Ashata navarathiri panchami

ஆஷாட நவராத்திரி ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். நவராத்திரிகளில் வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வாராஹி அம்மன்.

வாராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. பொதுவாகவே ஆனி – ஆடி மாதங்கள் விவசாயத்துக்கு உகந்தவை. இந்த மாதங்களில்தான் புதிய மழை பெய்து நிலம் விதைப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே இந்தக் காலத்தில் நாம் வழிபட வேண்டிய தெய்வம் வாராஹி அம்மன். 

அன்னை கைகளில் ஏர்க் கலப்பையும் உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இதுவே இவள் உழவுத் தொழிலைக் காத்து அருள்பவள் என்பதன் அடையாளம். அதனால்தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பெரிய கோயிலில் அன்னைக்குத் தனிசந்நிதி கண்டு வழிபட்டான் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயிலில் இப்போதும் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

பிரமாண்ட புராணம் வாராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும்போது தேவி வாராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வாராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம். 

1. பஞ்சமி,

2. தண்டநாதா,

3. சங்கேதா,

4. சமயேஸ்வரி,

5 சமய சங்கேதா,

6. வாராஹி,

7. போத்ரினி,

8. சிவா,

9. வார்த்தாளி,

10. மகா சேனா,

11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,

12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.

இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வாராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *