singaperumal kovil urchavam video

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் பிரசித்திபெற்ற அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் மாசி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி தவன உற்சவத்தின் நிறைவை முன்னிட்டு உற்சவர் அழகிய சிங்கப் பெருமாளும், அமிருத வல்லித்தாயாரும்  ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர்.

பேயாழ்வார்,திருமங்கையாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும்,108 திவ்ய தேசங்களில் ஒன்றானதுமான கோவில் நகரமான காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்திபெற்ற அமிருத வல்லித்தாயார் சமேத அழகிய சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத தவன உற்சவம் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.மாசி மாத பருவ காலத்தில் பெருமாள் நந்தவனத்துக்கு எழுந்தருளி செடி, கொடிகள், புல்,பூண்டுகளுக்கு அருளாசி வழங்குவதும், தவனக்கொழுந்து எனப்படும் மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பதும் தவன உற்சவம் எனப்படுகிறது.

அவ்வகையில் இந்தாண்டு மாசி மாத  தவன உற்சவம் கடந்த 9ஆம் தேதி வெகு விமரிசையாக தொடங்கி 3 நாட்களும் பெருமாளுக்கும்,தாயாருக்கும் தினசரி காலையில் சிறப்புத் திருமஞ்சனமும்,தீபாராதனைகளும் நடைபெற்றது. இந்நிலையில் மாசி மாத சுவாதி நட்சத்திரத்தையொட்டி தவன உற்சவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமையன்று சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்ற பிறகு ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் அழகிய சிங்கப் பெருமாளும்,அம்ருதவல்லித்தாயாரும் திருக்கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சகஸ்ர நாம மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்து  பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

ஊஞ்சல் சேவையில் சேவை சாதித்த அழகிய சிங்கப் பெருமாளையும், அம்ருதவல்லித் தாயாரையும் ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரையும் சாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *