Tag: Murugan koil

  • Thirumurugan poondi murugan koil

    பெரும்பாலான கோவில்களில், முருக பெருமான் சிலை, முன்புறம் மூன்று முகங்களும், பின்னால் மூன்று முகங்களுடனும் அமைந்திருக்கும். ஆனால் ஆறாவது முகம் மட்டும் பின்னால் இருக்கும் சிறப்பு வாய்ந்த முருகன் கோயில் ஒன்று இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருக்கும் திருமுருகன் பூண்டி முருகன் கோயில் தான் அந்த கோயில். 

    நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார கோயில்கள் உள்ளன. அதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன் பூண்டியும் ஒன்று. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது திருமுருகன் பூண்டி. சிறப்பு வாய்ந்த முருகன் கோவில் இது. 

    இக்கோவிலில் மட்டும், முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்கள் அமைந்துள்ளன. ஆறாவது முகம், பின்னால் அமைந்துள்ளது. அந்த முகம், “அதோ முகம் என அழைக்கப்படுகிறது. இம்முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்க முடியும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் தெற்கு நோக்கி சுவாமி அமர்ந்திருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    மேலும், திருச்செந்தூரில், வதம் செய்துவிட்டு, செந்தில் வேலவன் திருமுருகன்பூண்டிக்கு வந்து விட்டதால், திருச்செந்தூர் கோவில் மூல ஸ்தானத்துக்கான மூலவர், இங்கு அமைந்துள்ளதாகவும் வரலாறு உள்ளது.

    வள்ளி, தெய்வானையுடன் ஒரே சன்னதியில் அமைந்துள்ளதும், முருகன் பிடித்த லிங்கமும் சுப்ரமணியர் கருவறையில் உள்ளது.

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், இக்கோவிலுக்கு வந்து, தீர்த்தங்களில் தினமும் குளித்து, 48 மண்டலங்கள் வழிபட்டு, அதோ முகத்தை பார்த்தால் போதும் மனநிலை சரியாகி விடும் என்பது நம்பிக்கை. மருந்து தேவையில்லை சுவாமி தரிசனமும், பிரசாதமும் மட்டுமே மருந்து என நம்பப்படுகிறது.
     

  • Solai Malai Murugan Koil Kandha sasti vizha

    அழகர்மலை உச்சியில் முருகபெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 28ம் தேதி துவங்குகிறது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் போது நாவல்பழம் பழுக்கும் ஸ்தலவிருட்சமான நாவல் மரம் முன்பாக சூரசம்ஹாரம் நடைபெற்று வருகிறது. 

    வரும் 28 ஆம் தேதி தொடங்கும் கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை, உற்சவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. 

    29ம் தேதி வழக்கமான பூஜை, காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 

    30ம் தேதி காலை யானை வாகனத்திலும், 

    31ம் தேதி ஆட்டு கிடாய் வாகனத்திலும்,  

    நவ.1ம் தேதி சப்பர வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 

    2ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெறும். 5.30 மணிக்கு முருகபெருமான் கஜமுகசூரனையும், சிங்கமுக சூரனையும் சம்ஹாரம் செய்து, ஸ்தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாந்த அபிஷேகம் நடைபெறுகிறது. 3ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. 
     

  • Palani Murugan Koil Navarathiri Vizha

     பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா செப்டம்பர் 29-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது.

    பழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா செப்டம்பர் 29 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. கோயில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறும். 

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதேபோல் மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். 

    நவராத்திரி விழாவின் 10-நாளான அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    பின்னர் மாலையில் 3 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கிருந்து முத்துக்குமார சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அங்கு மாலை 6 மணிக்கு மேல் வில்அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நவராத்திரி விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு பொம்மைகளை கொண்டு கொலு வைக்கப்படுகிறது. அதோடு விழாவையொட்டி தினமும் பக்தி கச்சேரி, சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 
     

  • Thiruchendur Murugan Koil Vaigasi thiruvizha

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இருப்பது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி வைகாசி திருவிழா தொடங்குகிறது.

    மே 17 –  அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 
    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 
    5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 
    10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 
    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 
    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடைபெற உள்ளது.

    மே 18 – அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறப்பு, 
    1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 
    2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 
    10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், 
    சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், 
    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை.
    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    மே 19 – அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 
    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 
    5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 
    காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 
    மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 
    இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் 

    திருவிழாவை கான லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. 

  • Vadapalani murugan koil Tamil Archanai

    தமிழ் புத்தாண்டு முதல் வடபழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் காலை கோவில் நடை திறந்ததும், காலை 6.30 மணிக்கு நடக்கும் கால சந்தி பூஜை தமிழில் செய்யப்படும் என்று வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,500 க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் பெரும்பாலான கோவில்களில் சமஸ்கிருதத்தில் தான் இன்னும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில், சிவன் கோவில் என ஒரு சில கோயில்களில் மட்டும் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.  

    இந்தநிலையில் தற்போது தமிழ் புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடங்கப்பட்டு உள்ளது. தினமும் காலை கோவில் நடை திறந்ததும், காலை 6.30 மணிக்கு நடக்கும் கால சந்தி பூஜை தமிழில் செய்யப்படும்.

  • Pazhani Murugan Koil Therottam

    பழநி கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு மணிக்கு மீன லக்னத்தில் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. 

    கொடியேற்றத்தையொட்டி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேதரரான முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் போன்ற வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வளர்பிறை நிலவு, சூரியன், சேவல், மயில், வேல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் உட்பிரகாரத்தில் கொடி சுற்றி வரப்பட்டது. 

    இதனைத்தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றப்பட்டது.  திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராய் முத்துக்குமாரசுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக்காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 20ம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. தைப்பூச தேரோட்டம் 21ம் தேதி நடக்க உள்ளது. தைப்பூச திருவிழா காரணமாக 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. 24ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது.

  • Thoranamalai Murugan Koil Thai Poosam

    நெல்லை மாவட்டம் கடையத்திற்கு அருகே தென்றல் தவழும் தென் பொதிகை மலைத்தொடரில் வீற்றிருக்கும் தோரணமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா வரும் 21-ந் தேதி நடக்க உள்ளது. தோரணம் போல் மலை அமைந்த காரணத்தால் தோரணமலையாக ஸ்தலம் விளங்குகிறது. அகத்தியர் மாமுனிவர் அமர்ந்து தமிழ் வளர்த்த மலை இது. இம்மலையில் 64 சுனைகள் உள்ளன. இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.

    926 படிகளை ஏறி, மலை உச்சியை அடைந்தால், முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இந்த தலத்தில் முருகன் கிழக்கு நோக்கி திருச்செந்தூர் முருகனை பணித்தபடி உள்ளார். எனவே இத்தலத்தில் குன்றுக்குள் இருக்கும் முருகனை வழிபட்டால் திருச்செந்தூரில் வழிபட்ட அதே பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கடையத்தில் சிறிது காலம் வாழ்ந்த மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பாடியதும் இந்த தோரணமலை முருகனைத்தான்.

     இத்தகைய சிறப்புக்குரிய தோரணமலை முருகன் கோவில் தைப்பூச விழா வரும் 21-ந் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத தோரணமலை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் ஆசியுரை வழங்குகிறார்.

    அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், விவசாயம் தழைக்க அகத்திய பூஜை, மதியம் 2 மணிக்கு ஊட்டி படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனம், இரவு 7 மணிக்கு வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு தோரணமலையானின் ஆவணப்படம், பட்டிமன்றம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன், கே.ஏ.செண்பகராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • Sennimalai Murugan koil Thai Poosam

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச தேர்த் திருவிழா 12 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா ஜனவரி 13 ஆம் தேதி காலை 7 மணிக்குமேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 8 மணி, 14 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    15 ஆம் தேதி இரவு 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியும், 16 ஆம் தேதி காலை, பகல், இரவு மண்டபக் கட்டளை நிகழ்ச்சியும், 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி மயில் வாகனக் காட்சியும், 18 ஆம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனக் காட்சியும், 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக் காட்சியும், இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக் காட்சியும் நடைபெறுகிறது. 

    20 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி 21 ஆம் தேதி  நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கைலாசநாதர் கோயிலில் வள்ளி – தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 

    தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதரிசனம் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்று காலை 9 முதல் கைலாசநாதர் கோயிலில், வள்ளி-தெய்வானை சமேத முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறும். அப்போது, நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் திருவீதி உலா காட்சி நடைபெறும். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். 26 ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகிறது.