Tag: Nayanar

  • Amar needhi nayanar part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    இறையனார் தந்து 
    அமர் நீதி நாயனார் தொலைத்த  
    கோவணப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.

    "ஐயன்மீர்….!
    தாங்கள் தந்த 
    கோவணம் காணவில்லை.
    எங்கு எவ்வாறு மறைந்தது நானறியேன்.
    இது என் அறியாப் பிழை. 

    தயைகூர்ந்து மன்னித்தருள வேண்டும்.

    வேறு கோவணம் தருகிறேன்.
    புத்தம் புதிதாய்த் தருகிறேன்.

    ஆடையைக் கிழித்து பிரித்தது அல்ல 
    நான் தரும் கோவணம்.
    பிரத்தியேகமாக கோவணமாகவே நெய்ததைத் தருகிறேன்.

    அடியார்கள் பாராட்டிய வெண்மை மிக்க கோவணம் தருகிறேன்."

    அழுதபடி நின்றார் அமர்நீதியார்.

    சிவனுக்கு 
    சினம் மிகுந்தது.
    கோபம் கொப்பளித்தது.
    அதனால் வார்த்தைகள் அதிரடியாய் தெறித்தன.

    "என்ன நீ…
    ஏதேதோ கதை சொல்கிறாய்.

    நான் தரும்போது 
    பெரும் சிறப்பு கொண்ட கோவணம் என்றதால் வேறொன்று கொடுத்து என்னுடையதைக் 
    கவரப் பார்க்கிறாயா ?

    இதுதான் உன் 
    வணிக லட்சணமா ?

    அமர் நீதியாருக்கு மயக்கமே வந்தது.

    "அந்தணரே… 
    என் பிழையைப் பொறுத்தருள்வீர் ..!! எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்.

    பொன் பொருள்
    வைரம் ரத்தினம் 
    பட்டாடை எது வேண்டுமானாலும் கேளுங்கள்.

    தருகிறேன்"

    ஒரு முறை அல்ல, 
    பல முறை கெஞ்சினார்.

    "ரத்தினங்கள் 
    எனக்கு எதற்கு ?
    அவற்றை வைத்து 
    நான் என்ன செய்யப் போகிறேன் ?
    எனக்கு என் கோவணம் தான் வேண்டும்" விடாப்பிடியாய் 
    அடம் பிடித்தார் அந்தணர்.

    இதை கண்ணுற்ற 
    அமர் நீதியார் 
    உற்றார் உறவினர் கண்கலங்கிக் 
    குமுறி அழுதனர்.

    "சரி… சரி….
    வேண்டுமானால்
    இந்த ஈர கோவணத்திற்கு ஈடாக 
    வேறு கோவணம் தா.

    அது இதன் 
    எடைக்கு ஈடாக இருக்கவேண்டும்."
    கொஞ்சம் இறங்கி 
    வந்தார் இறைவனார்.

    ஒரு தராசு 
    கொண்டு வரப்பட 
    அதில் ஒரு தட்டில் தன் ஈரம் உலர்ந்த கோவணத்தை வைத்தார்.

    மறு தட்டில் 
    மனம் கலங்கியபடி தன்னிடமிருந்த உயர்ந்த பட்டுக் கோவணத்தை வைத்தார் அமர் நீதியார்.

    அப்போது அந்தணரின் தட்டு கீழிறங்கி 
    ஈடில்லை 
    எனக் காட்டியது.

    தன்னிடமிருந்த 
    அடுத்த கோவணத்தை தட்டில் வைத்தார்.

    அந்தணரின் தட்டு எழவில்லை.

    துடித்துப் போன 
    அமர் நீதியார்.
    அடுத்து அத்தனை கோவணங்களையும் 
    தன் தட்டில் வைத்தார்.
    அது போதும் அவர் தட்டு  இறங்கவில்லை.

    ஆடைகள் துணிமணிகள் பட்டு பீதாம்பரங்கள் 
    என பலவற்றை வைத்தார். தட்டு தள்ளாடியதே 
    தவிர தரை நோக்கவில்லை.

    'புவனம் எல்லாம் வைத்தால் கூட 
    அந்தணரின் கோவணத்திற்கு ஈடாகாதோ' எனக் கலங்கிய அமர் நீதியார் இறுதியில் அடியாரின் திருவடிகளைப் பிடித்தார்.

    "சுவாமி….!
    இனி என்னிடம் 
    கொடுக்க ஏதும் இல்லை. எல்லாவற்றையும் 
    தந்து விட்டேன்.

    என் மனைவி மகன்
    நான் மட்டுமே பாக்கி."

    அந்தணர் மௌனம் சாதித்தார்
    பொய்க்கோபம் 
    காட்டியபடியே!

    "இதோ அவர்களையும் தருகிறேன்."

    மனைவியும் மகனும் தட்டேறினர் 
    சிவநாமத்தை 
    விடாது ஜெபித்தபடி.

    அதற்கும் பலன் இல்லை. இரு தட்டுகளும் 
    சமமாகவில்லை.

    பொறுமையை இழந்தார் பொன்மனச் செம்மல்
    அமர் நீதி நாயனார். 

    இனி 
    அவர் மட்டுமே மீதி.

    கண்ணிறைந்த இறைவனைத் தொழுதபடி கண்களில் நீரைச் சுரந்தபடி 
    ஐந்தெழுத்தை உச்சரித்தபடி 
    தானும் தட்டு 
    ஏறத் தயாரானார்.

    "இறைவா…!
    அன்பர் துயர் தீர்க்கும் அருளாளா !!

    என் அன்பு உண்மையெனில் 
    என் சிவ சேவை உண்மையெனில் 
    என் அடியார் சேவையில் 
    பிழை நேர வில்லை என்பது உண்மையெனில் என் அடிமைத் திறம் 
    பழுதில்லை என்பது
    உண்மையெனில்
    என் மீதிருக்கும் 
    பழியைத் தீர்த்து வை."

    கண்ணீர் பெருக்கெடுத்து விழி நிரப்பி 
    கரைபுரண்டு ஒட 
    தன் தட்டின் மீது 
    ஏறி நின்றார்
    'சிவாயநம.. சிவாயநம' என்று ஒலித்தபடி.

    என்ன ஆச்சரியம்!
    இரு தட்டுகளும் 
    நேர் நின்றன.

    கவலையோடு
    சூழ்ந்திருந்தத  
    அத்தனை பேரும் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.

    அடுத்த ஆச்சரியம் 
    உடனே நிகழ்ந்தது.

    வானிலிருந்து 
    பூமாரி பொழிந்தது.
    தேவர்களின் 
    மறை இசை
    தேவகானமாய்
    நல்லூரில் ஒலித்தது.

    அதற்குப் பின்னரும் மற்றொரு ஆச்சரியம்!

    வம்பிழுக்க வந்து 
    வம்பிழுத்து வந்த 
    சிடு சிடு அந்தணர் 
    திடுதிப்பென 
    மாயமாய் மறைந்தார் அனைவர் கண் எதிரிலேயே!

    அடுத்து நடந்தது அதிசயமே வியக்கும் அதிசயம்!

    அது கணமே 
    இறைவனும் இறைவியும் ஒளிவெள்ளத்தில் 
    ரிஷப வாகனத்தில் ஒருசேரக் காட்சியளித்தனர் வான்வெளியில்.

    மங்கையொருபாகன்  மனம் நெகிழ்ந்து பேசினார்
    அமர் நீதி நாயன்மாரும்
    நல்லூர் மக்களும் 
    ஆச்சரியத்தில் திளைக்கும் படி.

    "அன்பரே….!  
    அமர்நீதியாரே…!
    சிவ சேவை 
    அடியார் சேவை  அன்னதானம் 
    இம்மூன்றும்
    அற்புதமானவை.
    எதற்கும் ஈடிலாதவை.

    எதிர்த்தட்டில்
    நானே நின்றிருந்தாலும் நீயே வென்றிருப்பாய்.

    இறையன்பு 
    இறைவனை விட உயர்ந்தது என்பதை உலகுக்கு அறிவிக்கவே இந்த நாடகம்.

    அமர் நீதியே!
    நீ உன் மனைவியுடனும் மைந்தடனும் என்னுடனேயே 
    சிவபுரம் வாருங்கள்"
    என ஆசிர்வதித்தபடி
    மறைந்தனர் 
    மறை நாயகனும்
    இறை நாயகியும்.

    அடுத்து நடந்தது தான் உலகம் கண்டிராத பேராச்சரியம் !

    தராசு அப்படியே 
    புஷ்பக விமானமாக மாறி
    விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    அமர்நீதியாரும்
    அன்பு மனைவியும் ஆருயிர் மைந்தனும் தேவகணங்கள் வரவேற்க சிவபுரம் அடைந்து சிவானந்தப் பெருவாழ்வு வாழ்ந்தனர்.

    நீதியே இவரை 
    விரும்பி வந்ததால் அமர்நீதி என பெயர் பெற்றார் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

    அமர்தல் என்பதன் பொருள் விரும்புதல் என்பதாம்.

    அமர்நீதியார் புராணத்தை ஊன்றிக் கவனித்தால்
    சில ஆன்மிக உண்மைகளை
    உணர முடியும்.

    ஆண்டவனைக் காண அனைவரும் செல்வர்.
    ஆனால் அடியவரைக் காண அரனாரே வருவார்.

    உள்ளம்கவர் கள்வனாகக் கடவுளைப் பாடுவர்.
    ஆனால் இறைவன் 
    அமர் நீதி  நாயனாரைக்
    கள்வன் ஆக்கினார்.

    இறைவனின் 
    தராசுத் தட்டில்
    ஆண்டவர் அருள் முன்பு அடியார் 
    இறையன்பு தாழும்.
    அன்பு மேலிட மேலிட அருள் தட்டு உயர்ந்து 
    கொண்டே போகும்.

    அன்பு தான் பெரிது. 
    அருள் துணை வரும்.

    இறைவன் 
    உறைவதும்
    ஆனந்த நடனம்
    ஆடுவதும் திருமடம்.
    தவத்திற்கும் தியானத்திற்கும்
    அதுவே சிறப்பிடம்.
    அன்னதானமே
    அங்கு முதலிடம்.

    அமர்நீதி நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் தொண்டர் தொகையில்,
    'அல்லிமென் முல்லையந்தார் 
    அமர்நீதிக்கு அடியேன்' என அகமகிழப் பாடுகிறார்.

    அன்பே சிவம்.

    (அமர்நீதி நாயனார் – முடிவுற்றது)

  • Amr needhi nayanar part 1

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    காவிரி பாயும் 
    சோழ நாட்டில் 
    தேரோடும்  திருவீதிகளைக் கொண்ட பழமையான தொன்மையான ஊர் பழையாறை.

    பழையாறைக்குப் பெருமை சேர்க்க 
    ஆனி மாதம் 
    பூச நட்சத்திரத்தில் அவதரித்தார் 
    வணிகர் குலச் செம்மல் அமர் நீதி நாயனார்.

    பொன், முத்து நவரத்தினங்கள் 
    சிறந்த பட்டு 
    பருத்தி ஆடைகள் 
    எந்த தேசத்தில் 
    சிறப்பாக விளையுமோ அங்கிருந்து தருவித்து நிறைந்த தரத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நல்வணிகர் 
    அமர் நீதியார்.

    வணிகத்தை விட்டால் அவர் உலகம் 
    சிவலோகம் தான்.

    சிவனடி தவிர 
    வேறொன்றையும் சிந்தனை செய்ய மாட்டார்.

    'செம்மேனி கொண்டோன்'
    சிவபெருமானின் திருத்தொண்டர்களைக்
    கண்டால் போதும் மனமகிழ்ந்து 
    அவர்களை அழைத்து வணங்கி, உபசரித்து உணவளித்து அவர்களுக்கு 
    கந்தை,
    துறவிகள் 
    அரை நாணுக்குப் 
    பதிலாக அணியும்  கீளாடை, கோவணம் 
    முதலான ஆடைகளை அளித்து 
    அறக்குணம் காட்டுவார்.

    ஆலாலகண்டருக்குத் திருவிழா என்றால் 
    முதல் ஆளாய்
    முந்திப் போய் 
    முன்னின்று 
    சிவ பணியும் அறப்பணியும் 
    தவறாது செய்வார்.

    ஒருமுறை 
    திருநல்லூரில் பஞ்சவர்ணேஸ்வரர்
    திருவிழாவுக்குச் சென்றவர் 
    இறைவன்பால் 
    மனம் லயித்து 
    சிவநாமம் ஓதினார்.
    அவன் வசம் ஆனார்.

    சிவன்
    வசம் ஆனவர்
    அங்கு 
    அன்னதானத்திற்கு 
    என்றே ஒரு 
    திருமடம் கட்டினார்.

    காலப்போக்கில் 
    மனைவி, மகன் 
    உற்றார், உறவினர் சூழ அங்கேயே தங்கி அடியாருக்குச் சேவையோடு 
    தானே
    அமுது படைக்கத் தொடங்கினார்.

    ஏகாந்தமாய் 
    ஏக இறைவனுக்குப்
    பணி செய்து வந்த 
    அமர் நீதி நாயனாருக்கு ஒரு நாள் சோதனை வந்தது 
    எல்லாம் உணர்ந்தவனாலேயே.

    ஆம்….
    அடியார்களைச் சோதித்து அருள்புரிந்து ஆட்கொள்ளும் 
    அருளாளர் 
    சிவபெருமான் தான் 
    அமர் நீதியாருக்குப் பெரும் சோதனை தர திருவுளம் கொண்டார்.

    ஆதி சிவனார் 
    பழுத்த அந்தணர் 
    வடிவம் எடுத்தார்.
    பார்த்தாலே பரவசமாக்கும் பிரம்மச்சாரி வேடம்.

    அழகிய சிகை 
    சிரத்தில்.
    மூன்று வரித் திருநீறு நெற்றியில். 
    தர்ப்பப்பை மோதிரம் கைவிரலில்.
    முப்புரி நூல் மார்பில்.
    முறுக்கிய அரைநாண் இடுப்பில்.
    அறிவுக் கதிர் வீச்சு திருமுகத்தில்.
    அருள் பொங்கும் பார்வை கண்களில்.
    எனக் காட்சியளித்தார் அந்தணர் வடிவில் வந்த ஆதி சிவனார்.

    அம்மட்டுமா ?

    இரு கோவணங்களும் திருநீறுப் பையும் தருப்பையும் முடிந்த தண்டினை ஏந்தியபடி வந்தார் அந்தணர்.

    அவரைப் பார்த்ததும் பரவசமான அமர் நீதியார் ஓடி வந்து வணங்கி 
    அடிமண் மீது 
    முடிபடப் பணிந்தார்.

    அவரை அன்போடு எழுப்பிய அந்தணர்,
    "அன்பரே…!  
    உன்னுடைய 
    வள்ளல் தன்மையை அறிந்தே வந்திருக்கிறேன்.

    நீ தரும் அன்னம்
    கந்தை 
    கீளாடை 
    வெண்மையான கோவணம் 
    வழங்கும் பண்பு 
    இவற்றைப் பற்றி சிவனடியார்கள் 
    பேச்சில் இருந்த பிரமிப்பைக் கேட்டே நானும் வந்துள்ளேன்."

    அமர் நீதியாருக்கு அந்தணர் வார்த்தைகளால் தலைகால் புரியவில்லை.

    "ஐயன்மீர்….!
    இப்போதே
    அமுது தயார்.

    உங்களைப் போன்ற அந்தணர்களுக்காகவே வேதியர்களைக் கொண்டு 
    தூய்மையான 
    சமையல் செய்கிறோம்."

    உணவு வழங்க ஆயத்தமானார் 
    அமர் நீதியார்.

    அதற்காக உணவுக்கூடம் திரும்பியவரைத் தடுத்து,
    "மெய்யன்பரே…!
    நான் முதலில் 
    காவிரி சென்று 
    நீராடி வருகிறேன்.
    அதன் பின்னர் 
    உன் திருக்கரங்கள் வழங்கும் 
    அடியார் போற்றும் 
    அமுது உண்கிறேன்."
    என்றபடி 
    வான் நோக்கினார்.

    "ஒருவேளை 
    மழை வந்துவிட்டால் கோவணம் 
    நனைந்து விடும்.
    ஈரத்தால் 
    அணிய முடியாமல் போய்விடும்." என்று கூறியபடியே 
    தண்டில் இருந்த 
    இரு கோவணங்களில் ஒன்றை 
    அமர்நீதியாரிடம் கொடுத்தார் அந்தணர்.

    "இதைப் பத்திரமாக 
    நீ வைத்திரு.
    இதன் சிறப்பு 
    சொல்லி மாளாது.
    பத்திரம்…  பத்திரம்"
    என்றவாறே 
    புறப்பட்டார் 
    புனித நீராட.

    அக்கோவணத்தைப் 
    பயபக்தியோடும் பணிவோடும் வாங்கிய அமர் நீதியார் 
    உள்ளே சென்று 
    எவர் துணிமணிகளும் படாதவாறு 
    தனி ஓர் இடத்தில் பாதுகாப்பாக வைத்தார்.

    பின் 
    அந்தணரின் வரவுக்காக அவர் வரும் திசை நோக்கி காத்திருக்க ஆரம்பித்தார்.

    அந்தணர் 
    காவிரிக்குச் சென்று
    புரண்டோடும் காவிரியில் மூழ்கிக் குளித்தார்.

    குளித்துவிட்டு 
    கரைக்கு வந்து 
    வானத்தை நோக்கினார் 
    அந்தி வண்ணர்.

    இறைவனின் உள்ளத்தை ஆழ அறிந்த வருணபகவான்
    விடாது மழை பொழிந்தார் திருநல்லூரே மிதக்கும்படி.

    திருமடம் 
    இருந்த 
    திசை நோக்கினார்.
    அதே.
    அமர்நீதியார் பாதுகாப்பாக வைத்திருந்த கோவணம் மாயமாய் மறைந்து போயிற்று.

    காவிரியில் நீராடிய
    அந்தணர் வடிவ அருளாளர்
    அணுக்கத் தொண்டரின் அன்பெனும் 
    தூய நீராடுதல் வேண்டி திருமடம் வந்து சேர்ந்தார்
    உடல் முழுக்க நீரோடும் பெய்யும் மழைநீர் சொட்டோடுகளோடும்.

    "வணிகர் குல வள்ளலே…!
    சொன்ன மாதிரியே மழை. நானும் நனைந்துவிட்டேன். தண்டில் இருந்த கோவணமும் நனைந்துவிட்டது.

    நான் தந்த 
    கோவணத்தை 
    எடுத்து வா.

    நீராடியதால் 
    எழுந்துள்ளது 
    அகோரப்பசி.

    சீக்கிரம் எடுத்து வா."

    அமர்நீதியார் அவசரகதியில் 
    அறைக்குச் சென்று வைத்த இடத்தில் பார்த்தார். 
    கோவணம் 
    அங்கில்லை.

    அறை முழுக்கத் தேடினார். மடம் முழுக்கத் தேடினார். மனைவியை அழைத்து தேடச் சொன்னார் .
    அவர்களது 
    குட்டிப் பையனும் 
    சந்து பொந்துகளிலும் இண்டு இடுக்குகளிலும் கை நுழைத்துத் தேடினான்.

    கோவணம் தென்படவில்லை.

    "தேவ தேவா…! 
    வந்தோர்க்கெல்லாம் கோவணம் 
    வழங்கிவரும் 
    எனக்கு இது 
    என்ன சோதனை?"
    என இறையடியை நினைத்து
    நெஞ்சுருகிக் கெஞ்சினார் அமர்நீதியார்.

    "முற்பிறப்பு  
    கர்ம வினை 
    இப்படி பழி வாங்குகிறதோ!

    கருணைக் கடலே !அந்தணருக்கு என்ன பதில் சொல்வேன் ?"

    அரற்றினார்.
    கதறினார்.

    அன்றாடம் வணங்கும் அஞ்செழுத்தானே 
    கண்டு கொள்ளாததால் வேறுவழியின்றி 
    வந்தவரிடமே சரணடைந்தார்.

    ஆனால் வந்தவர் சினத்துடன் இருந்தார்.
    சீற்றமுடன் ஏசினார்.

    (அமர் நீதி நாயனார் -தொடரும்)
     

  • Meiporul Nayanar PART2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

     

    ஒரு கணத்தில் 
    தத்தனின் கூர்வாள்
    முத்தநாதனின்
    முடிவைக் கண்டிருக்கும்.

    அதற்குள் 
    தேவ தேவருடைய திருத்தொண்டர் மெய்ப்பொருளார் 
    'தத்தா'
    என்று உரக்கக் கத்தி தத்தனைத் தடுத்தார் உயிர் நீங்கும் நிலையிலும்.

    "தத்தா…..!
    இவர் நம்மவர்.
    சிவயோகியாகத் தோன்றுகிறார்.

    எனவே நாம் 
    மதிக்க வேண்டும். ஒன்றும் செய்யாதே. இவருக்குத் தீங்கு நினையாதே."

    அரசன் இட்ட 
    கட்டளைக்கு அடிபணிந்தான்
    தத்தன்
    அரை மனதோடு.

    தன் கூர்வாளினை இடையில் 
    செருகிக் கொண்டான்.

    அரசகட்டளை 
    அடுத்து வந்தது.

    "தத்தா….
    நம் மக்கள் யாரும் 
    இவரைத் தாக்காது பாதுகாத்து 
    இடையூறின்றி 
    அழைத்துச் சென்று 
    இவர் விரும்பும் இடம் சேர்ப்பது உன் பொறுப்பு."

    தத்தனின்
    கோபப் பார்வையால் பயந்து 
    உறைந்து போயிருந்த 
    மூர்க்கன் முத்தநாதன் 
    மெய்ப்பொருள் நாயனார் தத்தனுக்கிட்ட உத்தரவால் பயம் நீங்கி 
    புறப்பட தயாரானான் தீரன் போல.

    இரத்தவெள்ளத்தில் 
    உறைந்து கொண்டிருந்த மெய்ப்பொருளாரை 
    தீர்த்து முடித்த 
    வஞ்சகப் பெருமையோடு
    தத்தனின் பாதுகாப்போடு
    அரண்மனை விட்டு வெளியே வந்தான்
    வஞ்சக நெஞ்சகத்தான்.

    அதற்குள் ஊருக்குள் செய்தி பரவவே வழியெங்கும் 
    எதிர் எதிராய் 
    மக்கள் திரண்டு 
    போலி 
    தவ வேடதாரியை ஒரேடியாகக் 
    காலி செய்ய முயன்றனர்.

    அரசன் தனக்கிட்ட கட்டளையை கொதித்தெழுந்த மக்களிடம் 
    எடுத்துச் சொல்லி 
    வழிவிடச் செய்து 
    நாட்டின் எல்லையில் 
    ஒரு கானகத்தில் கொலைஞனை 
    விட்டு விரைந்தான் 
    தத்தன் அரண்மனைக்கு.

    நல்லபடியாக 
    சிவனடியார் 
    ஊர் எல்லையைத் 
    தாண்டி விட்டாரா என்பதை அறியக் காத்திருந்தவர் போல் மூச்சைப் பிடித்துக்கொண்டு ஈனஸ்வரத்தில் 
    இருந்தார் ஈஸ்வரபக்தர்.

    'தவ வேடம் 
    பூண்டு வந்து வென்றவனை 
    நாட்டின் எல்லையில் விட்டு வந்தேன்' 
    எனத் தொடங்கி
    நடந்தது அனைத்தையும் கண்ணீர் மல்கச் சொன்னான் தத்தன்.

    "தத்தா….!
    இன்றைக்கு நீ எனக்கு செய்த உபகாரத்தை 
    வேறு யார் செய்யவல்லார்?"
    என்று புகழ்ந்துரைத்தார் 
    ஆவி பிரியும் நிலையில்
    இருந்த 
    அருந்தவ நாயனார்.

    அதற்குப்பின் 
    தனக்குப் பின்னர் 
    அரசாளப் போகிறவர்களையும் உறவினர்களையும் மந்திரிகளையும் 
    அருகே அழைத்தார்.

    "என் மக்களே….!

    நம் முன்னோர் 
    செய்து வந்த 
    சிவ சேவையைத் தொடர்வது
     உங்கள் கடமை.
    சிவனடியார் சேவை அதற்கு ஒப்பானது.

    எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் சிவனடியார்களை 
    மதிக்க வேண்டும்.
    வணங்க வேண்டும்.

    சிவனடியார்களின் அரிச்சுவட்டில் 
    நீங்களும் மக்களும் நடப்பீர்களாயின்
    சிவனடியார் திருக்கூட்டம் வெள்ளம் போல் பெருகும்.

    சிவனடியார்கள் 
    நன்றாக இருந்தால் 
    நாடும் மக்களும் செல்வமும் அமைதியும் பெற்று 
    சுபிட்சமாக இருப்பார்கள்."

    மெய்ப்பொருள் நாயனாரின் 
    கண்கள் நிலை 
    கொள்ள ஆரம்பித்தன. சொற்கள் வாயினின்று வெளிவர முடியாமல் துடித்தன.

    முயற்சித்து 
    கண்களை மூடி சிவபிரானின்
    தாமரைத் திருவடிகளைச் சிந்தையில் எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார் சிவநேசரான
    மெய்ப்பொருள் நாயனார்.

    என்னே அதிசயம் !

    தியானத்தில் அவர் கண்ட திரு உருவத்திலேயே பரமசிவன் காட்சி அளித்தார் 
    அவர் கண்முன்னே.

    "பரந்த பேரன்பு கொண்டவனே …!

    மறுத்தல் இல்லா 
    பக்தி கொண்டவனே!

    'உம் நாயகன்' என போலியான முத்தநாதன் 
    தன்னையும் அறியாமல் உரைத்தும் 
    சிவனடியார் 
    மேலுள்ள காதலால்
    உண்மை உணராது 
    உணர விரும்பாது 
    என் பாதம் நினைத்தவனே!

    நீ தான் 
    தேவர்களும் 
    அணுக முடியாத 
    உயர்ந்த சிவபுரம் ஆகிய பேரின்பப் பெரு வீட்டை அடையத் தகுதியுள்ளவன்.

    நீ என்னிடம் வந்து 
    நீ விரும்பும்
    என் பாதத்தை 
    மெய்யன்பால் அலங்கரிப்பாயாக !"

    பரமேஸ்வரன் மறைந்தார் நிறைந்த திருப்தியுடன்.
    மனம் நிறைந்த பக்தனை மக்கள் மனதில் 
    இடம் பெறச் செய்த பெருமிதத்துடன்.

    'இறைவன் ஒருவனே மெய்ப்பொருள்'
    என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய மெய்ப்பொருள் நாயனார் காட்சி தந்த சர்வேஸ்வரன் 
    மறைந்த அக்கணமே மண்ணுலகை விட்டு 
    விண்ணுலகை அடைந்தார்.

    கார்த்திகை மாதம் 
    உத்திர நட்சத்திரத்தில் உதித்த 
    மெய்ப்பொருள் நாயனாரின் 
    அவதார தலமும் முக்தித்தலமும் திருக்கோவலூரே.

    'வெல்லுமா மிக்கவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்' என்று
    மெய்ப்பொருள் நாயனாருக்கு
    மெய்ப் புகழ் பாடுகிறார்
    திருத்தொண்டத்
    தொகையில்
    திருவருள் மிக்க 
    சுந்தரர் பெருமான்.

    (மெய்ப்பொருள் நாயனார் புராணம் – முடிவுற்றது.)