்லை. அதனால் கோயில் பூஜாரி மாதவதாஸ் தலைமையில் முதல்முறையாக தீபாவளி நாளான கடந்த 29-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவை தொடங்கப்பட்டது.
    ஏகாந்த சேவையின்போது பயன்படுத்தப்படும் ஊஞ்சல் வடிவ மரக்கட்டில், பட்டால் ஆன மெத்தை, தலையணை, துப்பட்டி உள்ளிட்டவற்றை பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
    தற்போது, உள்ளூர்வாசிகள், பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் ஏகாந்த சேவையில் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர்.

  • சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்….

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    சுப்பிரமணிய சுவாமி கந்தசஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கும், 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கும் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 3-ஆம் நாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
    அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவருக்கு உச்சிகால அபிஷேகத்துக்கு பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
    இதையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முகவிலாச மண்டபத்துக்கு வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  • திருப்பதி நகரத்தை அழகுபடுத்த ரூ.188 கோடி…

    திருமலை, திருப்பதி நகரத்தை அழகுபடுத்த 188 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களில் நடைபெற உள்ள மனகுடி திருவிழாவுக்காக ரூ.66 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    அதேபோல நவம்பர் மாதம் இறுதியில் ஐதராபாத்தில் உள்ள சன்சாபாத் நகரில் சீனிவாச கல்யாண உற்சவத்தை நடத்துவது எனறும், திருமலை, திருப்பதி நகரை அழகுபடுத்தவும், மின் விளக்குகள் அமைக்கவும், பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.188 கோடி நிதி ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
    மேலும், சொர்லோப்பள்ளி, சீனிவாசமங்காபுரம் சாலைகளை சீர் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்குவது. 6 மாதங்களுக்குத் தேவையான 21 லட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையிலான நெய் கிலோ ரூ.364 வீதம் ரூ.78 கோடியே 28 லட்சம் செலவில் கொள்முதல் செய்வது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சந்திரபிரபை வாகனம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் செலவில் தாயார் செய்வது. அதற்காக 165 கிலோ எடையிலான வெள்ளியை வழங்குவது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆராதனை பீடம், சிம்மாசனம் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் செலவில் தங்க முலாம் பூசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.