Annayai kondadum thiruvadipooram

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுவது.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: 

திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.   

சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *