கனவில் தோன்றிய மாரியம்மன்

Written by

in

கருவறையில் காட்சி தரும் அம்மனுக்கு முத்து முத்தாக  வியர்க்கும்  அதிசயமும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும் திருக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். 1682 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் ஒருவன் சமயபுரம் அம்மனை வழிபடுவதற்காக வந்தான். இரவு நேரம் என்பதால் கோவிலில் தங்கிய போது அவனது கனவில் மாரியம்மன் தோன்றி புன்னைநல்லூரில் தனக்கு கோவில் கட்டுமாறு கேட்டாள். இதனால் உடல் சிலிர்க்க கண் விழித்து பார்த்த அந்த மன்னன் புன்னைநல்லூர் வந்து அம்மன் குறிப்பிட்ட இடத்தை பார்த்தபோது வெறும் புற்று மட்டுமே" இருந்திருக்கிறது. உடனே அதனை சுற்றி கோவில் கட்டி வழிபட்டு வந்ததாகவும், பின்னாளில் அவனது வம்சத்தை சேர்ந்த  துலஜா என்ற  மன்னனின் பிள்ளைக்கு அம்மை விழுந்து கண் பார்வை பறிபோனது. இதனால் மன வேதனை அடைந்த மன்னன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து தனது மகன் குணமாக வேண்டிக் கொண்டான்.

அன்று இரவு அவனது கனவில் தோன்றிய மாரியம்மன உன் மனக்குறை நீங்கியது மகன் நலம் பெறுவான் என அருளாசி வழங்கினாள். அதன்படி மன்னனின் பிள்ளைக்கு கண் பார்வை மீண்டும் கிடைத்தது. இதனால் உள்ளம் மகிழ்ந்த மராட்டிய மன்னன் துலஜா ராஜ கோபுரத்துடன் அதே இடத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் க்கு திருக்கோவில் கட்டி குடமுழுக்கு நடத்தியதாக வரலாறு. இங்கு கருவறையில் அருள் புரியும் ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு முத்து முத்தாக வியர்க்கும் அதிசயம்  நடைபெறுகிறது. இதன் காரணமாக முத்து மாரியம்மன் என்ற திருப்பயரும் அம்மைக்கு உண்டு. என்பதால் உடலில் முத்து முத்தாக போட்ட அம்மைகளும் இவளை வழிபட்டால்  குணமாகும் என்பது நம்பிக்கை,  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே  நடைபெறும் தைலக் காப்பின்போது, அம்பிகைக்கு  வெப்பம் அதிகரிக்கும். என்பதால்  தயிர்சாதம், இளநீர் போன்றவை நிவேதனமாகப் படைக்கப்பட்டு அம்பிகையின் வெப்பம் தணிக்கப்படுகிறது. ஜவ்வாது, சாம்பிராணி, புனுகு  ஆகியவை போட்டு அம்மனின் திருமேனியை மேலும்  குளுமைப் படுத்துவார்கள்.

இங்குள்ள அன்னை ஸ்ரீ மாரியம்மன் க்கு  அபிஷேகம் கிடையாது. அன்னையின் திருமேனி புற்று  மண்ணால் ஆனதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை  48 நாட்கள் தைலத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. இன்றளவும் பக்தியுடன் தன்னை தேடி வந்து வணங்கும் பக்தர்களின் கனவில் தோன்றி அன்னை அவர்களது வேண்டுதல்களை நொடிப் பொழுதில் நிறைவேற்றி வருகிறாள். புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் தஞ்சையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்