sani bagavan thondharavu neekum bhiravar

சிவபெருமானின்  அனேக  திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் தேய்பிறைக்கு பின் வரும் அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு.

சிவன் கோவில்களில் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவரைக் காணலாம். பைரவரின் திருவுருவத்தின் விசேஷம் என்னவென்றால் அவரது உருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளதாக  ஐதீகம். ஜாதக  ரீதியாக பார்க்கும்  போது  பைரவரின் தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.

பைரவர் பாம்பை தன்னுடைய பூணுலாகவும்,  சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் முதலியவற்றை தன்னுடைய கரங்களில் ஏந்தியும்  காட்சி தருகிறார்.  பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது மிகவும்   விசேஷமாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும் என்கிறது சாஸ்திரம்.

 கிழமைகளும் பைரவர் பூஜைகளும்

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட திருமணத்தடை நீங்கும். வழக்கில் வெற்றி கிட்டும். கண்டச் சனியின் துன்பம் நீங்க , திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சனை செய்து  வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.

புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு  தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் இல்லத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க, சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

இந்த  நாட்கள் என்று இல்லாமல் எல்லா நாட்களிலும் , சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. பைரவர்,  சனி பகவானின்  குரு என்று சொல்லப்படுவதால் ,பைரவரை வழிபடுபவருக்கு சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். மேலும் பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதோடு ,யமபயம் நீங்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *