Thiruchendur Avani Festival

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

 ஆவணி திருவிழாவை முன்னிட்டு வருகிற 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. ஆவணி திருவிழாவின் போது சுவாமி தினமும் காலை, மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனத்தில் 8 வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுகின்றார்.

திருச்செந்தூர் ஆவணி திருவிழா நிகழ்ச்சி நிரல்…..
 ஆகஸ்டு 24 ….
காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். பின்னர் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமியும், அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

ஆகஸ்டு 25…..
6-ம் திருநாள் காலையில் சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பந்தல் மண்டபம் மத்தியில் சேர்கிறார். இரவு 8 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவிலில் சேர்கிறார்கள்.

ஆகஸ்டு 26…..
7-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமான் உருகு சட்டசேவை நடக்கிறது. 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவிலை சேர்கிறார். காலை 9 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்கிறார். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார்.

ஆகஸ்டு 27…..
8-ம் திருநாள் அதிகாலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருள்கிறார். காலை 10.30 மணிக்கு சுவாமி பச்சை நிற கடசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்கிறார். பின்னர் மேலக்கோவிலில் இருந்து குமரவிடங்க பெருமானும், அலைவாயுகந்த பெருமானும் வெள்ளிக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து நெல்லை ரோட்டில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்தி பின் மேலக்கோவில் சேர்கிறார்.

ஆகஸ்டு 29…..
10-ம் திருநாள் காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி, அம்பாள் பெரிய பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள். 11-ம் திருநாள் இரவு 7 மணிக்கு சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்கிறார்கள்.

ஆகஸ்டு 31…. 
12-ம் திருநாள் மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் வலம் வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்ந்து, அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதிஉலா வந்து கோவிலை சேர்கிறார்கள். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *