singirikudi-sendraal-navagraha-dhosham-vilagum

புதுச்சேரி – விழுப்புரம் வழியில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம். புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன. இத்திருக்கோயில் அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051–ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர். லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குர சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவிலில் உள்ளன.

இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார். பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார். 

எவர் ஒருவர் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன. மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது. எனவே இத்திருக்கோயிலில் எண்ணற்ற பக்தர்கள் வந்தவண்ணமுள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *