pillayarpatti-vinayagar-chadurthi-vizha

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் வருகிற 12-ந்தேதி மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா செப்டம்பர் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றம் அன்று காலை மூஷிக படம் தாங்கிய கொடி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், கொடிமரம் அருகே உற்சவர் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசதேவர் ஆகிய சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகிறது. இரவு மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சதுர்த்தி விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவின் 6-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி கஜமுகா சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 12-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கோவிலில் உள்ள மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் தான் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் 10-ம் திருநாளான விநாயகர் சதுர்த்தி அன்று காலை கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும், மதியம் மூலவருக்கு திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு பஞ்சமூர்த்தி சாமிகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *