Tag: tirupathy

  • Tirupathy Perumal Adisayam

    பலமணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய திருமலை திருப்பதி கருவறைக்குள் செல்லும் போது நமது வேண்டுதல்கள் மறந்து போகிறது. கூட்ட நெரிசலால்தான் பெருமாளைச் சரியாகப் பார்க்க முடியவில்லை, நம் பிரார்த்தனையையும் சொல்ல இயலவில்லை என்று நாமே ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு சமாதானமும் அடைந்திருப்போம்.

    ஆனால், உண்மை அதுவல்லவாம். பெருமாளை தரிசனம் செய்யும் கருவறைப் பகுதியில் இருக்கும் ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம் ஞாபகசக்தியை மழுங்கடித்துவிடுகிறதாம். கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கருவறைக்குள்ளே, மணிக்கணக்காக பெருமாளோடு இருக்கிறார்களே, இவர்கள்தான் எவ்வளவு சாவகாசமாக, மனநிறைவாக வேண்டிக்கொள்ளலாம் என்று நாம் சிலசமயம் பொறாமைகூட பட்டிருக்கிறோம். ஆனால், அவர்களுக்கும் அப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுவதில்லையாம்.

    நம் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. திருமலை பெருமாள் கருவறைக்கு முன்னால் இருக்கும் கருடாழ்வார் சந்நதியிலிருந்து கர்ப்பகிரகம் வரையிலான இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ‘எனர்ஜி ஃபீல்ட்’ என்று கருதப்படுகிறது. தினமும் பெருமாளை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கின்னரர், கிம்புருஷர்கள் மற்றும் கருட, கந்தர்வ, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசர் முதலான இனங்களைச் சேர்ந்த தேவதைகள் எல்லோரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    அதனால், அவர்கள் பெருமாளிடம் என்ன கோரவேண்டும் என்று நினைத்து வந்தார்களோ, அவற்றை நினைவுபடுத்திக்கொள்ள இயலாது போய்விடுவார்கள்! அதேபோல கருவறையில் பெருமாளை எந்த அலங்காரத்தில் தரிசித்தோம் என்ற நினைவும் மூளையில் தங்காமல் போய்விடுகிறது! ஆனால், நாம் பெருமாளைப் ‘பார்க்கிறோ’மோ இல்லையோ, தன் கருவறைக்கு முன் நிற்கும் ஒவ்வொருவரையும் பெருமாள் நிச்சயமாகப் பார்க்கிறார்.

    நம் வேண்டுதல்களை அவர் அந்தக் கணத்திலேயே ஈர்த்துக்கொண்டுவிடுகிறார்; உடனேயே அவற்றை நிறைவேற்றியும் வைத்து விடுகிறார். அதனாலேயே அவரிடம் ‘போய்ச் சேர்ந்துவிட்ட’ அந்த வேண்டுதல்களை நாம் மீண்டும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டாதபடி மறந்துவிடுகிறோம் என்பதுதான் அனுபவபூர்வமான உண்மை.

  • Tirupathy 24 hrs free ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் 6 ஆயிரம் பக்தர்களுக்கு என 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இனி 24 மணி நேரமும் இலவச தரிசன  டோக்கன் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது . கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில்  டோக்கன் களை பெறுவதற்காக  பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து நீண்ட வரிசையில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன்  நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

    இதனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் கொரோனா வைரஸ் பரவ வழிவகுக்கும் விதமாக அமைந்தது. இதனால் இந்த இலவச தரிசன டோக்கன்  நிறுத்தப்பட்டு ஆன்லைனில் வழங்க வேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் வந்தது. 

    இதற்கிடையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் 24 மணி நேரமும் திருப்பதி அலிலிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகள் என 24 மணி நேரமும் இந்த டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு 6 ஆயிரம் டிக்கெட்டுகள் நிறைவடைந்த பிறகு அதற்கு மறுநாள் உள்ள நாட்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் திருமலையில் அல்லது திருப்பதியில் தேவஸ்தான தங்கும் அறைகளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முகமாக செயல்பட்டுவந்த விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக செயல்பட்டு வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை குறைந்துள்ளதால் அந்த இரண்டு ஓய்வறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்த ஒரு சிலரையும் பத்மாவதி பக்தர்கள் ஓய்வறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

    எனவே இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இரண்டு ஓய்வறைகளும் பக்தர்கள் தங்குவதற்காக வாடகைக்கு  வழங்கப்பட உள்ளது. இதனால் திருப்பதிக்கு வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் டிக்கெட் பெற்று ஓரிரு நாள் தங்கினாலும் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்லலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Tirupathy Ezhumalayan Ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் கோட்டா நாளை வெளியீடப்படுகிறது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பக்தர்களுக்கான தரிசனம் ஊரடங்கு  தளர்வுக்கு பிறகு கடந்த ஜுன் 11ம் தேதி முதல்  அனுமதிக்கப்படுகின்றனர்.  அவ்வாறு ரூ 300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 13 ஆயிரம் டிக்கெட்கள் என இந்த மாத 30 தேதி வரைக்கான டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்  நாளை சனிக்கிழமை காலை 11 மணி முதல்  https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • Tirupathy Perumal Ragasiyam

    பல கோடி ரூபாய் சொத்துக்களின் அதிபதியாக இருக்கும் ஏழுமலையானுக்கு தினந்தோறும் கோடி கோடியாக உண்டியல் காணிக்கை சேருகிறது என்றாலும் அவருக்கு படையல் மண்பானையில் வைக்கப்படும் தயிர்சாதம்தான். மன்னன் கொடுத்த தங்கப் பூ மாலையை விட மண்ணால் குயவர் செய்த மாலையை அன்போடு ஏற்றுக்கொண்டவர் திருப்பதி ஏழுமலையான்.

    மன்னன் தொண்டைமானுக்கு ஏழுமலையான் மீது பக்தியோடு பாசமும் அதிகம். ஏழுமலையானுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தான். ஒருநாள் பூஜையின்போது பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுந்தது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளுக்குள் வருந்தினான்.

    பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்கு கால் ஊனம். தனது குலத்தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் ஏழுமலையான் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்கு கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார். பீமய்யாவுக்கு திருமால் கனவில் காட்சியளித்த நாள் புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம்.

    பீமய்யாவும், தனது கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன்பின்னர் மண்ணால் ஏழுமலையானின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். 

    இப்படி தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான். அச்சமயயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியாத நிலையிலேயே, பிசைந்து கொண்டிருக்கும் களி மண்ணையே மலர்களாக பாவித்து பெருமாளுக்கு அர்ச்சிப்பான்.

    இது இப்படியிருக்க குழப்பத்திலிருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவொன்றைக் கண்டான். அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி, தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே நீயும் செய்து பார் அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார். தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தான். 

    உடனே பீமய்யனைச் சென்று கட்டித் தழுவிக்கொண்ட தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி. உனது வழிபாட்டைத் திருமால் ஏற்றுக் கொண்டு விட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

    ஏழுமலையான் அன்றைய தினம் பீமய்யனின் கனவிலும் தோன்றினார். அதைப்பார்த்த பீமய்யாவின் மெய்சிலிர்த்தது. உன் பக்தியின் பெருமையை என்று பிறர் கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுண்டத்திற்கு அழைத்துக் கொள்வேன் எனக் கூறியிருந்தார். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம்.
     

  • Tirupathy bramorchava ticket veliyidu

    திருப்பதியில் ஏழுமலையான் கோவில் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்  வெளியீடப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 19ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 15 ம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கட் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

    இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in/#/login செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக டிக்கெட் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில் சுவாமி வீதிஉலா நடைபெறுவது வரலாற்றில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இருப்பினும் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தாயார் எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்களோ அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில்  ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Tirupathy devotees

    கொரோனா ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் அனைத்துப் பூஜைகளும் வழக்கம்போல் நடந்து வருகின்றன. 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டு, வருகிற 8-ந்தேதியில் இருந்து கோவில்களை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
       
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநில அரசின் உத்தரவுக்காக தேவஸ்தான அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

    கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்பும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

     திருமலை-திருப்பதி தேஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று ஏழுமலையான் கோவில், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் உள்பட பல்வேறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர மாநில அரசு உத்தரவின்படி தான் ஏழுமலையான் கோவில் திறக்கப்படும். அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். பக்தர்களை தங்க வைக்கும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 5 அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் தரையில் கட்டங்கள் போடப்பட்டுள்ளன. தினமும் 7 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதில் முதல் கட்டமாக தேவஸ்தான ஊழியர்கள், முன்னாள் ஊழியர்களும், 2-வது கட்டமாக உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து இருக்கிறார். 

  • Tirupathy 2 days sorgavasal dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஆகிய இரண்டு தினங்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவது வழக்கம். 

    இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ளது போன்று ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்து பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் இரண்டு நாட்கள் மட்டுமே ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதால் அதிக அளவு பக்தர்கள் தரிசிக்க முடியாத நிலை ஏற்படுவதாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுகுறித்து அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடத்தி திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் தேவஸ்தானம் எடுக்கும் முடிவே இறுதியானது என  தீர்ப்பு வழங்கியிருந்தது. 

    இந்நிலையில் சொர்க்கவாசல் எத்தனை நாட்கள் திறப்பது என்பது குறித்து அவசர அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் 2 நாட்களுக்கு மட்டும் பக்தர்களை சொர்க்கவாசல் வழியாக அனுமதிப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

  • tirupathy laddu rate increase

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலை வரும் வைகுண்ட ஏகாதசி முதல் உயருகிறது. 

    திருப்பதியில் ஒரு லட்டு தயாரிக்க 38 ரூபாய் செலவு செய்கிறது. அதில் நடைபயணமாக மலையேறி தரிசனம் செய்வோருக்கு ஒரு லட்டு இலவசமாகவும், தர்ம தரிசனம் செய்வோருக்கும், மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கும் 10 ரூபாய்க்கு 2 லட்டுகளும் கூடுதலாக 2 லட்டுகள் பெற 25 ரூபாய் என்றும் விற்பனை செய்கிறது. அதேபோல் 300 ரூ கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்வோர், விஐபி பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இரண்டு லட்டுகள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமன்றி தனி மையங்கள் அமைத்து 50 ரூபாக்கும் லட்டு விற்பனை செய்கிறது. இதில்தான் தேவஸ்தானம் சற்று லாபத்தை பார்க்கிறது.

    ஆனால், இனிமேல் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் அனைவருக்கும் ஒரு லட்டு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதேபோல் கூடுதல் லட்டு வாங்க 50 ரூபாய் கொடுத்து ஒரு லட்டு வாங்கிக்கொள்ளலாம். இது வரும் வைகுண்ட ஏகாதசி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே இனி ஒரு லட்டு 10 ரூபாய்க்கு, 25 ரூபாய்க்கு என்றெல்லாம் கிடையாது. இனி அனைவருக்கும் ஒரு லட்டு 50 ரூபாய் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வால் லட்டுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் முழுவதும் ரத்து செய்யப்படவுள்ளது.இந்த விலை உயர்வால் தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு 400 முதல் 450 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.