annabishagathin-mukkiyathuvam

 

 

ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில், சுத்தமான அன்னத்தினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

ஈஸ்வரன் சூரிய வடிவம், அம்பாள் சந்திர வடிவம் என்கிறது வேதம். இதனால் சந்திரனின் தானியமான நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசி, அம்பாள் அம்சம் என்றாகிறது. நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவமாகத் திகழும் அம்பாள், ஈசனைச் சேரும் நாள் ஐப்பசி அன்னாபிஷேக நாளாக அமைகிறது. இந்தத் திருநாளில் ஈசனைத் தரிசிக்கும் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள். அன்னாபிஷேக வடிவில் சிவசக்தி வடிவமாக இருக்கும் இறைவனை இந்நாளில் வணங்கினால் குடும்ப ஒற்றுமை மேம்படும். அன்னாபிஷேக தினமான ஐப்பசி பௌர்ணமியில் சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். அதாவது ஐப்பசி மாதம் துலாம் ராசியில் இருக்கும் சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சந்திரனும், அதுபோலவே மேஷத்தில் இருக்கும் சந்திரனுக்கு ஏழாம் இடத்தில் சூரியனும் சஞ்சரிப்பார்கள். இதனால் இந்த நாள் விசேஷமான சிவசக்தி தினமாக போற்றப்படுகிறது.

அன்னம் ஈசனின் வடிவம். உற்றுப்பார்த்தால், ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கமாகவே காட்சி தரும். அன்னம் ஈஸ்வர ஸ்பரிசம், ஒவ்வொரு முறை அன்னத்தைத் தொடும்போதும் நீங்கள் அந்த இறைவனைத் தொடுகிறீர்கள் என்று உணருங்கள். சந்திரனை சூடிக்கொண்ட சிவபெருமான் பௌர்ணமி தினத்தில் அமிர்த கலை, அதாவது சந்திரனின் 16 கலைகளோடு கூடி பூரண மகிழ்ச்சியோடு இருப்பார். இதனாலேயே சிவபெருமானுக்கு உரிய தினமாக பௌர்ணமி உள்ளது. அதிலும் புண்ணியம் தரும் துலா மாதமான ஐப்பசியில் வரும் பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆனந்த நிலையில் யோகத்தில் ஆழ்ந்திருப்பார். அந்த நாளில் அவருக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் அபிஷேகங்களில் எல்லாம் உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது.

ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சகலவித திரவியங்களாலும் சிவனுக்கு அபிஷேகம் செய்த பின்னரே அன்னத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது வெற்றிலை, வேக வைத்த காய்கறிகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். வெற்றிலை கொண்டு அலங்கரிப்பதால் அதைக் காண்பவர்களின் வீட்டில் சகல மங்கல நிகழ்வுகளும் நல்லபடி நடைபெறும் என்பது ஐதீகம். அதுபோல வாழைக்காய் பித்ரு தோஷங்களைத் தீர்க்கும். புடலங்காய் சர்ப்பதோஷத்தை நீக்கும். இப்படி ஒவ்வொரு காய் கனியும் ஒவ்வொரு பலன்களைத் தரும். வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் அலங்காரத்தால் சந்தான பிராப்தி கிட்டும் என்பதும் நம்பிக்கை.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *