pachai patuduthi kal azhagar

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.

இந்தாண்டிற்கான கள்ளழகர் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் 4ஆவது நிகழ்வாக நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி தொடங்கி புதூர், டிஆர்ஓ காலனி, ரிசரவ்லைட், அவுட்போஸ்ட் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபத்தை ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். தொடர்ந்து நள்ளிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் திருமஞ்சணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிகாலை 2.30 மணிக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிவித்துகொண்டு வெட்டிவேர் சப்பரத்திலும் அதன் பின்னர் ஆயிரம்பொன்சப்பரத்திலும் எழுந்தருளினார்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆறு நோக்கி புறப்பட்ட கள்ளழகரை வரவேற்கும் வகையில் கள்ளழகர் மற்றும் கருப்பணசாமி வேடமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் உற்சாகமாக வரவேற்றனர்.

ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது  வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி கள்ளழகரை வரவேற்றார். வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். அப்போது வைகை ஆற்றில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், சர்க்கரைதீபம் ஏந்தியும் கோவிந்தா, கோவிந்தா என விண் அதிரும் வகையில் பக்தி கோசங்களின் மத்தியில் காலை 5.45 மணிக்கு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் தாமரை இலைகள், மலர்களால் நிரப்பபட்டிருந்த வைகையாற்று பகுதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்..

தொடர்ந்து ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்து அறிநிலையத்துறை மற்றும் வீர ராகவ பெருமாள் கோவில் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் மற்றும் வீர ராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.  

பச்சை பட்டுடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளியதால் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையோடு பக்திகோஷம் எழுப்பினர் இதனையடுத்து இராமராயர் மண்டகப்படியில் நடைபெறும் தீர்த்தவாரி எனப்படும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் புறப்பட்டார்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *