arul-vazhangum-aadimaadham

ஆண்டின் அணைத்து மாதங்களுமே சிறப்பானவை என்றாலும் ஆடி மாதம் தனிச் சிறப்புடையது. தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில் தான் தொடங்குகிறது. இப்புண்ணிய காலத்தின் போது சூட்சும சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும். அந்த சமயத்தில் பூஜைகள் வேத பாராயணங்கள், மந்திரங்கள், இறந்தோர் வழிபாடுகள் செய்தால் பலன் அதிகமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் அறிவியல் பூர்வமாக பிராண வாயு அதிகமாக கிடைக்கும் மாதமும் இந்த ஆடி மாதம் தான். மேலும் கிரக சஞ்சாரத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் கால அளவான 31 நாட்கள், 28 நாழிகை, 12 விநாடி கால அளவை கொண்டது ஆடி மாதம். எனவே இதை கற்கடக மாதம் என்றும் சொல்வதுண்டு. கடக ராசி சந்திரனுக்குரியது. எனவே சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி வீட்டில் இருப்பதால் ஆளுமை பலம் அடைகிறது.

மேலும் இந்த மாதத்தில் மட்டும் சிவம் சக்திக்குள் அடக்கமாகி விடுவதால் சிவனை விட சக்திக்கு அதாவது அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆற்றல் அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். அதனாலேயே இந்த மாதம் அம்மன் வழிபாட்டுக்குரிய மாதமாக திகழ்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் அவதரித்தது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதம் வந்தவுடன் அம்மன் கோயில்கள் அனைத்தும் புத்துணர்வு புது பொலிவு பெற்று காணப்படும். கூழ் வார்த்தல், பூக்குழி இறங்குதல் விளக்கு பூஜைகள், கூட்டு வழிபாடுகளுக்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் போற்றப்படுகிறது.

இந்த மாதத்தில் வேம்பும், எலுமிச்சையும் கொண்டு வழிபடுவது மிகவும் சிறப்பு பக்திபூர்வமான இந்த செயல்களுக்கு அறிவியல் ரீதியான காரணமும் இருக்கிறது ஆடி மாதம மழைக்காலத்தின் ஆரம்பம் எனவே தொற்று நோய்கள் பல இந்த கால கட்டத்தில் பரவும். அதனால் வேம்பும், எலுமிச்சையும் இயற்கையாகவே சிறந்த கிருமி நாசினியாக இருப்பதனால். அனைவரும் கூடும் கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக இவை தரப்படுவதால் நோய்கள் பரவாமல் தடுக்கப்படுகிறது. வெப்பம் குறைவான இந்த நாட்களில் எளிதில் செரிக்க கூடிய உணவான கூழ் படைக்கப்பட்டு, பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதனால் தான் ஆடிக்கூழ் அமிர்தமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆடிமாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளோடு, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம், ஆடிப்பௌர்ணமி என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் பக்தியுடன் கொண்டாடப்படுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான இந்த காலத்தில் அம்மனை போற்றி வழிபட்டு அம்மன் ஆசி பெறுவோம்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *