vallar jothy dharisanam

தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி 150வது ஆண்டு ஜோதி தரிசன விழா நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியினால் இளைத்தே வீடுதோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்’ எனப் பாடிய ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார் வள்ளலார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். 

ஆண்டுதோறும்  ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 150-வது ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலை கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.

அதன்படி காலை 6 மணிக்கு நடந்த முதல் ஜோதி தரிசனத்தை காண, சத்திய ஞானசபையின் முன்பு ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பின்னர் நிலை கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலை கண்ணாடிக்கு பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது. இதை பார்த்த அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி’ என்ற மகா மந்திரத்தை உச்சரித்து ஜோதியை தரிசனம் செய்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *