Author: cmsadmin

  • “நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன் ”

    என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால், உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன் – சாயி

    மும்பை  பகுதியின்  தானே என்ற பிரதேசத்தில் பாபாவின் அடியவரான  சோல்கர் என்பவர்  வசித்துவந்தார். சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து அவர் , உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும்பத்தைப் நிர்வகிக்க கூடிய சூழலில் இருந்தார் .  தற்காலிக ஊழியராக இருக்கும்  அவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்று  நிரந்தர ஊழியரானால்  ,தனது சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும் என நினைத்தார் . அவர் பாபாவிடம் ,“ பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றிபெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி சீரடி வருவேன். உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு சீரடியில் கல்கண்டு வினியோகம் செய்வேன்! ” என்று வேண்டிக்கொண்டார் . பாபாவைப் பூரணமாக நம்பிய அவர் , தேர்வுக்கு தயாரானார் .பாபாவிடம்  நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்து ,அதில் வெற்றியும் பெற்றார் .  

    தெய்வத்தை நம்பியவர்கள் கைவிடப்பட்டது இல்லை . நடமாடும் தெய்வமான பாபாவை நம்பியவர்களை அவர்  கைவிட்டதும் இல்லை . தேர்வில் சோல்கர் வெற்றிபெற்றார். அவரது பணியும்  நிரந்தரமாக்கப்பட்டது. சோல்கர் தனது பிராத்தனையை நிறைவேற்ற முடிவு செய்தார் . ஆனால் அதற்கு பணம் தேவைப்பட்டது .  அதற்கு  தனது அன்றாட செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க எண்ணினார். எனவே, இனிமேல் அவர் தனது தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என முடிவெடுத்தார். அதனால் செலவு மட்டுப்பட்டு சீக்கிரமே அவரால் சீரடி பயணத்திற்கான பணத்தை சேகரிக்க முடிந்தது. தான் சேமித்த பணத்தின் மூலம் சீரடி வந்த அவர், பாபாவைப் பார்த்ததும் மெய்மறந்தபடி நின்றார் .  மக்களின் துயர் துடைக்க ,மனித வடிவெடுத்த கடவுள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது. பரவசம் அவரைத் தொற்றிக் கொள்ள பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பாபா அவரையே கனிவோடு பார்த்தார் . ஆனால் எதுவும் பேசவில்லை. பின் சோல்கர் , பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் . இதை பார்த்துக் கொண்டிருந்த  பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை தன்னருகே அழைத்தார். “அதோ அங்கே என் அன்பர்களுக்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள் ”என்றார் . அங்கிருந்த  அடியவர்களுக்கு பாபா எதைப் பற்றி சொல்கிறார் என்று  புரியவில்லை.

    ஆனால், சோல்கருக்கு அதன் அர்த்தம் புரிந்தது.  தாம் ஷிர்டி வருவதற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச்சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். மனம் நெகிழ்ந்து  ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார். அவரை தனது தாமரை மலர் போன்ற கரங்களால்  தூக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்து , “ இரவும் பகலும் எப்போதும் உன் இதயத்தில் தானே நான் இருக்கிறேன். நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேனே அப்பா! நீ என்னை நாடி வருவதற்காக இனிப்பை தியாகம் செய்தது எனக்குத் தெரியாதா என்ன? ”என்றார் .  

    தனது அடியவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அந்த தெய்வம் தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா ? தன்னை மனத்தால் ஸ்மரிப்பவர்கள், எத்தனை தொலைவில் இருந்தாலும் தனது பார்வையும் , கருணையும் அவர்கள் மேல் எப்போதும் இருக்கும் என்பதை அந்த சீரடிவாசன் தனது பக்தர்களின் வாயிலாக இந்த உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் .

    தனது அடியவர்கள் மீது கருணை மழை பொழியும் சாயி நாதனின் சரிதம் தொடரும்…

    ஓம்  சாயி ராம் …

  • முருகனின் பெருமைகள் கூறும் அறுபடை வீடுகள்

    தமிழ் கடவுளான முருகபெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் அவரின் அறுபடை வீடுகளின் சிறப்புகளைப் பற்றி , இப்பதிவில் காண்போம் .

    திருப்பரங்குன்றம்:

    ஆறுமுகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாக போற்றப்படுவது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலாகும் . இங்கு அழகுக்கு இலக்கணமாக உருவகப்படுத்தப்படும் முருகப்பெருமான்  அழகிய மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற கையோடு , இந்திரனின் மகளான தெய்வானையை இந்த தலத்தில் திருமணம் செய்து கொண்டார். அமர்ந்த கோலத்தில் இருக்கும்  முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது வேறு எங்கும் காண இயலாத ஒன்றாக சொல்லப்படுகிறது .

    அசுரர்களிடம் சிறைப்பட்டிருந்த தேவேந்திரனையும், தேவர்களையும் , தாய் சக்தியின் அம்சமான வேலைக் கொண்டு சிறை மீட்டார்   முருகன் . அதற்கு நன்றிக் கடனாக இந்திரன்  தன் மகள் தெய்வானையை , போரில் வெற்றி பெற்ற மறுநாள் முருகனுக்கு  இத்தலத்தில் திருமணம் செய்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.   

    திருச்செந்தூர்:

    முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர்   கடலோரத்தில் அலைகளின் ஓங்கார  சப்தத்திற்கு மத்தியில் அமைந்துள்ளது . முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்காக ,போருக்கு  முன்னும் பின்னும் தங்கிய இடம். திருச்செந்தூரில்  முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்றதால் , கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .  அவர் போர் புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டி என்பதால் ,  கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது .  

    போரின் முடிவில்  பெரிய மரமாக நின்ற சூரபத்மனை  முருகன் இரண்டாக பிளக்கிறார் .  அதில் ஒரு பாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார் சேவற்கொடியோன் .    

    பழநி:

    வாழ்க்கையின் தாத்பரியத்தை மக்களுக்கு உணர்த்திய  சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி . போகர்  என்ற சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட இத்தலத்தின் முருகன் சிலையின்  மீது அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் எப்படிப்பட்ட நோயும்  தீரும் என்பது நம்பிக்கை .  நாரத முனி  கொண்டு வந்த ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி.

    சுவாமிமலை சிவகுருநாதன்:

    சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை  சிறையில் அடைக்கிறார் முருகன் .  அதற்கு விளக்கம் கேட்ட சிவனுக்கு , உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.    அதனால் தான் இத்திருத்தலத்தில் ‘சிவகுருநாதன்’ என்ற பெயரோடு அருள் தருகிறார் முருகன்

    திருத்தணி முருகன்:

    சூரனுடன் போரிட்ட போது மார்பில் ஏற்பட்ட காயத்தின்  தடத்துடன் இங்கு காட்சியளிக்கிறார் முருகன் . திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ,இத்திருத்தலத்தில்  கோபம் தணிந்து சாந்தமானார் . முருகனின் கோபம் தணித்த இடம் என்பதால் இவ்வூர்  ‘தணிகை ‘என பெயர் பெற்றது . இத்தலத்தில் பிரசாதமாக தரப்படும் அபிஷேக சந்தனத்தை பக்தர்கள் நீரில் கரைத்து குடித்தால் அவர்களின்  நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி.

    பழமுதிர்ச்சோலை :

    குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும். தன்னை வழிபடுபவர்களுக்கு  கல்வியறிவும், ஞானமும் தருபவராக இத்திருத்தலத்தில் அருள் புரிகிறார் முருகன் .

    முருகா …முருகாவென்றால்  உள்ளம் உருகாதா என்ற வரிகளுக்கு ஏற்ப , தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவைகளை  , அவர்கள் உள்ளம்,  நன்றியில் உருகும் வண்ணம் நிறைவேற்றிக்கொடுப்பவனே  வெற்றிவேலன் .

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – ( அப்பூதியடிகள் )

    அப்பூதி அடிகளார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் . அன்றைய சோழ நாட்டை சேர்ந்த திங்களூரில் வாழ்ந்த சிறந்த சிவபக்தர்  . நாயன்மார்களில் முதன்மையானவரான திருநாவுக்கரசரை  நேரில் பார்க்காமலேயே ,அவரைப்  பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம்  பெரும் மதிப்பும் , மரியாதையும் கொண்டு  இருந்தார். தன்னுடைய புதல்வர்களுக்கு மட்டுமல்லாமல் தான் ஆசையாக  வளர்த்த  பசு, எருமை, கன்றுகள், முதற்கொண்டு தன் வீட்டில் உபயோகப்படுத்தப்பட்ட தராசு, அளக்கும் கருவிகளான மரக்கால், படிகள் ஆகிய எல்லாவற்றிற்கும் நாவரசர் பெயரைச் சூட்டும் அளவிற்கு அவர் மேல் பக்தி கொண்டிருந்தார் .

    இது மட்டுமின்றி திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் பெயரால் மக்களுக்கு அன்னம்தானம் செய்தல் , சத்திரம் அமைத்துக் கொடுத்தல் , நீர் பந்தல் அமைத்தல்  என செய்து வந்தார் .  திங்களூருக்கு  வந்த திருநாவுக்கரர் அப்பூதியடிகளின் இந்த நற் தொண்டினை அறிந்து அவரைக் காண அவரின் இல்லத்திற்கு சென்றார்.

    அப்பூதியடிகளை நேரில் சந்தித்த திருநாவுக்கரசர், நீங்கள் அரும்பாடுபட்டு செய்யும் தர்ம காரியங்களுக்கு , ஏன் உங்கள் பெயர் வைக்காமல் ,  யாரோ ஒரு திருநாவுக்கரசரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்  என்று வினவினார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்த போதிலும் ,  சிவனருளால் சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதை  எடுத்துரைத்தார். மேலும் சிவனடியவருக்கு செய்யும் தொண்டு , அந்த சிவனுக்கே செய்வது போன்றது என்று எடுத்துரைத்தார். அப்பூதியடிகளின் களங்கமற்ற அன்பை புரிந்துக் கொண்டதும்   தானே திருநாவுக்கரசர் என்று தன்னை வெளிப்படுத்தினார் நாவுக்கரசர். இத்தனை காலம் தான் மனதிற்குள் வைத்து பூஜித்த திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் அவரை உணவு உண்ண அழைத்தார்.

    நாவுக்கரசருக்கு உணவு படைக்க வாழை இலையை அறுக்கச் சென்ற அப்பூதி அடிகளின் மகன் பாம்பு  தீண்டப்பட்டு  இறக்க நேரிடுகிறது . அந்த துயர நேரத்திலும் , மகன் இறந்து போனதால், திருநாவுக்கரசரை உணவு உண்ண தடை ஏற்படக்கூடாது என அப்பூதி அடிகளும், அவரது மனைவியும் துயரத்தினை மறைத்து உணவு இட்டனர். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைக்க ,  அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார். இதுவும்  இறைவனின் திருவிளையாடல் என  புரிந்துக்கொண்ட நாவுக்கரசர் இறைவன் மேல் பாடல்பாடி அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.

    இனி சிவாலயங்களுக்கு நாம் செல்லும் பொது , எம்பெருமான் சிவனை நெஞ்சார நிறுத்தி மனமுருக வாயாராப் பாடிய அறுபத்து மூன்று நாயன்மார்களை மனதார போற்றுவோம் .

  • திருப்பதி லட்டுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு…

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு மற்றும் முடி மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, நாள் முழுவதும் அன்னதானம், சிற்றுண்டி, பால், காபி, டீ, மோர் ஆகியவற்றை இலவசமாக அளித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும் என அறிவித்தது. இதனால், திருமலையில் உள்ள வாடகை அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகின. இதைதொடர்ந்து, தேவஸ்தானம் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. பின்னர், இறுதியாக மத்திய அரசு முடி அகற்றுவதற்கும், பக்தர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை லட்டுவில் இருந்தும் விலக்கு அளித்துத் தீர்ப்பளித்தாக, ஆந்திர நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணன் விஜயவாடாவில் அறிவித்துள்ளார். மேலும் தங்கும் அறையின் வாடகை ரூ.1000-த்திற்கு மேல் 12% வரி விதிக்கப்படும் என்று ஆந்திர அமைச்சர் கூறியுள்ளார்.

  • சபரிமலை புதிய கொடிமரம் 25ஆம் தேதி பிரதிஷ்டை

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் 25-ந்தேதி கொடிமரத்திற்கு பிரதிஷ்டை நடக்கிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதிய கொடி மரம் சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கொடி மரத்திற்கு விசே‌ஷ பூஜைகள் நடக்கின்றன. பிரசாத சுத்திகரிப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. வருகிற 22-ந்தேதி சகஸ்கர கலச பூஜை, ஜல பூஜை, 23-ந்தேதி கலச பூஜை, 24-ந்தேதி களபாபிஷேகம் போன்றவையும் நடக்கிறது. தொடர்ந்து 25-ந்தேதி காலை 11.50 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை உள்ள சுப முகூர்த்த வேளையில் கொடி மரத்திற்கு பிரதிஷ்டை நடக்கிறது.

  • ஆரோக்கியத்தை அள்ளித் தரும் யோகா

    ( ஜூன் 21 சர்வதேச யோகா தினம் )

    பாரத புண்ணிய பூமி உலகிற்கு பல அற்புத கலைகளை வழங்கியுள்ளது. இதில் தொன்மையான கலை தான் யோகா . நம்முடைய வாழ்க்கையில் முக்கியமான நன்மைகளை பெரும் போது , பணம், செல்வாக்கு , புகழ் என உயரும் போது அக்கம்பக்கத்தினர் எல்லாம் யோகம் தான் என்று சொல்வது வழக்கம். யோகா என்பதே இந்தியா உலகிற்கு கொடுத்த பெரும் யோகம்.

    யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம் .

    யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம்  சீராகும் , மன அழுத்தத்தை குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும் .

    அழகிய உடல் அமைப்பை பெறவும் சீரான  எடையை கடைபிடிக்கவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது.

    மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும்  யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும்  சரிசெய்கின்றது. யோசிக்கும் திறனை மேம்படுத்தும் தன்மை யோகாவிற்கு உள்ளது. மூளைக்கும் உணர்வுக்கும் சமநிலை இல்லாத நிலை ஆரோக்கியமற்றது. யோகா செய்வதால் முழுமையான உடல் அமைப்பையும், ஆரோக்கியத்தையும் பெற முடியும். மேலும் நோயற்ற வாழ்வை மகிழ்ச்சியுடனும், மன அமைதியுடனும் கொண்டாட முடியும்.

    யோகாசனங்களை தினமும் செய்தால், தொப்பையற்ற வயிற்றை பெறலாம்.

    யோகாவின் முலம் இதய நோய்களை கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடிகின்றது

    யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம். உட்கார்ந்த இடத்தில் வேலை பார்ப்பவர்களும், டிரைவர்களும் தினமும் யோகா செய்ய வேண்டும். இதனால் முதுகு தண்டுகளில் பிடிப்புகளை போக்க முடியும்.

    மூச்சு பயிற்சியால் சீரான சுவாசத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களை சீர்படுத்தி சீரான சுவாசதத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சு பயிற்சி உடல் வலிமையை கூட்டி மன அழுத்தத்தை போக்குகின்றது. முதுகு வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.

    கடினமான வேலையை செய்தவுடன் யோகா செய்தால், மன அழுத்தத்தை போக்கி கொள்ள முடியும். யோகா மட்டும் இல்லை மற்ற உடற்பயிற்சிகளாலும் மன அழுத்தத்தை போக்க முடியும்.

     ஆனால் ,புதிதாக பயில்பவர்கள் , நல்ல ஆசானின் துணைக்கொண்டு ஆரம்பித்தல் நல்லது . ஆசனங்களைச் செய்வதற்கு முன்பு உடலைத் தயார் நிலைப்படுத்துவதற்காக சில எளிய முன் பயிற்சிகள் செய்தல் வேண்டும்.ஆசனத்தின் முடிவிலும் இரு தடவைகள் மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும்.உடல் வளைந்து வலுக்கட்டாயமாக யோகா  செய்யக் கூடாது. அவரவர் தங்களால் இயலக் கூடிய ஆசனங்களையே செய்ய தவேண்டும்.ஆசனங்களை முடிக்கும் போது 3-5 நிமிடங்கள் வரை சவாசனம் செய்தே முடித்தல் வேண்டும். இறுதியாக நாடி சுத்தி, பிராணாயாமம் செய்து, 10-20 நிமிடங்கள் வரை தியானம் செய்வது நல்லது.

    நம்முடைய பல பாரம்பரியங்களை மறந்து விட்ட நிலையில் , மீண்டும் அவைகளை மீட்டெடுத்து நோயற்ற பெரு வாழ்வு வாழ்வோம் .  

  • திருப்பதி லட்டு விலை உயருமா?

    ஜி.எஸ்.டி வரி விதிப்பால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களுக்கு குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சேவை வரியிலிருந்து திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு இனி திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பொருந்தும். இதனால், திருப்பதியிலுள்ள தங்கும் அறைகள், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றின் விலை உயரும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • ரம்பா இளமை வரம் வாங்கிய கோவில்..

    ஏதோ ஒரு பெயர் தெரியாத பழைய திரைப்படத்தில் தேவலோகத்தில் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இந்திரன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த ரம்பா, ஊர்வசிக்கெல்லாம் வயசே ஆகாதா? எப்பப் பார்த்தாலும் அப்படியே இருக்காங்களே என்றேன். அப்படியே இளமையா இருக்கணும்னுதான் ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் பூலோகத்திற்கு வந்து வரம் வாங்கிட்டு போனாங்க என்றார் என் நண்பரின் பாட்டி. எந்த ஏரியாவில வரம் வாங்கினாங்க பாட்டி என்றேன்.

    கிண்டல் பண்ணாதேடா, இலம்பையங்கோட்டூர்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே தான் இவங்கல்லாம் வந்து தவம் இருந்து இளமை வரம் வாங்கிட்டு போனாங்க, அவங்க வந்துபோன கோவில் கூட இன்னும் அங்கே இருக்கு தெரியுமா என்று எங்களை அடுத்தடுத்து வியப்பில் ஆழ்த்தினார் பாட்டி. சரி தான், ரம்பை வந்துபோன கோவிலை பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன்.
     
    ஒருநாள் அதிகாலையிலேயே நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, ரம்பையின் பாதச்சுவடிகளை ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது என்றார்கள். அங்குள்ள திருவிற்கோலம் எனப்படும் கூவம் சிவன் கோவிலிலிருந்து தென்மேற்கே 4 கி மீ. போனால் இந்த ஊரை அடையலாம் என்றார்கள். ஏற்கனவே நான் கூவம் கிராமத்திற்கு (இங்கிருந்துதான் சென்னையின் ஜீவநதி கூவம் புறப்பட்டு வருகிறது) போயிருப்பதால் அது வரை எந்த சிக்கலும் இல்லாமல் போய்விட்டேன்.
     
    அங்கு சென்று விசாரித்தபோது இலம்பையங்கோட்டூரா அப்படி எதுவும் இங்கே கிடையாதே என்று இடியை இறக்கினார் ஒருவர். பயணம் அவ்வளவுதானோ என்ற அச்சத்துடன் வேறொரு பெரியவரை விசாரித்தோம். அவங்க செட் ஆளைப் பற்றி தெரிந்திருக்கும் என்ற நப்பாசை தான். நம்ம கணக்கு சரியாக இருந்தது. இலம்பையங்கோட்டூரைத் தான் இப்போ எலுமியன்கோட்டூர்னு சொல்றாங்க, இன்னும் 4 கிலோ மீட்டர் போங்க ஊர் வந்துடும் என்று வயிற்றில் பால் வார்த்தார். அப்பாடா, தப்பிச்சோம்.
     
    அழகான வயல்வெளிகளுக்கு இடையில் கொக்குகள் வானில் பறக்க, ஒற்றையடிப் பாதையில் வண்டியில் பறந்தோம். அப்படியே வளைந்து நெளிந்து சென்றதில் ஒரு சிற்றூர் எதிர்ப்பட்டது. அடிபம்பில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு நவீன ரம்பையிடம், அக்கால ரம்பை வந்துபோன கோவில் பற்றி விசாரித்தோம். அப்படியே கிழக்கால போங்க என்று கையை வீசினார். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே ஒரு சிதிலமடைந்த பழங்காலக் கோவில் தெரிந்தது.
     
    ரம்பா, ஊர்வசி, மேனகா எல்லாம் வந்துபோன கோவில் என்பதால் உள்ளே காலை வைத்ததும் இதயத்தில் சிலிர்க்கிறதா என்று பார்த்தேன். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் கோவிலின் புராதனம் நம்மை மெல்ல சூழ்ந்து கொள்கிறது. ஒரு கனத்த மௌனத்தை உணர முடிந்தது. ஒரு இனம் புரியாத அமைதி நெஞ்சில் பரவியது. கோவில் குருக்களின் வீடும், பசு மடம் ஒன்றும் கோவில் வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது. குருக்கள் கோவிலின் தல வரலாற்றை விளக்கினார். அதை முதலில் சுருக்கமாக பார்த்துவிடுவோம்.
     
    திரிபுர சம்ஹாரத்தின்போது சிவ பெருமான் தேரேறி புறப்பட, அவருடன் சென்ற தேவர்கள் தன்னை வழிபடாமல் சென்றதால் விநாயகர் தேரின் அச்சை முறித்து விட்டார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. ஆனால் தேர் கீழே விழாமல் மகாவிஷ்ணு அதைத் தாங்கிப் பிடித்தார். அப்போது சிவபெருமான் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை விழுந்த இடத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். அந்த இடம்தான் இலம்பையங்கோட்டூர் திருத்தலம்.
     
    தேவலோக மங்கைகளான ரம்பா, ஊர்வசி, மேனகா ஆகியோர் மாறாத இளமை வேண்டுமென்று இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றனர். இரம்பை வழிபட்டதால் இறைவனுக்கு அரம்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டாயிற்று. இரம்பை வழிபட்ட இத்தலம் இரம்பைக்கோட்டூர் என்று ஆகி, நாளடைவில் மருவி இலம்பயங்கோட்டூர் என்று மாறி தற்போது எலுமியன்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவன் மீது திருஞானசம்பந்தர் பதிகம் பாடியுள்ளார்.
     
    இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்கிறது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபமும் இருக்கின்றன. இத்தலத்தில் கொடிமரம் எதுவும் இல்லை. வளிப் பிரகாரத்தில் இடதுபுறம் இரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் எனப்படும் அரம்பேஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் இருக்கிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரத்தை வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
     
    இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது. இத்தல இறைவன் ஒரு சுயம்பு, மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வெளியே இரு புறமும் மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியதாக கூறப்படுகிறது.
     
    தேவர்கள் வழிபட்ட இந்த தெய்வநாதேஸ்வரரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள். 
     
    ரம்பா, ஊர்வசி, மேனகா போல இளமை மாறாமல் இல்லாவிட்டாலும், இருக்கிற வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டு வெளியில் வந்தோம். ரம்பா ஊரை பார்த்துட்டோம் டோய்னு… இனி எல்லார் கிட்டேயும் சொல்ல வேண்டியதுதான்.

  • சித்தர்கள் வாசம் செய்யும் உதய தேவரீஸ்வரர் திருத்தலம்

    சித்தர்கள் வாசம் செய்யும் இந்த திருத்தலம், பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பெருந்தலமாகவே உள்ளது. இந்த கோவில் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். சித்தர்கள் வழிபடும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் சேலம் அருகே உள்ள அரூர் அடுத்த சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள உதயதேவர் மலை மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். சிறிய குன்று போல் அமைந்திருக்கும் இந்த மலை மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. சிறப்புக்குரியது இந்த ஆலயத்தில் உள்ள மூலவரின் மீது தினமும் மாலை வேளையில் சூரிய ஒளி விழுவது அரியக் காட்சியாகும். 1131-ம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்தில் பஞ்சந்தாங்கி திருச்சிற்றம்பல வேலைக்காரர் என்பவரால், கோவிலில் கதவு நிலை கொடையாக அளிக்க பெற்றதாக கல்வெட்டு தகவல் உள்ளது. மேலும், இந்தக் கோவில் 7.9.1818-ல் புதுப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டு அடையாளங்களும் உள்ளன. ஆரம்ப காலத்தில் இங்கு உதயதேவரீஸ்வரர், விநாயகர், சண்டிகேஸ்வரர், நந்தி சிலைகள் மட்டுமே இருந்தன. அதே நேரத்தில் ஊருக்குள் மாரியம்மன் திருத்தலம் ஒன்றும் இருந்தது. சிவனுக்கு வலதுபுறமாக கிழக்கு நோக்கி உதயதேவரீஸ்வரி அம்மன் சிலையை அமைத்தார்கள். இந்தக் கோவிலில் பவுர்ணமி அன்று இரவு, சிறப்பு பூஜை நடை பெறும். அப்போது விபூதி, மாங்காய் மற்றும் தாழம்பூ வாசம் வீசுவதை அங்கு வந்த பக்தர்கள் இன்றளவும் உணர்ந்து வருகிறார்கள். 3 சித்தர்கள் வருகையின் காரண மாகத்தான், தாழம்பூ, விபூதி, மாங்காய் மணம் அங்கு கமழ்வதாக பக்தர்களிடம் நம்பிக்கை அதிகரித்தது. விநாயகர் சன்னிதியில் தான் பழங்கால கல்வெட்டு அமையபெற்றுள்ளதாக கோவில் பூசாரி கூறுகிறார். இந்த ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி பூஜைகள், கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பவுர்ணமி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் தொடர்ச்சியாக 3 பவுர்ணமியில் கலந்து கொண்டால், திருமணத் தடை, நவக்கிரக தோஷம் நீங்கும். குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைகூடும்.