Sapankal Neenga Ennaseiya vendum

சாபங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்!
அண்டங்கள் அனைத்தும். அன்னை கோமதியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ‘லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர’த்தை, யார் பிறருக்கு ‘எப்படி ஜெபிக்க வேண்டும்?’ என்று சொல்லித் தருகின்றார்களோ, அவர்களுக்கு அன்னை கோமதியின் அருள் கிட்டும்.
மனதில் பணிவு வரவேண்டும் என்று விரும்பினால், கோவில் திருப்பணிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
யாரிடமும், எப்போதும், எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. அப்படி வாங்கினாலே பெருமளவு புண்ணியத்தை நாம் இழக்கின்றோம் என்று அர்த்தம்.
கோவில் உழவாரப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது மனதில் இருக்கும் வக்ர எண்ணங்கள் விலகும். தேவையற்ற தீய எண்ணங்கள் கரைந்து மனம் சுத்தமாகும்.
மிகுந்த சுயகட்டுப்பாடும், ஆன்மிகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்டியப் பின்னரும் தான், 1008 ஐந்து முக ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணிய வேண்டும். அதுவரை இல்லறவாசிகள் அணிய வேண்டிய அவசியம் இல்லை;
கடந்த 16 முற்பிறவிகளில் மனிதப் பிறவி எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் சிவத் தொண்டு ஆற்றியிருந்தால் மட்டுமே, இப்பிறவியில் 108 ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணியும் புண்ணிய சந்தர்ப்பம் ஒருவருக்கு கிட்டும். மற்றவர்களுக்கு இது ஒரு விளையாட்டாகத் தான் இருக்கும்.
சிவாலயங்களில் நாகலிங்க மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம் தரும்; எங்கெல்லாம் நாகலிங்க மரம் இருக்கின்றதோ, அங்கே ஈசனின் உடுக்கை ஒலி பரவிக்கொண்டே இருக்கின்றது.
எல்லாப் பிரச்சினைகளுக்கும், சாபங்களுக்கும் ஒரே தீர்வு என்று எதுவும் கிடையாது. ஆனால், அனைத்து பிரச்சினைகளும், சாபங்களும் விலகிட, குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரை தினமும் ‘ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ’ என்று ஜபிக்க வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாட்களில் மஹாகால பைரவப் பெருமானின் சன்னிதியில், இந்த மந்திரத்தை ஜெபிப்பது அதிகபட்சமான பலனைத் தரும்.
நாகலிங்கப் பூவை வீட்டில் சிவலிங்கமாக வைத்து பூஜிக்கலாம். ஆனால், நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி, நமது பெயர் சொல்லி அர்ச்சனை செய்திருக்க வேண்டும். அதன் பிறகு, வீட்டின் பூஜை அறையில் நாகலிங்கப் பூவை சிவலிங்கமாக எண்ணி தினமும் பூஜை செய்யலாம். நமது கோரிக்கைகளை வேண்டிக் கொள்ளலாம். அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்பட்ட நாகலிங்கப் பூவை வீட்டில் வைத்து சிவனுக்கு இணையாக மரியாதை கொடுத்து தினமும் பூஜை செய்ய வேண்டும். வீட்டில் யாராவது வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருந்தால், அவரது தலையணைக்கு அடியில் இந்த நாகலிங்கப் பூவை வைக்க வேண்டும். இதனால், அந்த ஆத்மா தமது வாழ்நாள் நிறைவடைந்ததும் திருக்கயிலாயம் சென்றடையும்.
பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அரிதாக மேற்கு அல்லது தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயங்கள் பரிகாரக் கோவில்கள் ஆகும். இங்கே செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் பலன் தரக் கூடியவை.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *