Part 2 of thirkuruppu nayanar

– "மாரி மைந்தன்" சிவராமன்

புது வெள்ளம் 
வருவது கண்டு பதைபதைத்த பார்வதிதேவி 
சிவலிங்க மூர்த்தியை ஆரத் தழுவிக் கொண்டாள்.

அந்த அரவணைப்பில் மனம் நெகிழ்ந்த மணிகண்டர்
அம்மையின் 
திருமுலைகளுக்கும் திருக்கரங்களுக்கும் மிருதுவாகக் காட்டி குழைந்து அருளினார்.

அப்போது 
உலகில் உள்ள 
உயிர்கள் எல்லாம் 
உருகின.

விண்ணவர் வியந்து பூமழை பொழிந்தனர்.

வெள்ளம் திரண்ட
கம்பா ஆறு 
வணங்கி விலகியது.

இறுகத் தழுவியதாலும் மூர்த்தி குழைந்ததாலும் வளைத் தழும்பும் 
முலைச் சுவடும் அணிந்தபடியே 
சிவலிங்க மூர்த்தி மணவாளக் கோலத்துடன் பார்வதிதேவிக்கு காட்சியளித்தார்.

அருளாசி கூறிய மாதேவன் 
மலைமகளை நோக்கி 'வேண்டும் வரங்களை' கேட்கச் சொன்னார். 

மூன்று வரங்கள் கேட்டாள் முப்பெரும் தேவியரில்
வீரம் செறிந்த தேவி.

" நான் நடத்திவந்த பூசை தொடர்ந்து எக்காலமும் நடக்க வேண்டும்.

இத்திருத்தலத்தில் 
எல்லா அறங்களும் 
நான் செய்யும்படி அருளவேண்டும்.

இத்தலத்தில் உள்ளோர் செய்வினைப் பலன் நீக்கி மாதவப் பயன் கொடுத்தருள வேண்டும்."

"அப்படியே ஆகட்டும்" என்றார் 
ஆனந்தக் கூத்தர்.

அதன் பின்னர் 
இன்று வரை 
முப்பத்தி இரண்டு அறங்கள் 
புரிந்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்
அன்னை அம்பிகை.

இவ்வளவு சிறப்புமிக்க தொண்டை நாட்டில் பண்டைய பூமியில்
காஞ்சி மாநகரில் 
ஒரு திருத்தொண்டர்    வாழ்ந்து வந்தார்.

அவர் சிவநெறி 
நின்ற தவசீலர். 

அடக்கம் வாய்மை தூய்மை ஆகியவற்றோடு எம்பிரான் மட்டுமே
அவரது சொத்து.

மனதில் செம்மையுடையோனின் இணையடித் தாமரைகளை நிறுத்தி இடையறாது சிவபிரானின் திருநாமத்தைத் 
துதித்தபடி இருப்பார். 

பக்தி என்றால் 
சாதாரண பக்தி அல்ல திடமான பக்தி.

சிவனடியார்களின் தேவைகளை 
முகக் குறிப்பிலிருந்து தெரிந்துகொண்டு பணிவிடை செய்வார்.

அதனாலேயே 
அவருக்குத் திருக்குறிப்புத்தொண்டர் எனப் பெயர் வந்தது. 

அவர் வண்ணார் வகுப்பினர் என்பதால் சிவனடியார்களின் உடைகளைத் 
துவைத்துத் தருவதைச் 
சிவப்பணியாகச் 
செய்து வந்தார்.

திருக்குறிப்புத்
தொண்டரின் 
பக்தியிலும் 
பணிவிடையிலும் 
மனம் குளிர்ந்த ஏகாம்பரநாதர் 
அவருக்கு 
அருள் வழங்கத் தீர்மானித்தார்.

அதற்கு நல்லதொரு நாளும் குறித்தார்.

அதற்கு முன்னர் வழக்கம்போல் 
தன் பக்தருக்குச் 
சோதனை தந்து 
விளையாட நினைத்தார்.

விளையாடி
வினையகற்றி 
தன்னருகேயே வைத்துக்கொள்ளத் திட்டமிட்டார்.

தொண்டை நாட்டில் சிவனின் சோதனைக்கு   உமாதேவியே தப்பவில்லையே ! இத்திருத்தொண்டர் எம்மாத்திரம் ?

அது ஒரு
சரியான குளிர்காலம்.

ஓர் ஏழை முதியவர்
உருவெடுத்தார் ஏகாம்பரநாதர்.

கழுத்தில் உத்திராட்சம் மேனி முழுதும் திருநீறு அழுக்கு நிறைந்த கந்தலாடை சகிதம் திருக்குறிப்புத் தொண்டர் குடிசை அருகே 
தள்ளாடித் தள்ளாடி வந்தார்
குளிரில் நடுங்கியபடி.

ஒரு சிவனடியாரைக் கண்டவுடனே
பரவசமடையும் திருக்குறிப்புத்தொண்டர் உரோமம் சிலிர்ப்ப 
எழுந்து விரைந்து ஓடி 
பணிந்து வணங்கி அவரை வழிபட்டார்.

"தவ சீலரே…!
தங்கள் வருகையால்
என் குடிசை புனிதம் 
அடைந்து விட்டது.

இங்கு தாங்கள்
எழுந்தருளியிருப்பது அடியேன் செய்த தவப்பயனோ !
என் குலமே செய்த புண்ணியப் பலனோ !!

ஏன் இப்படி 
இழைத்து இருக்கிறீர்கள்?
குளிரில் நடுங்குகிறதே தங்கள் திருமேனி !

ஆடை வேறு அழுக்காக….
ஆடைகளைத் துவைத்து பல நாட்கள் ஆன மாதிரி கந்தலாகி உள்ளதே !

ஐயன்மீர்…!
உங்கள் உடையைத் துவைத்து தூய்மையாக்கித் 
தர வேண்டியது 
என் கடமை "

என்றவாறே 
சிவனடியார் உடுத்தி இருந்த உடையைக்
கழற்றப் போனார்.

சிவனடியார் மறுத்தார். பெரிதும் தயங்கினார்.

"அப்பனே…!
இருப்பதோ 
ஓர் ஆடை…
இப்போதே குளிர் வாட்டுகிறது…. 

தாமதமானால் 
தாங்க மாட்டேன்.
உயிர் போய்விடும்…!" 
பயந்தபடி கூறினார்.

"ஐயன்மீர்…
என் தொழில் 
துவைப்பது தான்.
என் சிவப்பணியே சிவனடியார்களின் உடைகளைத் துவைத்து தருவதுதான்.

உங்கள் கரிய கந்தல் ஆடையை
திருநீறு போல் வெண்மையாக வெளுத்துத் தருகிறேன்

மறுக்காமல் தாருங்கள். மாலைக்குள் துவைத்துக் காயவைத்துத் 
தங்களிடம் பத்திரமாகத் தந்துவிடுவேன்.

அது வரை இங்கேயே ஓய்வெடுங்கள்….

இதோ….
விரைந்து வந்து விடுகிறேன்…."
என்று சொல்லியபடியே அடியாரின் 
அழுக்கு ஆடையைப் பெற்றுக்கொண்டு குளக்கரைக்கு ஓடினார்.

முக்காலமும் அறிந்த முக்கண் மூர்த்தி
திருத் தொண்டரின் ஓட்டத்தை ரசித்தபடி 
வான் நோக்கினார்.

வானவேடிக்கை தொடங்கியது.

சூரியன் சுட்டெரிக்க ஆரம்பித்தார்.

திருக்குறிப்புத்தொண்டர் எல்லையில்லா ஆனந்தத்துடன் 
உடையைப் 
பாங்காக அலசி வெள்ளாவியில் வைத்து அழுக்கு நீக்கி 
கந்தலாடையைச் 
சிவனாடையாகப் புதுப்பித்து உலர்த்துவதற்காக அருகில் இருந்த 
பாறை அருகே சென்றார்.

விஷமக்கார 
சிவபிரானின் குறிப்பறிந்து 
சூரியன் மறைந்து போனார்.

பதிலுக்கு 
வருணபகவான் சிவபிரானின் 
மனமறிந்து 
மழை பொழியத் துவங்கினார்.

மழை என்றால் 
உலகம் பார்த்திராத மழை. அடை மழை. கண்தெரியாத அடர் மழை. ஆகாய பந்தலைக் கிழித்துக்கொண்டு அப்படியே ஒரு பெருங்கடல் கொட்டியது போன்ற பேய் மழை.

மிரண்டு போனார் திருக்குறிப்புத் தொண்டர். அரண்டு போனார் 
ஈரமான ஆடைகளைக் கண்டு.

'மாலை வந்து விட்டதோ!' என நேரம் காலம் அறியாதபடி மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்ததால் 
கடும் துயர் கொண்டார்.

எந்த மனதும் வாயும் சிவனடியார் 
வீடு வந்த சமயம் புளகாங்கிதமடைந்து 'புண்ணியம்' செய்ததாகக் கருதி மகிழ்ந்ததோ
அதே மனமும் வாயும் புலம்பி 'பாவி' ஆனதாக அரற்ற ஆரம்பித்தன.

"ஐயகோ…..
 என் செய்வேன் ? வெய்யிலின்றி துணி 
காய மறுக்கிறதே !முதியவர் குளிரில் 
என்ன ஆவாரோ?

சிவபக்தருக்கு உதவுவதற்குப் பதில் உபத்திரவம் தந்த 
பாவியானேனே !

தவ முனிவருக்கு தீங்கிழைத்துவிட்டேன். குற்றேவல் தவறிவிட்டதே ! 

அவரது திருமேனி இராக்குளிரில் ஜில்லிட்டிருக்குமே!

சிறியேனாகி 
சிவநெறி தவநெறி இழந்து நிற்கிறேனே!"

என்ன நினைத்தாரோ பாறையின் மேல் தெப்பமாக மிதந்து கொண்டிருந்த சிவனடியாரின் உடையை நோக்கிப் போனார்.

கைகளில் எடுத்தார். கண்கள் குளமாயின.

'இது எப்பேர்பட்ட பாவம்!' என்று ஓலமிட்டவாறே பாறையின் மீது தன் தலையை வைத்து பலமாக வேகமாக 
மோதிக் கொள்ள ஆரம்பித்தார்.

கற்பாறையே கலங்கியது. கற்பனைக்கு எட்டாத வினை அகற்றும்
வள்ளல் மனம் 
கரையாதா என்ன ? 

விளையாட்டு நாயகன் சிவபெருமான் 
அக்கணமே 
அவ்விடம் தோன்றி 
திருக்குறிப்புத் தொண்டரின்  தலையை உடையாமல் 
தாங்கிப் பிடித்தார்.

 "அன்பனே….!
 உன் நிலையை மூவுலகமும் அறியும்படி செய்யவே இச்சோதனையை விளையாட்டாகச் செய்தேன். 

உன் நேர்மையான
பக்தி கண்டு 
வியந்தேன். மகிழ்ந்தேன்.

விரைவில் சிவபுரி வருவாயாக ! காத்திருப்பேன்.
காத்தருள்வேன்."

இறை குரலைக் கேட்டு மெய்சிலிர்த்த திருக்குறிப்புத் தொண்டர் இறையின் திருக்கரங்கள் தொட்ட தன் தலையைச் சிவனடியில் பதித்தார்.

மழை நின்றது.
புனல் மழை மாறி 
மலர் மழை பொழிந்தது.

கொன்றை மாலை 
சூடியபடி 
இறைவனும் இறைவியும் இடப வாகனத்தில் திருக்காட்சி அளித்தனர்.

குறிப்பறிந்து
விண்ணவர் வாழ்த்த வருணனும் சூரியனும் வழிமொழிய திருக்குறிப்புத் தொண்டர் 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்' ஆகப்
பெயர் கொண்டார்.

சிவத் தொண்டர்களின் ஆடை அழுக்கை அகற்றியதோடு மும்மலங்களையும் 
இறப்பு பிறப்பு ஆகிய அழுக்குகளையும் அகற்றி சிவத்தன்மை அடைந்து அன்புடை நாயனார் 
ஆகும் பேறு பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.

இன்றும் காஞ்சிபுரத்தில் முத்தீஸ்வரர் ஆலயத்தில்
இறைவனாகவே 
அருள் தந்து
கொண்டிருக்கிறார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.

'திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்'
– இது சுந்தரர் திருக்குறிப்பு.

 திருச்சிற்றம்பலம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *