Author: cmsadmin

  • தசாவதாரமும் மனிதனின் வாழ்க்கையும்

     

    எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ , அங்கெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்றார் கடவுள் . சொல்லியபடி உலகை  காக்க அவர் எடுத்த அவதாரங்களை மனித வாழ்க்கையோடு பொருத்தி பார்த்தால் , நம் இந்து மதத்தின் மகத்துவம் நம்மை பெருமைக் கொள்ள வைக்கும் .

     

    மச்ச அவதாரம்:  

    தாயின் வயிற்றிலிருந்து  அவளின் உதிரத்தில் நீந்தி பிறப்பது… 

    இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு  மீன்  என்று அர்த்தம் .கிருத யுகத்தில்  படைப்பிற்கு ஆதாரமான வேதங்களை பிரம்மாவிடம் இருந்து, குதிரை முகம் கொண்ட சோமுகாசுரன் என்ற அசுரன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட ,உலகில் பிரளயம் ஏற்பட்டது. சோமுகாசுரனுடன் போரிட்டு வேதங்களை மீட்டு உலக உயிர்கள் படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனுக்கே வழங்கினார் மச்சமூர்த்தி .

    கூர்ம அவதாரம்:

    குழந்தை மூன்றாம் மாதம் கவிழ்ந்து , பின் தலை தூக்கி பார்ப்பது…

     கிருத யுகத்தில் நடைபெற்ற இது , திருமாலின் இரண்டாவது அவதாரமாகும். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்.

    அமிர்தத்தை எடுக்க  மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை  கடைய .அப்போது மலை அதன் பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. தேவர்களுக்கு உதவும் பொருட்டு ,திருமால் ஆமையாக கூர்ம அவதாரம்  எடுத்து மலையைத் தாங்கி கடலையை கடைய துணைபுரிந்தார்.

     வராக அவதாரம்:

    ஆறாம் மாதம்  குழந்தை முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது…

     திருமாலின் மூன்றாவது அவதாரமான இது ,  கிருத யுகத்தில் நடைபெற்றது. வாரகம் என்பதற்கு பன்றி என்று பொருள்.

     இரண்யாட்சன்  என்ற அரக்கன் , பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் மறைத்து வைக்க , பிம்மாதிதேவர்களின்  வேண்டுகோளுக்கு மனம் இறங்கிய திருமால் , வெள்ளை நிறப் பன்றியாக வாரக அவதாரம் செய்தார். இரண்யாட்சனுக்கும் வாரக மூர்த்திக்கும் ஆயிரம் ஆண்டுகள்  நடந்த கடும் போரில் ,வாரகமூர்த்தி இரண்யாட்சனை வென்று  பூமியை தன் கொம்புகளில் தாங்கி வெளிக்கொணர்ந்து உலக உயிர்களைக் காத்தார்.

    நரசிம்ம அவதாரம்:

    எட்டாம் மாதம் உட்கார ஆரம்பிக்கும் குழந்தை தன்  கையில் கிடைத்ததை எல்லாம் கிழிப்பது…

    இது திருமாலின் நான்காவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இது கிருத யுகத்தில் நடைபெற்றது. நரன் என்றால் மனிதன்.  சிம்மம் என்றால் சிங்கம். நரசிம்மமூர்த்தி சிங்கத்தலை மற்றும் கைகளில் சிங்க நகம் கொண்டு மனித உடலுடன் அருள்பாலிக்கிறார்.

    இரண்யகசிபுவிடம் இருந்து தேவர்களை காப்பற்றவும் , தன் பக்தன் பிரகலாதனுக்காகவும் தூணிலிருந்து திருமால் சிங்க முகம் மனித தலையுடன் நரசிம்மாக வெளிப்பட்டார். இரண்யகசிபுவை வாயிற்படியில் வைத்து நகத்தால் வயிற்றைக் கிழித்துக் கொன்று உலக மக்களை துன்பத்திலிருந்து காப்பாற்றினார்.

     வாமண அவதாரம்:

    ஒரு வயதில் குழந்தை அடிமேல் அடி வைத்து நடப்பது…

    திரேதா யுகத்தில் நடைபெற்ற இது ,   திருமாலின் ஐந்தாவது அவதாரமாக வைணவர்களால் போற்றப்படுகிறது.

    பலிச்சக்ரவர்த்தியால் மூவுலகையும் ஆளுவதற்காக செய்யப்பட்ட யாகத்தில் இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை பலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார்.

     பரசுராம அவதாரம்:

    வளர்ந்த பின் ஒரு மனிதன் , தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது…

     திரேதா யுகத்தில் நடைபெற்ற  திருமாலின் ஆறாவது அவதாரமான இதில் , சங்கு சக்ரதாரி , கையில் கோடாரியுடன் காட்சியளிக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற கூற்றிற்கு உதாரணமாக விளங்கிய பரசுராமர் .

    ஜமத்கனி மற்றும் ரேணுகாதேவியின் நான்கு புதல்வர்களில் ஒருவரான இவர் ,துரோணர், பீஷ்மர், கர்ணன் போன்ற மகாபாரத்தில் உள்ள முக்கியமானவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார்.

    ராம அவதாரம்:

    திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது…

    இது திருமாலின் ஏழாவது அவதாரம் ஆகும். இவ்வதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது.

    ஏகபத்தினி விரதனாகப் போற்றப்படும் இந்த அவதாரத்தில்  ,  அடக்கம், பொறுமை, ஆற்றல், அரசாட்சி திறமை, எல்லா உயிர்களையும் சமமாக பாவித்தல் ஆகியவற்றிற்கு உதாரணமாகக் இறைவன் கொள்ளப்படுகிறார்.

     பலராம அவதாரம்:

    இல்லறத்தில் நுழைந்தப் பின்  உடன் பிறந்தோர், சுற்றத்தார், மற்றும் உலகோர்க்கு கடமையாற்றுவது…

    இது திருமாலின் எட்டாவது அவதாரமாகப் போற்றப்படுகிறது. இந்த அவதாரம் துவார யுகத்தில் நடைபெற்றது. திருமால் பள்ளிகொள்ளும் ஆதிஷேசனே பலராமனாக அவதரித்தாகக் நம்பிக்கை .

     கிருஷ்ண அவதாரம்:

    முதுமையில் இவ்வுலக பற்றற்று இறைவனை தன்னுள் உணர்ந்து அடுத்த சந்ததிக்கு அதை உபதேசித்து வழிகாட்டுவது…

     துவார யுகத்தில் நடைபெற்ற திருமாலின் ஒன்பதாவது அவதாரம் இது . ஆறில் இருந்து அறுபது வரை   எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட அவதாரம்.

     கல்கி அவதாரம்:

    இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் கண்டு , இறுதியில் முக்தி பெறுவது…

    இது திருமாலின் பத்தாவது அவதாரமாக் கொள்ளப்படுகிறது. கலியுக முடிவில் பெருமாளின் இந்த அவதாரம் நிகழும் என்று நம்பப்படுகிறது.

    இறைவனின் பத்து அவதாரங்களையும்  நம் வாழ்க்கைக்கு  வழிகாட்டும் வேதங்களாக நாம் உணர வேண்டும் . இறை பக்தியோடு நம் வாழ்க்கையை மேம்படுத்துவோம் .

     

  • முக்திக்கு வழிகாட்டும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

     

    எல்லோரும் தான் இந்த மண்ணில் பிறக்கிறோம் , ஜீவனம் நடத்துகிறோம் , மூப்பு வந்தால் இறக்கிறோம் . ஆனால் இதில் வெகு சிலரே இறைவனின் அம்சமாக இந்த உலகில் பிறக்கின்றனர் . வாழும் போதும் , இவ்வுலகை விட்டு மறைந்த பின்பும் மக்கள் மனதில் நிலையான இடத்தை  பிடித்து மகான் ஆகின்றனர் . இதில்,  தான் வாழும் காலத்திலேயே மக்களால் பகவான் என்றும் மகரிஷி என்று அழைக்கப்பட்டு வணங்கப்பட்டவர் ரமணர் .

    விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் சுந்தரம் ஐயர், அழகம்மாள் தம்பதியருக்கு எல்லோரையும் போல் சாதரணமாக பிறந்த வேங்கடரமணன் தான் யார் என்று கேள்விக்கு விடை தேடி இவ்வுலக பந்தம்  துறந்து துறவியானது தன் பதினாறாம் வயதில். 

     

                                                              

    காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதரால்,  வேங்கடரமணன்   ‘ரமண மகரிஷி’ யானார் . ஆன்மிகத்தில் பற்றுக் கொண்டவர்கள் , மலரை நாடி வரும் தேனீக்களாக  பல மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் இனம் , மொழி , மத வேறுபாடில்லாமல்  அவரால் ஈர்க்கப்பட்டார்கள் திருவண்ணாமலை நோக்கி வந்தனர் . அவரை தங்கள் வாழ் நாளில் தரிசிக்க முடிந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள் .

    இன்றும் ரமணாச்ரமத்திற்கு  தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு சூட்சும ரீதியில் பகவான் உதவிக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை அவரின் பக்தர்கள் அனுபவித்துவரும்  மறுக்க முடியாத உண்மை.

    உண்மையான பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் , பக்தனின் மனதில் நல்ல இறை சிந்தனை மனது இருந்தால் மட்டும் போதும் என்று தன்னுடைய அடியவர் ஒருவருக்கு ரமணர் உணர்த்திய ஒரு நிகழ்வை அறிந்துக்கொள்வோம் .

    ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்கள்

     அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பார் .தன்னால்  இந்த வேதவிற்பன்னர்களைப் போல பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார்.

     தன்னுடன் இருக்கும் அடியவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்துக்கொள்ள முடியாதவரா பகவான் . அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர்.ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது, இன்று சவரம் செய்து கொண்டாயா? எனக் கேட்டார். அவர் ஏதும் புரியாமல், ஆமாம் சுவாமி என்றார்.

     கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?” என்று திரும்பவும் கேட்டார் ரமணர். பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல், ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார். கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது.

     உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?’ என்றார் . ரமணரிடம், முடியாது சுவாமி, என்றார் பக்தர்.

    அதேபோல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும் அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும் . அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.

    இத்தனை காலம் மனதிற்குள் தான் எண்ணி மருகிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தில் , ரமணரின் இந்த விளக்கத்தால் தெளிவடைந்த அந்த அன்பர் தனது கண்ணீரை பகவானின்  திரு கமலா பாதங்களுக்கு அர்ப்பணித்தார் . எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறையருளை  பெற்றுக் கொள்ள  தூய்மையான நம் மனமே சிறந்த பாத்திரம் அல்லவா …?

     

  • எல்லா உயிர்களுக்கும் தாயான சாய்

     

    தூணிலும் இருப்பார் , துரும்பிலும் இருப்பார் இறைவன் என்பார்கள் . கண்கண்ட கருணை தெய்வமான பாபா எல்லா ஜீவராசிகளிலும் நிறைந்து  இருக்கிறார் . சீரடியில் பல்லி  ஒன்றை வைத்து  சாய் நிகழ்த்திய அற்புதத்தை இப்பதிவில் காண்போம் .

    இறைவனின் படைப்புகளில் ஆறறிவு படைத்த மனிதன்தான்  அனைத்தை விடவும் ஒரு படி மேல் . ஆனால் அவன் தான்,  தன் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றிற்கும்  கூட அதிகமாக கவலைப்படுவான் . அதே , ஐந்தறிவு கொண்ட ஜீவன்கள் இறைவன்  கொடுத்த வாழ்க்கையை சுதந்திரமாக சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு நம்மை காட்டிலும் எதிர்காலத்தை உணர்ந்துக் கொள்ளும் ஆற்றலை இறைவன் தந்துள்ளான் .

    ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தபோது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. அவர்முன் அமர்ந்திருந்த பக்தர் ஒருவருக்கு அது  கெட்ட சகுனமா நல்ல சகுனமா?  என்ற சந்தேகம் எழுந்தது . அதை பாபாவிடம் கேட்க , அவரோ இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது. அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் . கேட்டவர்களுக்கு நம்பவும் முடியவில்லை , ஆனால் சொனது பாபா என்பதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை . அதனால் எல்லோரும் அந்த சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, ஆவலோடு காத்திருந்தனர். பாபா! வெறும் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்குகள் எப்படி இவற்றையெல்லாம் அறிகின்றன? என  அந்த பக்தர் வியப்போடு கேட்டார்: பாபா பக்தரைக் கூர்மையாகப் பார்த்தார்.

    அந்த பக்தருக்கு இப்போது ஒன்று புரிந்தது. பாபாவைப் பொறுத்தவரை விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். எல்லாமே அவரது படைப்புத்தான் என்பதால், எல்லாவற்றின் மீதும் பாபாவுக்கு நிரந்தரமான தாய்ப்பாசம் உண்டு! இப்படி அந்த பக்தர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஜல் ஜல் என்ற சப்தத்துடன் ஒரு குதிரை சீரடி மசூதியின் வாசலில் வந்து நின்றது. பாபாவை தரிசிக்கும் ஆவலோடு அவுரங்காபாத்தில் இருந்து வந்த ஒரு பிரமுகர் குதிரை மேலிருந்து தாவிக் கீழே இறங்கினார். பாபாவை தரிசித்த பின், அதே குதிரையில் தனது பயணத்தைத் தொடர விரும்பினார் அவர். ஆனால் குதிரை நகர மறுத்தது.

    குதிரைக்கு நல்ல பசி போலிருக்கிறது என்று நினைத்த பிரமுகர் , அதற்கு கொள்ளு வாங்கி வர நினைத்தார் . கொள்ளை  வாங்கி வர  பிரமுகர் தன் தோளில் இருந்த ஒரு காலிப் பையை தூசியைப் போக்குவதற்காகக் கீழே உதறினார். சடாரென்று பையிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. தன்னிடம் கேள்வி கேட்ட பக்தரைப் பார்த்தார் பாபா. கீழே விழுந்த பல்லியின் அடுத்த செயல்பாடுகளைக் கவனிக்குமாறு கண்ணாலேயே கட்டளை இட்டார். சரசரவென வேகமாக ஊர்ந்து சென்ற அந்தப் பல்லி, சுவரில் ஏறியது. சுவரில் ஏற்கெனவே அதன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லியின் அருகே போய் நின்றது. அடுத்த கணம் இரண்டு பல்லிகளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பல்லிகள் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. மகிழ்ச்சியோடு முத்தம் கொடுத்துக் கொண்டன. பாபாவின் சந்நிதானத்தில் அவை மிகுந்த மன நிறைவை அடைந்தன.

     இந்த அபூர்வமான காட்சியைப் பார்த்த பக்தர் பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபா அந்த பல்லிகளைப் பற்றி  தீர்க்கதரிசனமாக சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஆகிவிட்டதே? அவுரங்காபாத் எங்கே? சீரடி எங்கே? . அந்த பல்லிகள் மீண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்ததை எண்ணி பேச்சற்று போனதோடு , அனைத்து உயிர்களிடத்தும் பாபாவிற்கு உள்ள தாயன்பை நினைத்து நெக்குருகினார் .

    விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் நுண்ணிய  உணர்வுகளையும் , அதன் எதிர்காலத்தைப் பற்றியும்  துல்லியமாக உணர்ந்தவர் நம் பாபா . துயருற்றும் , பாபாவின் கருணைக்கும் ஏங்கி தவிக்கும் நம் உணர்வுகளை அறியாதவரா பாபா? . மனம் உருகி உண்மையாக பாபாவின் திருப் பெயரை சொல்லி பிரார்த்திக்கும் போது  நம் துயரங்கள் எல்லாம் சுவடு தெரியாமல் பறந்து விடும் .

     

    ஓம் சாய் ராம்

    சாய் சரிதம் தொடரும் …..

  • ஹோமங்களில் இத்தனை வகைகளா ?

     

    பாரத புண்ணிய பூமியில், எந்த  ஒரு நற்காரியங்கள் செய்யும் முன்பும்  கணபதி ஹோமம் , உடல் ஆரோக்கியத்திற்கு  மிருத்யுஞ்ச ஹோமம் , பொருள் நலம் சேர மகாலட்சுமி ஹோமம் , எதிரிகள் பலமற்று  போக சண்டி யாகம் என ஹோம தீ வளர்த்து  பிரார்த்தனை செய்வது நம் முன்னோர் வழி வந்த மரபு . ஹோமங்கள்  என்பது நீண்ட நெடிய  மந்திரங்களுடன் கூடிய வழிபாட்டு முறையாகும் . அதில் போடப்படும் பொருட்களுக்கும் காரண காரியங்களை தொகுத்துள்ளனர்  நம் முன்னோர்கள் . அப்படி ஹோம குண்டத்தில் போடப்படும் பொருட்களும் அதனால் ஏற்படும் பலாபலன்களை பற்றியும் நாம் இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம் .

     அவ்வாறு நடத்தப்படும் ஹோமங்களில் விதவிதமான பொருட்கள் போடப்படுகிறது .   ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் சமித்து எனப்படும் குச்சிகளின் பலன்களும் ஒவ்வொரு வேண்டுதலுக்கு ஏற்ப அமையும் .  

    விக்கினங்களை நீக்கும் விநாயகருக்கும், ராகுவுக்கும் பிடித்தது அருகம் புல். இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

     வில்வ சமித்து ருத்ர மூர்த்தியான  சிவனுக்கும், செல்வத்தை அள்ளித்தருபவளான  மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது .  வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

    துளசி சமித்து ஸ்ரீமன் நாராயணனுக்குப் பிடித்தது . துளசி சமித்தைக் கொண்டு  ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

     அத்தி சமித்து  சுக்கிரனுக்கு உகந்தது .  பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

     நாயுருவி சமித்து புதனுக்குப் பிடித்தது . இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது

    சந்திரனுக்கு பலாமர சமித்து ப்ரீத்தியானது . பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

    அரசரமர சமித்து குருவிற்குப் விசேஷமானது . அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

    தர்ம நெறி தவறாமல் பலனை தரும் சனீஸ்வரனுக்குப் பிடித்தது வன்னிமர சமித்து . இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

    சர்வமங்களங்களையும்  வேண்டுவோர்  உபயோகிக்க வேண்டியது  மாமர சமித்து  .

    தாமரை புஷ்பமானது லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது .

    அழகான வடிவமும்,வசீகரமும் வேண்டுவோர் மாதுளை மர சமித்தை  தேர்ந்தெடுக்கலாம் .

    இது தவிர

    கொடிக்கள்ளி எனப்படும் சோமவல்லிக் கொடியின்   ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

    வெள்ளை எருக்கு சமித்து  சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

    செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்

                                                                                 அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

    தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

    கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

    ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

    எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

    புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

    இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

    தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

    வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

    சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

    வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

    மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

    பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

    நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

     மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.

    இத்தகைய  ஹோமங்களில் பங்கேற்க  வாய்ப்புக் கிடைத்தால்  தவறாமல் கலந்துக்கொண்டு  பயன் பெறலாம் .

    சுபமே விளைக

  • சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (அமர்நீதி நாயனார் )

     

    தென்னாடுடைய சிவனே போற்றி …. எந்நாட்டவர்க்கும்  இறைவா போற்றி  என நாள்தோறும்  பக்தர்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும் சிவ பெருமானின் புகழ் பாடுவதை வாழ்நாள் தவமாக வரம் பெற்ற  அறுபத்துமூன்று நாயன்மார்களில்   அமர்நீதி நாயனார் பற்றி இப்பதிவில் அறிவோம் .

    பழையாறில் வணிக குலத்தில் பிறந்த அமர்நீதி நாயனார் சிவ பக்தி மற்றும் சிவனடியவர்களுக்கு செய்யும் தொண்டில் சிறந்தவராக விளங்கினார். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு, பருத்தி ஆடை போன்றவைகளை அந்தந்த பகுதிகளுக்கே சென்று நேரடியாக கொள்முதல் செய்து சிறந்த முறையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைத்த லாபத்தில்  இறைவனுக்கும், அவரின்  தொண்டர் களுக்கும் சிறப்பான தொண்டு புரிந்துவந்தார். சிவபெருமானுடைய தொண்டர்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் போன்றவைகளை வழங்கி வந்தார் .

    மனதில் எப்போதும் ஈசனை  நிறுத்தி , வாக்கில் ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி சிவத்தொண்டு ஆற்றி வந்த அமர்நீதி நாயனார் , திருநல்லூர் என்னும் தலத்திற்கு சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டு திருவிழாவை கண்டு களிப்பதை வழக்கமாகி கொண்டிருந்தார் .  திருவிழாக் காலங்களிலும், மற்ற காலங்களிலும் சிவனை தரிசிக்க வரும் அடியவர்கள் பசியாறும் பொருட்டு உணவு மற்று உடை வழங்க ,திருநல்லூரில் மடம் ஒன்றை நிறுவி தானம் செய்து சிவ தொண்டு புரிந்துவந்தார்.

    தன்னையே மூச்சாகக் கொண்டு வாழும் அமர்நீதி நாயனாரின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணினார் சிவபெருமான். அந்த திருவிளையாடல் கதைக்கான திரைக்கதையும் எழுதியாகி விட்டது .  ஆடல் அரசன் ஒரு பிரமச்சாரி வேடத்தில் திருநல்லூர் திருத்தலத்திற்கு வந்தார். அவரின் கொள்ளை கொள்ளும் தெய்வீக அழகில் மயங்கிய  அமர்நீதி நாயனாரும்  உள்ளம் மகிழ்ந்து , மலரடி பணிந்து வணங்கினார். திருமடத்தில் சிறந்த அந்தணர்களால் செய்யப்படும் அமுதை  உண்டு பசியாற வேண்டினார் அமர்நீதி நாயனார்.

    அதற்கு அடியவர் உருவில் வந்த இறைவன் ,  தான் போய் காவிரியில் நீராடி வருவதற்குள்  அவரிடம் உள்ள கோவணத்தை காப்பாற்றி வைத்திருந்து தருமாறு கேட்டுக் கொண்டு தன் தண்டில் முடிந்திருந்த இரண்டில் ஒரு கோவணத்தை அவிழ்த்துக் கொடுத்தார். இறைவன் கொடுத்த கோவணத்தை வாங்கிக்கொண்ட அமர்நீதி நாயனாரும் அவ்வாறே செய்வதாக கூறி, அடியவர் கொடுத்த கோவணத்தை தனியொரு இடத்தில் வைத்தார் . அந்த கோவணத்தை அங்கிருந்து மறைத்து விட்டார், மகேசன்.

     சிறிது நேரம் கழித்து அடியவர், திருமடம் நோக்கி வந்தார். அப்போது அவர் முழுவதுமாக மழையில் நனைந்ததுபோல் காணப்பட்டார். அவரது உடைகளும், தண்டில் வைத்திருந்த மற்றொரு கோவணமும் நீரில் நனைந்திருந்தது. எனவே அமர்நீதி நாயனாரிடம்  கொடுத்து வைத்த கோவணத்தை எடுத்து வரும் படி கேட்டுக்கொண்டார் . நாயனாரும் தனியறைக்குள் சென்று கோவணத்தை வைத்த இடத்தில் தேடினார். எங்கும் கிடைக்காமல் திருமடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரித்தார், ஆனால் கோவணத்தை அறிந்தவர் எவருமில்லை. தனக்கு வந்த சோதனையை எண்ணி கலங்கிய நாயனார் , தான்  பெரும் பாவத்திற்கு ஆளானது குறித்து மனம் கலங்கினார்.

     பின்னர், அடியவர் ஈரத்துடன் நிற்கிறாரே என்று எண்ணி, தன்னிடம் இருந்ததில் சிறந்த ஒரு கோவணத்தை எடுத்துக் கொண்டு அடியவரை நோக்கிச் சென்றார் அமர்நீதி நாயனார். கோவணம் காணாமல்  போனது குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்ட நாயனார் தன்னிடம் உள்ள வேறு ஒரு நல்ல கோவணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு  வேண்டினார். வெகுண்ட அடியவர் அதை ஏற்க மறுத்தார் . உடல் நடுங்கிய  அமர்நீதி நாயனார்  ,அறியாமல் நடந்து விட்ட பிழைக்கு ,  அந்த கோவணத்திற்கு பதிலாக உயர்ந்த பட்டாடைகளும், நவமணிகளும், பொன்னும், பொருளும் தருகிறேன் என்று கூறியும் தன்னிடம் ஈரமாக உள்ள கோவணத்தை தராசில் ஒரு பக்கத்தில் வைப்பதாகவும்  அதற்கு நிகராக கோவணத்தை தரும்படியும்  பணித்தார் அடியவர்.

     அதற்கு  ஒப்புக்கொண்ட அமர்நீதி நாயனார் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். லேசில் விளையாட்டை முடிப்பவரா ஈசன் . தராசின் ஒரு பக்கத்தில் அடியவரின் கோவணம் வைக்கப்பட்டது. அதற்கு நிகராக தன்னிடம் இருந்த ஒரு கோவணத்தை தராசு தட்டில் வைத்தார் அமர்நீதி நாயனார். ஆனால் தராசு சமமாவதற்கு பதிலாக, அடியவரின் தட்டு கீழ்நோக்கிச் சென்றதைப் பார்த்து திகைத்துப் போனார்  அமர்நீதியார் .  அடியவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கோவணங்களை ஒன்றன்பின் ஒன்றாக தட்டில் வைத்தும் அடியவர் பக்கத் தட்டு கீழ் நோக்கியே இருந்தது.

    நாயனாரிடம் இருந்த கோவணம் எல்லாம் தீர்ந்து விட்ட நிலையில்  ,உயர்ந்த பட்டாடைகளையும் தராசு தட்டில் வைத்தார். அப்போதும் தராசு சமமாகவில்லை. நவரத்தினங்கள், பொன்னும், பொருளும் வைத்தும் யாதொரு பயனும் இல்லாமல் போய்விட்டது. வைப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.

                                 

                                         

     

    தன்னிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் வைத்தும் தராசு சமமாகாத நிலையில் தன் மனைவி மற்றும் பிள்ளையுடன், தராசு தட்டில் ஏறி ‘இதுவரை நான் செய்த அடியவர் அன்பினில், சிறிதும் தவறாதிருந்தது உண்மையானால், இத் துலாம் நேர் நிற்க’ என்று கூறி பஞ்சாட்சரம் ஓதினார் .  தராசு தட்டு இப்போது சமமானது. அமர்நீதி நாயனார் உள்பட அங்கிருந்த அனைவரும் இறைவனின் கருணையை எண்ணி மனம் நெகிழ்ந்தனர் . ரிஷப  வாகனத்தில் இறைவனும், இறைவியும்  எழுந்தருளி ,அங்கிருந்த மக்களுக்கு காட்சியளித்தார் .  இறைவன், அமர்நீதியாரையும், அவரது குடும்பத்தையும் சிவபதம் வருமாறு அருளி மறைந்தார்.

     

     

     

     

                                              

    ஓம் நமசிவாய ………

  • தினந்தோறும் திருமணம் செய்த பெருமாள்..

    வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப் பார் என்பார்கள். இந்த இரண்டு விஷயங்களும் அவ்வளவு கடினமான வேலைகள் என்பதுதான் இதற்கு அர்த்தம். வாழ்க்கையில் ஒரு கல்யாணம் நடத்தவே நாமெல்லாம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும்போது, தினம் தினம் ஒருவர் திருமணம் செய்து கொண்டே இருந்தார் என்று கேள்விப்பட்டால் எப்படி இருக்கும்? அவரை நேரில் பார்த்து எப்படிப்பா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது என்று கேட்கத் தோன்றும் இல்லையா? அப்படி தோன்றினால் நீங்கள் நேரில் சென்று அவரிடம் கேட்கலாம். அவர் நம்ம சென்னைக்கு அருகில் தான் இருக்கிறார். அவர் தான் திருவிடந்தையில் வீற்றிருக்கும் நித்ய கல்யாணப் பெருமாள்.

    சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் கடற்கரைச் சாலையை ஒட்டியே இருக்கிறது திருவிடந்தை. இங்குள்ள அற்புதமான பெருமாள் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்யாண வரம் தரும் தலமாகப் போற்றப்படுகிறது, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் ஆலயம்.

    அசுர வம்சத்தில் பிறந்த பலி என்ற மன்னன் மிகுந்த நீதிமான். சிறப்பான முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். ஆனாலும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்குவதற்காகவும் தோஷம் களைவதற்காகவும் இத்தலத்துக்கு வந்து, வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.

    அதேபோல, இங்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பெருமாளே பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தி எனும் விகிதத்தில் திருமணம் புரிந்து அருளினாராம்! கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கத் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இந்த உலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளினார் எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். 

    இப்படி தினம் ஒரு திருமணம் என பெருமாள் நிகழ்த்திய திருத்தலம் என்பதால் பெருமாளுக்கு (உற்ஸவர்) நித்ய கல்யாணப் பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு ஸ்ரீஅகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் அமைந்தது. 

    திருமணத் தடையால் வருந்துவோர், இந்தத் தலத்துக்கு வந்து கல்யாண தீர்த்தத்தில் குளித்துவிட்டு, தேங்காய், பழம், கஸ்தூரி மாலைகள் இரண்டு மற்றும் வெற்றிலைப் பாக்குடன் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 
    பின்னர், சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு பிராகாரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். அதையடுத்து, கொடிமரம் அருகில் வடக்கு நோக்கி நமஸ்கரித்துவிட்டு, மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைக்க வேண்டும். 

    பிறகு, திருமாலின் திருவருளால், விரைவில் திருமண கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடுகின்றார்கள் பக்தர்கள். 

    பெருமாளுக்கு உரிய நாளில், வணங்குவது இன்னும் சிறப்பு சேர்க்கும் என்பதால் சனிக்கிழமைகளில், ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாளை தரிசித்து, வேண்டிக் கொள்கின்றனர்.     

  • சிவன் நடனமாடும் காடு

    சிவபெருமானுக்கும் காளிக்கும் ஒருமுறை நடனப் போட்டி நடைபெற்றது. போட்டி உச்சகட்டத்தை எட்டிக்கொண்டிருந்தது. காளியின் கையே ஓங்கியிருந்த நிலையில் சிவனின் காதில் இருந்த தோடு திடீரென கழன்று விழுந்தது. சிவன் நடனமாடியபடியே அதனை தனது இடது கால் விரல்களால் பற்றி எடுத்து காதில் அணிந்துகொண்டார். இவ்வாறு காலை உடம்புடன் ஒட்டியபடி தலை வரை தூக்கி ஆடும் நடனம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். பெண்ணான காளியால் இவ்வாறு ஆட முடியாததால் போட்டியில் சிவனிடம் தோல்வியுற்றார். இந்த போட்டி நடந்த இடம் தான் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. இங்கு சிவனுக்கும், காளிக்கும் தனித்தனியாக கோவில்கள் இருக்கின்றன.

    காரைக்கால் அம்மையார் சிவனைத் தரிசிக்க திருவாலங்காட்டிற்கு வந்தபோது, அந்த இடம் முழுவதுமே சிவன் ரூபமாக காட்சியளித்ததால் கால் வைக்கத் தயங்கி, தலையால் நடந்து வந்து சிவனை வழிபட்டதாகவும் ஒரு கதை உண்டு. காரைக்கால் அம்மையார் இந்த தலத்தில்தான் முக்தி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவிலில் காரைக்கால் அம்மையாருக்கும் ஒரு சந்நிதி உள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவன் வடாரண்யேசுவரர், ஊர்த்துவ தாண்டவர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டு அப்பர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் வண்டார் குழலம்மை.

    கிழக்கு நோக்கி இருக்கும் இந்த கோவிலின் 5 நிலை ராஜகோபுரம் அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் உள்ள சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் அருள்மிகு சண்முகர் எழுந்தருளியுள்ளார். நுழைவு வாயிலைத் தாண்டியதும் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் மற்றும் 3 நிலைகளையுடைய இரண்டாவது கோபுரம் காட்சியளிக்கிறது. இதிலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

     

    இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் வருகிறது. வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில். இந்த வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இதில் இத்தலம் ரத்தின சபை என்றும், இதுவே முதன்மையான சபை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. நேரே உள்ளே சென்றால் கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்கிறது இந்த கோவிலின் தலப் புராணம். இத்தலத்தில் உள்ள உற்சவர் நடனமாடியபடி காட்சியளிப்பதால் ரத்தின சபாபதி என்று அழைக்கப்படுகிறார்.

    நடராஜர் சந்நிதிக்கு மேல் தாமிரத்தினால் விமானம் வேயப்பட்டுள்ளது. நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி உள்ளது. இந்த தலத்தின் பெருமையை அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். கோவிலுக்கு வெளியே மிகப்பெரிய குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் காளிக்கென தனிக்கோவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது. திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கியும் கோவிலுக்கு வரலாம். பேருந்து வசதியும் உண்டு.

    தமிழக சரித்திரத்தின் முக்கியமான பகுதிகளை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்துள்ளன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த 22 செப்பேடுகள் சோழ வரலாறு குறித்து பல அரிய தகவல்களைச் சொல்கின்றன. இவை தற்போது சென்னை அரும்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

  • அர்ஜுனனை வென்ற பிங்கலை

     

     

    நம்மில் பலர் எப்பொழுதும் நம்மைப் பற்றிய அதீத பெருமைகளிலும் ,கற்பனைகளிலுமே காலத்தை போக்கிக் கொண்டிருக்கிறோம் . ஆனால்  உண்மையில் பார்க்கும் போது நம்மை காட்டிலும் இந்த பரந்த உலகத்தில் தங்கள் கடமைகளை சரிவர  செய்யக்கூடிய பலர் இருக்கத் தான் செய்கிறார்கள் . தன்னுடன் இருப்பவர்களுக்கு அத்தகைய கர்வம் வந்தால் அதை பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணன் உணர்த்த தவறுவதில்லை . கிருஷ்ணர் மேல் தனக்கு இருந்த  பக்தியின் பொருட்டு ஏற்பட்ட கர்வத்தால்  திளைத்துக் கொண்டிருந்த பார்த்தனுக்கும் பாடம் புகட்டப்பட்டது .

    அர்ச்சுனனின் மனம் பாரதப் போரில் கிடைத்த  வெற்றியில் தலைக்கால் தெரியாமல்  திளைத்துக் கொண்டிருந்தது. “இதோ, இப்போதுகூட தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னைவிடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யாராக இருக்கமுடியும்?”

    “அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?” என்று கண்ணன் கேட்டான்.

     

                                                                 

    “என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்துவிடுகிறானே கண்ணன்!” அர்ச்சுனன் திடுக்கிட்டான்.

    “நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் சிந்தனைகளைக் கண்டுகொள்வது சிரமமா?” என்று கண்ணன் நகைத்தான். அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கண்ணன் முடிவு செய்தான்.

    “அர்ச்சுனா! நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!” என்று கண்ணன் அழைத்தான். “இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு!” என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கண்ணனும் அர்ச்சுனனும் பெண்களாக மாறி வெளியே புறப்பட்டுச் சென்றனர்.

    பிங்கலையின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள்.

     

    “தாயே! நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா?” என்று கேட்டான் கண்ணன். “உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம்!” என்றாள் பிங்கலை .

     

    பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும், சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும், பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. “தாயே! கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே? கத்திகள் யாருடையவை?” என்று கண்ணன் கேட்டான்.

    “என்னுடையவைதான். வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகளான மூவரைக் கொல்ல வேண்டும். அதன் பொருட்டுத்தான் இந்தப் பூஜை!”. “யார் அந்த விரோதிகள் தாயே?”

    “குசேலன், பாஞ்சாலி, அர்ச்சுனன் மூவரும்தான். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. பாஞ்சாலிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ச்சுனனைக் கொல்லத்தான் இந்தப் பெரிய கத்தி!”. அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

    “அப்படி இந்த மூவரும் கண்ணனுக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே?” . “குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கண்ணனுக்குக் கொடுக்கலாமா? என் கண்ணன் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கண்ணனின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா? இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுப்பதாவது?”

     

    “பாஞ்சாலி பாவம் பெண். அவள் எப்படி உங்கள் விரோதியானாள்?” . “கிருஷ்ணனிடம் புடவைகளைப் பெற்றாளே? துவாரகையில் இருக்கும் கண்ணன் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அவளுக்கு வாரி வாரிப் புடவைகளை அருளினானே? புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான் இல்லையா? புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால், புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கண்ணனுக்கு கை எவ்வளவு வலித்திருக்கும்? கண்ணனின் கைகளை வலிக்கச் செய்த பாஞ்சாலியைச் சும்மா விடுவேனா நான்?”

    “அர்ச்சுனன் கண்ணனின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே? அவன் மேல் ஏன் விரோதம்?”. “அர்ச்சுனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா? குதிரைகளின் லகானை இழுத்து இழுத்துக் கண்ணன் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும்? தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாமான்யமா? ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம்? என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ச்சுனன். அன்று பார்த்துக் கொள்கிறேன் அவனை!”

    அர்ச்சுனன் முந்தானையால் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தான் கண்ணன்.

     

    “தாயே! குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கண்ணனாகத்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன்”. பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள்.

     

    அடுத்து கண்ணன் தொடர்ந்தான். “பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்ததில் கண்ணன் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா? அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றனவே? எனவே சுயநலமேயானாலும், மானம் காக்க வேண்டியதால் பாஞ்சாலியையும் மன்னித்து விடுங்களேன்!” என்றார். பிங்கலை இரண்டாவது கத்தியையும் கீழே வீசிவிட்டாள்.

     

    “போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கண்ணனைத் தேரோட்டச் செய்த அர்ச்சுனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும்!” என்றாள். “சுயநலம் பிடித்த அர்ச்சுனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்,” என்றான் கண்ணன். அர்ச்சுனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

    கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”

    “நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ, மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கண்ணன், உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால், அதுபோதும் எனக்கு. கண்ணனுக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன்.” என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள்.

    பெண் வேடத்திலிருந்த அர்ச்சுனன், மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

     

  • அமாவாசை மகத்துவம்

     

    மகத்துவம் மிக்க நம் இந்து மதத்தில் , அமாவாசை , பௌர்ணமி . அஷ்டமி ,நவமி ,மற்றும் சதுர்த்தி திதிகளுக்கென்று ஒரு முக்கியத்துவம் உண்டு . எந்த ஒரு  நல்ல வேலையை  செய்வதற்கும்   இவைகளை அனுசரித்தே  நாள்  குறிக்கப்படும் .  

    அமாவாசையை பற்றி நமக்கு தெரிந்து தெரியாததுமான சில தகவல்களை இப்பதிவில் காண்போம் .  அமாவாசை முன்னோர்களுக்கு  தர்ப்பணம் கொடுக்கும் நாளாக  காலம் காலமாக நம் மனதில் ஆழ பதிந்து விட்டதால் , சிலர் அன்று சுபகாரியங்களை தவிர்த்து விடுவார்கள் . ஆனால் அதே சமயம்  நிறைந்த  முழு அமாவாசை தினத்தன்று , கடை திறப்பது ,  புதிய வண்டி வாங்குவது , நிலம் பத்திரம் செய்வது போன்ற வேலைகளை செய்பவர்களும் உண்டு . இப்படி நம் நல்லது கெட்டதில் முக்கிய பங்கு வகிக்கும் அமாவாசைக்கு  அப்படி என்ன தான் விசேஷம் ?

    அமாவாசை தினத்தில் தான் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது . அன்று  புண்ணியலோகத்திலிருந்து நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து ,தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து அவர்களை , கரிசனத்தோடு ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும்  என்பது நம்பிக்கை .

     

                                                                          

    அதிலும் தை , ஆடி , புரட்டாசி,மாசி அமாவாசைகள்  மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது .அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது .  மேலும் அமாவாசை தினத்தன்று  ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசை நாளில் தான்  நடத்துகின்றனா்.

    அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது என்று பெரியவர்கள்  சொல்லக் கேட்டு இருப்போம் . புண்ணியத் தலங்களின் அருகில் உள்ள  கடலில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிப்பதான் மூலம்  வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது .  

     

     ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்று அன்னதானம் செய்வது நன்மையை பயக்கும்  அப்படி முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் கூட அன்னதானம் செய்யலாம் . புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும். இவை எல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் கூட அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.

     இதை எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுப்பது நம்மையும் நம் சந்ததியினரையும் காக்கும்  . நம் முன்னோர்களுக்கு , அமாவாசை அன்று  அவர்களை நினைத்து  நாம் செய்யும்  , தர்ப்பணமாவது நம்மையும் நமக்குப் பின் வரும் ஏழேழு தலைமுறை சந்ததியினரையும் , எல்லா தீங்கில் இருந்தும் கவசமாக காக்கும் .

     

                                                                              

     

  • ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்….

    ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி வருகிற ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி திருமஞ்சனம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி நடத்தப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வருகிற ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.

    அன்றைய தினம் உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களை களைந்து திருமஞ்சனம் செய்து, பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மீண்டும் அங்கில்கள் சாற்றப்படும். மேலும், மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்படும்.

    8-ம் தேதி திருப்பாவாடை நிகழ்ச்சியை முன்னிட்டு சந்தனு மண்டபத்தில் அதிக அளவு சாதம் தயாரித்து சந்நதி முன் நிரப்பப்பட்டு நம்பெருமாளுக்கு அமுது செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    14-ம் தேதி ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. 15-ம் தேதி தளிகை எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 21-ம் தேதி சக்கரத்தாழ்வார் மற்றும் காட்டழகிய சிங்கர் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நடைபெறும்.