Nanguneri Vanamamalai Perumal Kovil

நெல்லை மாவட்ட கோயில்கள்

பெருமாளுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருள்மிகு வானமாமலை பெருமாள் கோயில் விளங்குகிறது. ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 8 சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இந்தக் கோயில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இந்தத் திருத்தலத்துக்கு ஸ்ரீவரமங்கை, தோத்தாத்திரி என்ற பல பெயர்கள் இருக்கின்றன. நரசிம்மபுராணம், ஸ்கந்தபுராணம், பிரம்மபுராணம் போன்றவற்றில் இத்தலத்தின் பெருமைகள் பற்றி பாடப்பட்டுள்ளது

இந்தக் கோயிலின் கருவறையில், இறைவன் தோத்தாத்ரி நாதர் தனது இடது காலை மடித்த நிலையில் வலது காலை தொங்கவிட்டுத் தரையில் படும்படியாக வீற்றிருக்கிறார். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது

 108 வைணவத் திருத்தலங்களில் 58-வது தலமாக விளங்கும் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இத்தலத்தில் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பெருமாள் மூலவராக பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை  பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம்.

தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன்னை நாடி வருபவர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக பக்தர்கள் இவரை கொண்டாடுகின்றனர். உற்சவரின் திருநாமம் தெய்வநாயகப்பெருமாள்.

இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் சேகரிக்கப்பட்டு நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.

 

 

இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய `அகத்தியம்என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்தத் திருத்தலம் நெல்லை- கன்னியாகுமரி நான்குவழி சாலை அருகில் அமைந்துள்ளதால் போக்குவரத்து பிரச்சனைகள் இன்றி சாமியை  யாரும் எளிதில் தரிசிக்க இயலும்..

 

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *