Nandhi peruman vazhipadu

சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமான் தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும். சிவபெருமானின் வாகனமாக இருப்பது வெள்ளை நிறக்காளை. இதன் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

‘ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப…' என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும். மாடு என்றால் ‘செல்வம்’ என்று பொருள். நந்தி என்றால் ‘மகிழ்ச்சி’ என்று பொருள். நான்கு மறைகளையும் நந்தியம் பெருமானுக்குத் தான், ஈசன் முதன் முதலில் கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது தர்மம் மட்டுமே. அந்த தர்மம் தான், இறைவனான சிவபெருமானைத் தாங்கி நிற்கிறது.

கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத் தான் ஈசன் சுவாசிக்கிறார்.

சிலாத முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது. நந்தியம்பெருமானுக்கு ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன.

பிரதோஷ காலங்களில் நந்திக்கு தான் முதல் மரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்சினைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் என்பது நம்பிக்கை.

பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக் கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால் தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம். எனவே சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *