sigappu pattuduthi kamatchi amman

காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழா 8ம் நாள் உற்சவத்தில், கையில் தங்க சாட்டையுடன்  சிகப்பு நிற பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் காமாட்சி அம்பாள் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வண்ண வண்ண வானவேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.

முக்தி தரும் நகரம்,புண்ணிய நகரம்,நகரேஷு காஞ்சி என உலகளவில் பல பெயர் பெற்று விளங்கின்ற கோவில் நகரமான  காஞ்சிபுரத்தில்,உலகப் பிரசித்தி பெற்றதும்,மகா சக்தி ஸ்தலங்களில் முதன்மையான வற்றில் ஒன்றானதுமான  காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவானது கடந்த பிப்பிரவரி மாதம் 25ந் தேதியன்று கொடியேற்றத்துடன்   வெகு விமரிசையாக துவங்கி  நடைபெற்று வருகிறது.

மாசி மாத பிரம்மோற்சவத்தின் 8ம்  நாள் இரவில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிகப்பு நிற பட்டு உடுத்தி,மல்லிகை மாலை,ரோஜாப்பூ மாலை,மகா ராணி கிரீடம், திருவாபரணங்கள் அணிந்துக்கொண்டு சிறப்பு அலங்காரத்தில் கையில் தங்க சாட்டையுடன் உற்சவர் காமாட்சி அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

இதைத்தொடர்ந்து கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டு மேளதாளங்கள் முழங்க, கோவிலிலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு காஞ்சிபுரம் மாநகரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக மகா ராணி குதிரையில் வலம் வருவதைப்போல காஞ்சி காமாட்சி அம்பாள்  வண்ண வண்ண வானவேடிக்கைகளுடன் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து வீதியுலா வந்த காமாட்சி அம்பாளை  வேண்டி விரும்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து  வழிபட்டு அம்பாளின் பேரருளை பெற்றுச் சென்றனர்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *