Tag: Siddhar

  • patanchali siddhar history

    பதஞ்சலி சித்தர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர். சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரி ஷிக்கும் , மும்மூர்த்திகளின் குழந்தைகளாகிய அனுசுயாதேவிக்கும் மகனாய் பிறந்தவர். ஆதிசேஷன் அவதாரமாக தோன்றியவர். அதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுகாற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தன் சீடர்களுக்கு அசரீரி யாகவே உபதேசம் செய்வார்.

    ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் ஏற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு நேருக்கு நேராய் உபதேசிக்க என்னினார். கௌடபாதர் என்ற சீடர் மட்டும் , பதஞ்சலி முனிவர் ஏவிய பணிக்காக வெளியே சென்றுவிடுகிறார். பதஞ்சலி முனிவர் தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு கனமான திரையை போட்டுக் கொண்டார். திரையின் பின் அமர்ந்து உபதேசத்தை ஆரம்பித்தார். சீடர்களுகமகு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

    பதஞ்சலி முனிவர்களிடமிருந்து வந்த கருத்து மழையில் திக்கு முக்கா டிய சீடர்களுக்கு , இந்த கம்பீரமான குரலுக்குறிய குருநாதரின் திரு முகத்தை திரை நீக்கி பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலால், திரையை பிடித்திழுக், அடுத்த கனம் ஆதிஷேடரின் கடும் விஷக் காற்று தீண்டி , அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாகினர்.

    முனிவர் பயந்தது நடந்தது. அது சமயம் கௌடபாதர் வருவதை கண்டு முனிவர் உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நண்பர்கள் அனைவரும் சாம்பலாகியதை கண்டு கதரினார். பொறுமையை இழந்ததினால் வந்த விணை. ” கௌடபாதர் , நீ மட்டும்தான் என் சீடர் என்பது விதி என்பதால் உனக்கு சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் ” என்றார் பதஞ்சலி முனிவர். அதன்படி கௌடபாதருக்கு அனைத்து வித்தைகளும் கற்றுத் தந்தார் பதஞ்சலி. பின்பு பதஞ்சலி சித்தர் ஆதிசேஷ அவதாரத்தில் ஆனந்த தரிசனம் கண்டு சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
     

  • Arpudha siddhar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சதாசிவ பிரம்மேந்திரர் திவ்விய சரித்திரம்

     

    பிரம்மேந்திரர் 
    நிகழ்த்திய 
    அற்புதங்கள் திட்டமிட்டவை அல்ல.

    சித்தாடல்களை 
    உலகுக்கு காட்டும் 
    வீண் விளம்பரங்கள் அல்ல.

    உடல் 
    உணர்வு இன்றி 
    வெட்கம், துக்கம் 
    மகிழ்வு ஏதுமின்றி 
    ஏகாந்த நிலையில் இருந்து வந்தவர் 
    சதாசிவ பிரம்மேந்திரர்.

    அவர் பாட்டுக்கு 
    அவர் இருந்தார். 
    அது தானே 
    சித்தர் போக்கு.

    உடல் உணர்வு 
    அற்ற நிலை என்பது பிரம்மேந்திரர் போன்ற ஞானிகளுக்கே
    இயல்பாய் 
    இருக்கக் கூடியது.

    ஒருமுறை…. 
    கொடுமுடி 
    காவிரிக் கரையில் 
    சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி நிலையில் அமர்ந்திருந்தார்.

    பெரும் வெள்ளம் திடுமென வந்தது.

    காவிரி வடிந்தபோது அவரைக் காணவில்லை.

    காலம் நகர்ந்தது.

    பின்னொரு நாள் 
    ஆற்று மணலுக்காக
    மேடு ஒன்றை 
    வெட்டினர் 
    கூலியாட்கள்.

    ஓரிடத்தில் 
    மண்வெட்டி 
    தரை இறங்காது 
    ஏதோ தட்டுப்பட…
    திகைத்து எடுத்துப் பார்த்தபோது மண்வெட்டியில் 
    இரத்தம் சிதறி இருந்தது.

    பின் மெதுவாக 
    மண் அகற்ற
    உள்ளே உட்கார்ந்த நிலையில் 
    நிர்வாண சாமியார்.

    ஆம்….
    நம் 
    சதாசிவ பிரம்மேந்திரர்.

    கண்விழித்த பிரம்மேந்திரர் 
    ஏதும் நடக்காதது போல் இத்தனை காலம் மண்ணிலிருந்ததை உணராதவராய்
    மெல்ல எழுந்தார்.

    இரத்தம் வழிவது கூட தெரியாதவராய் 
    தன் பயணம் 
    தொடர்ந்தார்.

    அதிர்ச்சியில் இருந்த அனைவரும் 
    அவர் திசை 
    பணிந்தார்கள்.

    பிரம்மேந்திரரின் அருளாற்றல் 
    அவர்களைத் 
    தொழச் செய்தது. தொடர்ந்து
    புகழ் பாட வைத்தது.

    இன்னொரு சம்பவம்.

    உடல் உணர்ச்சியற்ற 
    நிறை ஞானியின் 
    உன்னத அற்புதம் சொல்லும் நிகழ்வு அது.

    ஒருமுறை 
    ஆண் பெண் பேதம் 
    ஏதுமற்ற 
    பிரம்மேந்திரர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திருச்சி பக்கம் 
    ஓர் அந்தப்புரம்.
    அதுவும் 
    ஓர் இஸ்லாமிய 
    சிற்றரசரின் அந்தப்புரம்.

    பிரம்மேந்திரர் 
    எப்போதும் போல் நிர்வாண நிலையில் திகம்பரராய்
    சென்று
    கொண்டிருந்தார். 

    அந்தப்புரத்திலிருந்த கோஷா பெண்களின் கூக்குரல் 
    அரசவையில் இருந்த மன்னன் செவிகளை அறைந்தது.

    பதறியபடி ஓடி வந்த மன்னன் 
    நிர்வாண 
    சாமியாரைப்பார்த்து
    கோபம் கொப்பளிக்க
    கொடு வாளினை எடுத்தான்.

    ஒரு பித்தனைப் போல் நடை போட்டுக் கொண்டிருந்த பிரம்மேந்திரரை
    நெருங்கினான்.

    அவர் பாட்டுக்கு ஏகாந்தமாய் சென்றுகொண்டிருந்தார். அரசனின் கோபம் 
    மேலும் அதிகரித்தது.

    அனிச்சையாய் அவசரமாய்
    வீசினான் 
    கூர்வாளினை.

    அந்தோ….! தோள்பட்டையில் 
    விழுந்த வீச்சு கையொன்றைத் தகர்த்தது தரையில் வீசி எறிந்தது.

    இரத்தம் 
    கொப்பளித்து 
    சுற்றுச் சூழலைச் 
    சிவப்பாக்கியது.

    இத்தனை 
    களேபரம் நடந்தும் 
    எதுவும் 
    நடக்காதது போல் பிரம்மேந்திரர் 
    நடந்து கொண்டிருந்தார்.

    "என்னடா இது சோதனை!" மன்னன் திகைத்தான்.

    சிந்தித்தான்.
    பயந்தான்.

    "இவர் வெறும் 
    சாமியார் இல்லை.

    மகத்துவமிக்கவர். மாமனிதர்."

    மதங்களைத் தாண்டி மன்னன் மனம் 
    எச்சரித்தது.

    சித்தன் போக்கில் இலக்கற்ற பாங்கில்
    சென்று கொண்டிருந்த பிரம்மேந்திரர் முன் 
    ஓடி நின்றான். மேற்கொண்டு 
    செல்வதைத் தடுத்தான்.

    அப்போது தான் 
    சுற்றும் முற்றும் பார்த்த திகம்பரர் 
    நடந்ததை யூகித்தார்.

    "ஐயோ….. 
    மன்னியுங்கள் சுவாமி "
    தரையில்
    விழுந்துகிடந்த 
    ஒடிந்த கரத்தை எடுத்து பிரம்மேந்தரரிடம் ஒப்படைத்தான்.

    பதட்டமும் பரப்பும் நடுநடுங்க வைக்க
    தவித்தபடி 
    நின்றிருந்தான். 

    வெட்டிய கையை 
    வாங்கிய 
    பிரமேந்திரர் தன் தோள்பட்டையின் மீது வைத்தார். ஒட்டிக்கொண்டது 
    அக்கை.

    பீறிட்ட இரத்தம் 
    ஒரு துளி கூட 
    இல்லாமல் 
    மறைந்து போனது. 

    சில நொடிகள் 
    சிறிது நடந்தவர் அனைவரும் 
    பார்த்திருக்க
    காணாமல் மாயமாய்
    மறைந்து போனார்.

    முஸ்லிம் மன்னன் மகானின் 
    தெய்வீகம் புரிந்து 
    நீண்ட நேரம் 
    தொழுதபடி இருந்தான்.

    அவனைத் தொடர்ந்து அரண்மனையும் அந்தப்புரமும் பிரம்மேந்திரரின் 
    புகழ் பாடின பலகாலம்.

    அடுத்து…
    பிரம்மேந்திரரின் வாழ்க்கையைத் 
    திசை திருப்பிய 
    சம்பவம் ஒன்று.

    எங்கோ 
    ஒரு திறந்தவெளியில் பிரம்மேந்திரர் படுத்திருந்தார்.

    தலைக்கு ஏதுவாக 
    மண் குவித்து தலைசாய்ந்து
    இருந்தார்.

    அப்போது 
    அவ்வழி வந்த 
    கிராம மக்கள் 
    "முற்றும் 
    துறந்தவருக்குத் தலையணைப் பாரு….!," கேலி செய்தபடி சென்றுவிட்டனர். 

    "என்னடா….
    வம்பாப் போச்சு" 
    என நினைத்தாரோ 
    என்னவோ 
    மறுநாள் 
    மணல் குவிக்காமல்
    தரை சாய்ந்திருந்தார்.

    அப்போதும்
    ஒரு விமர்சனம் 
    வந்தது.

    "நாம் 
    நேற்று சொன்னதை கேட்டு
    சாமிக்கு கோபம் வந்துவிட்டது பாரு…"

    வேத சித்தாந்த 
    யோக ஞானிக்கு 
    அதிர்ச்சி.

    குருகுல 
    குருவாயிருந்த 
    ஸ்ரீதர வெங்கடேசரிடம் விளக்கம் கேட்டார் பிரம்மேந்திரர்.

    "அகந்தையை விடு" அழுத்தமாய்ச் 
    சொன்னார் குருநாதர்.

    "பிறர் சொல்லுக்குச்
    செவி கொடுக்காதே !கோபம் தவிர்."

    இது 
    பிரம்மேந்திரருக்குக்
    கிடைத்த 
    உபதேச சொற்கள்.

    அதன் பின் 
    அவர் வாழ்வே
    முற்றிலுமாய் 
    குறையொன்றும் இல்லாமல் 
    இறை ஒற்றியே 
    இருந்தது.

    அற்புதங்கள் 
    அதி அற்புதமாய் தொடர்ந்தன.

    இப்படித்தான் 
    ஒருமுறை 
    பிரம்மேந்திரர் புதுக்கோட்டைப் பக்கம் ஏதோ ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார்.

    நேரம் 
    நள்ளிரவு.

    வழியில் 
    ஒரு நெற்குவியல். அருகில் 
    வைக்கோல் போர்.

    என்ன நினைத்தாரோ அதன் அருகில் 
    சென்றார்.

    வைக்கோல் போரின் இடையே உட்கார்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.

    அடுத்தடுத்து 
    வைக்கோல் போர் ஒன்றன்மீது ஒன்றாய் சுமையேற 
    அடியிலே ஆட்பட்டார் அருளாளர்.

    பிறகு 
    பல மாதங்கள் கழித்து வைக்கோல் போர் 
    வேறு இடம் 
    கொண்டு செல்ல 
    எடுக்கப்பட்டபோது உடையின்றி 
    உணர்வின்றி உட்கார்ந்திருந்த பிரம்மேந்திரரைப்
    பார்த்தவர்கள் பிரமித்தார்கள்.

    எத்தனை காலம் 
    இப்படி 
    ஊண், உறக்கம்,உணர்வு ஏதுமின்றி தவத்தில் இருந்தாரோ !

    அருகில் 
    இருந்தோரில் சிலர் 
    'திருடன்'
    என நினைத்து 
    நெருங்கி வந்து 
    அடித்து தாக்க 
    கைகளை ஓங்கினர்.

    ஓங்கிய கைகள் 
    ஓங்கிய படியே 
    அப்படியே நின்றனர்
    அடிக்க வந்த கொழுப்பர்கள். 

    கீழிறக்க 
    முடியவில்லை. பிரமேந்திரரும்
    அப்படியே நின்றுவிட்டார்.

    நிலக்கிழார் 
    விரைந்து வந்து 
    தன் ஆட்கள் 
    கல்தூண் போல் 
    நிற்பது கண்டு 
    அருகிலே 
    ஓர் அவதூதர் 
    நிற்பது கண்டு 
    நடந்ததைப் புரிந்தார்.

    பிரம்மேந்திரரின் கால்களில் விழுந்தார். மன்னிக்க வேண்டினார்.

    நிர்வாண 
    பிரம்மேந்திரர் 
    முகக் குறிப்பு 
    ஏதும் காட்டாமல் 
    அவ்விடம் அகன்றார்.

    அவர் 
    விலக விலக காவலர்களின் 
    கரங்கள் 
    அதிசயம் போல் 
    கீழிறங்கின.
    செயல்பட்டன.

    காவலர்களும் மற்றவர்களும் பிரம்மேந்திரர் 
    சென்ற 
    திசை நோக்கி 
    தரை பணிந்து வணங்கினர்.

    பின்னொரு முறை…

    அரசாங்க 
    முகாம் ஒன்று.

    அதிகாரிகள் முன்னிலையில் 
    விறகு சேகரிக்கும்
    வேலை.

    கூலிகள் 
    தலைகளில் 
    கட்டுக்கட்டாக 
    விறகுக் கட்டுகளை வைத்து 
    வேறிடம் மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அங்கு யதேச்சையாக வந்த பிரம்மேந்திரர் தலையிலும் 
    விறகுக் கட்டு 
    சுமையை 
    ஏற்றி விட்டார் 
    ஓர் அதிகாரி.

    பிரம்மேந்திரர் 
    எச்சலனமும் இன்றி 
    தாங்க முடியா 
    அச்சுமையைச்
    சுமந்து சென்று 
    பிறர் போட்ட இடத்தில்
    தானும் போட்டார்.

    உடனே 
    அந்த 
    விறகுக் குவியல் தீப்பிடித்தது.

    பயந்து போயினர் 
    பார்த்திருந்தவர்கள்.

    ஓடிவந்து அதிகாரிகள் 'நடமாடும் தெய்வம்'
    என உணர்ந்து 
    சதாசிவ பிரம்மேந்திரரை  வணங்கித் தொழுதனர்.

    அது போதும் 
    முகபாவம் 
    மாற்றமின்றி
    போய்க் கொண்டிருந்தார் அந்த மகான்.

    பித்தர் போலிருந்தும் பிரம்மேந்திரர் குழந்தைகளுக்குப் பிரியமானவர்.

    பரிவு காட்டுவார். அவர்களை 
    மகிழ்விப்பார்.
    உய்விப்பார்.

    விளையாடும் இடத்தில் மரங்களிலிருந்து கனிகளைத் தானாக
    விழச் செய்து அவர்களுக்குக் கொடுப்பார்.

    கரும்பு ஆலையில் பொங்கும் 
    கரும்புச் சாறை மாயமந்திரமாய்
    சிறுவர்கள் 
    கைகளிலேந்திக்
    குடிக்கச் செய்வார்.

    ஒரு முறை 
    மதுரையில் 
    திருவிழா. 

    அது மகான் 
    கருவூர் பகுதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்த காலம்.

    குழந்தைகள் திருவிழாவைக் 
    கண்டு களிக்க 
    வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.

    பிரம்மேந்திரரிடம்
    தம் ஆசையைச் சொல்லினர்.

    குழந்தைகளை 
    முதுகிலும் 
    தோள்களிலும் 
    ஏறச் சொன்னார்.

    இறுக அணைத்துக் கொள்ளச் சொன்னார். இரு கண்களையும் 
    மூடிக் கொள்ளச் சொன்னார்.

    அடுத்தகணம் 
    அனைவரும் 
    மதுரைத் திருவிழாவில் இருந்தனர்.

    கள்ளழகர் திருவிழா களைகட்டி இருந்தது.

    அதை விட 
    குழந்தைகளின் 
    முகங்கள் வியப்பிலும் விளையாட்டிலும் ஜொலித்துக்
    கொண்டிருந்தன.

    திருவிழா கொண்டாட்டத்தோடு கோயிலுக்கும்
    அழைத்துச் சென்றார்.

    வயிறு நிறைய 
    உணவு படைத்து கைநிறைய பட்சணங்களையும் வாங்கித் தந்தார்.

    பின்னர் –
    வாண்டுகளைக் 
    கண் மூடச் சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில் 
    கருவூருக்கு 
    அழைத்துவந்து திருமாநிலையூரில் இறக்கி விட்டு விட்டு விடைபெற்றார்.

    பெற்றோருக்கும் உற்றோருக்கும்
    செய்தி தெரியவர அவர்களுக்குப்
    பெரும் வியப்பு.

    கூடவே
    அத்தனை பேருக்கும் சுவாமி மீது 
    ஏக கோபம்.

    ஏன் தெரியுமா ?

    குழந்தைகளைத் திருவிழாவிற்கு அழைத்துச் 
    சென்றதைப் போல் தங்களை 
    அழைத்துச் செல்லவில்லை 
    என்பதே 
    அவர்களின் 
    செல்லக் கோபம்.

    படிப்பறிவில்லாத 
    பாமரன் ஒருவன் பிரம்மேந்திரர் 
    பாதம் பற்றி
    அவர் பின்னே 
    வந்து கொண்டிருந்தான்.

    சுவாமியும் ஏதும் சொல்லவில்லை.

    அப்படியே ஒட்டிக்கொண்டான்.

    ஒருநாள் 
    தன் ஆசையைச் சொன்னான் தயங்கியபடியே.

    " ஸ்ரீரங்கநாதரைத் 
    தரிசிக்க ஆசை"

    'அவ்வளவுதானே !'
     என்கிற மாதிரி 
    இருந்தது 
    மகானின் நோக்கு.

    கண்களை 
    மூடச் சொன்னார் சைகையாலே.!

    மூடினான்
    பாமர பக்தன்.

    திறந்து போது திருவரங்கத்தில் இருந்தான்.
    கூடவே 
    பிரமேந்திரர். 

    இறைவனை 
    ஆசை தீரத்
    தொழுது 
    மகிழ்ந்தவன் 
    கூட்டத்தில் 
    குருநாதரைத் தொலைத்துவிட்டான்.

    "அரங்கனை நம்பி அருளாளரைக் கைவிட்டுவிட்டேனே ?" கதறி அழுதான்.

    அதன்பின் 
    தன் குருவைத் தேடி 
    ஊர் ஊராக 
    அலைந்தான்.

    குரு செல்லும் இடமெல்லாம் 
    தேடத் தொடங்கினான்.

    காடு மேடு 
    கழனி கரை 
    ஓரம் சாரமெங்கும் தேடினான்.

    தேடினான் 
    தேடினான் 
    விரக்தியின் 
    விளிம்பில் 
    ஓடியோடித் 
    தேடினான்.

    ஒருநாள் 
    காவிரிக் கரையோரமாய்
    பிரம்மேந்திரரைக்
    கண்டான்.

    அடுத்த அடி 
    வைக்க முடியாதபடி 
    அவர் காலடி விழுந்தான். 

    அவன் பற்றியதில்
    இருந்த பரவசம் பிரம்மேந்திரருக்குப் புரிந்தது.

    அவன் வெறும் வேலையாள் அல்ல. வேதம் யோகம் 
    கிடைக்க வேண்டிய 
    சீடன் 
    என உணர்ந்தார்.

    சீடனாக ஏற்ற பின்னே மந்திர உபதேசம் 
    செய்தார்.

    பள்ளி சென்று 
    படித்திராத 
    கல்வி வாசனை கடுகளவும் இல்லாத 
    அந்த பாமரர் 
    பண்டிதரானார்.

    மகா பண்டிதராகி
    புராண புலமையில் இணையற்றவராகி உலகையே 
    வியக்கவைத்தார் 
    அந்த சீடர்.

    பலபடி உயர்ந்தும் பிரம்மேந்திரர் 
    சீரடி தவிர 
    வேறடி ஓதாது பிரம்மேந்திரர் 
    தன்னை 
    திருவரங்கம் 
    அழைத்துச் சென்றது முதல் 
    குரு அருளிய 
    அற்புதங்கள் ஒவ்வொன்றையும் அற்புதமாய் சொல்வதை அன்றாடக் கடமையாகக் கொண்டார்.

    பின்னாளில் 
    'ஆகாச புராண 
    இராமலிங்க சாஸ்திரிகள்' என்ற பெயரில் போற்றப்பட்டவர் 
    அந்த பாமர சீடரே.
    இன்று கூட 
    அவரது சந்ததியார் 
    பிரம்மேந்திரர் சித்தியடைந்த
    நெரூரில் 
    வசித்து வருவது
    கண்கூடு.

  • siddhar Pattinathar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பட்டினத்தார் கதை – பாகம் 1

    ஊரின் 
    ஒதுக்குப் புறம்.
    அது ஒரு சுடுகாடு.

    உற்றார் ஒருசிலர் சூழ்ந்திருக்க 
    எரியூட்டுவதற்குத்
    தயாராக ஒரு பிணம்.

    விறட்டிகள் அடுக்கப்பட்டு விடை பெறுவதற்குக் காத்திருக்கிறது 
    அப்பூதவுடல்.

    அதோ …
    வெறும் கோவணமும் 
    உடல் முழுக்க திருநீறும் அணிந்து 
    சாமியார் ஒருவர் 
    வருகிறார்.

    வந்தவர் 
    ஓரிரு நிமிடங்கள் 
    பாடையைத் தரிசிக்கிறார்.

    "அம்மா…"
    என்கின்ற குரல் 
    அவர் அடிவயிற்றிலிருந்து மெல்ல எழுகிறது.

    விறட்டிகளைச்
    சூழ வைத்திருந்த 
    விறகுக் கட்டைகளை விரைந்து விலக்குகிறார்.

    "ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் 
    நொந்து பெற்று..,"
    பாடலாய் வடிவெடுக்கிறது அவரது துயரம்.

    விறகுகளையும் 
    விறட்டிகளையும் 
    தள்ளி விட்டு விட்டு 
    தன் தாயை 
    அரவணைத்துத் தூக்கி அருகிருக்கும் 
    வாழைமட்டை மீது வைக்கிறார்.

    அவரது திருவாய்
    தாயை – தன்னிகரில்லா
    தாய் உறவை 
    ஒப்பாரியாய் உணர்ச்சிபூர்வமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    "முன்னை இட்ட தீ முப்புறத்திலே…
    பின்னை இட்ட தீ 
    தென் இலங்கையிலே …!

    அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே…
    யானும் இட்ட தீ 
    மூழ்க மூழ்கவே…"
    என்று கதறும் போது 
    வாழை மட்டைத்தானே 
    தீப் பிடிக்கிறது.

    புத்தம் புதிய 
    ஈர வாழைமட்டை 
    தீப்பிடித்து எரிவதை வியப்பாய் 
    உறவினர் பார்த்து 
    வியந்திருக்க….

    பாடை எரிகிற 
    பாங்கைப் பார்த்தபடி அவ்விடம் விட்டு 
    விலகுகிறார்.

    அதுவே 
    அவ்வூரில் அவர் 
    பிறர் கண்களில்பட்ட 
    இறுதி நிகழ்வு.

    அவர்….
    பட்டினத்தார். 

    அவரை 
    பட்டினத்தடிகள் 
    திருவெண்காடர் 
    சுவேதாரண்யர் 
    பட்டினத்துப் பிள்ளையார் என்றெல்லாம் 
    அழைப்பார்கள்.

    தாய்க்குச் 
    செய்ய வேண்டிய கடமைக்காக 
    பிறந்து வளர்ந்து 
    செல்வ சீமானாக இருந்த காவிரிப் பூம்பட்டினத்தில் ஒதுக்குப்புறத்தில் 
    பொது சத்திரத்தில் 
    துறவறம் பூண்டு காத்திருந்தவர் 
    சிதைக்குத் தீ மூட்டி 
    கடனை அடைத்தார். கிளம்பிவிட்டார்.

    பற்றற்றவருக்கு 
    தாய் மீது பற்று.
    ஓர் ஒட்டு.
    தாமரை
    இலை நீர் போன்றது 
    அவ்வொட்டு . 

    பின்
    பித்தனைப் போல் 
    சித்தனைப் போல் 
    ஊர் ஊராய் 
    தேச சஞ்சாரம் செய்யத் துவங்கிவிட்டார்.

    பட்டினத்தாரின் 
    திவ்விய சரித்திரம் வித்தியாசமானது.

    சிவம் ஆன 
    அவரது சரிதை 
    சிவம் நோக்கிய 
    ஒரு வழிப்பாதை. 
    சிவநெறிப் பாதை.

    சிவபிரான்
    அம்பிகையுடன் 
    ரிஷப வாகனத்தில் 
    வெளியே 
    திரு உலாவிற்கு 
    புறப்பட்டுக் 
    கொண்டிருந்தார்.

    தெய்வங்களும் முனிவர்களும் 
    ரிஷி மார்களும் 
    இறைவன் 
    இறைவியுடன் 
    பயணம் காணத் 
    தயாராக இருந்தனர்.

    'ஜய ஜய சங்கர…
    ஹர ஹர சங்கர … '
    என 
    அவர்கள் ஒலித்த 
    இறையம்ச மந்திரங்கள் சூழலைத் 
    தெய்வீகமாக்கிக் கொண்டிருந்தன.

    அதுபோது 
    குபேரன் 
    அங்கு வந்தார்.

    இறைவன் 
    புறப்படும் சூழலை 
    அறிந்த அவர் 
    இரு கைகளையும் தூக்கி வணங்கியபடியே 
    உலாவிலும் பங்கேற்றார்.

    பற்பல 
    தலங்களை தரிசித்த இறைவனின் குழு திருவெண்காடு வந்தது.

    அங்கிருக்கும் காவிரிப்பூம்பட்டினம் அனைவரையும் கவர்ந்தது.

    ஆனால் குபேரனை 
    ஈர்த்தது அதிகம்.

    அவ்விடத்தை 
    விட்டுச் செல்ல 
    மனம் வரவில்லை குபேரனுக்கு.

    சிவபெருமானிடம் 
    மெதுவாகக் கேட்டார்..

    "இறைவா….
    இந்த இடம் 
    எனக்கு மிகவும் 
    பிடித்துப் போய்விட்டது. கொஞ்ச காலம் 
    தங்கிவிட்டு வரவா ?"

    இறைவன் 
    புன்னகைத்தார்.

    இதற்குத்தானே 
    இறைவன் ஆசைப்பட்டார் !? திரு உலாவின் 
    நோக்கமே அதுதானே ?!

    "குபேரா….
    யோகமயமான 
    உடம்பு பெற்ற 
    உனக்கு இப்படி 
    ஒரு ஆசை 
    எப்படி வந்தது ?

    சரி….சரி 
    ஆசைப்பட்டு விட்டாய் !

    ஆசையே 
    பிறவிக்கான விதை.

    நீ பூமியில் பிறப்பாய்."

    'கொஞ்ச காலம்'
    என்பதை 
    சிவபெருமான் 
    இப்படிப் புரிந்து 
    கொண்டாரே 
    என்று பயந்து போன 
    குபேரன், 

    "சுவாமி….
    இப்படி குபேரனாகவே கொஞ்ச காலம் 
    இங்கே
    இருக்கத்தான் நினைத்தேன்.

    நீங்கள் 
    'மனிதப் பிறப்புக்கு '
    வரம் தந்து விட்டீர்களே !?

    ஏற்கிறேன்…. பிரபு.

    ஆனால்…
    உரிய காலத்தில் 
    என்னை நீங்கள் எடுத்தாட்கொள்ள 
    வேண்டும்.

    உறுதி தாருங்கள்…"

    "உறுதி"
    என்றார் 
    உலகாளும் உமையவளின் உள்ளம் கவர்ந்தவர்.

    திரு உலா முடிவுற
    திருவிளையாடல் நாயகன் ஆசிர்வதித்துப் புறப்பட்டார்.

    இறைவன் திருவுளப்படி குபேந்திரன் 
    பூமியில் ஜனிக்க 
    ஒரு கரு காத்திருந்தது.

    அது 
    சிவ சிந்தனையோடு 
    தவ வாழ்வோடு 
    பரோபகாரியாக காவிரிப்
    பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த 
    சிவநேசர் என்பாரின் 
    நேச மனைவி 
    ஞான கலாம்பிகையின் சிவஞானக் கரு.

    அக்கரு
    திருவாகி 
    உருவாகி 
    ஒருநாள் 
    பூமியில் பூத்தது.

    இப்படித்தான் 
    குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வச் சீமான் 
    சிவநேச தம்பதிக்கு திருவெண்காடராக பின்னாளைய 
    பட்டினத்தாராக 
    அவதாரம் கண்டார்.

    ஐந்து வயதிலேயே 
    ஞானம் பேசியது 
    குழந்தை.

    சிவ சிந்தனையே 
    வளர்ப்பாய் இருந்தது.

    ஒருநாள் 
    சிவபெருமான் 
    கனவில் வந்தார். 
    பின்னொரு நாள் 
    நேரில் வந்தார்.

    வந்த இறைவன் 
    பட்டினத்துப் பாலகன்
    நெற்றியில் விபூதி இட்டு 
    ஆசி தந்து 
    அப்பாலகனின்
    விசாரணைக் எல்லாம் 
    விடை சொன்னார்.

    "சிறுவனே….
    திருவெண்காட்டுக்குபோ…

    சுவேதாரண்யப் பெருமானையும் அம்பிகையையும் 
    பூஜை செய்.

    அடியார்களுக்கு 
    அன்னமிடு.

    காத்திரு. 

    தக்க நேரத்தில் 
    ஒரு சன்னியாசி வருவார்.

    அந்த ஒழுக்க சீலர் 
    உனக்கு ஒரு 
    சிவலிங்கம் தருவார்.
    தீட்சை அளிப்பார்.
    மந்திர உபதேசம் தருவார்.
    முழுமை அடைவாய்."

    சிவனே சொல்லிவிட்டார்… எதற்கு 
    காத்திருக்க வேண்டும் ?

    புறப்பட்டார் 
    திருவெண்காடு ஆலயத்திற்கு.

    தாய் தான் யோசித்தாள்.

    'சிறு வயது'
    என கலங்கினாள்.

    "அம்மா…
    இன்னும் கொஞ்சம் 
    வயது கூடி
    இளைஞனாகி 
    பூஜையில் இறங்கு என்கிறாய்.

    தாயே…
    மார்க்கண்டேயருக்கு 
    என்ன வயது ?

    சிவபூஜை செய்து 
    அக்னிப் பதவியை அடைந்தபோது 
    துருவனுக்கு ஏழு வயது.

    திருப்பாற்கடலை சிவபிரானிடம் 
    வேண்டிப் பெற்ற 
    உபமன்யு 
    கிழவரா என்ன ?

    ஞானத் திருவடியில் சங்கமமான 
    சம்பந்தருக்கு 
    12 வயதுதான்.

    வயது தடையில்லையே … தாயே….

    விடை தாருங்கள்.. அம்மா"

    அம்மா 
    அரைமனதோடு
    சம்மதித்தாள்.

    திருவெண்காடு கோயில் பட்டினத்தார் 
    உறைவிடம் ஆனது.

    முக்கண்ணன் சொல்லி இருந்த மாதிரியே 
    சிவந்த திருமேனி 
    சடைமுடி 
    விபூதி 
    ருத்ராட்சம் சகிதம் வேதமந்திரங்கள் சொல்லியபடி 
    ஒருநாள் 
    பிரம்மச்சாரி ஒருவர் கோயிலுக்கு வந்தார்.

    வந்தவர் வினவியது, "பட்டினத்தார் எங்கே ?
    பார்க்க வேண்டும் 
    அவனை. "

    முதல் நாள் இரவு 
    'நாளை ஒரு 
    பிரம்மச்சாரி வருவார்'
    என்று கனவு சொல்லியிருந்தது பட்டினத்தாரிடம்.

    இறையருள் நிரம்பிய இருவரும் சந்தித்தனர்.

    கோயிலில் ஒரு சம்பவம்.

    பிரம்மச்சாரி கையோடு 
    ஒரு சம்புடம் 
    கொண்டு வந்திருந்தார்.

    அது சமயம்
    கோயிலில் 
    இருந்தவர்களிடம்
    அதைத் 
    திறக்கச் சொன்னார்.

    கோயிலில் இருந்தவர்கள் எவ்வளவு முயன்றும் யாராலும் திறக்க முடியவில்லை.

    "திருவெண்காடா …
    நீ  திற…."
    கட்டளையிட்டார் 
    பிரம்மச்சாரி.

    எங்கேயோ கேட்ட குரல் 
    போல் இருக்கிறதே…!

    பட்டினத்தார் 
    கை தொட்டார்.

    காத்திருந்தது போல் 
    பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த 
    சம்புடம் திறந்து 
    உள்ளே 
    கோடி சூரியப் பிரகாசமாய் ஒரு சிவலிங்கம்.

    உடன் 
    அருளுக்கு அருள் கூட்ட அழகிய 
    விநாயகப் பெருமான் 
    சிலை ஒன்று.

    பிரம்மச்சாரி 
    சொன்னமாதிரி காவிரிக்கரையில்
    பூஜை புனஸ்காரங்கள் செய்து 
    பஞ்சாட்சரத்தை 
    தியானித்து 
    பட்டினத்தார் 
    ஞானப் படிகளில் 
    ஏறத் தொடங்கினார்.

    மனதில் 
    ஏதேதோ சொற்கள் 
    தவித்து நின்றன.

    அவற்றை
    வெளிப்படுத்த வேண்டும் என்று துடித்தார் 
    பட்டினத்தார்.

    பிரம்மச்சாரியைத் தேடினார். அவரைக் காணவில்லை.

    அவர் சற்று முன் தான் 
    தான் வந்த காரியம் 
    இனிது முடிந்தது என்று 
    இடம் பெயர்ந்து விட்டார்.

    உள்அக வார்த்தைகளின் சங்கமத்தில் 
    பட்டினத்தார் துடிக்கையில் 
    ஓர் அசரீரி எழுந்தது.

    "திருவெண்காடா…
     இனி உனக்கு 
    எல்லா கலைகளும் சித்தியாகும்.."

     அட ….அதே குரல் பிரம்மச்சாரியின் 
    குரலை ஒத்த குரல்.

    எங்கேயோ கேட்ட குரல் ! யாருடைய குரல் ?!

    மனத்தில் 
    விசாரணை தொடங்கியது.

    கனவிலும் நேரிலும் காட்சியளித்த பிரம்மச்சாரியின் 
    மந்திரக் குரல் அது.

    சர்வ வல்லமை கொண்ட சர்வேஸ்வரனின் குரல்.

    ஆம்…
    சிவபெருமானின் 
    தெய்வீகக் குரல்.

  • Idaikaadar siddhar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    ஆடு மேய்ப்பது 
    அவன் தொழில்.

    ஊரின் ஒதுக்குப்புறத்தில் பசுமை போர்த்திய சூழலில் 
    அவன் வாசம் 
    ஒரு குடிசையில்.

    இன்முகம் ஒன்றே அவன் வெளிப்பாடு.

    ஆடுமாடுகளை மேய்க்கும் அவன் ஒருநாளும் ஐம்புலன்களை 
    மேய விடவில்லை.

    புலன்களை அடக்கியதும் அடக்கத்துடன் இருந்ததும் 
    கூடிய விரைவில்
    ஒரு நல்ல பலனை தந்தது .

    வான் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த 
    ஒரு மகா ஞானியின் கண்களில் 
    அவன் பட்டான். 

    'ஆடுமேய்க்கும் இடையனிடம் 
    இப்படி எப்படி ஞானத்தேடல் ?' மகாசித்தர் சிந்தித்தார்.

    'இப்படிப்பட்ட சீடனைத் தேடி எப்படிப்பட்ட இடமெல்லாம் அடைந்தோம் '
    என புன்னகைத்தார். 

    சித்தர்
    ஒருவரை உருவாக்கும் இறை பணிக்காக இறங்கி வந்தார்.

    இப்படிச் சீடனைத் தேடி குரு வருவது
    சித்தர் இயல்பு.

    வந்தவரை வணங்கி தொழுது 
    நின்றான்.

    அந்த ஆட்டிடையன் தரையில் 
    தர்ப்பைப்புல் போட்டு 
    சிம்மாசனம் தந்தான்.

    ஓடிப்போய் குட்டிகளோடு 
    முட்டி நிற்கும் ஆடு ஒன்றின் 
    முலைப்பால்
    கொணர்ந்தான்.

    ஏற்கனவே அகமகிழ்ந்திருந்த மகாபுருஷர் மனம் நெகிழ்ந்து போனார்

    உளம் கனிய 
    உபசரிப்போக்கு எல்லாம் தேடி வரும் எனும் வரம் 
    மெய்ப்படத் தொடங்கியது.

     "தம்பி….
    நீ ஆடு மாடு 
    மேய்க்க வந்தவனல்ல. நீ மேய்ப்பவன்.
    ஆம்…
    உலக மக்களை மேன்மை கொள்ள மேய்ப்பவன். மேய்ப்பன்.
    நல்ல மேய்ப்பன். 

    நோயால் சாய்ந்து போனவர்களை மருந்தால் 
    ஓய்ந்து போகாதிருக்க செய்பவன்.

    விதிவசத்தால் சோர்ந்துபோன மக்களை சோதிடத்தால்
    கூர்ந்து பார்க்க வைப்பவன்.
    நிமிர்ந்து வாழ வைப்பவன்
    என பீடிகை போட்டார்.

    இடைச்  சிறுவனுக்கு ஏதும் புரியவில்லை. 

    ஆடும் மாடும் அழைக்கும் 
    'அம்மா '
    என்கின்ற 
    ஓசையைத் தவிர 
    ஏதும் அறியாதவனுக்கு மகான் சொன்னது எதுவும் புரியவில்லை.

    ஆனால் 
    கேட்ட வண்ணம் இருந்தான்.

    ஏதேதோ சொன்னார். கொஞ்சம் புரிந்தது.

    இன்னும் சொன்னார். தெளிவுறச் சொன்னார்.

    புரிந்தது.
    அத்தனையும் புரிந்தது. 

    வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் மற்றும் 
    இன்ன பலவும் 
    அந்த சிறுவனுக்கு ஞானமாய் அருளினார்.

     ஞான அமுதாய் ஊட்டினார்.
     
    ஆட்டுப்பால் தந்தவனுக்கு ஞானப்பால் தந்தார்.

     "இடைக்காடா…!" இப்படித்தான் அழைத்தார் மகாபுருஷர்.

    ஓ .. அதுதான் 
    அவன் திருநாமம். அவர் சூட்டிய நாமகரணம்.

    "படிப்பதும் கேட்பதும் யார்க்கும் எளிதே.

    கொஞ்சம் அறிந்துகொண்டு எனக்கு எல்லாம் தெரியும் 
    என வாய்ப் பந்தல் போடுதல் 
    யாருக்கும் வழக்கம்.

    மாற்று.. அதை மாற்று.

    நான் சொல்வதை முதலில் நீ கடைப்பிடி.

    உன் வாழ்வு சிறக்கும்.

    உன்னால் 
    உலகம் சிறக்கும்.

    எளிமையாய் 
    உலக வாழ்க்கையை ரகசியமாய் உணர்த்தியவர் உச்சிமுகர்ந்து 
    இடையரை 
    இடைக்காரரை
    இடை அணைத்து இறுகத் தழுவினார். 

    என்ன அதிசயம் ?!

    கடையனாய் 
    ஆடு மேய்த்து வந்த
    இடையன் 
    நாடு போற்ற உதித்த இடைக்காடரானார்.

    மகாபுருஷர் 
    சுடர்வித்த 
    ஞானதீபம் 
    ஆயிரம் கோடி சூரியனாய் 
    ஒளியூட்டத் துவங்கியது.

    வந்த வேலை 
    முடிந்த நிறைவோடு வான் பறந்தார்
    வந்த மகான்.

    மகா புருஷர் விடைபெற்றார். இன்னொரு 
    மகாசித்தர் உதயமானார்.

    ஆடுகள் மாடுகள் மேய்க்கும் வேலை தொடர்ந்தது.

    மகா சித்தரின் உபதேசத்தால் 
    ஆடுகள் மீதும் 
    மாடுகள் மீதும் 
    அன்பு அதிகரித்திருந்தது. ஆன்மநேயம் தழைத்திருந்தது.

    மனிதநேயம் 
    முழுநேர
    சிந்தனையாக இருந்தது.

    இப்படித்தான் 
    ஒருநாள் 
    ஆடு மேய்த்தபடி 
    ஆன்ம விசாரணையில் ஆழ்ந்திருந்தார் இடைக்காடர்.

    "இதென்ன அநியாயம்?

    மனித உறவு என்பதே உதட்டளவாய் 
    அருகி வருகிறதே !

    உள்ளம் கலப்பது வெறும் பேச்சளவாய் குறுகி வருகிறதே !

    குணம் கெட்ட உறவால்
    குற்றங்கள் மிகுகிறதே!

    பக்தி வேசமாகி 
    போலிகள் ஆட்டம் அதிகரித்து ஆர்ப்பரிக்கிறதே !

    நம்பிக்கைத் துரோகம் நயவஞ்சகம்
    நர்த்தனம் ஆடுகிறதே !' கவலை கொண்டார் இடைக்காடர். 

    "இதன் விளைவு 
    எதில் முடியும் ?

    மக்கள் மனம் 
    பாழானால் 
    மழை நிற்கும்.

    வானம் விசனப்பட்டு தன்னிலை மறக்கும்.

    பஞ்சமே பஞ்சமின்றி தஞ்சம் புகும்."

    இடைக்காடர் 
    கவலை கொண்டார்.

    மகாபுருஷர் கற்றுத்தந்த ஜோதிடக்கலை கவனத்தில் வந்தது.

    கட்டமிட்டார்.
    கவலை 
    மிகக் கொண்டார்.

     '12 ஆண்டுகள் 
    கடும் பஞ்சம் '
    கணிப்பு கதறியது. 

    இடைக்காடர் 
    மனம் பதறியது.

    " ஐயோ… 
    ஆடு மாடுகள் என்செய்யும் ? 
    மக்கள் என் செய்வர் ? " துடித்தார்.
    துவண்டார்.

    விடிவெள்ளியாய் அக்னிப் பிழம்பொன்று அகத்தில் உதித்தது.

    அடுத்த நாள் முதல் செயலில் இறங்கினார்.

    ஆடுகளுக்கு 
    எருக்கம் செடிகளை  
    உணவாகக் கொடுத்து பழகச் செய்தார்.

    ஆங்காங்கே சுவரெழுப்பி
    வரகரிசி நிரப்பி 
    சேறு கொண்டு 
    பூசி வைத்தார். 

    காலம் நகர்ந்தது. 
    கணித்தபடி 
    பஞ்சம் நுழைந்தது.

    மரம் செடி கொடிகள் மட்டுமல்ல 
    மக்களும் 
    மடியத் தொடங்கினர்.

    இடைக்காடர் மட்டும் பஞ்ச பாதிப்பு சிறிதுமின்றி 
    காலம் தள்ளினார்.

    எப்படித் தெரியுமா ?

    பஞ்சகாலமெனினும் காட்டில் 
    எருக்கும் செடிகளுக்கு குறைவிருக்காதே.

    அவை 
    பூத்துக் குலுங்கின.

    அவற்றை உண்டு பழக்கப்பட்டிருந்த
    ஆவினங்கள் பசியாறின.

    எருக்கம்பூ 
    உண்ட உடம்பை 
    அரித்துத்தள்ளுமே !

    ஆடுகளும் மாடுகளும் அரிப்பு நீங்க 
    சுவற்றில் உரசி உரசி சுகம் கண்டன.

    சுவற்றில் உரசலால் உள்ளே இருந்த வரகரிசியை 
    வெளிக் கொணர்ந்தன.

    அவற்றை எடுத்து இடைக்காடனார் 
    அமுது ஆக்கினார். ஆட்டுப்பாலில் 
    கலந்து குடித்து 
    பசி ஆற்றினார்.

    இடைக்காடரின் 
    இந்த யுக்தி அக்கம்பக்கத்தில்
    பரவிய போதும் பிறரால் போற்ற முடிந்ததே தவிர அவர்தம் 
    வயிற்றுப் பசி 
    ஆற்ற முடியவில்லை.

    ஒருகாலத்தில் பைத்தியம் என பரிகசித்தித்தவர்கள்…. வரகரிசியை சேற்றோடு கலந்து சுவர் எழுப்பிய போது இடைக்காடன் புத்தி எடக்கு மடக்கு ஆகிவிட்டது 
    என கேலி பேசியவர்களில் செத்தவர் போக 
    மீதம் இருந்தவர்கள் 
    ஓடோடிவந்தனர்.

    இடைக்காட ரை
    இரு கை கூப்பி வணங்கி நின்றனர். 

    "சுவாமி …
    பஞ்சத்தால் சாவது ஒருபுறம் இருக்க இப்போது
    தாகத்திற்கு 
    தண்ணீர் இல்லை. எங்களின் சாவு நிச்சயம் ….
    அதுவரை தண்ணீராவது கொடுத்து உதவுங்கள்."

    காலைப் பிடித்தனர்.

    ஞானப்பழம் 
    கனிந்து உருகினார்.

    "வாருங்கள்…." அவர்களை 
    அழைத்துச் சென்றார். ஓரிடத்தில் கூடி
    குழி ஒன்றைப்
    பறிக்கச் செய்தார்.

    'வந்தது பாரு 
    ஊற்றென…' 
    ஊற்றுநீர் பீறிட்டது.

    திரண்ட மக்கள் 
    தாகம் நீங்கி 
    வாழ்த்தி வணங்கினர். 
    "சுவாமி …
    நீங்கள் 
    எங்கள் குலசாமி" கூக்குரலிட்டனர்.

    ஊர்க்காரர்களின் வாழ்த்தொலிகள் 
    மேல் உலகிலும் எதிரொலித்தது.

    அது
    நவக்கிரக நாயகர்களின் கூட்டத்தில் 
    விவாதமானது.

    "பஞ்சத்தை ஏற்படுத்தியது நாம். மக்களின் 
    பாவச் செயல்களாலும் ஆள்பவர்களின் தவறுகளாலும் தீர்மானிக்கப்படுவது பஞ்சம்.

    அதை மாற்ற 
    இவர் யார் ?" கோபப்பட்டனர்
    கிரக நாயகர்கள்.

    அவர் மகத்துவமிக்க மகா புருஷரால் ஞானம் பெற்ற 
    ஓர் ஞானபுருஷர்" என்றார் சூரியனார்.

    "இடைக்காடர் திருமாலின் அவதாரம் என்று ஒரு பேச்சு இருக்கிறது"
    என்று ஒரு மெல்லிய குரல் எழுந்தது.
    அது சந்திரனின் குரல்.

     "இடைக்காடருக்கு ஞானம் தந்த மகாபுருஷர்
    யார் தெரியுமா…?
    போகர்….!"
    ஒலித்தது 
    ஓர் ஓங்கிய குரல் ஆணித்தரமாக. அக்குரலுக்குச் சொந்தக்காரர் குருபகவான். 

    "அந்த மகானை 
    நாமும் பார்க்கலாம்… நியாயம் கேட்கலாம்.." சனிபகவானும்
    புத்தி நாயகன் புதனும் சுகநாயகன் சுக்கிரனும் வெற்றி நாயகன் செவ்வாயும் 
    தங்கள் அபிப்பிராயத்தை
    ஆழமாய் சொல்லினர். 

    'கேட்போம் நியாயம் ' கூட்டம் முழுமனதாக தீர்மானித்து
    பூமிக்கு உடன்
    விஜயம் செய்தது.

    "வாருங்கள்.. நவநாயகர்களே.." வரவேற்றார் இடைக்காடர்.

    சூரியன், சந்திரன் செவ்வாய், குரு 
    புதன், சுக்கிரன்,சனி ராகு, கேது 
    என ஒன்பது நீதிமான்களும் புன்னகைத்து அமர்ந்தனர்,
    அவரவர் 
    இருக்க வேண்டிய
    அமைப்பில்  அமர்ந்தனர்.

    "மகானே…
    எங்கள் சந்தேகம் 
    நீக்கப் பெற 
    இங்கு வந்துள்ளோம்.." சூரியன் ஆரம்பித்தார்.

    "எங்கள் சக்தியை தாங்கள் மீறி விட்டீர்கள்…"
    சுக்கிரன் 
    குற்றம் சொன்னார்.

    "ஆம்..பஞ்சம் என்பது நாங்கள் நிர்ணயித்தது.
    அதை நீக்கி விட்டீர்கள்.."
    செவ்வாய் சினந்தார்.

    "ஈசனே ஒருமுறை எங்கள் அனுமதி இன்றி செயல்பட்டு  அவனே இயங்காமல் போய்விட்டான் தெரியுமா ?"
    ராகு-கேது 
    கோபமாய் வெடித்தனர்

    "சர்வசக்தி படைத்த எங்களை மீறி 
    ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் ?"
    சந்திரன் 
    அமைதியாய் கேட்டார்.

    நவகிரக நாயகர்கள்
    இப்படிக்
    கேட்டார்களே தவிர மகாபுருஷரிடம் கொஞ்சம்
    பயம் இருந்தது.
    பேச்சில் நிறைய
    பணிவு இருந்தது.

    கனிவோடு அவர்களைப்
    பார்த்த இடைக்காடர் 
    "பதிலுக்கு முன்னர்… உபசரிப்பு.." 
    என்றார்.

    வரகரிசி 
    ஆட்டுப்பால்
    விருந்து.

    உண்டனர் நவநாயகர்கள்.

    உண்ட களைப்போ வந்த களைப்போ 
    சில நொடிகளில் உறங்கிப் போனார்கள்.

    இடைக்காடர் 
    அவர்கள் துயிலும் அழகை ரசித்தபடி ஜோதிடக் கலையின் ரகசியத்தை ருசித்தபடி 
    கிரக நாயகர்களை நகர்த்தி இடமாற்றி 
    அமைத்தார்.

    "இனி பிரச்சினையில்லை.. பஞ்சம் வராது."

    அதற்கேற்ற
    கிரக அமைப்பை சரிசெய்து விட்டு திருப்தியுடன் நவநாயகர்கள் விழித்தெழக் காத்திருந்தார்.

    இடைக்காடர் அமைத்த கிரகநிலை காரணமாய் 
    வெளியே மழை
    மாமழையாய் பொழியத் தொடங்கியது 

    மழை தந்த 
    இளம் குளிரும்
    அந்த  குளிர் சூடி ய
    மண் மணமும்
    நவ நாயகர்களை விழித்தெழச் செய்தன.

    கண் விழித்த நாயகர்கள் 
    முதலில் 
    உறங்கிய ரகசியம் புரிபடாமல் திகைத்தனர்.

    அமைதியின் சொரூபமாய் இடைக்காடர் அமர்ந்திருக்க ஆனந்தம் தாண்டவமாடியது அக்குடிலில்.

    மகா புருஷரின் மகாத்மியம் 
    கிரக நாயகர்களுக்குப் புரிந்தது.

    வெளியே மழை வெறித்தனமாய் பெய்து
    கொண்டிருந்தது.

    ஒரே நாளில் பஞ்சம் பறந்தோடிவிடும் பெருமழை.
    உலகம் கண்டிராத பேய்மழை.

    மன்னிக்கவேண்டும்… நாயகர்களே…

    மக்கள் துயர் கண்டு மனம் பொறுக்காமல் உங்கள் இடங்களை மாற்றிவிட்டேன்.
    பஞ்சம் தவிர்த்துவிட்டேன்"

    "அபசாரம் ! ஐயனே.…
    முக்காலம் உணர்ந்த  உங்கள் குணம் அறியாது 
    செயல் அறியாது  பிறவியின் நோக்கம் அறியாது
    நாங்கள் தான் தவறிழைத்து விட்டோம்…. ஆசீர்வதியுங்கள்.

    உயிரினங்களின் மீது தாங்கள் காட்டும் அன்பும் பரிவும் வழிபடத்தக்கது.

    ஆன்மநேயம் 
    உய்வுற
    வழியாய்
    சொல்லத் தக்கது."

    நவகிரக நாயகர்களுக்கு 
    அன்று ஓர்
    அதிர்ஷ்ட நாள்.

    சித்தபெருமானின் ஆசி
    நவகிரக நாயகர்களுக்கு ஒருசேரக் கிடைத்தது.

    அவர்கள் வணங்கியபடி வாழ்த்தியபடி விண்ணுலகம் பயணித்தார்கள்.

    மழைப்பொழிவு நிகழ்த்திய புண்ணியரின் புகழ் ஊரெங்கும் பரவியது.

    ஆண்டி முதல் 
    அரசர் வரை இடைக்காடரைத் 
    தேடி வந்து
    தொழ ஆரம்பித்தனர்.

  • SIddhar pulipaani

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    போகருக்கு இணையான 
    யோகர்
    எவருமில்லை.

    சித்தர்களின் 
    சிறந்தவர் 
    போகர் பெருமானே.

    அப்படிப்பட்ட 
    போகரின் 
    ஞான வழித்தோன்றலே புலிப்பாணிச் சித்தர்.

    போகரின் 
    சீன வாழ்வு சிறப்புமிக்கது.

    குரு காலாங்கிநாதரின்  கட்டளையை ஏற்று சீனாவிற்குச் சென்று சீன மக்களுக்கென வாழ்ந்தவர் போகர்.

    சீன மக்களை உயர்த்தியவர். சீனநாட்டை மேம்படுத்தியவர்.

    போகர் சீனாவில் இருக்கும் போது அவருக்கு கிடைத்த அற்புதச் சீடரே புலிப்பாணி.

    சீன நாட்டின் 
    யூ எனும் இளைஞன் 
    போகர் மொழி கேட்டு அவரது சீடரானான்.

    அடிக்கடி உலகம் சுற்றும் போகர்
    உலகில் தான் கண்டதைச்
    சுவைபடக் கூறுவார்.

    அவரது உரை கேட்டு மறைமொழி உணர்ந்து அவரை சிக்கெனப் பற்றிக் கொண்டான் சீடன் யூ.

    ஒருமுறை 
    காய கற்பத்தை
    தான் மட்டும் உட்கொண்டால் போதாது என தன்னுடன் 
    எப்போதுமிருக்கும் நாய்க்கும் 
    கூடவே இருக்கும் சீடர்களுக்கும் தந்தார் போகர் முனி.

    உட்கொண்ட நாய் உடனே செத்து விழுந்தது.
    அடுத்து 
    எடுத்துக் கொண்ட யூவும்
    அரை நொடியில் மரணித்தான். 

    இதைக் கவனித்த 
    மற்ற சீடர்கள் 
    'விட்டேன் சவாரி '
    என அடுத்த வினாடி ஓடி மறைந்தனர்.

    எல்லாம் அறிந்த போகர் பிரான் சிரித்தபடி 
    நாயையும் 
    குருவே எல்லாம் 
    என்று விழுந்திருந்த யூவையும் உயிர்ப்பித்தார்.

    எப்போதும் உடன் வைத்துக் கொண்டு சீனத்து யூவுக்கு
    உபதேசம் தந்தார் .

    எல்லாம் கற்பித்தார் 
    ஞானம் கைகூடச் செய்தார்.

    அந்த யூ வே
    அந்த சீனத்து யூ வே பாரதத்து புலிப்பாணி.

    இப்படி ஒரு வரலாறு இயம்பிச் சிலிர்க்கிறது.

    இன்னொரு 
    கதையும் உண்டு. 

    எப்போதும் புலி மீதேறி பவனி வருவது
    இவரது வழக்கம்.

    புலியை வசியப்படுத்தும் வல்லமை கொண்டிருந்ததால் புலிப் பயணம் இவருக்கு சாத்தியமாயிற்று .

    ஒரு நாள் 
    போகர் 
    குடிப்பதற்குத்
    தண்ணீர் கேட்க குருநாதர் கேட்டு விட்டாரே என்ற அவசரத்தில்
    புலி மீது ஏறி காட்டிற்குச் சென்று
     கை நிறைய தண்ணீர் கொண்டு வந்தார் தன்னிகரில்லாச் சீடர்.

    புலி மீது சென்று தண்ணீர் கொண்டு வந்ததால் 
    புலியும் 
    தண்ணீரின் வடமொழியான பாணியும் சேர்ந்து புலிப்பாணி ஆனார்.

    காட்டில் 
    மூலிகை பறிக்கவும் சஞ்சாரம் செய்யவும் இவர் பயணித்தது 
    புலி மேல் தான் என்பது கூடுதல் செய்தி. 

    புலிப்பாணி பற்றிய தகவல்கள் கொஞ்சமே. ஆயினும் அவரது பங்களிப்பு 
    சித்த உலகிற்கு கொஞ்சமில்லை.

    போகருடன் இறுதிவரை இருந்தவர் புலிப்பாணி.
    அதுவே அவரை ஆக்கியது 
    ஞானக் கேணி. 

    அவருடன் இருந்ததாலேயே திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரம்மச்சாரியாகவே உடனிருந்தார்.

     அவருக்கு 
    உதவி புரிந்த வண்ணம் அருகிருந்தார்.

    தமிழகம் திரும்பிய போகர் 
    பழனிக்கு வந்தபோது பால தண்டாயுதபாணி சிலை செய்யும் பாக்கியம் கிடைத்தது.

    பழனியில் முருகப்பெருமானே சிலை அமைக்க போகரைக் கேட்டுக்கொண்டதாக புராணம் கூறுகிறது.

    எச்சூழலிலும் சிதையாத 
    நவபாஷண சிலையை போகர் அமைத்தார்.

    அச்சிலை செய்தது போகருக்கே சாத்தியம் என இன்றுவரை வியக்கிறது உலகு.

    அச்சிலைப் பணியில் போகரின்
     மூன்றாவது கரமாக விளங்கியது புலிப்பாணியே.

    நவபாஷண மூலிகைகளைப் பறித்து வந்ததும் பின்னாளில் அபிஷேகத்திற்குத் தினமும் 
    சண்முகநதி சென்று நீர் கொண்டு வந்ததும் புலிப்பாணியே.

    அவர் அதற்கு 
    பவனி வந்தது 
    புவி மயங்கும் 
    புலி மீதே.

    போகரே 
    புலிப்பாணியாரின்
    புலிப் பவனியை 
    ரசித்து 
    அவரது 
    தவ வலிமையைப் பாராட்டி 
    'புலிப்பாணி பாத்திர சுவாமிகள் '
    என்று அழைப்பாராம்.

    பழனி முருகன் சிலையைப் பாங்குற அமைத்த 
    போகர் பிரான் 
    அந்த அரிய வகை சிலையைப் பாதுகாக்கவும் பூசைகள் செய்யவும் புலிப்பாணியாரையே நியமித்தார் .

    அவ்வளவு நம்பிக்கை சீடன் மீது.

     நிறைவாக போகர் ஆரத்தழுவி ஆசீர்வதித்து விடைபெறும்போது புலிப்பாணி 
    ஓர் அனுமதி கேட்டார்
    குருவிடம்.

    எதையும் கேட்டிராத புலிப்பாணியிடமிருந்து 
    வேண்டுகோளா … வியந்தபடி என்னவென்று கேட்டார் 
    எதையும் அருளவல்ல போக முனி.

    " காலங்காலமாய் நவபாஷண சிலை பூசை செய்யும் பாக்கியம் 
    எனக்கு கிடைக்க அருள் தரவேண்டும்.. சுவாமி…"

    சின்னக் குழந்தை போல்
    புலிப்பாணி கேட்க 'அதற்கு என்ன ஆகட்டும் 'என்றார் போகர் பிரான்.

    பழனியில்
    காலையில் 
    எழுவார் புலிப்பாணி.
    அதிகாலை 
    பூஜையில் புகுவார்.

    பின்
    சண்முகா நதியில் 
    தூய நீராடல்.

    குடம் நிறைய 
    நீர் எடுத்து 
    பழனிமலை 
    அடிவாரம் வருவார்.

    அடிவாரத்தில் 
    ஒரு புலி காத்திருக்கும் .

    அதன்மேல் அமர்ந்து காடு மலை கடந்து முருகன் 
    சன்னதி அடைவார்.

    புலிப்பாணி இறங்குவார்.
    புலி ஓடிப்போகும்.

    இதுவே புலிப்பாணியின் வழிபாட்டு முறை.

    அதன் பின் தான் 
    300 வருட 
    பிரம்மச்சரிய வாழ்க்கைக்கு 
    விடை தந்து விட்டு திருமணம் புரிந்தார் 
    புலிப்பாணி.

    சந்ததி பெருகியது.

    நீண்ட காலமாய் அவரது பரம்பரையே நவபாஷண
    தண்டாயுதபாணி சிலையைப் 
    பூசித்து வந்தது.

    புலிப்பாணியிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பின்னர் சீனா சென்று தத்துவங்களை 
    சீர்பட பரப்பினார் போகர் .

    காலம் கோலாகலமாய் விரைந்து சுழன்றது.

    போகர் அங்கிருக்க
    பழனியில் இருந்த புலிப்பாணி 
    முருகனடிமையாய் இருந்து  பூசையோடு சேவையோடு சேவையாய்
    தமிழ் நூல்கள் பல படைத்தார்.

    அவையாவும் 
    சித்தர் இலக்கியத்தின் கலைஞான பொக்கிஷங்கள். மருத்துவ உலகின் மகத்துவங்கள். ஜோதிடக்கலையின்
    களஞ்சியங்கள்.

    அத்தனையும் அமிழ்தம். 
    தமிழ்ப்பா அமுதம்.
    அருட்பா கடலில் 
    கடைந்தெடுத்த 
    ஞான அமிர்தம்

    பின்னாளில் 
    சீனாவில் 
    போகரின் 
    நிறைவு காலத்தில் தவவலிமை 
    குன்றிப் போனது.

    அவரைத் 
    தாய் மண்ணிற்கு அழைத்துவர 
    சீடர் புலிப்பாணி
    சீனா சென்றார்.

    உலகையே 
    உவகையுடன் 
    சுற்றி வந்த போகர்
     ஓர் அடி கூட நகர முடியாத நலிவு நிலை.

    புலிப்பாணி 
    அவரைத் தன் 
    முதுகில் அமர்த்தி 
    ககன மார்க்கத்தில் தமிழகம் கொண்டுவந்தார்.

    பழனியில் வைத்து குருவுக்குத் 
    தொண்டு செய்தார்.

    குருவுக்கு காணிக்கையாய் எதுவும் செலுத்தவில்லை என்ற எண்ணம் 
    அந்த குறைவில்லாச் சீடரிடம் 
    குறையாக 
    இருந்தது போலும்.

    ஒருநாள் 
    தன் தவ வலிமை அனைத்தையும் குருவுக்கு காணிக்கையாய்
     தந்து மகிழ்ந்தார்.

    குருவுக்கு சீடர் 
    தந்த இந்த காணிக்கை சித்தர் உலகம் காணாத
    ஒன்று. 

    குருவுக்கும் சீடருக்கும் இலக்கணம் சொல்வதென்றால் இவர்களைச் சொல்லலாம்.

    குருவின் ஆசியால் சீடரும் 
    சீடரின் காணிக்கையால் குருவும் 
    மகிழ்ந்திருப்பதும் உயர்ந்திருப்பதும் பழனிமலையில்.

    போகர் சித்தி படைத்த
    பழனி மலையின் காலடியிலேயே அதாவது அடிவாரத்திலேயே சீரிய சீடர் புலிப்பாணியும் ஒருநாள் சித்தியடைந்தார்.

    பழனிமலை செல்வோர் அடிவாரத்தில் 
    கிழக்குப் புறம் மலையேறும் பாதை அருகில் 
    புலிப்பாணிச் சித்தர்
    லயமான இடத்தில் வணங்கி 
    தவம் மேற்கொண்டு மேலே பயணித்தல் மிகுந்த பலன் தரும்.

    பக்தர் வருகையைப் பதிவு செய்பவர் அவரே.
    உடனே 
    போகருக்கும் 
    அவர் மூலம் முருகப்
    பெருமானுக்கும் பரிந்துரைப்பவரும் புலிப்பாணி சித்தரே.

    முதலில்
    புலிப்பாணி 
    அடுத்து
    முருகப்பெருமான்
    அதற்கடுத்து 
    போகர் என்பதே
    பழனிமலை வழிபாட்டின் வழிபாட்டுக் குறிப்பு. அதுவே சிறப்பு.

    சித்தர் நினைப்பே 
    ஒரு தவம்.
    சித்தரைப் படிப்பது
    ஒரு தவம்.
    சித்தர் பற்றி கேட்பது இன்னொரு தவம். சித்தர் வழி நடப்பது ஒரு பெருந்தவம். சித்தர் நிலை எய்துவது தவத்திற்கு தவம். சித்தர் தேடல் 
    ஒரு ஈடேற்ற தவம்.

    தேடுவோருக்கு  
    அத் தவமே தவம்.
    அருள் தரும் சிவம். அன்பே சிவம்.

  • Siddhar Kalangi nadhar

    – "மாரி மைந்தன்" சிவராமன்
     
    அன்றொருநாள்…

    பாரத தேசத்தில் 
    ஒரு பெரும் பிரளயம் நிகழ்ந்தது.

    மழை..
    அடர் மழை..
    தொடர் மழை…

    நாடே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.

    பேய் மழை 
    தொடர்ந்து பெய்து பூமியை நிரப்பிய வண்ணமிருந்தது.

    நீர்மட்டம் உயர உயர
    மக்கள் தவித்தனர். மாண்டனர் பல பேர்.

    உயரே செல்வதே
    உயிர் தப்பிக்க 
    ஒரே வழி..
    உன்னத வழி.

    மலை மீது ஏறினர் மக்களில் சிலபேர்.

     அவர்களில் ஒருவர்
    ஒரு மலை மீது கிடுகிடுவென 
    ஏறிக் கொண்டிருந்தார். 

    அருகில் சென்று பார்த்தால் 
    அவர் 
    சாதாரண மனிதர் அல்ல
    என்பது மட்டும் தெளிவாய் தெரிந்தது.

    கூர்ந்து நோக்கினால் ஒரு மகான் போல் இருந்தார்

    அவரின் பார்வையில் பிரகாசம் ஒளிர்ந்தது.
    தேகம் கூட 
    பேரொளி வீசிக்கொண்டிருந்தது.

    அவர் யாராயிருக்கும் ?

    மேலே 
    மலைமேலே 
    அவரைப் போலவே பலரும் 
    வந்து சேர்ந்து இருந்தனர்.

    எல்லோருக்கும் 
    ஓர் ஒற்றுமை.
    அவர்கள் 
    அத்தனை பேரும் 
    ஒரு சித்தரைப் போல ஓர் ஞானியைப் போல ஒரு பித்தனைப் போல வித்தியாசமாய் இருந்தனர்.

    புதிதாய் வந்தவரைப் பார்த்ததும் 
    அவர்கள் மகிழ, பார்த்தவர்களைப் பார்த்து 
    வந்தவர் மகிழ அறிமுகப்படலம் ஆரவாரமாய் ஆரம்பித்தது.

    " நான் காலாங்கி.." என்றார் வந்தவர்.

    இருந்தவர் யாவரும் சமகால சித்தர்கள்.. தவஞானிகள்… சித்துக்கள் பல 
    அறிந்தவர்கள்.
    சித்தாடல்கள் 
    புரிந்த  வித்தகர்கள் .

    அன்பு விரிந்தது.
    புதிய நட்பு பூத்தது.
    ஆனந்தம் அருகில் . தாண்டவமாடியது.

    தான் கற்றதையும் பெற்றதையும் 
    பிற சித்தர்களுக்குக் கற்பித்தார் காலாங்கிநாதர்.

    பதிலுக்கு தாங்கள் கற்றதை 
    காலாங்கிக்குச்
    சொல்லித் தந்தனர் அம்மலை வாழ்  சித்தர்கள்.

    காயகல்ப முறைகளும் ரசவாத வித்தைகளும் பிரதானமாக இருந்தன அவர்களின் 
    அக்குருகுலத்தில்.

    இப்படிச் 
    சில காலம் 
    பயனுற அமைந்ததால் காலங்கிநாதர் பேரானந்தம் அடைந்தார்.
    பெருமிதம் கொண்டார்.

    அந்த மலை
    இந்த சித்தருக்கு பிடித்துப்போனது. அங்கேயே 
    தங்கிவிட 
    முடிவு செய்தார்.

    அவருக்குப் பிடித்த
     அந்த மலை சதுரகிரி.

    எவருக்கும் பிடிக்கும் சதுரகிரி மலை.

    அன்றும் இன்றும்
     என்றும் 
    அருவாய் உருவாய் அருவுருவாய் எண்ணிலா கோடி
     சித்தர் பெருமக்கள் அருள்பாலிக்கும் மலையே சதுரகிரி.

    பதினெண் சித்தர்களின் பார்வையும் பாதங்களும் 
    ஆழப் பதிந்த இடமே சதுரகிரி.

    ஒருநாள் காலாங்கிநாதர் சதுரகிரி மலையில்
     ஒரு தடாகம் கண்டார்.

    தடாகத்திற்கு 
    அருகில் ஒரு புலி 
    கம்பீரம் பீறிடப்
    படுத்திருந்தது.

    அந்தப் புலி 
    இந்த அருள்தவழும் சித்தரைக் கண்டு உறுமவில்லை.. பாயவில்லை… அமர்க்களமாய் ரசித்தபடி இருந்தது.

    சித்தருக்குத் தெரியாதது 
    எது உள்ளது உலகில் ?!

    அது புலி அல்ல…
    ஓர் ஞான புலி…
    புவி போற்றும்
     பேரொளி !
    எனப் புரிந்தார்.

    புலி 
    வடிவத்திலிருக்கும் சித்தர் அருகில் காலாங்கி வந்தார். காலடி தொழுதார்.

    மக்கள் தொந்தரவு தவிர்க்க –
    தவத் தனிமை கெடாதிருக்க 
    இப்படி ஏதேனும் 
    வடிவம் எடுப்பது சித்தர்கள் வழக்கம்.

    திடீரென

    புலிச் சித்தர் உருமாறினார்.
    தெய்வச் சித்தராய் காட்சியளித்தார்.

    நிறைய 
    உபதேசங்கள்
     செய்தார்.

    காலாங்கி நாதருக்கு சதுரகிரித் தாய் 
    ஆதி மனோன்மணி அருளிருப்பதாய் அகமகிழ்ந்து வாழ்த்தினார்.

    மனம் நிறைந்து மறைந்தார்.

    அதன்பின் 
    காலங்கி சித்தர் 
    மகா சித்தரானார்.

    இப்படித்தான் 
    ஒரு நாள் 
    ஓர் ஆமையைக் கண்டார்.

    அது ஆமை அல்ல.. அதுவும் சித்தர் 
    என அறிந்து 
    தாள் பணிந்தார்.

    அச் சித்தரின் கருணையையும் அருளையும் 
    காலாங்கி பெற்றார்.

    பிறிதொரு நாள் 
    வராக வடிவில்
    வாராது வந்த மாமணியாய்
    வராகி சித்தர்….

    யாருமே 
    யூகித்தறிய முடியாத அவரைக் கண்டுணர்ந்து வணங்கியதால் யாருமே பெற முடியாத ஞான உபதேசங்கள் 
    அவரிடம் பெற்றார்.

    யார் கண்களுக்கும் புலப்படாத –
    புனிதர் கண்களுக்கு மட்டும் தென்படும் வராக சித்தர் காலாங்கி நாதருக்கு நேரில் ஆசி தந்தது
    குருவருள் திருவருள் அன்றி 
    வேறெது இருக்கும் ?

    இப்படி 
    சிங்க சித்தர் 
    வாமன சித்தர் 
    பரசுராம சித்தர்
    ராம சித்தர்
    பலராம சித்தர்
    கிருஷ்ண சித்தர் குதம்பைச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் வேதாந்த சித்தர்  போகர் சித்தர் ஞானசித்தர் 
    கஞ்சிமுகிச் சித்தர் 
    என
    வாழையடி வாழையென 
    வந்த சித்தர் திருக்கூட்டத்தை சதுரகிரியில் கண்டார்.
    பெறற்கரிய 
    ஞானக் கல்வி பெற்றார்.

    ஆதி சித்தரை
    நவநாத சித்தர்களை
    பதினெண் சித்தர்களைப்
    பார்த்து மகிழ்ந்தார்.
    அவர்களுடன் 
    ஒன்றி மலர்ந்தார்.

    சதுரகிரி உச்சியில் 
    சித்த அனுபவ உச்சத்தில்
    உலவி வந்தார்.

    சதுரகிரியும்
    காலாங்கி நாதரும்
     மிச்சம் மீதம் இல்லாத ஆன்மீக உச்சத்தைத் தொடத் தொடங்கினர்.

    ஒருமுறை
    சதுரகிரியில்
    காலாங்கிநாதர்
    தவத்தில் 
    இருந்த சமயம்.. 
    வணிகர் ஒருவர் அவரைத் 
    தரிசித்து நின்றார்..

    'என்னப்பா '
    என்றார் சித்தர்.

    "சிவ ஆலயம்
     ஒன்றினைக் 
    கட்ட ஆரம்பித்தேன்.

    கட்டத் 
    தொடங்கியது 
    முதல் 
    என் கட்டம் 
    சரியில்லை.

    சொத்து பத்து அத்தனையும் 
    மிச்சம் மீதமின்றி கொட்டியும்
    பாதி கூட முடியவில்லை.

    என்னால் எதுவும்
     செய்ய முடியவில்லை.

    ஜோதியாய் தெரிகிறீர்கள்…

     உதவுங்கள்.. சுவாமி "
    கெஞ்சினார்.
    கதறினார். 
    காலைப் பற்றினார்.

    எத்தனை சொல்லியும் பற்றியதை
    விட்டாரில்லை.

    பற்றிலா
    சித்தர் மனம் 
    ஏனோ ஒப்பவில்லை. மௌனமாய் இருந்தார்.

    விடாக்கண்டரான வணிகர் விடவில்லை.
    அவருடனேயே தங்கி பணிவிடைகள் செய்தார்.

    அவரது 
    மன உறுதியையும்
    சிவ பற்றையும் போற்றிய 
    மாமுனி அவருக்கு 
    உதவ முடிவெடுத்தார்.

    சதுரகிரி மலையில் இல்லாதது இல்லை…! சித்த ரகசியங்கள் ஆயிரமாயிரம்…! மூலிகைகள் பல்லாயிரம்….! பலாபலன்கள் பலகோடி பல்லாயிரம்!

    வணிகர் வந்தது
    சதுரகிரிக்கு ! சரணடைந்தது 
    முக்காலமறிந்த காலங்கிநாதரிடம் !! பலன்இல்லாமலா போகும் ?

    சதுரகிரி மலையில் விரவியிருந்த
    அரிய மூலிகைகளைப் பறித்து வந்து 
    தைலம் ஒன்றைத்
    தயாரித்த 
    காலாங்கி சித்தர் 
    அத்தைலத்தைக் கொண்டு 
    தங்கம் தயாரித்தார்.

    அடடே …
    கோடிச் சூரிய ஒளி தோற்கும் பொன்னிறம். தகதகவென 
    ஓங்கி ஒளிர 
    சதுரகிரியே 
    திணறித் தான் போனது.

    "வேண்டிய மட்டும் எடுத்துச் செல்…

    கோயில் லட்சியம் நிறைவேற சிவன் அருள் புரிவார்"

    வாழ்த்தி அனுப்பினார்
    வகாரத் தைலமெனும் பொன்னை உருவாக்கும் 
    சித்தத் தைலம் கண்ட காலாங்கி நாதமுனி.

    வணிகர்
    எடுத்துச் சென்றது போக 
    மீதமிருந்தது தைலம்.

    'அது
    கெட்டவர் கைகளுக்கும் பேராசை மனிதருக்கும் போய்ச் சேர்ந்தால் 
    தீயது மிகுமே ' எனக்கருதிய காலாங்கிநாதர் அருகிலிருந்த கிணற்றில் 
    அதைக் கொட்டி பாறையை மூடினார்.

    நான்கு திசைகளிலும்  நான்கு  தெய்வங்களை காவலுக்கு நியமித்தார்.

    இன்றும் 
    சதுரகிரி செல்வோர் 
    மூலிகை கிணற்றையும் 
    மூடிய பாறையையும் 
    வராகி, காளி, பேச்சியம்மன், கருப்பண்ணன் 
    எனும் காவல் தெய்வங்களையும் கண்ணுற்று வணங்கலாம்.

    தனித்திருப்பதும்
    தவம் இருப்பதும் சித்தர்களின்
    ஏகாந்த நிலை.

    காலாங்கி நாதரும் சதுரகிரியிலேயே
    நீண்ட தவம் இருக்க அமர்ந்துவிட்டார்.

    ஒரு நாள்…
    தன்னிலை மறந்த அவரைத் 
    தட்டி எழுப்பியது 
    ஒரு கருணைக் கரம்.

    அக் கரம் 
    குரு திருமூலநாதர் திருக்கரம் 

    "காலங்கி…

    சித்தர் மரபு 
    உன்னோடு 
    முடிந்து விடக்கூடாது.
    வளர வேண்டும்… ஆல்போல் தழைக்க வேண்டும்…

    நீ என்னிடம் உரிமையோடு கற்றதை 
    நன்கு ஆய்ந்து தேர்ந்தெடுத்து சீடர்களுக்கு வழங்கு.

    உபதேசி.. நல்லவர்களை உருவாக்கு… 
    நாடு பேதம் வேண்டாம்.

    சீனாவிற்குச் செல்.. அங்கு பணியாற்று… உன் கடமையைச் செய்…." 
    உபதேசித்து மறைந்தார் 
    உன்னத குரு திருமூலநாதர்.

    அதன்பின்னர் காலாங்கிநாதர் 
    சீனா போனார்.

    சீன மக்கள் மேம்பட உபதேசம் தந்தார். மாண்புற 
    மருந்துகள் தந்தார்.

    கால் என்றால் காற்று. அங்கி என்பது உடை. காற்றை அங்கியாக அணிந்தவரே காலாங்கிநாதர்.

    மானிடர் 
    உடலைப் போல் தசைகளால் 
    ஆனது அல்ல
    அவர் உடல். 
    அது
    காற்றணுக்களால் ஆனது,

    உணரலாம்.
    தொட முடியாது.
    இஃதோர் உயர்நிலை. நிறை சித்தர் நிலை.

    ஒருகட்டத்தில் மூவாயிரம் வருடம் சமாதி நிலையில் இருக்க
    ஆசை கொண்டார் காலங்கிநாதர்.

    உடனே 
    தனது சீடர் போகரை  
    சீனாவுக்கு அழைத்து அவரை
    தன் பணி தொடரக் கூறினார்.

    போகர் சீனா
    வந்த பின்னரே 
    குரு காலாங்கி 
    சமாதி கொண்டார்.

    சீனாவில் காலாங்கிநாதர் 
    ஜீவசமாதியான
    முக்காதக் கோட்டைக்கு அடிக்கடி செல்வது போகரின் வழக்கம்.

    போகர் 
    செல்லும் போதெல்லாம் 
    சமாதி இருக்கும் இடத்தின் கதவு 
    தானாகத் திறக்க வாத்தியங்கள் இன்னிசை எழுப்ப காலாங்கிநாதர் ஒளிமயமாய் தகதகவென பொன்னிறமாய் ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசமாய்
    காட்சி அளிப்பது வழக்கமாம்.

    உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி கன்பூசியஸ் நீண்டகாலம் வாழ்ந்திட காலாங்கி நாதரே காரணம் 
    என்று 
    கூறுவோர் உண்டு.

    காலாங்கிநாதர் தான் கன்பூசியஸ்
    என்ற உறுதியான நம்பிக்கையும்
    சித்தர் உலகில் உண்டு.

    காலங்கிநாதர்
    சித்தி அடைந்தது சீனநாட்டில் என்றும் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் என்றும் 
    போகர் பிரான் 
     இரண்டு இடங்களைக் குறிப்பிடுகிறார்.

    சேலம் அருகில் இளம்பிள்ளை கிராமத்தில்
    அமாவாசைக் கோயிலில் காலங்கிநாதர் ஜீவசமாதி உள்ளது.

    சித்தர்களை
    மயக்கும் மலையான
    சதுரகிரி குறித்து காலாங்கிநாதர் 
    பாடல் ஒன்று உண்டு.

    " பாரப்பா…
    அக் குகையின் உள்ளே செல்லப்
    பாம்பாட்டிச் சித்தரும் தங்கியிருப்பார்.

    தேரப்பா நீ வணங்கி அதன் மேற்காக திரும்பவே அத்திரியின்
    குகைதானுண்டு.

    பாதை வழி நேராய் நாதாந்த சித்தர் பதியான குகை தெரியும்.

    பார்த்துக்கொண்டு வேதை நீ அடையாமல் உள்ளே சென்றால் வேதாந்த சித்தருடன் குதம்பைச் சித்தர்.. போதை உள்ள ஞானசித்தர் அடிவணங்கி…'

    இப்படிப் போகும் 
    அந்தப் பாடல்.

    சதுரகிரியின் 
    சித்தர் இருப்பை 
    இப்படி அடி அடியாய் 
    எடுத்து வைத்து
    நமது சித்தத்தை துடிக்க வைக்கிறார் காலாங்கி நாதர்.

    காலாங்கி நாதருக்கு கஞ்சமலை சித்தர் என்ற பெயர் உண்டு.

    சேலம் 
    இளம்பிள்ளை மலையே 
    கஞ்சமலை.

  • siddhar kagapujandar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    தேவேந்திரன் 
    சபை….

    அதோ….
     நாரதர்.
     இதோ….
     வசிஷ்டர்.

    தவத்தில் சிறந்த உலகில் உயர்ந்த 
    தவ ராஜாக்கள் நிறைந்த சபை.

    ஞானம் நிறைந்த 
    ஒரு மகரிஷியின் உரை.

    அவர் 
    திருநாமம் 
    சதாதபர்.

    எல்லோரும் 
    கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    தலைப்பு:
    சிரஞ்சீவிகளாக இருப்பவர்களின் திவ்விய சரித்திரம்.

    சதாதபரின் 
    சத்சங்கம் 
    களை கட்டிக் கொண்டிருந்தது.

    "மெய் அன்பர்களே !

    என்னினும் உயர்ந்த ஞானிகளே !

    மாமேருவின் 
    உச்சியில் 
    காட்சிக்கினிய
    ஒரு கற்பக மரம் உள்ளது.

    அம்மரத்தின் 
    உச்சியில் ஒரு 
    பெரிய கூடு உள்ளது.
     
    அக்கூட்டில் ஒரு 
    பெரிய காகம் உள்ளது.

    அதன் பெயர் புஜண்டர். அதை 
    காகபுஜண்டர் 
    என்று அழைக்கிறார்கள்.

    ஒரு சாபத்தின் காரணமாக 
    காகமான 
    ஞானசித்தர் அவர்.

    அவரை ஒத்த ஞானநிலை கொண்டவர்
    எங்கும் இல்லை.. எவருமில்லை.

    அளவிட முடியாத ஆயுளைக் கொண்டவர் உரோமர்.

    அவரின் குருவே காகபுஜண்டர்.

     எல்லையற்ற ஆயுள் விரிந்த அறிவு
    முக்கால ஞானம் கொண்ட 
    சிரஞ்சீவி காகபுஜண்டர்.

    சதாதபர் பேசப் பேச 
    அவர் முகம் 
    ஒளி மிகுந்து பிரகாசித்தது.

    அவர் சொல்வதைக் கேட்க கேட்க கேட்பவரின் முகத்திலும் ஒளிவெள்ளம் படர்ந்தது.

    சித்தர்கள் குறித்து பேசுபவர் உள்ளம் பூரிப்பதும் 
    கேட்பவர் உள்ளம் குதூகலிப்பதும் இருதரப்பு முகங்களும் பிரகாசிப்பதும் இயற்கையே.

    அது இறையருள் வகுத்த  நீதி.. நியதி.

    காகபுஜண்டரின் பெருமைகளை
    சதாதபர் 
    சொல்லிக்
    கொண்டிருக்கும் போதே 
    வசிஷ்டருக்கு 
    நிலை கொள்ளவில்லை.

    உடனே அவரைப் பார்க்க 
    தரிசிக்க 
    ஆவல் கொண்டார்.

     அவதார புருஷர் இராமபிரானின் 
    ஞான குருவான வசிஷ்டர் 
    அக்கூட்டம் 
    முடிந்த கையோடு 
    மேருமலை விரைந்தார். 

    மேருமலை மலைகளாலும் குகைகளாலும் 
    மரம் செடி கொடிகளாலும் நிறைந்து
    ஓர்
    அருட்தவ
    ஞானியைப்
    போல் 
    விஸ்வரூபமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது .

    அங்கு 
    பறவைகளின் கானங்கள் கூட சிவமயமாய் 
    சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன.

    வியந்தபடி 
    ரசித்தபடி 
    வசிஷ்டர் 
    கற்பகமரம் தேடி அலைந்தார்.

    "வாருங்கள் வேதவல்லுனரே ! ஈடில்லாத மாமுனியே !!"

    காக ரூபத்திலிருந்த காகபுஜண்டர் வரவேற்றார்,

    " பறவைகளின் அரசே !

    உங்களைப் பற்றித்தான் தேவலோகத்தில்
    ஒரே பேச்சு 

    அப்பப்பா….
    எத்தனை கால வாழ்க்கை…! மரணமிலாப் பெருவாழ்வு….!

    எத்தனை பிறவி ! எத்தனை அனுபவ ஞானம் !
    இருந்தும் எவ்வளவு அமைதி…!!!

    கர்வமற்ற
    காகபுஜண்டரே !

    உம்மைப் பற்றி 
    நிறைய அறிய 
    ஆவல் கொண்டே நேரில் வந்தேன்.

    உங்கள் ஆயுட்கால அனுபவத்தை ஞானத்தை தத்துவத்தை 
    அறியவே  வந்துள்ளேன்"

    ஞான நிலையின் உச்சத்திலிருந்த 
    ஞானமுனி
    வசிஷ்டர் கேட்க 
    கற்பகத் தருவின் உச்சியில் இருந்த காகபுஜண்டர் தலையசைத்தார்.

    அவர் சொன்ன பதில்களால் 
    எதற்கும் 
    அசையா 
    வசிஷ்ட ரிஷியே அசைந்தார்.

    அவர் சொன்ன சுயவரலாறு 
    கேட்பவர் எவரையும் 
    அசர வைக்கும் வல்லமை கொண்டது.

    அகிலத்தையே அசைக்கும் 
    பெருமை மிக்கது.

    "வசிஷ்ட மகரிஷியே !
    என்வரலாறு யாருக்கும் 
    பிரமிப்பு தரும்.

    அதில் 
    என் ஆயுள் வரலாறு எப்படிப்பட்டவருக்கும் மயக்கம் தரும்.

    இது இறைவனின் கருணை.

     மயூரநாதனின் மகிமை.

    சீர்காழி  மாயூரநாதனே எனக்கு 
    அருள் தந்து 
    ஆயுள் தந்து 
    வடிவு தந்து 
    காத்து வரும் 
    நாத பிரான்.

    நான்
    பல கோடி 
    யுகங்கள் கண்டவன்.

    யுகம் பற்றிய 
    கணக்கு ஒன்று உண்டு. கேளுங்கள்….
    அதுவே பிரமிப்பூட்டும். 

    மொத்த யுகங்கள் 18. ஒவ்வொன்றும் 
    பல கோடி வருடங்கள்.

    அறியுகம்14 கோடி வருடங்கள். 
    அற்புதனர் யுகம்
    10 கோடி ஆண்டுகள்.

    தர்ம யுகம்12 கோடி.
    ராசி யுகம் 16 கோடி. வீராசன் யுகம் 20 கோடி. 
    விண் யுகம் 16 கோடி. வாயுயுகம் 7 கோடி.
    மைன யுகம் 6 கோடி.

    இவ்விதம் தொடங்கி கலியுகம் 
    4 கோடியே 72 ஆயிரம் ஆண்டுகள்.

    18 யுகங்கள்.
    ஒரு கல்பம்.
    இந்த கல்பம் 15 சேர்ந்தால் அது இந்திரனின் ஒருநாள்.

    இந்திரன் கணக்கில் 
    60 வருடம் சேர்ந்தால்
    அதன் பேர் 
    ஆண்டு யுகம்.
    18 ஆண்டு யுகம்
     ஒரு பிரளயம்.

    ஒரு லட்சம்பிரளயம்
    ஒருநாள் பெருக்கம்.
    16 நாள் பெருக்கமே இந்திரன் ஆயுள்.

     7000 கோடி நாள் பெருக்கு
    வகோர முனிவரின் ஆயுள்.

    வகோர முனிவரின் 
    8 கோடி நாள் நாதமுனியின்ஆயுள்.

    நாதமுனியின் 
    ஒரு கோடி நாள் விஷ்ணுமுனிக்கு ஆயுள்."

    இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு முனிவருக்கும் 
    அவர்தம் ஆயுள்
    பற்பல கோடி பல்லாயிரம் கோடி 
    கூடி வரும்.

    அந்த வகையில் பார்துமா முனிவர்
    பல்லாயிரம் கோடி ஆயுட்காலம் பெற்றவர்.
    மூன்றரை கோடி உரோமம் உதிர்ந்தால் 
    அவர் ஆயுள் நிறையும்.

    அது பற்பல பல்லாயிரம் கோடிகள் என வரும் போது திருமால் 
    சங்கரர் மகாவிஷ்ணுவின் ஆயுள்கள் பூரணமாகும்.

    இப்படி யுகக் கணக்கு இருக்கையில் 
    என் ஆயுளை 
    நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

    இது 
    நம்ப முடியாததாக இருக்கலாம்.

    ஆனால் 
    இதுவே உண்மை.
    இது இறையருள் கணக்கு.

    இதற்கு ஒரு 
    தற்காலிக சாட்சி நானே.

    உரோமரிஷி 
    என் புதல்வனே …!
    சீடனே…!!

    உங்களுக்கு தெரியுமா?

    காலக் கணக்கில் வரும் உரோமம்
    இதுவரை எனக்கு 
    ஒரு முறை கூட உதிரிந்தது இல்லை.

    என் நீண்ட ஆயுளில்
    நான் கண்டதைச் சொல்கிறேன்… செவிமடுத்துக் கேளுங்கள்.

    மாயூரநாதனைத் தரிசிக்க 
    உமாதேவி 
    மயில் வடிவம் கொண்டு 
    மாயூரம் வந்து 
    பூஜை செய்வதை 
    நான் பார்த்திருக்கிறேன்.

    அப்படி 
    இரண்டு முறை இறைவியைப் பார்த்த பாக்கியசாலி நான்….

    உங்களுக்குத் தெரியும்… 

    ஆதியில் 
    பிரமனுக்கு 
    ஐந்து முகங்கள் இருந்தன.

    'சிவனைப் போலவே எனக்கும் ஐந்து முகம் எனவே
    நானும் சிவனும் 
    சரி சமம் '
    என 
    கர்வம் ஏற்பட்டது பிரமனிடத்தில்… 

    கர்வத்தின் 
    விளைவு ?

    ஒரு தலை கொய்யப்பட்டது இறைவன் திருவருளால். 

    நடுத்தலை இழந்த பிரமன்
    நான்முகன் ஆனான்

    ஐந்து தலைகளோடு மாயூரம் வந்து சிவபூஜை செய்த பிரமதேவனை
    நான்
    ஒன்பதுபிறவியாய் 
    ஒன்பது முறை 
    ஒன்பது பிரமனை பார்த்திருக்கிறேன்.

    அதன்பின் 
    நான்கு தலைகளோடு நான்முகன் 
    வந்து சென்றதை 
    பத்து முறை பார்த்திருக்கிறேன்.

    மகாவிஷ்ணு கூட ஆதிகாலத்தில் வெண்மை நிறத்தில் இருந்தார்.

    பாற்கடலைக் கடைந்தபோது பக்தர்களைக் காக்க அவரும் 
    சிவனைப் போல 
    ஆலகால விஷம் உண்டு 
    நீலம் கொண்டார்.

    நான்
    வெள்ளை நிற விஷ்ணு பிரானையும் நீலநிற விஷ்ணுவையும் 
    10 தடவை பார்த்திருக்கிறேன்.

    ஒவ்வொரு முறையும் சிவ பூஜைக்காக 
    அவர் 
    மாயூரம் வருவார்.
    இறையருள் 
    பெற்றுச் செல்வார்.

    தேவர்கள் 
    பாற்கடலைக் கடைந்ததைக்  கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

    உலகம் தோன்றிய காலத்தில் 
    பூமி ,சூரியன், சந்திரன் தோற்றத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

     இரண்யாட்சன் பூமியை எடுத்துச் செல்ல முயன்றதையும்  பெருமாள் 
    வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டதையும் 
    நேரில் கண்டு வியந்திருக்கிறேன்."

    "காகபுஜண்டரே…! தாங்கள் 
    சொல்லச் சொல்ல வியந்து சிலிர்க்கிறேன்…

    எவ்வுலகமும் வியக்கூடிய 
    ஞான அனுபவம் பெற்றவர் நீங்கள்…." வசிஷ்டர் வாயால் வாழ்த்துக்கள் நிறைந்தன.

    "இன்னும் கேளுங்கள் மகரிஷி….

    சிவபெருமான் இதுவரை 
    30 தடவை முப்புரங்களை எரித்துள்ளார்.

    தட்சனது யாகத்தை இரண்டுமுறை அழித்துள்ளார்.

    மகாவிஷ்ணு பரசுராமராக 
    ஆறு தடவை அவதரித்துள்ளார்.

    ராம அவதாரம் 
    10 முறை.
    கிருஷ்ண அவதாரம்
    15 முறை.

    இவையெல்லாம் பார்த்தது 
    எனது பாக்கியம்."

    உடனே
    "உங்களைத் தரிசிப்பது எனது பாக்கியம்… " 
    வசிஷ்டர் வணங்கிச் சொன்னார்.

    "உங்களுக்கு இது எட்டாவது பிறவி தெரியுமா ?" காகபுஜண்டர் கணக்குச் சொன்னார்.

    வசிஷ்டர் அதிர்ந்து போனார்.

    "அடேங்கப்பா… எட்டாவது பிறவியா?! "

    காகபுஜண்டர் 
    'ஆம் ' என்பது போல புன்னகை பூத்தார்.

    தேவர்களும் தெய்வங்களும் சித்தர்களும் வியக்கும்  கணக்கில்லா 
    ஆயுள் கொண்ட  காகபுஜண்டர்
    இன்றும் அருவாய்
    சீர்காழி அருகே திருமணஞ்சேரியிலும், காரைக்கால் அருகே திருமலைராயன் பட்டினத்திலும்,
    திருப்பதி அருகே திருகாளஹத்தியிலும், கள்ளக்குறிச்சி அருகே தென்பொன்பரப்பியிலும்,
    திருச்சி அருகே உறையூரிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

  • Siddhar Bogar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சித்தர் 
    போகர் பிரான் 
    ஓர் அற்புத சித்தர்.

    பொறியியல் துறையின் 
    வல்லப சித்தர். 

    சீன தேசத்தில் 
    அவர் செய்த  வித்தைகள் 
    பற்பல கோடி..


     
    தன் வித்தைகளை 'வேடிக்கைச் சிமிட்டு வித்தை '
    என கண்சிமிட்டிச் சொல்லுவார் போகர்.

    கவி பாடும் 
    புலவர் என்பதால் அத்தனை செயல்களையும் அனுபவங்களையும் கண்டுபிடிப்புகளையும் அப்படியே 
    பதிவு செய்திருக்கிறார்
    சீன மொழியில்.

    போகர் கட்டிய 
    மரக் கப்பலும் தேவரதங்களும் வேறெந்த சித்தர்களும் சிந்திக்காதவை. 

    அவற்றை 
    உருவாகிய விதத்தை 
    பாடம் போல் 
    தன் பாடல்களில் பாங்காய் படைத்திருக்கிறார்.

    2400 அடி நீளம்.
    300 அடி அகலம். 
    300 அடி உயரம்.
    7 மாடிகள்.
    64 வீடுகள்.

    கொஞ்சம் கற்பனை செய்யுங்கள் !

    2400 அடி நீளம்..
    300 அடி அகலம்…
    300 அடி உயரம்…. 
    7 மாடிகள்…..
    64 வீடுகள். 

    இவை அரண்மனை ஜாடையில்….!

    கிழக்கும் மேற்குமாய் வாயில்கள்.
    தெற்கும் வடக்குமாக  ஜன்னல்கள்.

    ஒவ்வொரு மச்சும் 
    ஆறுகால் மண்டபம். ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள்..

    இத்தனை பிரமாண்டமும் எதன்மீது தெரியுமா ?

    ஒரு மரக் கப்பலின் மீது.!!

    டைட்டானிக் கப்பலே கிட்ட வர முடியாத அத்தனை அம்சங்கள்!

    கப்பல் இயங்கும் தொழில்நுட்பம்… போகர் கொண்ட மதிநுட்பம்.

    அப்பப்பா… 
    என்ன ஆச்சரியம் ..! 
    அந்த கப்பல் 
    நீராவிக் கப்பலாம்.

    கப்பலின் தலைவர்.. இயக்கிய மாலுமி
    யார் தெரியுமா ?

    போகர் தான்…
    தன்னிகரில்லாத போகர் பிரான் தான்.

    சீனாவில் இருந்தபோது 
    அமைத்த
    அந்த கப்பலில் 
    சீன மக்களையும் 
    ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி 
    ஏழு கடல்களையும் காண்பித்தார் 
    சுற்றுலா பிரியரான பற்றிலா சித்தர்.

    சுற்றுலா.
    ஆன்மீக சுற்றுலா.
    அவர் மக்களுக்கு சொன்ன 
    அகமகிழ் தத்துவம்.

    கடல் வழிப் பயணத்திற்கு 
    மரக் கப்பல் படைத்தவர் விண்வெளிப் பயணத்தை 
    விட்டு வைப்பாரா என்ன !

    வானூர்தியும் படைத்தார்.

    கையை நீட்டி 
    சித்து புரிந்து மந்திரத்தால் மாங்காய் பறித்திடவில்லை சித்தர் பிரான்.

    உயர் தொழில்நுட்பம். நுட்ப இயந்திர இயக்கம்
    அதன் சிறப்பம்சம்.

    அந்த பறக்கும் விமானத்தின் பெயர் தேவரதம் .

    விளையாட்டாய் 
    அதை காத்தாடி 
    என்று அழைப்பது 
    போகரின் வழக்கம்.

    காத்தாடிக்குப் 
    பட்டம் என பெயர் உண்டு அல்லவா?
    பறக்கும் பட்டமே காத்தாடி.

    30 அடி நீளம்
    30 அடி அகலம் 
    என  சதுர பரப்பில் பட்டம் செய்தார் 
    போகர்.

    ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து இன்றைய ஹெலிகாப்டர் மாதிரி பறக்க வைத்தார்.

    காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளும் சித்தர் தொழில்நுட்பங்களும் கொண்டு 
    காத்தாடி செய்து பறக்கவிட்டார்
    போகர்.

    சீன மக்களை 
    ஏற்றிக் கொண்டு முதலில் 
    முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார்.

    பின் உலகம் முழுதும்
    பல நாடுகளுக்குப் பறந்திருக்கிறார்.

    ஏற்கனவே 
    ககன குளிகை கொண்டு 
    தான் மட்டும் பறந்தவர்- பல்லாயிரம் மைல்கள் கடந்தவர் 
    இப்போது 
    சீன அன்பர்களுக்காக- சீன மக்களுக்காக 
    காத்தாடியை அர்ப்பணித்திருக்கிறார்.

    போகர்
    காத்தாடி 
    துணை கொண்டு போன நாடுகள் 
    பார்த்த சித்தர்கள் பெற்ற பாடங்கள் படைத்த பாடல்கள் அதிகம்.

    போகர் சித்தர்களில் விவேகமானவர். விஞ்ஞானத்தில் விற்பனர்.

    கற்க வேண்டியதைக் கற்பதும் 
    கற்பிக்க வேண்டியதை பிறருக்குக் கற்பிப்பதுமே 
    அவரது கல்விக்கொள்கை.

    காத்தாடி தயாரிப்பதற்காகவே போகர்
    அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் 
    ஒரு பாடல் புனைந்திருக்கிறார்.

    அஸ்வினி மகரிஷியிடம் 
    ஓர் ஆகாயப் புரவியிருந்ததாம்.

    அது
    பஞ்சலோகத்தை உருக்கிச் செய்த உலோகப் புரவி .

    அது பறப்பதைப்
    பார்க்கும் போது ஒளிபொருந்திய சிவரதம் போல் இருக்குமாம்.

    அஸ்வினி சித்தரைச் சந்தித்து
    போகர் பிரான்
    தாள் பணிந்த போது போகரின் பெருமைகளை திறமைகளை 
    அம்மகரிஷி
    ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை
    வாழ்த்திப் போற்றியதோடு
    தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற 
    சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார் அசுவினி.

    அதன்படி
    வானரதம் தயாரித்த போகர் பிரான்
    அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.

    உண்மையில்
    முதன் முதலில் 
    உலகம் சுற்றிய வாலிபர் 
    போகர் தான். 

    போகரின் 
    உலக பயணம் 
    அறிய
    அவர் வார்த்தைகளுடன் பயணித்தால் சுவாரசியம் கூடும்.

     'தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்.
    தக்காண எண்ணாயிரம் காதமப்பா…

    வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா….

    கோடி பேர் சமாதிநிலை 
    தன்னைக் கண்டேன் கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்

    இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம்.
    கலைமிகு 
    ரோமாபுரிப் பயணம் .

    ரோமாபுரிக்கு 
    அடுத்து
    ஜெருசலேம் செல்கிறார்.

    'பாலான குருபரனை வணங்கி யானும் பார்க்கவே ஜெருசலேம் போகவென்று  மானான மாதாவைக் காணவென்று வணங்கினேன் 
    அவர் பாதம் தொழுதிட்டேனே !

    என்னவே இயேசுவின் தன் மகிமை மெத்த எடுத்துரைத்தார் 
    சீஷர் வர்க்க 
    அநேகம் பேர் '

    ஜெருசலேமில் 
    மேரி மாதாவையும் 
    இயேசு பிரானையும் தரிசனம் கண்டவர் 
    அடுத்து சென்றது 
    அரபு தேசம்.

    அரபு நாட்டு பயணத்தின் நோக்கம் இணையற்ற
    இறைதூதர்
    நபிகள் நாயகத்தை தரிசிப்பது தான். 
    அதை போகரே சொல்கிறார்.

    ' மன்னர் மெய்ச்சு
    மக்கவாம் புரியை
    காண உவகையுடனே ரதம் திருப்பி..

    திண்பான முகமது மார்க்கத்தார்கள் சிறப்புடனே கண்டேனே 
    கோடி பேரே ! '

    மெக்காவில்
    சமாதி நிலையிலிருந்த யாகோபுவைச்
    சந்தித்த போகர்
    அவரது
    ஞான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார்.

    அப்புறம் 
    அவரது பயணம் 
    தென் அமெரிக்கா என்கிறது 
    பிறதொரு குறிப்பு.

    ' போச்சா 'என்பவர் தென் அமெரிக்கா வந்து 
    எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக –
    கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக 
    எழுதி வைத்திருக்கிறார் 
    சிலி நாட்டு வரலாற்றாசிரியர் 
    மைகாஸ் ( Mucas )
    என்பவர்.

    அந்த போச்சா 
    போகர் தான்
    என்கிறது 
    ஓர்
    ஆய்வுக் குறிப்பு.

    உலகம் சுற்றிய 
    வாலிப சித்தர்
    பாரிஸ் நகரையும் விட்டுவைக்கவில்லை.

    'பண்பான குளிகையது பூண்டு கொண்டேன். பாங்கான பாரிஸ் சபதியைக் கண்டேன்' என 
    வியக்க வைக்கிறார்.

    உலகைச் சுற்றிய அனுபவம் ,
    உமையவள் வழங்கிய ஞானம் 
    போகருக்கு மட்டுமல்ல உலகுக்கும்
    பற்பல அறிவியல்
    நன்மைகளை வழங்கின.

    * நிலம் ஒரு பங்கு 
    நீர் மூன்று பங்கு 
    என்று 
    புவிச்சூழல் அமைப்பை 
    முதலில் சொன்னவர் 
    போகர் பெருமானே.

    * கடல் பயணத்தின் போது 
    கடும் பாறையை –
    பாயும் சுறாவைக் கண்டறிந்து 
    விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.

    இன்றைய பெரிஸ்கோப்…
    போகர் கண்டுபிடித்த அன்றைய 
    போகர் ஸ்கோப் . 

    * பீங்கானும் கண்ணாடியும் போகரின் கண்டுபிடிப்புகளே.

    * வெப்பக் காற்றை நிரப்பி
    உயரே பறக்கும்
    பலூன்
    போகரின் கண்டுபிடிப்பே..

    அதற்கு 
    அவர் 
    வைத்த பெயர் 
    'கூண்டு வித்தை '

    * பாராசூட்டிற்கு முன்னோடி போகரே.
    அதை
    'குடை வித்தை '
    என 
    அறிமுகம் செய்தார் விஞ்ஞானி போகர்.

    * கடலுக்கடியில் பாதுகாப்போடு பயமின்றிப் பயணிக்க
    கவச உடையோடு சுவாசக்குழாய் 
    முதலான உபகரணங்களை 
    பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
    கண்டுபிடித்தவர் 
    போகர் பிரான்.

    அன்று உருவாய்
    உலகைச் சுற்றிய போகர் பிரான்
    இன்று அருவாய்
    பழனி, காஞ்சிபுரம் பேரூர், சதுரகிரி 
    ஆகிய தமிழகத் திருத்தலங்களில் சமாதி நிலையிலும்

    இந்திய இமயமலைப் பகுதிகளில்
    அமர்நாத், கேதார்நாத் பத்ரிநாத்…

    திபெத் – சீன பகுதியில் கைலாஷ்நாத்…

    நேபாளத்தில் பசுபதிநாத்….

    ஆகிய 
    ஐந்து தலங்களில்
    நிஷ்ட நிலையிலும்
    அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

  • Ramadevar siddhar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சித்தர்கள் 
    இனம், மொழி, 
    நாடு, நிறம், 
    சமயம், சாதி கடந்தவர்கள்.

    சமரச சன்மார்க்கமே அவர்கள் சமயம்.
    சித்தர் தத்துவமே 
    அவர்கள் மதம்.

    சாதிகளைக் கடந்து சாதித்தவர்கள் அவர்கள்.
    மதங்களைக் கடந்து போதித்தவர்கள் அவர்கள்.

    ஞானமடைதல் மதங்களுக்கு அப்பாற்பட்டது 
    என உணர்த்தியவர்கள்.

    மதமாற்றம் என்னும் சொல் புழக்கத்தில் இல்லாத காலத்திலேயே 
    மதம் மாறி 
    மக்கள் நலம் பேணியவர்கள் சித்தர்கள். 

    இராமதேவர் 
    என்னும் 
    சித்தர் பிரானே 
    மதமாற்றம் கண்ட 
    முதல் சித்தர்.

    கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள் மத்தியில்
    நாடு விட்டு நாடு சென்ற நன்மகான் அவர்.

    அரபு தேசத்தில் அரேபியர்களின் மனங்களை வென்றவர்.

    மருத்துவத் துறையில் அவர் பிதாமகர்.

    சித்த மருத்துவத்தின் சிகரம் தொட்டவர்.
    யுனானி மருத்துவத்திற்கு வழிகாட்டியவர்.

    யுனானியிலும்
    சித்த மருத்துவத்திலும் வல்லவரான 
    இராமதேவர் 
    தமிழிலும் அரபியிலும் வித்தகர்.

    இஸ்லாமிய சூபிகளின் இதயத்தை வென்றவர்.

    நபிகள் நாயகம் எனும் 
    இணையற்ற தீர்க்கதரிசியின் இதயத்தில் நின்றவர்.

    அவர் புகழ்கொடி 
    பாரத தேசத்தில் சதுரகிரியிலும்
    அரபு நாட்டில் 
    மெக்காவிலும் 
    பட்டொளி வீசிப்
    பறந்தபடியே இருக்கும்.

    அவர் பெயர் 
    தமிழ்நாட்டில் 
    இராமதேவர்.
    அரபு தேசத்தில் 
    யாகோபு நாதர்.

    அவர் சரிதம்
    ஒரு திவ்ய சரித்திரம்.

    நாகப்பட்டினம்.

    இராமதேவர் பிறப்பால் புனிதம் பெற்ற ஊர்.

    சின்ன வயதில் இருந்தே இராமதேவருக்கு 
    ஆன்மீகம் 
    அருகில் இருந்தது.
    அது உள்மனதில் ஆழ்ந்திருந்தது.

    அமைதியாக இருப்பார் அதிகம் பேச்சு இருக்காது. 
    கண்களில் ஏனோ
    நீர் வடிந்தபடி இருக்கும்.
    ஏனென்று கேட்டால்
    பதில் இருக்காது.

    உள்ளத்தில் மட்டும் எப்போதும் 
    ஓர் ஆனந்த அலை அடித்துக் கொண்டிருக்கும்.

    அவர் ஓர் அம்பிகை பக்தர். 
    அன்னையைத் தியானித்தபடியே எப்போதும் இருப்பார்.

    அம்பாள் சிந்தனையே பேச்சாய் மூச்சாய் இருந்ததாலோ என்னவோ 
    பல நேரம் அவரிடம் பேச்சும் இருக்காது 
    மூச்சும் இருக்காது.

    இந்த அபூர்வ நிலையில் 
    அவர் பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார்.

    அம்மன் பக்தி மட்டும் ஆரவாரமாய் 
    அவரை அங்குமிங்கும் அலையச் செய்யும்.

    அப்படித்தான் காசிக்குச் சென்று 
    அன்னை அன்னபூரணியைத் தரிசிக்க 
    ஆர்வம் கொண்டார்.

    நடந்தார்… நடந்தார்…
    பேச்சின்றி 
    உணவின்றி 
    கால்கடுக்க 
    கண்ணீர் மல்க 
    நடந்தார்.

    நாடி ஓடியதோ இல்லையோ 
    அவர் நாடிய
    காசி வந்தது.
     
    அவருக்குப் பிடித்தமான அகிலாண்ட ஈஸ்வரி
    அன்னபூரணியை தரிசித்தார்.
    ஆலகால விஷம் உண்ட விஸ்வநாதரையும் விழுந்து வணங்கினார்.

    "சுவாமி….
    நீங்கள் நாகப்பட்டினத்திற்கு வந்து என் மக்களுக்கு அருள வேண்டும் "
    மனம் உருகி நின்றார்.

    காசியில் நீராடும்போது ஒரு லிங்கம் 
    அவர் கைகளில் அகப்பட்டது.
    அவர் மனம்
    மகிழ்ச்சியில் துள்ளியது.

    நாகப்பட்டினம் திரும்பி அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 
    வழிபட ஆரம்பித்தார்.

    அதன் பயனாக
    சித்தர் பாதை 
    சித்தியாகத் தொடங்கியது.

    இராமதேவருக்கு எப்போதுமே 
    ஒரு ராசி உண்டு.

    போகுமிடம் தோறும் உத்தமர்கள், சாதுக்கள், ஞானிகள் தரிசனம் கிடைக்கும். 
    உபதேசங்கள் கிடைக்கும்.
    அருளாசிகள் 
    நிரம்ப கிடைக்கும். 
    ஞானம் கூடும்.
    சித்திகள் கைகூடும்.

    ஒருமுறை 
    ஓர் ஞான சித்தரைத் தரிசித்தார்.

    *மெக்கா நகருக்கு செல்….
    எக்கச்சக்க மூலிகைகளின் சுவர்க்கம் அது.
    உனது எண்ணத்திற்கு உதவும்."
    மெலிதாய் சொன்னார் அந்த மெளனி.

    ஆனால் 
    அது வலுவாய் அமர்ந்தது 
    இராமதேவர் சிந்தையில்.

    நாகப்பட்டினம் துறைமுகம் அக்காலத்தில் 
    கப்பல் கூடும்
    வணிகத் தளம்.

    ஒருநாள் 
    கப்பலொன்று 
    அவர் விரும்பிய மெக்காவுக்கு பயணமானது.

    நம் தேவர்
    அதில் பயணமானார்.

    மெக்காவில் இஸ்லாமியர்கள் இராமதேவரை ஏற்கவில்லை.

    'நீ யார்…. ? 
    எதற்கு வந்தாய்… ? '
    என குடைந்து எடுத்தார்கள்.

    இக்கவலை ஒருபுறம் இருந்தாலும் 
    இன்னொரு புறம்
    மெக்கா நகரின் 
    ஜீவ வளம் அவருக்கு எல்லையில்லா 
    மகிழ்வைத் தந்தது.

    யாருக்கும் புலப்படாத மூலிகைகள் –
    கற்ப மூலிகைகள் 
    அவர் கண்களுக்கு தெரிந்தன.
    அவை
    'வா வா ' என 
    அழைத்து மகிழ்ந்தன.

    'போ போ ' என துரத்திய இஸ்லாமியரிடையே 
    எவ்வளவோ பேசிப் பார்த்தார்.

    மெக்கா மக்களின் மேம்பாடு தான்
    தனது நோக்கம் என கூறி கெஞ்சிப் பார்த்தார்.

    "நான் ஒரு சித்தன். மூலிகை பலனை உலகிற்கு அளிப்பதே எனது பிறப்பின் ரகசியம்."
    என நல்லவிதமாகச் சொல்லிப் பார்த்தார்.

    இறைவன் அருளால் அவர்கள் 
    மனம் கொஞ்சம் இளகியது.

    ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பாடானது.

    அதன்படி 
    அதன் முதல்படியாக
    இராமதேவர் 
    இஸ்லாம் மதத்திற்கு 
    மனம் மாறினார். 
    மதம் மாறினார்.

    யாக்கோபு 
    என்னும் பெயர் சூட்டப்பட்டது.

    சுன்னத் செய்யப்பட்டது…
    குர்ஆன் ஓதப்பட்டது…..

    இராமதேவர் 
    யாக்கோபு ஆனார். 

    காயகல்ப மூலிகை ஆய்வும் 
    ஓய்வில்லா தியானமுமே அவரின் 
    அரபு வாழ்க்கையானது.

    மூலிகை பலன்கள் முஸ்லிம் மக்களுக்கு முழுதாய் கிட்ட 
    முயன்றார் யாக்கோபு.

    விரைவில் வெற்றிக்கனி பறித்தார்.
    பறித்த வண்ணம் இருந்தார்.

    நவரத்தின மயமான நபிகள் நாயகத்தின் ஜீவசமாதியிலேயே 
    நேரம் காலம் பார்க்காது ஒருங்கிணைந்திருந்தார்.

    ஒருநாள் 
    மெக்கா நகரமே மெய்சிலிர்க்கும் வண்ணம்
    வான் மேகம் திரண்டது… நெருப்பு மின்னலடித்தது…
    காற்று குளிர் பரப்பியது…
    நீர் மழை பொழிந்தது…..
    பூமி நர்த்தனம் ஆடியது…

    ஆம்… பஞ்சபூதங்களும் வெண்சாமரம் வீசின. 
    பரவசத்தோடு வரவேற்கத் துடித்தன.

    தேவதூதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தார் 
    யாகோபு நாதர்.

    இன்ஷா அல்லாஹ்..!

    எல்லாம் வல்ல 
    ஓரிறைவன் அல்லாவின் தூதர் நபிகள் நாயகம் 
    சமாதி முன்
    தியானத்தில் இருந்த யாக்கோபு முன்பு பேரொளியாய்
    பெருமான் 
    நபிகள் நாயகம் தோன்றினார்.

    மாஷா அல்லாஹ் !!!

    பிறர் கண்களுக்குப் புலப்படாத 
    யாருக்கும் கிட்டாத
    அரிய காட்சி.
    அருள்நிறை காட்சி.

    யாகோபு நாதருக்கும்
    நபிகள் பிரானுக்கும் 
    நடந்த உரையாடல் தேவரகசியம்.

    பல உபதேசங்களை ஆன்மீக ரகசியங்களை இறைதூதர்
    நபிகள் உபதேசித்தார்.

    யாக்கோபும் 
    சித்த மருத்துவ மகிமையை,
    யுனானி தொடர்பை 
    தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை
    முகமது நபிக்கு
    எடுத்துச் சொன்னார்.

    நபிகள் தேவரை ஆரத் தழுவிக் கொண்டார்.
    மதங்களுக்கு அப்பாற்பட்ட
    ஞானம் பரிமாற்றமானது.

    இஸ்லாமிய முறைப்படி வணங்கி தொழுது 
    ஆசி பெற்றார்.

    'அரபுக்கு கிடைத்த 
    அற்புத மகான்'
    என்று ஆசி தந்து மகிழ்ந்தபடி மறைந்தார் நபிகள் நாயகம்.

    உத்தமர்களை
    சித்தர்களை, தெய்வங்களை 
    தீர்க்கதரிசிகளை
    அருளாளர்களை
    தரிசிப்பது யாகோபு உருவிலிருக்கும் இராமதேவர் 
    ராசி ஆயிற்றே!!!

    அதனால்தான் இணையற்ற இறைதூதர் காட்சியும் அருளும் தந்திருக்கிறார்.

    அதன்பின் பிறவிப் பயனை அடைந்த மகிழ்வில்
    அங்கேயே யோகநிலையில் ஆழ்ந்தார்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் என்னும் இறையருளால் ஞானத்தின் 
    அழகிய முன்மாதிரி 
    என விளிக்கப்பட்டார்.

    முகமது நபி பிரானின் அருளாசிக்குப்
    பின்னர் சீடர் கூட்டம் 
    யாகோபுவின் மொழிக்கும்
    காட்டும் வழிக்கும் காத்திருந்தது.

    'நபி யாகோபு'
    எனும் இணையற்ற 
    புனிதப் பெயர் 
    தேடி வந்தது.

    அவரின் புகழ் 
    அரபு தேசத்தில் 
    ஓங்கி வளர்ந்தது.

    தான் கற்றவற்றை 
    பற்பல சித்த புருஷர்களிடம் பெற்றவற்றை வைத்து 
    பதினான்கு நூல்களை அரபு மொழியில் 
    படைத்தார் யாகோபு.

    அது சமயம் தான் 
    போகர் பிரான்
    தான் படைத்த 
    அற்புத வான் ரதத்தில்
    சீன தேசத்து 
    அன்பர் படைசூழ 
    மெக்கா வந்தார்.

    போகரைக் கண்ட மாத்திரத்தில் 
    யாக்கோபு ஆன இராமதேவரின் மனதில் 
    அன்புப் பெருக்கு 
    அலை போல் எழுந்தது.

    போகர் சீரடி தொழுதார்.

    பீறிட்டு எழுந்த கண்ணீரால் 
    போகரின் 
    திருவடி கழுவினார்.

    "சுவாமி….
    என்ன புண்ணியம் செய்தேனோ….!!
    உங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு….!!

    கொஞ்ச நாள் முன்பு தான்
    பேராற்றல் பெருமகனார்
    நபிகளைத் தரிசித்தேன்..!!!

    சுவாமி….அற்புதம்… அற்புதம்.."
    நெகிழ்ந்துருகினார்
    யாகோபு சித்தர்.

    "இராமதேவனே….
    உன்னை நினைத்து
    உன் தொண்டை நினைத்து மகிழ்கிறேன்.

    நானும் 
    பேரொளி பரப்பும் நபிகளைத் தரிசித்தேன்.

    உன்னை மெச்சி
    நபிகள் நாயகம் 
    என்னிடம் சொன்னது
    தேவ வசனங்கள்.

    உன் குரு 
    புலத்தியன் கேட்டால் உன்னை 
    உச்சி முகர்ந்து புளகாங்கிதம் கொள்வான்.

    உன் பணி சிறக்கட்டும்…
    தொடரட்டும்…
    இன்னும் நிறைய செய்…
    அதன்பின் 
    சமாதி செல்….. 
    வாழ்த்துக்கள்… வருகிறேன்."

    போகரின் வார்த்தைகளை முழுதாய் 
    புரிந்து பூரித்திருந்த 
    யாகோபுவை 
    கைகளில் ஏந்தி உச்சிமுகர்ந்து
    முதுகு தடவி
    மெளனமாய் சொன்னார்.

    "நீ இங்கு யாகோபு..
    தமிழ்நாட்டில் இராமதேவர்..
    மறந்துவிடாதே..!"

    போகரின் 
    மெளன மொழிக்கு 
    ஆயிரம் அர்த்தங்கள்!!!

    யாகோபுவுக்குத்
    தெளிவு பிறந்தது.

    ஆயிரம் பணிகள் காத்திருக்கும்போது யாகோபு நாதரால்
    அங்கேயே ஓய்ந்திருக்க முடியுமா?
    இல்லை….
    சமாதி நிலையில் ஒளிந்து இருக்க முடியுமா?

    முப்பது ஆண்டுகள் 
    சமாதி நிலையில் இருக்கப் போவதாக சீடர்களிடம் சொன்னார்.

    துயர் கொண்ட சீடர்கள் 'மீண்டும் காண்பது எப்போது? '
    என விசனித்து வினவினர்.

    "வருவேன்…
    அப்போது 
    பல அற்புதங்கள் நிகழும்.
    தேன் மாரி பொழியும்.
    நூறு மலர்கள் பூத்துக்குலுங்கி 
    அரபு நாடே மணம் கமழும்.
    விலங்குகள் ஞானம் பேசும்.

    இவையே
    நான் பிரசன்னமாவதன் அறிகுறி"
    என புன்னகைத்தார்.

    அரபு தேசத்தில் 
    சமாதி நிலையில்…

    அதே சமயம் 
    யாகோபுவின் 
    விண்னொளி ததும்பும் விண்வெளிப் பயணம் 
    பாரத தேசத்தை
    நோக்கி இருந்தது.

    பாரதம் வந்தவர்
    பலருக்கும் உபதேசித்தார். 
    தேடி வந்தவர்களுக்கெல்லாம் நல்லன செய்தார்.
    நோய் நொடி என வந்தவருக்கெல்லாம் 
    நோய் தீர்த்து வைத்தார்.

    சதுரகிரியில் 
    தவம் கொண்டார்.
    சித்தர் பிரான்களின்
    உறைவிடமான
    சதுரகிரி மலை 
    அவருக்கு மிகவும்
    பிடித்துப் போனது.

    அங்கேயே தங்கி 
    மக்களைப் பீடிக்கும் 
    நோய் நொடிகளுக்கு மருந்து காணும் பதினான்கு 
    நூல்களைப் படைத்தார்.

    அவர் மெக்காவில் படைத்த பதினான்கு நூல்களின் 
    தமிழ்மொழி ஆக்கமே 
    அந்த வைத்திய நூல்கள்.

    சதுரகிரியில் 
    காலாங்கி நாதரின் 
    ஜீவ சமாதிக்கு அருகில் வாழ்ந்து மகிழ்ந்து 
    அவரின் அருளோடு 
    தனது
    ஞான அனுபவத்தைப் பிழிந்து
    சில படைப்புகளைத்
    தமிழில் தந்தார்.

    இராமதேவர் 
    சதுரகிரியில் 
    தவமிருந்த இடம் 
    இன்றும் 
    'இராமதேவர் வனம்'
    என சித்த மகிமையோடு தவமிருப்போருக்கு அருள்பாலித்து வருகிறது.

    அவ்வனம் 
    'யாகோபு நாதர் மலை'
    என 
    வணங்கப்பட்டும் வருகிறது.

    வற்றாத தாமிரபரணியும் வாடாத தென்றலும் 
    அகத்தியர் அருளினால் உற்பத்தியாகும்
    பொதிகை மலை உச்சியில் 
    யாகோபு தவமிருந்த மலை
    அருளாற்றல் கொண்டதாய் இன்றும் 
    அருள்பாலித்து கொண்டிருக்கிறது.

    அதற்கு 
    'துலுக்க மொட்டை'
    என்ற பெயர் இருக்கிறது.

    அந்த அடர் காட்டில் இஸ்லாமியர்கள்
    இன்றும் வசிக்கிறார்கள்.

    சதுரகிரி வாழ்வின்
    நிறைவில் 
    சில காலம்
    சமாதி நிலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார் இராமதேவர்.

    அதன்பின் அவரை 
    யாரும் சதுரகிரியில் தரிசிக்க முடியவில்லை.

    அடிக்கடி சமாதி 
    நிலைக்குச் செல்வது 
    அவர் வழக்கமாயிற்றே!

    ஆனால்
    இம்முறை
    மெக்கா சென்று
    சமாதி ஆனவர் 
    மீண்டும்
    சீடர்கள் அறிய வெளிப்படவில்லை.

    அதுவே 
    அவரது ஜீவசமாதி ஆனது.

    இறை நேசர்
    நபிகள் போற்றிய
    யாகோபுவின் 
    ஜீவசமாதி மெக்காவில்…

    அது
     'ஏக இறைவன் அல்லா' என 
    இறைவனைத் தொழும் இஸ்லாமியர் பெற்ற பெரும் பாக்கியம்.

    பின்னாளில்
    மெக்காவில் இருந்து தமிழகம் வந்தபோது சித்தர்களுக்குப் பிடித்த
    சதுரகிரி மலையில் லயமானார் இராமதேவர்.

    தமிழகத்தில் 
    இன்னொரு மலையிலும்
    இறையோடு இறையாக இரண்டறக் கலந்தார்.

    அந்த இடம் 
    அழகர்மலை.

    இராமதேவர் என்கிற 
    யாகோபு பற்றிய இன்னொரு 
    சுவாரஸ்ய தகவல்.

    அவர் பிறந்தது 
    வைணவ குலத்தில். அய்யங்கார் பிரிவில்.
    அவர் மறவர் 
    என்பாரும் உண்டு.

    சாதியும் மதமும் அற்றவர்கள் சித்தர்கள்
    என்பதற்குச் சான்றே இராமதேவர் 
    என்கிற 
    யாகோபு நாதர். 

  • Koodu vittu Koodu Paaindha Siddhar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    'கூடுவிட்டு கூடுபாய்தல்' சித்தர்களின் சித்தாடல்களில் முக்கியமானது.

    ஒரு முறை அல்ல
    பல முறை 
    கூடுகள் விட்டு கூடுகள் பாய்ந்த 
    சித்தர்களும் உண்டு.

    பிறர் துயர் கண்டு இரங்கும் சுபாவமும்,
    கூடு விட்டு கூடு பாயும் பேராற்றல் மூலம் 
    சித்தர் மகத்துவத்தை வெளிப்படுத்துவதுமே  
    இச்சித்தாடலின் 
    அடிப்படை அம்சம்.

    ஒரு நற்காரியத்திற்காக இறை விருப்பப்படி 
    கூடுவிட்டு கூடு பாய்வது சித்தர் மரபு.

    பலமுறை 
    கூடுவிட்டுக் கூடு பாய்ந்த ஒரு மாபெரும் சித்தரை இப்போது தரிசிக்க இருக்கிறோம்.

    அதற்காகவே 
    இனி வருகிறது 
    ஒரு நெடுங்கதை.

    பாண்டிய நாட்டின் மன்னன் வீரசேனன்,
    அவன்  மனைவி குணவதி.

    ஒருநாள் 
    நகர்வலம்
    சென்று திரும்பிய மன்னவன்
    தள்ளாடி வந்தான். தன்னிலை மறந்தான்.
     சில மணித்துளிகளில் மரணித்தும் போனான்.

    இளவயது மன்னன்…
    இனிய மனது உள்ளவன் 
    இறந்த செய்தி  மகாராணியை, மக்களை ஓலமிடச்  செய்தது.

    அவர்களின் அழுகுரல் விண்ணை எட்டியது.

    அப்போதுதான் 
    அந்த சித்தர் விண்வெளியில் பயணித்திருந்தார்.

    மக்களின் துயர் கண்டு
    இரங்கினார்.
    ஒரு கணம் யோசித்தார். இறை விருப்பம் மனதில் விரிந்தது.
    தரை இறங்கினார்.

    அக்கணமே 
    மன்னன் 
    சாவை முறியடிக்க 
    அவன் உடலில் உட்புகுந்தார்.

    ஆம்….
    தன் உடலை விட்டு மன்னன் உடல் புகுந்தார். கூடு விட்டுக் 
    கூடு பாய்ந்தார்.

    அதே கணத்தில்
    தான் தவமிருக்கும்
    சதுரகிரியில் 
    அந்தரங்க சீடன் 
    குருராஜன் என்பானை நியமித்து 
    தன் உடலை 
    பத்திரமாக பாதுகாக்கச் சொன்னார்.

    மன்னன் உயிர்பெற மாநிலமே மகிழ்ந்தது. மக்கள் துள்ளி குதித்தனர். மகாராணி குணவதி எல்லையில்லா குதூகலம் கொண்டாள்.

    ராஜ வாழ்க்கை….
    அழகின் விளிம்பில் இன்பத்தின் உச்சத்தில் அதிசயம் காட்டிய
    இளம் மகாராணி
    அருகில்…..மிக அருகில்.

    இப்படியே இன்பகரமாக நாட்கள் நகர்ந்தன…
    ஆடலும் பாடலுமாய்
    அரசும் ஆட்சியுமாய்.

    பட்டத்தரசிக்கு
    மதிமயக்கும் மன்மதனாய் 
    தித்திக்கும் தேவனாய் மாறிப்போனார் சித்தர்.

    இருப்பினும் 
    அரசியின் மனதில் சந்தேகம் இருந்தது.

    ஒருநாள் கேட்டே விட்டாள்!

    "உயிர் நாதா….
    அன்று,,,,,
    நீங்கள் இறந்து விட்டதாக
    ராஜ வைத்தியர் சொன்னார்.
    நானும் உடலைத் 
    தொட்டுப் பார்த்தேன். 
    சவமென உணர்ந்தேன். நீங்கள் மரணமடைந்து விட்டதாகவே நினைத்தேன். 
    கதறித் துடித்தேன்.

    நல்லவேளை 
    காலன் உங்களைக் கைக்கொள்ளவில்லை.

    அந்நிகழ்வுக்குப் பிறகு
    உங்கள் ஆற்றலும் அணுகுமுறையும் வேறாய் இருக்கிறது.
    அனுதினமும் இதை உணர்ந்து துய்க்கிறேன்.

    ஆனால் என் மனம் அண்மைக்காலமாக
    துன்புறுகிறது.

    கோபமே என் 
    மன்னவனின்
    மரபு குணம்.
    அது இப்போதெல்லாம் உங்களிடம் 
    அறவே இல்லை. 

    முன்பு உங்கள் நாட்டம் வேறு.
    இப்போது உங்கள் நாட்டம் புதிது.
    ஆம் அரசே…..

    சொல் புதிது…
    பொருள் புதிது…
    ஆற்றல் புதிது….
    அனுபவம் புதிது.

    போர், நாடு , மக்கள் என 
    என்னை விட்டுத் தள்ளிப் போன நீங்கள்
    இப்போது அள்ளி அள்ளி அணைக்கிறீர்கள்.!

    என்ன நடந்தது ?
    எனக்கு விளங்கவில்லை..

    அறிவால் அரச சபையும் அன்பால் அந்தப்புரத்தையும் மாற்றியிருப்பது அறியமுடிகிறது."

    வீரசேனன் உருவில் இருந்த சித்தர்
    இதுவே சரியான 
    தருணம் என 
    உண்மையைச் 
    சொன்னார்.

    "மகாராணி….. 
    விஷப்பாம்பு ஊறிய 
    பூ ஒன்றை முகர்ந்தாலே உன் கணவன் இறந்து போனான்.

    பின் பிழைத்ததும் இப்போது இருப்பதும் இறை உத்தரவு ."

    சித்தரின் பதில் 
    அரசிக்கு மேலும்
    குழப்பம் தந்தது,
    அவள் கண் கலங்கிப் போனாள்.
    அதன் பின் புலம்பி ஓய்ந்தாள்.

    ஆனால் அடுத்த முறை அதே கேள்வியைக் கேட்டபோதும்….
    கேட்டு கேட்டு நச்சரித்த போதும்… 
    மறைக்க முடியாமல்
    சித்தர் உண்மையைப் போட்டு உடைத்தார்.

    அரசியே,…
    கவனமாகக் கேள்.

    இவ்வுடல் உன் தலைவன் வீரசேனனுக்கு உரியது.

    ஆனால்
    உள்ளிருக்கும் உயிர்,
    வழி நடத்தும்
    ஆன்மா என்னுடையது.
    நான் ஒரு சித்தன்.

    நீ சேர்ந்தது 
    வீரசேனனின் உடலுடனேயே…!

    உறவும் பிணைப்பும் உடலுக்கு உரியன. உயிருக்கு அல்ல. ஆன்மாவுக்கு 
    களங்கம்  கிடையாது."

    "உயிரும் ஆன்மாவும் 
    வேறு வேறா ? ஒன்றா ??"
    அந்த சூழலிலும்
    சந்தேகம் கேட்டாள் ராணி.

    "இரண்டும் ஒன்றுதான். உயிர் தமிழ்மொழி ….
    ஆன்மா வடசொல்."
    எளிதாய் சொன்னார் ஞானி,

    உடலின் உண்மையையும் உயிரின் மேன்மையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார். 

    நடந்தது அனைத்தையும் நயமாக எடுத்துச் சொல்லி,
    "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை 
    என்னைச் சொல்லிக் குற்றமில்லை.
    நடப்பது யாவும் கடவுள் கட்டளை"
    என நியாயப்படுத்தினார்.

    அரசிக்கு குற்ற உணர்வு ஏற்படவில்லை. 
    கற்பு கெட்டு விட்டதாகத் தோன்றவில்லை. 
    சித்தரின் கூற்று
    அவளுக்கு 
    ஏற்புடையதாக இருந்தது.

    அரசு சுகமும் 
    ஆட்சி சுகமும் 
    அந்த சித்தர் தந்த 
    முழு சுகமும் 
    அவளை அப்படிக்
    கட்டிப் போட்டிருந்தன.

    சாகச சித்தரிடம் 
    சமரசம் கொண்டால் தான் சகல பாக்கியங்களும் நிரந்தரமாகும். விதவையாக முடங்காமல் பட்டத்து மகாராணியாக பவனி வரமுடியும் என கணக்குப் போட்டாள்.

    விதவைக்கோலம் கண்ணில் விரிய 
    வேகமாய் முடிவெடுத்தாள் சாகசக்காரி.

    வீரசேனன் உடலை
    ஆரத் தழுவினாள் 
    உயிராய் 
    உள்ளிருந்த சித்தரும் 
    கிளர்ந்து எழும்படி.

    சகலமும் உணர்ந்தவர் என்றாலும் 
    அந்த அரவணைப்பில் கொஞ்சம் 
    கிறங்கிப் போனார் சித்தர்.

    "ஆமாம் சாமி… 
    உங்கள் உடல் 
    சதுரகிரியில் பத்திரமாக இருக்கும் தானே…?
    சீடன் கவனம் 
    அதிலேயே இருக்குமா…?? சிக்கென கேள்விக்கணைகள் தொடுத்தாள்.

    "பயமில்லை… பாதுகாப்புக்கும் குறைவில்லை…"

    " எனக்கு என்னவோ பயமாயிருக்கிறது…
    யாரேனும் செத்த உடம்பு என்று எடுத்துச் சென்று எரித்து விட்டால்…." சந்தேகமாய்  கேட்டாள்.

    " முடியாது….. 
    யாராலும் முடியாது…..
    காயசித்தி அடைந்த தேகம்…. 

    அதனை எரிக்க  
    சாதாரண தீயால் முடியாது."

    "அப்படியா…?!!!!"
    கண்கள் விரிய கேட்டாள்.

    "என் உடல் 
    சாமான்யமாக எரியாது.

    வெடி உப்பமும் 
    குங்கிலியமும்
    பொரி காரமும்
    போட்டுத் தூளாக்கி தேகத்தில் பூசவேண்டும். பின் 
    விரலி இலைகள் 
    பரப்பி மூடவேண்டும். அதன் பிறகு 
    கட்டைகளை அடுக்கி 
    தீ மூட்ட வேண்டும்.
    அப்போதே சிதை
    எரியும்.

    இந்த ரகசியம் 
    சித்தர்கள் தவிர
    யாருக்கும் தெரியாது. இப்போது உனக்குத் தெரியும்.

    நீ என் உயிரை காக்க வந்தவள். 
    போக்க வல்லவள் அல்லவே"
    கடைக்கண் சாய்த்து கயல்விழியாளிடம் கிசுகிசுத்தார்.

    காமக்கிழத்தியிடம் ரகசியத்தை சொல்லிவிட்டு  ரகசியமாய் சிரித்தார், சிதம்பர ரகசியம் 
    அறிந்த மகா சித்தர்.

    அந்த ரகசியம் 
    தீயாய் படர்ந்தது 
    அரசியின் உள்ளத்தில்.

    அழகிய இளைஞனாய் அரசன்…
    அமர்க்களமாய் 
    அரசு கட்டில்.
    ஆர்ப்பரிக்கும் 
    ராஜ வாழ்க்கை.,,,
    எல்லையில்லா இன்பம்.

    அரசன் உருவில் இருக்கும் இந்த புதுக்கணவன் பிரிந்தால் எல்லாம் 
    பறி போகும்.

    உடல் வேறு உயிர் வேறு என்றான பின்
    எவனாக
    இருந்தால் என்ன?

    கணவனைப் பிரிய எந்த மனைவிக்கு மனம் வரும்?

    சொத்து சுகம் குறைய யாருக்குத்தான் 
    மனம் வரும்?

    அரசியின் மனதில் முன்னம் எழுந்த தீ
    அதீதக் கொழுந்தாய் படர்ந்து எரிந்தது.

    வெளிக்காட்டிக்
    கொள்ளாமல் 
    ஒரு திட்டம் தீட்டினாள் – ரகசியமாக .

    அவளது திட்டம் 
    மிக எளிமையானது. 
    கனகச்சிதமானது.

    நம்பிக்கையான
    வீரர்களை அழைத்தாள்.

    சித்தர் 
    உடல் இருக்கும்
    இடம் சொல்லி 
    எரிக்கும் முறைகளை எடுத்துச் சொல்லி கொஞ்சம் கூட விட்டுவிடாமல் 
    எரித்து வரச்சொன்னாள்.

    அதேசமயம் 
    வருவதாக
    கூறிச் சென்ற
    குரு காணவில்லையே 
    என புலம்பியபடியே 
    சீடன் குருராஜன் 
    குருவைத் தேடி 
    மதுரை நோக்கி 
    சென்று விட 
    வீரர்களுக்குக் காரியம் சுலபமாக இருந்தது .

    சித்தரின் உடம்பு 
    அவர்கள் இட்ட தீயால்
    நிர்மூலமாகியது.

    இத்தனை நடந்தும் 
    ஏதும் அறியாதவள் போல் இனிய முகத்தோடு வாழ்க்கையைத் தொடர்ந்தாள் 
    மகாராணி குணவதி.

    பின்னொருநாள் வீரசேனன் உருவிலிருந்த சித்தர் காட்டிற்கு வேட்டையாட  சென்றார்.

    காட்டில் 
    ஒளித்து வைத்திருக்கும் உடல்  நினைவுக்கு வரவே கண்டு வரலாம் என குகைக்குச் சென்றார்.

    குகையில்
    வைத்த இடத்தில் காயசித்தி கண்ட
    உடல் இல்லை.

    ராணி செய்த சூழ்ச்சி லேசாக மனதில்
    நிழலாட…

    அமைதியாய் 
    நாடு திரும்பினார்.

    ஏதும் அறியார் போல்
    சில நாட்கள் இருந்து விட்டு ஒரு நாள் அரசவையில் ராணிக்கு அரசாளும் பொறுப்பைத் தருவதாக அறிவிப்பு செய்தார்.

    அகமகிழ்ந்த ராணி
    உடலை எரித்த கதை தெரிந்திருக்குமோ
    என அஞ்சினாள்.

    நாளாக நாளாக 
    ராணி குணவதிக்கு
    செய்த தவறு
    உறுத்த ஆரம்பித்தது.

    தனது செயல்
    சூழ்ச்சி, துரோகம் என பூரணமாய் உணர்ந்தாள்.

    சித்தரின் காலடி விழுந்தாள்.

    அவர் மீது கொண்ட காதலே காரணம் என நியாயப்படுத்தினாள்.

    வாய்த்த கணவரை
    என்றும் பிரியாதிருக்க கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விட மாட்டார்கள் மனைவிமார்கள் என தர்க்கம் செய்தாள்.

    நம்ப வைத்து 
    செய்த துரோகம் எனினும் கணவன் வேண்டும் என்ற மனைவியின் 
    அடிப்படை ஆசை யதார்த்தமானது என்பதை சித்தரும் ஏற்றார்.

    "மன்னிப்பீர்களா"
    மகாராணி
    சித்தரின் மலர் பாதம் பணிந்தாள்.

    "பரவாயில்லை….
    நடந்தது நடந்ததாக இருக்கட்டும் … 
    இனி நடப்பவை 
    நல்லதாக இருக்கட்டும்"
    சித்தர் மனம் மகிழ்ந்தார்.

    "நான் விரைவில்
    உன்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவது நிச்சயம்.

    என் மனம் உணரும்
    இறை உத்தரவு 
    வந்தால் 
    சென்றுவிடுவேன்.

    இனி 
    என்னால் 
    ஒன்று மட்டும்
    தர முடியும்.
    அது வரம்…
    என்ன வரம் வேண்டும் கேள் ? "
    சித்தர் 
    மனமிரங்கிக் கேட்டார்.

    பெண்ணின் மனம் ஆயிற்றே..
    முடிச்சுப் போட்டது.!
    " நான் என்றும் சுமங்கலியாய் 
    இருக்க வேண்டும்."

    ஒரு கல்லில் 
    எத்தனை மாங்காய் ..?!!

    வரம் கேட்பதில் வல்லவர்கள் வனிதைகள். கைகேயி கேட்ட வரங்கள் அப்பொழுது 
    நினைவுக்கு வந்தது. 
    சித்தர் சிரித்துக் கொண்டார். 

    இனி இந்த 
    சித்தாதி சித்தர் 
    நம்முடனே தானே 
    இருக்க வேண்டும் ?!!!

    உடல் மாறாது.. 
    உயிர் போகாது …
    சிந்து பாடியது 
    அவள் உள்ளம்.

    ஆனால் சித்தரின் சிந்தனை 
    வேறாக இருந்தது.

    ஒரு நாள் நள்ளிரவு
    அரண்மனையை விட்டு காடேகினார் .
    சதுரகிரி மலை ஏறினார்.

    வழியில் 
    ஓர் அந்தணன்
    கற்சிலை போல நின்று கொண்டிருந்தான்.

    அருகில் சென்றார் சித்தர்.
    பிரமித்து நின்றார்.

    அவர் கைபட்ட போது அவன் உயிர் 
    பெற்று இருந்தான்.

    ' ஏன் இப்படி என்ன நேர்ந்தது அவனுக்கு' சிந்தனையில் ஆழ்ந்தார்.

    காட்சி விரிந்தது.
    நடந்தது தெரிந்தது .

    ஜம்புகேஸ்வரம் என்னும் திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரன் என்ற பெயரில் 
    வாழ்ந்தவன் அவன்.

    குரு துணையின்றி பிரணாயாமம் செய்திருக்கிறான்.

    வெளியே மூச்சை விட கற்றவனுக்கு
    உள்ளே காற்றை இழுக்க தெரியவில்லை. 
    மறந்து விட்டான். 
    அருகே குருவும் இல்லை.

    ஆட்டம் காலி.

    வீரசேனன் உருவில் இருந்த சித்தருக்கு கூடுவிட்டு கூடுபாய்தல் கைவந்த கலை அல்லவா.? இரக்கம் வேறு அதிகமாய் இருக்கும் அல்லவா??

    மன்னன் வீரசேனன் உடலைவிட்டு 
    கணப் பொழுதில் 
    அவன் உடம்பில் ஏகினார்.

    அருகிருக்கும் மரப்பொந்தில்
    தான் புகுந்து வெளியேறியிருந்த
    வீரசேனனின் 
    உடலை வைத்தார்.

    அது எப்போதும் அழியாதிருக்க 
    ஜோதிமரப் பூக்களையும்
    சில மூலிகைகளையும் கலந்து அரைத்து 
    தன் மந்திர சக்தி ஏற்றி அரசன் உடலில் பூசினார்.

    இலை தழை மரப்பட்டைகளால் 
    அம்மரப் பொந்தினை
    மூடினார்.

    பின் சாவதானமாக 
    சடலமாய் இருந்த ஜம்புகேஸ்வரன்
    உடம்பில் ஏகினார்.

    'அழியாத அரசன் உடல்… தீர்க்க சுமங்கலியாய் அரசி'
    கொடுத்த வாக்கை நிறைவேற்றிய திருப்தியில் அடுத்தகட்டத்திற்குப் பயணமானார் சித்தர்.

    சதுரகிரியில் 
    நீண்ட கால தவம். 
    மீண்டும் காயசித்தி.
    சித்தர்களே வியக்கும் அழகிய இளைஞரானார்.

    காலப்போக்கில் 
    சீடர்கள் பெருகினர்.
    சீடன் குருராஜனும் 
    சேர்ந்து கொள்ள
    அவர் லயத்தில் 
    சதுரகிரி மலையே ஒளிர்ந்தது.
    ஓங்கி உயர்ந்தது.

    சுமங்கலியாய் 
    நாடாண்டு வந்த
    குணவதி 
    கால முதிர்ச்சியில் சதுரகிரி வாழ் சித்தர் 
    பற்றி கேள்விப்பட்டு
    அவர் யார் என அறியாமலேயே
    சதுரகிரி மலைக்கு வந்து உதவி கோரினாள்.

    தன் துயர்துடைக்க 
    தாழ் பணிந்து நின்றாள்.

    காடேகிய தன் கணவர் 
    கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை வைத்தாள்.

    "தாயே ….
    தவ சக்தியால் 
    அந்த மாமுனி 
    உன் கணவனான
    அரசன் வீரசேனன் 
    உடலை 
    ஒரு மரமாக 
    உருவாக்கியுள்ளார்.

    இந்த மரத்திற்குப் 
    பூஜை செய். 
    அதுவே உனக்கான சேவை. 
    பதிசேவை. 
    செய். 
    பலன் கிட்டும்." 
    ஆசியுடன் சொன்னார், கூடுவிட்டு கூடு பாய்ந்து இருக்கும் இளம் சித்தர்.

    அரசி அழுதவண்ணம் 
    அரச மரத்தைத் தொழுதாள்.

    அரசன் உடல் 
    அழியாது இருக்கும் 
    அந்த மரமே 
    அரச மரம் என்று அழைக்கப்படுவதாக
    ஒரு நம்பிக்கை
    இன்றும் உள்ளது.

    விடைபெற்ற அரசி
    பின் பலகாலம் 
    நாடாண்டு நற்கதி அடைந்ததாக 
    சதுரகிரி புராணம் சிலாகித்துச் சொல்கிறது.

    எல்லாம் சரி…
    கூடுவிட்டு கூடு பாய்வதில் வல்லவரான
    அந்த சித்தர் 
    யார் என்று தானே கேட்கிறீர்கள்?

    அவர் மூலர்…
    திருமூலர்.