SIddhar pulipaani

– "மாரி மைந்தன்" சிவராமன்

போகருக்கு இணையான 
யோகர்
எவருமில்லை.

சித்தர்களின் 
சிறந்தவர் 
போகர் பெருமானே.

அப்படிப்பட்ட 
போகரின் 
ஞான வழித்தோன்றலே புலிப்பாணிச் சித்தர்.

போகரின் 
சீன வாழ்வு சிறப்புமிக்கது.

குரு காலாங்கிநாதரின்  கட்டளையை ஏற்று சீனாவிற்குச் சென்று சீன மக்களுக்கென வாழ்ந்தவர் போகர்.

சீன மக்களை உயர்த்தியவர். சீனநாட்டை மேம்படுத்தியவர்.

போகர் சீனாவில் இருக்கும் போது அவருக்கு கிடைத்த அற்புதச் சீடரே புலிப்பாணி.

சீன நாட்டின் 
யூ எனும் இளைஞன் 
போகர் மொழி கேட்டு அவரது சீடரானான்.

அடிக்கடி உலகம் சுற்றும் போகர்
உலகில் தான் கண்டதைச்
சுவைபடக் கூறுவார்.

அவரது உரை கேட்டு மறைமொழி உணர்ந்து அவரை சிக்கெனப் பற்றிக் கொண்டான் சீடன் யூ.

ஒருமுறை 
காய கற்பத்தை
தான் மட்டும் உட்கொண்டால் போதாது என தன்னுடன் 
எப்போதுமிருக்கும் நாய்க்கும் 
கூடவே இருக்கும் சீடர்களுக்கும் தந்தார் போகர் முனி.

உட்கொண்ட நாய் உடனே செத்து விழுந்தது.
அடுத்து 
எடுத்துக் கொண்ட யூவும்
அரை நொடியில் மரணித்தான். 

இதைக் கவனித்த 
மற்ற சீடர்கள் 
'விட்டேன் சவாரி '
என அடுத்த வினாடி ஓடி மறைந்தனர்.

எல்லாம் அறிந்த போகர் பிரான் சிரித்தபடி 
நாயையும் 
குருவே எல்லாம் 
என்று விழுந்திருந்த யூவையும் உயிர்ப்பித்தார்.

எப்போதும் உடன் வைத்துக் கொண்டு சீனத்து யூவுக்கு
உபதேசம் தந்தார் .

எல்லாம் கற்பித்தார் 
ஞானம் கைகூடச் செய்தார்.

அந்த யூ வே
அந்த சீனத்து யூ வே பாரதத்து புலிப்பாணி.

இப்படி ஒரு வரலாறு இயம்பிச் சிலிர்க்கிறது.

இன்னொரு 
கதையும் உண்டு. 

எப்போதும் புலி மீதேறி பவனி வருவது
இவரது வழக்கம்.

புலியை வசியப்படுத்தும் வல்லமை கொண்டிருந்ததால் புலிப் பயணம் இவருக்கு சாத்தியமாயிற்று .

ஒரு நாள் 
போகர் 
குடிப்பதற்குத்
தண்ணீர் கேட்க குருநாதர் கேட்டு விட்டாரே என்ற அவசரத்தில்
புலி மீது ஏறி காட்டிற்குச் சென்று
 கை நிறைய தண்ணீர் கொண்டு வந்தார் தன்னிகரில்லாச் சீடர்.

புலி மீது சென்று தண்ணீர் கொண்டு வந்ததால் 
புலியும் 
தண்ணீரின் வடமொழியான பாணியும் சேர்ந்து புலிப்பாணி ஆனார்.

காட்டில் 
மூலிகை பறிக்கவும் சஞ்சாரம் செய்யவும் இவர் பயணித்தது 
புலி மேல் தான் என்பது கூடுதல் செய்தி. 

புலிப்பாணி பற்றிய தகவல்கள் கொஞ்சமே. ஆயினும் அவரது பங்களிப்பு 
சித்த உலகிற்கு கொஞ்சமில்லை.

போகருடன் இறுதிவரை இருந்தவர் புலிப்பாணி.
அதுவே அவரை ஆக்கியது 
ஞானக் கேணி. 

அவருடன் இருந்ததாலேயே திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரம்மச்சாரியாகவே உடனிருந்தார்.

 அவருக்கு 
உதவி புரிந்த வண்ணம் அருகிருந்தார்.

தமிழகம் திரும்பிய போகர் 
பழனிக்கு வந்தபோது பால தண்டாயுதபாணி சிலை செய்யும் பாக்கியம் கிடைத்தது.

பழனியில் முருகப்பெருமானே சிலை அமைக்க போகரைக் கேட்டுக்கொண்டதாக புராணம் கூறுகிறது.

எச்சூழலிலும் சிதையாத 
நவபாஷண சிலையை போகர் அமைத்தார்.

அச்சிலை செய்தது போகருக்கே சாத்தியம் என இன்றுவரை வியக்கிறது உலகு.

அச்சிலைப் பணியில் போகரின்
 மூன்றாவது கரமாக விளங்கியது புலிப்பாணியே.

நவபாஷண மூலிகைகளைப் பறித்து வந்ததும் பின்னாளில் அபிஷேகத்திற்குத் தினமும் 
சண்முகநதி சென்று நீர் கொண்டு வந்ததும் புலிப்பாணியே.

அவர் அதற்கு 
பவனி வந்தது 
புவி மயங்கும் 
புலி மீதே.

போகரே 
புலிப்பாணியாரின்
புலிப் பவனியை 
ரசித்து 
அவரது 
தவ வலிமையைப் பாராட்டி 
'புலிப்பாணி பாத்திர சுவாமிகள் '
என்று அழைப்பாராம்.

பழனி முருகன் சிலையைப் பாங்குற அமைத்த 
போகர் பிரான் 
அந்த அரிய வகை சிலையைப் பாதுகாக்கவும் பூசைகள் செய்யவும் புலிப்பாணியாரையே நியமித்தார் .

அவ்வளவு நம்பிக்கை சீடன் மீது.

 நிறைவாக போகர் ஆரத்தழுவி ஆசீர்வதித்து விடைபெறும்போது புலிப்பாணி 
ஓர் அனுமதி கேட்டார்
குருவிடம்.

எதையும் கேட்டிராத புலிப்பாணியிடமிருந்து 
வேண்டுகோளா … வியந்தபடி என்னவென்று கேட்டார் 
எதையும் அருளவல்ல போக முனி.

" காலங்காலமாய் நவபாஷண சிலை பூசை செய்யும் பாக்கியம் 
எனக்கு கிடைக்க அருள் தரவேண்டும்.. சுவாமி…"

சின்னக் குழந்தை போல்
புலிப்பாணி கேட்க 'அதற்கு என்ன ஆகட்டும் 'என்றார் போகர் பிரான்.

பழனியில்
காலையில் 
எழுவார் புலிப்பாணி.
அதிகாலை 
பூஜையில் புகுவார்.

பின்
சண்முகா நதியில் 
தூய நீராடல்.

குடம் நிறைய 
நீர் எடுத்து 
பழனிமலை 
அடிவாரம் வருவார்.

அடிவாரத்தில் 
ஒரு புலி காத்திருக்கும் .

அதன்மேல் அமர்ந்து காடு மலை கடந்து முருகன் 
சன்னதி அடைவார்.

புலிப்பாணி இறங்குவார்.
புலி ஓடிப்போகும்.

இதுவே புலிப்பாணியின் வழிபாட்டு முறை.

அதன் பின் தான் 
300 வருட 
பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு 
விடை தந்து விட்டு திருமணம் புரிந்தார் 
புலிப்பாணி.

சந்ததி பெருகியது.

நீண்ட காலமாய் அவரது பரம்பரையே நவபாஷண
தண்டாயுதபாணி சிலையைப் 
பூசித்து வந்தது.

புலிப்பாணியிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் சீனா சென்று தத்துவங்களை 
சீர்பட பரப்பினார் போகர் .

காலம் கோலாகலமாய் விரைந்து சுழன்றது.

போகர் அங்கிருக்க
பழனியில் இருந்த புலிப்பாணி 
முருகனடிமையாய் இருந்து  பூசையோடு சேவையோடு சேவையாய்
தமிழ் நூல்கள் பல படைத்தார்.

அவையாவும் 
சித்தர் இலக்கியத்தின் கலைஞான பொக்கிஷங்கள். மருத்துவ உலகின் மகத்துவங்கள். ஜோதிடக்கலையின்
களஞ்சியங்கள்.

அத்தனையும் அமிழ்தம். 
தமிழ்ப்பா அமுதம்.
அருட்பா கடலில் 
கடைந்தெடுத்த 
ஞான அமிர்தம்

பின்னாளில் 
சீனாவில் 
போகரின் 
நிறைவு காலத்தில் தவவலிமை 
குன்றிப் போனது.

அவரைத் 
தாய் மண்ணிற்கு அழைத்துவர 
சீடர் புலிப்பாணி
சீனா சென்றார்.

உலகையே 
உவகையுடன் 
சுற்றி வந்த போகர்
 ஓர் அடி கூட நகர முடியாத நலிவு நிலை.

புலிப்பாணி 
அவரைத் தன் 
முதுகில் அமர்த்தி 
ககன மார்க்கத்தில் தமிழகம் கொண்டுவந்தார்.

பழனியில் வைத்து குருவுக்குத் 
தொண்டு செய்தார்.

குருவுக்கு காணிக்கையாய் எதுவும் செலுத்தவில்லை என்ற எண்ணம் 
அந்த குறைவில்லாச் சீடரிடம் 
குறையாக 
இருந்தது போலும்.

ஒருநாள் 
தன் தவ வலிமை அனைத்தையும் குருவுக்கு காணிக்கையாய்
 தந்து மகிழ்ந்தார்.

குருவுக்கு சீடர் 
தந்த இந்த காணிக்கை சித்தர் உலகம் காணாத
ஒன்று. 

குருவுக்கும் சீடருக்கும் இலக்கணம் சொல்வதென்றால் இவர்களைச் சொல்லலாம்.

குருவின் ஆசியால் சீடரும் 
சீடரின் காணிக்கையால் குருவும் 
மகிழ்ந்திருப்பதும் உயர்ந்திருப்பதும் பழனிமலையில்.

போகர் சித்தி படைத்த
பழனி மலையின் காலடியிலேயே அதாவது அடிவாரத்திலேயே சீரிய சீடர் புலிப்பாணியும் ஒருநாள் சித்தியடைந்தார்.

பழனிமலை செல்வோர் அடிவாரத்தில் 
கிழக்குப் புறம் மலையேறும் பாதை அருகில் 
புலிப்பாணிச் சித்தர்
லயமான இடத்தில் வணங்கி 
தவம் மேற்கொண்டு மேலே பயணித்தல் மிகுந்த பலன் தரும்.

பக்தர் வருகையைப் பதிவு செய்பவர் அவரே.
உடனே 
போகருக்கும் 
அவர் மூலம் முருகப்
பெருமானுக்கும் பரிந்துரைப்பவரும் புலிப்பாணி சித்தரே.

முதலில்
புலிப்பாணி 
அடுத்து
முருகப்பெருமான்
அதற்கடுத்து 
போகர் என்பதே
பழனிமலை வழிபாட்டின் வழிபாட்டுக் குறிப்பு. அதுவே சிறப்பு.

சித்தர் நினைப்பே 
ஒரு தவம்.
சித்தரைப் படிப்பது
ஒரு தவம்.
சித்தர் பற்றி கேட்பது இன்னொரு தவம். சித்தர் வழி நடப்பது ஒரு பெருந்தவம். சித்தர் நிலை எய்துவது தவத்திற்கு தவம். சித்தர் தேடல் 
ஒரு ஈடேற்ற தவம்.

தேடுவோருக்கு  
அத் தவமே தவம்.
அருள் தரும் சிவம். அன்பே சிவம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *