Tag: Navarathiri

  • Navarathiri Anmeega arasiyal pinnani

    சிவனை வழிபடக்கூடியது சிவராத்திரி என்றும், அம்பாளை வழிபடுவதற்கு நவராத்திரி என நம் இந்து மதத்தில் ஒரு விழாவாக கடைப்பிடித்து வருகின்றோம்.

    சர்வம் சக்தி மயம் என கூறுவது வழக்கம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா.

    நவராத்திரி  பண்டிகை மைசூருவில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல தமிழத்தில் தூத்துக்குடியில் அமைந்துள்ள குலசேகரப்பட்டியில் இருக்கும் முத்தாரம்மன் கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. 

    அம்பாள் மகிசாசூரனை வதம் செய்வதற்காக இந்த ஒன்பது நாட்கள் தவம் நோற்ற காலம் தான் இந்த நவராத்திரி. முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி.

    நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தானியங்களால் நெய்வேத்யம் செய்து அம்பாளுக்குப் படைத்து, அதை அருகில் உள்ளவர்களுக்கு கொடுப்பது வழக்கம்.

    புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என முன்னோர்கள் கூறுவது வழக்கம். வெயில் காலம், காற்று காலம், மழைக் காலம் என இருக்கும் நிலையில், இந்த புரட்டாசி மாதத்தில் மழையால் ஏற்பட்ட குளிர்ச்சியால், பூமி இத்தனை நாட்களாக உட்கிரகித்திருந்த வெப்பத்தை வெளியிடும் காலம். இதனால் நம் உடலுக்கு உஷ்ணம் அதிகமாகும். இந்த காலத்தில் அசைவம் சாப்பிட்டால் மேலும் உஷ்ணம் அதிகரித்து வியாதிகளை ஏற்படுத்தும்.

    நாம் இந்த காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது, பிரசாதமாக வழங்கப்படும் தானியங்களால் ஆன பிரசாதம் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கொடுத்து, உடலை வலுப்படுத்தவல்லது.

    இதனால் நவராத்திரி விழாவை நாம் வெறும் ஆன்மிக ரீதியாகப் பார்க்காமல், அதை அறிவியல் ரீதியாகவும் பார்த்து அதன் பாரம்பரியத்தைக் காத்து, நம் தலைமுறையை பாரம்பரியத்தோடு வளர்ப்பது நம் கடமை.

  • Navarathiri kollu vaikka Nalla neram

    பொதுவாக நவராத்திரி கொண்டாட்டம் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமான மகாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடுவது வழக்கம்.

    ஆனால் இந்த முறை 2020 புரட்டாசி மாதத்தில் 1ம் தேதியும், புரட்டாசி 30ம் தேதியும் அமாவாசை வந்துள்ளது. அதனால் முதல் அமாவாசையை தவிர்த்து, 30ம் தேதியில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து அதாவது ஐப்பசி 1 (அக்டோபர் 17) தேதியிலிருந்து இந்த பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

    இது போன்று விதிக்குமாறாக சில ஆண்டுகளில் நவராத்திரி கொண்டாட்டம் மாற்றத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2001 மற்றும அதற்கு முன் 1982ம் ஆண்டு இதே போல் புரட்டாசி மாதம் அமாவாசையில் கடைப்பிடிக்கக் கூடிய மகாளய அமாவாசை அடுத்து நவராத்திரி கொண்டாடாமல் ஒரு மாதம் கழித்து கடைப்பிடிக்கப்பட்டது.

    நவராத்திரி ஆரம்பம் காலை 7.31 – 9.00 மணிக்குள் கொலு வைக்க மிக நல்ல நேரம்.

    அக்டோபர்  25 (ஞாயிற்றுகிழமை) சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட (நல்லநேரம் காலை 7.31 – 9.00 மணி)

    அக்டோபர், 26 (திங்கட்கிழமை) விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 – 7.30 மணி)
     

  • Navarathiri kollu

    புதிதாக கொலு வைப்பவர்களா நீங்கள்? எந்த படியில் எந்த பொம்மை வைக்க வேண்டும் என்று தெரியுமா? இத கொஞ்சம் படிங்க

    முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், செடி, கொடிகளையும், 2 ஆம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளையும், 3 ஆம் படியில் மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகளையும் அடுக்க வேண்டும்.

    4ஆம் படியில் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், 5ஆம் படியில் விலங்குகள், பறவைகளின் பொம்மைகளையும், 6ஆம் படியில் மனிதர்களின் உருவ பொம்மைகளையும் வைக்கலாம்.

    7ஆம் படியில் சித்தர்கள், ரிஷிகளின் பொம்மைகளையும், 8ஆம் படியில் தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் பொம்மைகளையும் அடுக்கலாம். 9 ஆம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பொம்மைகளை வைக்கலாம். அதன் நடுவில் ஆதிபராசக்தியை கொலுவின் அதிபதியாக வைத்து வழிபட வேண்டும்.

  • Navarathiri Saraswathi Devi Pugazh

    வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
    வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
    கொள்ளை யின்பம் குலவு கவிதை
    கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
    உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
    ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
    கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
    கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.

    மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
    மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
    கீதம் பாடும் குயிலின் குரலைக்
    கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
    கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
    குலவு சித்திரம் கோபுரம் கோயில்
    ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
    இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
     

  • Navarathiri Poojai Muraigal

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    இந்நாளில் மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம் இதோ ……
    ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ.
     

  • Thirumanam Kaikooda Navarathiri

    நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

    நவராத்திரி 5-ம் நாள் லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

    நம்மூரில் முளைப்பாரி வைப்பது போல மராட்டி யத்தில் நவராத்திரி முதல் நாளன்று நவதானி யங்களை மண் கலசங்கில் வளர்ப்பார்கள். விஜயத சமியன்று அவற்றை ஊர் வலமாக எடுத்து சென்று ஆறுகளில் கரைத்து விடுவார்கள்.

    உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரி 9 நாட்களும் சேலை கட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

    நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படு கிறார்.

    கும்பகோணம் அருகில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை எனப்படும் அஷ்ட புக துர்க்கா தேவி அருள்புரிகிறாள். 8 கரங்களுடன் உள்ள இந்த துர்க்கையின் ஒரு கையில் கிளி இருப்பது தனிச் சிறப்பாகும்.

    நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

    சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

    ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

    ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்திலிருந்து நாகங்களை மானசாதேவி காப்பாற்றியதால் அவள் நாகேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவள் குருவான ஈஸ்வரரிடமிருந்து சித்தயோகத்தை கற்றதால் சித்தயோகினி என்ற நாமத்தைப் பெற்றாள். இவளது கணவர் ஜரத்காரு. நவராத்திரி காலத்தில் இவள் கதை பகுதியைச் சொல்லி அர்ச்சிப்பதால் ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்குகிறது.

    கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

    தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    எல்லாவற்றிற்கும் மேலானது சண்டிஹோமம். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிய வடிவம். முப்பெரும் தேவியரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதே இந்த ஹோமத்தின் சிறப்பு. விஜயதசமி நாளில் இதைச் செய்வதால் மிக நல்ல பலன்கள் பெறலாம்.
     

  • Navarathiri Important things

    துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிஎன்ற முப்பெரும் சக்தி  ஒன்றிணைந்து மகிஷாசுரமர்த்தினியாக  உருவெடுத்து மகிஷனை அழித்ததே சாரதா நவராத்திரி.

    நவராத்திரி 9 நாட்களும் அன்னையை பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி அதாவது 7, 8,9வது  நாட்களில் வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் 8-வது நாளான  அஷ்டமி அன்றாவது  நிச்சயம் தேவியை ஆராதிக்க வேண்டும்.

     நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை அம்பிகையாகவே நினைத்து கவுரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச் சிமிழ், தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து மரியாதை செய்யலாம்.

    நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பதும் ,தினமும் 9 பெண்களுக்கு நலங்கு வைத்து மஞ்சளிட்டு அன்னதானம் கொடுப்பதும் தேவியை மகிழ்விக்கும்.

    நவராத்திரி முதல் நாளன்று ஒருவர், 2-வது நாள் ரெண்டு பேர் என்று அதிகரித்து 9-வது நாள் 9 பேரை பூஜிப்பது நல்லது.

    மைசூரில் நவராத்திரியுடன் சேர்த்து  10-வது நாளான விஜயதசமியையும் சேர்த்து கொண்டாடுகிறார்கள். 10-வது நாள் தசமி என்பதால் அன்றைய தினம் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக தசரா என்று அழைக்கப்படுகிறது.

     மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்க்கா பூஜை, காளி பூஜை என்றும்ம,மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

     உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விஜயதசமி தினத்தன்று ராவணனை ராமபிரான் அழித்ததை நினைவு கூறும் வகையில், "ராம்லீலா'' கொண்டாடுகிறார்கள்.

     நவராத்திரி நாட்களில் தேவி மகாத்மியம் தேவி பாகவதம் படிப்பதும், கேட்பதும் நமது பாவங்களை விரட்டும்.

     நவராத்திரி கடைசி நாளன்று துர்க்கை இமயமலைக்கு திரும்பிச் செல்வதாக ஐதீகம்.அதனால், வட மாநிலங்களில் துர்க்கை சிலைகளை கங்கையில் போடும் வழக்கம் உள்ளது.

    ஒரு காலத்தில் ,நவராத்திரி பூஜையின் போது எருமை மாடுகளைப் பலி கொடுக்கும் வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது.

     சங்கீதப் பிரியையான அம்பிகையை மகிழ்விக்க ,நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாடினால் நலம்.

    இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் கோவில் உள்ளது. ஒன்று தமிழ்நாட்டில் உள்ள கூத்தனூர், மற்றொன்று ஆந்திராவில் பாசர் என்னும் கிராமத்தில் உள்ளது.

    தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல ஜப்பானிலும் பொம்மை கொலுவில், நம்மூர் சரஸ்வதி போல பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி வைத்திருப்பது போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

     "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ-மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன்,பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

    சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் நவராத்திரி விழா ஒரு வீர விழாவாகக் கொண்டாடப்பட்டதாக அறிகிறோம்.மேலும் அக்பர் காலத்தில் தான்  தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறியது.

    காளி வழிபாடு  மேற்கு வங்க மக்கள் மத்தியில் மிகவும் முக்கியம் அம்மாநில மக்கள் சக்தி உபாசகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    குஜராத்தில் நவராத்திரியின்  9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து ஆடும் கார்பா நடனம் சிறப்பு வாய்ந்தது.

    நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால், அம்பாள் மனமகிழ்ந்து நம் இல்லம் தேடி வருவாள்.
     

  • Navarathiri Special

    பல வீடுகளில் கொலு வைப்பது பரம்பரை பரம்பரையாக வருகிற பழக்கம். பெண்கள், கலைத்திறமையையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தப் பயன்படுகிற களம்… அதுமட்டுமல்ல விருந்தோம்பல் என்கிற உன்னதப் பண்புக்கு விளக்கம் தருகிற நிகழ்வு…

    கொலு என்பது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் பண்டிகை. அதனால் ஒரு தெய்வத்துக்கு 3 நாட்கள் என்று கணக்கு வைத்துக் கொண்டாடுகிறோம். இதனை நம் விருப்பத்திற்கேற்ப, நம் வசதிக்கேற்ப செய்யலாம்.

    ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கொஞ்சம் பொம்மைகளை வாங்கி வைத்து கொலுவை அழகுபடுத்துங்கள். 9 படிகள்தான் கொலு வைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் படிகளில் கொலு அமைத்துக் கொள்ளலாம்.

    புதிதாக கொலு வைப்பவர்கள், ஒட்டு மொத்தமாக எல்லா பொம்மைகளையும் வாங்காமல் ஒவ்வொரு வருடமும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம். முதல்கட்டமாக விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, தசாவதார பொம்மைகளை வைத்து கொலு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து படிப்படியாக மற்ற பொம்மைகளை வாங்கலாம்.

    கொலுவில் பூங்கா அமைக்க சிலர் விரும்புவார்கள். அப்படி அமைப்பவர்கள், ஒரு வாரத்துக்கு முன்னதாக சிறு பாத்திரத்தில் மணல் பரப்பி வெந்தயம், கடுகு, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்து, வளரச் செய்து கொலுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பழைய பொம்மைகளின் வண்ணப்பூச்சு மங்கி இருந்தால், அவற்றுக்கு நீங்கள் விரும்பும் வண்ணம் பூசி, புதிது போலவே மாற்றலாம்.

    அதேபோல கொலு வைக்கும் வீடுகளில், சிலர் சுமங்கலிகளுக்கு மட்டும் தாம்பூலப்பை கொடுப்பார்கள். வீட்டுக்கு வந்து போகும் எல்லோருக்கும் தாம்பூலப்பை கொடுக்கலாம். அது உங்கள் மீது மற்றவர்களுக்கு இருக்கும் மதிப்பை உயர்த்திக் காட்டும். குழந்தைகளைக் கவரும் வகையில் அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளையோ, புத்தகங்களையோ பரிசாக கொடுக்கலாம்.
     

  • Meenatchi Amman Koil Navarathiri

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 29 ஆம் தேதி நவராத்திரி திருவிழா தொடங்குவதை அடுத்து கொலு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

    திருவிழா நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் கொலுச்சாவடிக்காக தனித்தனியாக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மொத்தம் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் சுந்தரேசுவரரின் திருவிளையாடலை விளக்கும் கொலு பொம்மைகள் மற்றும் சிவன் மற்றும் சக்தியின் அம்சங்கள் குறித்த பொம்மைகள் வைக்கப்பட உள்ளன. அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவர் மீனாட்சி அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். 

  • Palani Murugan Koil Navarathiri Vizha

     பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா செப்டம்பர் 29-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

    பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 29 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. கோயில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறும். 

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதேபோல் மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். 

    நவராத்திரி விழாவின் 10-நாளான அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    பின்னர் மாலையில் 3 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கிருந்து முத்துக்குமார சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு மேல் வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நவராத்திரி விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு பொம்மைகளை கொண்டு கொலு வைக்கப்படுகிறது. அதோடு விழாவையொட்டி தினமும் பக்தி கச்சேரி, சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.