pillaiyaar-suzhi-solvadhu-enna

தீராத வயிற்று வலி என்று ஒருவன் டாக்டரிடம் போனான். அவரும் பரிசோதித்து பார்த்துவிட்டு மருந்தை சீட்டில் எழுதி கொடுத்தார். அவனும் அதை கடைக்கு எடுத்துச் சென்றான். சிறிது நேரத்தில் திரும்பி வந்து டாக்டரிடம் , நீங்க எழுதிக் கொடுத்த எல்லா மாத்திரையும் கிடைத்து விட்டது. ஆனால் சீட்டின் ஆரம்பத்தில் எழுதிய ஒரு மாத்திரை மட்டும் கிடைக்கவில்லை என்றான்.  டாக்டரும் அதை வாங்கிப் பார்க்க ,அது தான் மாத்திரை எழுத ஆரம்பிக்கும் முன் போட்ட பிள்ளையார் சுழி என்று தெரிந்துக் கொண்டார்.

இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், படித்தவர்,படிக்காதவர் என்று நம் அனைவருக்கும்,எதையாவது  எழுத ஆரம்பிக்கும் பொழுது பிள்ளையார் சுழி போட்டு  எழுதும் பழக்கம் இன்றும் உள்ளது. முழுமுதற் கடவுளான கணபதியை வணங்கி காரியங்களைத் துவங்குவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு. அந்த அடிப்படையில் பிள்ளையார் சுழி போடுவது நம்மில் வழக்கமாக இருக்கிறது.

இவ்வளவு ஏன்,நம்முடைய  பழைய காலத்து ஏடுகள், கல்வெட்டுகளிலெல்லாம் கூட பிள்ளையார் சுழி காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால்  இது கர்ண பரம்பரையான வழக்கமாகவே கருதப்படுகிறது. இதற்கு பலரும் பலவிதமாக கருத்து கூறியிருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்திகர்கள் கூட, எழுத துவங்குவதற்கு முன் எழுது கோலின் நிலையை ஆராய்வதற்காக போட்ட வட்டமும், கோடும் தான், பிற்காலத்தில் பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது என்று சொல்வார்கள்.

 

அது அவர்கள் வாதமாக இருக்கட்டும். ஆனால், உண்மை அதுவல்ல. பிள்ளையார் பிரணவ சொருபம். பிரணவமாகிய ஓம் ஐந்தெழுத்துகள் சேர்ந்தது. முதல் உரு நட்சத்திர வடிவம். அதாவது வட்டப் புள்ளி. இரண்டாவது உரு நேர் கோடு. மூன்றாவது வட்டம். நான்காவது பிறை மதி. ஐந்தாவது பிந்து. இவற்றில் வட்டப் புள்ளியும் நேர் கோடும் இணைந்தது பிள்ளையார் சுழி. இந்த சுழியை இட்டாலே போதும் பிள்ளையார் வணக்கம் ஆகி விடுகிறது என்பது ஐதீகம்.

பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் அதி தேவதைகளாக ஐந்து பேரை சிவஞான போதம் அறிவிக்கிறது. அகாரத்திற்கு பிரம்மன் என்றும், உகாரத்திற்கு விஷ்ணு என்றும், மகாரத்திற்கு ருத்திரன் என்றும், பிந்துவிற்கு மகேசன் என்றும், நாதத்திற்கு சதாசிவன் என்றும் சிவஞான போதம் கூறுகிறது. எழுதத் துவங்குவது என்பது ஒரு சிருஷ்டி. அது தோன்றவும், நின்று நிலவவும், வளர்ச்சி பெறவும் இந்த ஐந்து தேவதைகளையும் வணங்கும் விதமாகவே பிள்ளையார் சுழி போடப்பட்டது. ஆரம்பத்தில் பிரணவ வடிவமே வழக்கமாக இருந்துள்ளது. பிரணவத்தை விரைவாக எழுதும் பொழுது உ போலத் தோன்ற, காலப் போக்கில் அதுவே பிள்ளையார் சுழியாக ஆகி விட்டது.

எது எந்த விதமாக அர்த்தம் புரிந்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு செயலை நாம் துவங்குவதற்கு முன் முழுமுதற் கடவுளை வணங்கி ஆரம்பிக்க அது வெற்றியில் தானே முடியும்?.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *