Meena Rasi Rahu Kedhu Peyarchi Palangal

மீன ராசி அன்பர்களே, 
ராகு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 
ராகு பகவான், இப்பொழுது, உங்களது மீன ராசிக்கு மூன்றாம் வீடான ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு நன்மையையும், தீமையையும் கலந்து அளிக்கும் எனலாம்.  எந்தவொரு சூழ்நிலையையோ, சிக்கலையோ எதிர்கொள்ளும் பொழுது நீங்கள் தைரியத்துடன் செயல்படுவீர்கள். இப்பொழுது உங்கள் தகவல் தொடர்புத் திறனும் சிறந்து விளங்கும். இதன் காரணமாக, நீங்கள் புதிய  அறிமுகங்களை விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். 

இந்த நேரத்தில் நீங்கள் குறுகிய காலப் பயணங்களையும் அடிக்கடி மேற்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக இவை, நீங்கள் இது வரை சென்றறியாத இடங்களுக்கான பயணங்களாக இருக்கலாம். உங்கள் இளைய உடன்பிறப்புகள் மற்றும் சக ஊழியர்களுடன் உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும், இப்பொழுது வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை. உங்களில் சிலர் கற்பனையான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடும், இந்த விஷயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். 

உங்கள் கற்பனை, உங்கள் கண்களிலிருந்து நடைமுறை அம்சங்களை மறைத்து விடக்கூடும். எனவே யதார்த்தம் அறிந்து நீங்கள் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. உங்கள் மனதில் லட்சியத்தை வளர்த்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், இப்பொழுது குறுகிய கால இலக்குகளை அடைய முயற்சி செய்வதே நல்லது. உங்களில் சிலர் இந்த நேரத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் பலவற்றை வாங்க விரும்புவீர்கள். ஆனால் உங்கள் பொருளாதாரம் அதற்கு இடம் அளிக்குமா என நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தோள்கள் மற்றும் கைகளில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும், எனவே, இந்தப் பகுதிகளில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். 

கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்வதன் பலன்! 

கேது பகவான், இப்பொழுது, உங்கள் ராசியான மீனத்திற்கு ஒன்பதாம் வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்தப் பெயர்ச்சி பெரும்பாலும், உங்கள் ஆன்மீக நாட்டத்தைக் குறிப்பதாகவே அமையக்கூடும். தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, நீங்கள் மிகவும் நேர்மையாகவும், நெறிமுறைகளை அனுசரித்தும் செயல்பட முனைவீர்கள். இது உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்குக் நன்கு உதவக்கூடும். உங்களில் பலர், தங்கள் ஆன்மீகப் பயணத்தையும், இறை நாட்டத்தையும், இப்பொழுது புதிதாக ஆரம்பிக்கும் வாய்ப்பும் உள்ளது. 

நீங்கள் யாரைக் குறித்தும், வெறுப்பையோ, தவறான எண்ணங்களையோ வளர்த்துக் கொள்ள மாட்டீர்கள். உங்களின் இந்த உயர்ந்த பண்பு, மற்றவர்களுடைய மரியாதையையும், நன் மதிப்பையும் உங்களுக்குப் பெற்றுத் தரும். உங்களில் சிலருக்கு, குருக்கள் அல்லது ஆன்மீக வழிகாட்டிகள் போன்றவர்கள் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நீங்கள் இந்தக் காலகட்டத்தில், உங்கள் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதங்களை நாடலாம். 

அவர்களின் ஆசி உங்களுக்கு உற்சாகத்தை அளித்து, உங்கள் மனதில் உன்னத எண்ணங்கள் தோன்ற உதவி புரியும். யோகா, தியானம் போன்ற உள்ளம் மற்றும் உடல் ஆற்றலைப் பெருக்கும் பயிற்சி முறைகளைக் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இது பொன்னான தருணம் என்று கூறலாம். எனவே, மெய்ஞானம் காண்பதற்கு இது மிக உகந்த நேரமாக அமையும். 

 

நாகை சுந்தர மூர்த்தி, சோதிட ஆய்வாளர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *