Blog

  • ஆடியில் சதுரகிரி மலைக்கு செல்ல உகந்த நாட்கள்

    ஆடி அமாவசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்கு செல்ல வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சதுரகிரி மலையில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், நவராத்திரி, மகாசிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெறும். இதில் ஆடி அமாவாசை பிரசித்த பெற்ற திருவிழாவாகும். ஆடி அமாவாசை தினத்தன்று தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வர்.

    சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சயாட்சை பூஜை, இரவு 7 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

    இதனை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை சதுரகிரி மலைக்கு சென்றுவர பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையொட்டி சதுரகிரி அடிவார பகுதியான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பாதுகாப்பு பணியில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும், மதுரை மாவட்ட போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வனத்துறை, தீயணைப்புத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

  • வேதகிரீஸ்வரர் கோயில் லட்சதீப விழா

    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் லட்ச தீப சங்குதீர்த்த புஷ்கரமேளா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 12 ஆண்டு களுக்கு ஒருமுறை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் லட்ச தீபம், சங்கு தீர்த்த புஷ்கர மேளா திருவிழா நடைபெறும்.

    வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றி பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம், தாற்காலிக கழிப்பறை, ஆங்காங்கே குப்பைகளை சேகரிக்க குப்பைத் தொட்டிகள் போன்றவை அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    குளத்தைச் சுற்றி 5 இடங்களில் பெண்களுக்கு உடை மாற்றும் அறை அமைக்கவும், குளம், கோயிலுக்கு செல்லும் பாதை, கிரிவலப் பாதைகளில் ஏற்கெனவே உள்ள தெருவிளக்குகளுடன், எல்இடி பல்புகளை அதிக அளவு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • ஆடி வெள்ளி… அம்மன் கோயில்களில் திருவிழாக்கோலம்…

    ஆடி மாதம் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. பெண் தெய்வங்களின் போற்றுதலுக்குரிய மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இந்த ஆடி மாதத்தில் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடி மாதம், வளர்பிறை, துவாதசி தொடங்கி, கார்த்திகை மாத வளர்பிறை, துவாதசி வரை துளசி அம்மனை வழிபட நீண்ட ஆயுளும், ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். ஆடி வெள்ளியில் வரும் வரலட்சுமி விரதம் சிறப்பான மகாலட்சுமி பூஜையாகும். வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று, பூஜை செய்து உபசரித்தால் மகாலட்மியின் அருட்கடாட்சம் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அதேபோல ஆடி செவ்வாயன்று தலை குளித்து அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இதுதவிர ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இப்படி அனைத்து விசேஷங்களையும் கொண்ட ஆடி மாதத்தில் முதல் வெள்ளி கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலை முதலே பக்தர்களில் கூட்டம் அலைமோதுகிறது.

  • திருத்தணி ஆடிக்கிருத்திகை விழா ஏற்பாடுகள் தீவிரம்….

    திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா, வரும், 26ல் துவங்கி, 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

    அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் வரும் 26-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு ஆடிக்கிருத்திகை, தெப்பல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காவடிகளுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்வர். விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். லட்ச கணக்கான பக்தர்கள் கூடும், இத்திருவிழாவில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரும் வகையில், நகரின் முக்கியப் பகுதிகளிலும், கோயிலைச் சுற்றியும் தாற்காலிக பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதி, நடமாடும் மருத்துவக் குழுக்கள், தடையில்லா மின்சாரம் வழங்குதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    மேலும், சரவணப்பொய்கை குளத்தில் 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் விழாவில் அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் அதிக அளவில் அமருவதால் ஏற்படும் இடையூறைக் கட்டுப்படுத்த, இந்த ஆண்டு முதல் இசைக் கலைஞர்கள், கோயில் குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் யாரும் தெப்பலில் ஏற அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வரும் 28-ஆம் தேதி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியமில்லை….

    பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அவசியம் இல்லை என திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையானை கோயிலில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய இதுவரை எந்த அடையாள அட்டையும் சமர்பிக்க தேவியில்லை. ஆனால், இனி அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் அட்டை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள்  தங்களது ஆதார் அட்டையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். எல்லா பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், பக்தர்கள் ஒருமுறைக்கு மேல் அங்கப்பிரதட்சணம் செய்வதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

    இந்த நிலையில் தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அங்கப்பிரதட்சணத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்ற முடிவை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தானம், ஆதார் அட்டை நடைமுறையில் சில விதியை தளர்த்தி உள்ளது. 

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “ஏழுமலையான் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை. முதலில் வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து தினமும் 750 பேருக்கு அங்கப்பிரதட்சண அனுமதிசீட்டு வழங்கப்படும். அடையாள அட்டையாக ஆதார் அட்டையை காண்பிக்கலாம். ஆனால், அங்கப்பிரதட்சண அனுமதி சீட்டு பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை” என்று கூறியுள்ளார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கியம் நிறைந்த மற்றும் குறிப்பிட்ட சேவைகளுக்காக குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதில், ஆன்லைன் டிக்கெட்டுகள் போக மீதமுள்ள டிக்கெட்டுகள் திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. வேண்டுதலின்பேரில் வழங்கப்படும் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகள் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு முந்தைய நாள் மதியம் 1. 30 மணிவரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டிக்கெட் பெற்ற பக்தர்கள் மறுநாள் அதிகாலை 1. 30 மணியளவில் வைகுண்டம் வழியாக சென்று 3. 30 மணியளவில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கப்படும். 

  • மீனம்

    புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசி அனபர்களே உங்களுக்கு திடீரென்று கோபம் வரும். கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் தனமை உங்களிடம் நிறைந்து இருக்கும். உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.

     உங்களின் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உங்கள் சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். உற்றார், உறவினர்கள் நண்பர்களிடம் சுமுகமான உறவு தொடரும்.

     உடல் உபாதைகள் நீங்கும்.  எதிர்பாராத புதிய பொறுப்புகள் தேடி வரும். இதனால் கூடுதல் வருமானமும் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் நேர்மையான நடத்தையை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் விவாதத் திறமை அதிகரிக்கும். முக்கியமான விவாதங்களில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்தி, வகைப்படுத்தி செய்து காரியமாற்றுவீர்கள். விருப்பு, வெறுப்பின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் சாதனை புரிவீர்கள்.

     புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். நீங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் நீதி மன்றத்திற்கு வெளியில் சமாதானமாக முடியும். உங்கள் மீது அபாண்டபழி சுமத்தியவர்கள் தவறுகளை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார்கள். தெய்வ பலத்தால் செயற்கரிய சாதனைகளைச் செய்வீர்கள். குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

     உடல் ஆரோக்யம் சிறப்பாக இருப்பதால் வெளியூறுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இந்தக் காலகட்டத்தில் கிடைக்கும்.

     புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். இல்லத்தில் களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு உங்களுக்கு உந்துசக்தியாக அமையும்.

     உங்கள் செயல்கள் இடையூறுகளின்றி சுலபமாக நிறைவேறும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உறுதியின்றி செய்த செயல்களில் ஒரு நிரந்தரப் பிடிப்பு ஏற்பட்டு மளமளவென்று நடக்கத் தொடங்கும். சில அனாவசியச் செயல்களுக்கு கைப்பொருள்களை இழந்த நிலை மாறும். மற்றபடி சகோதர, சகோதரிகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். அவர்களுக்கு உதவி செய்ய நினைத்து சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். என்றாலும் அந்தப் பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும்.

     உத்யோகஸ்தர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மதிப்பு மரியாதை உயரும்.

     வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். காலதாமதம் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் வெற்றி பெறும். ஆனால் நண்பர்கள், கூட்டாளிகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. ஆகையால் புதிய முதலீடுகளைத் தள்ளிப்போடவும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

     அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சிறிது குறைபாடுகள் உண்டாகும். ஆகவே கவனமுடன் செயல்படவும். தொண்டர்களின் பாராமுகத்தால் கோபமடையாமல் கடமைகளைச் செய்து வரவும். பேச்சில் கண்ணியம் குறையாது கவனமாக இருக்கவும்.

     கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதேசமயம் எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். போகப் போக உங்களுக்கு சாதகமற்ற நிலைமைகள் மாறிவிடும்.

     பெண்மணிகளுக்கு புத்தாடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பண வரவுக்கு எந்தக் குறைவும் இருக்காது. பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

     மாணவமணிகள் முனைப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் பதற்றப்படாமல் ஈடுபடவும். அதேசமயம் உங்கள் முயற்சிகளுக்கு ஆசிரியர்களிடம் நல்ல பாராட்டு கிடைக்கும்.

     பூரட்டாதி:

    இந்த குருப் பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும். 

     உத்திரட்டாதி:

    இந்த குருப் பெயர்ச்சியால் கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும்.  பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

     ரேவதி:

    இந்த குருப் பெயர்ச்சியால் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும்.

     பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும். வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம்.

    அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

    அதிர்ஷ்ட எண்: 4, 6

  • கும்பம்

    தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடைய கும்ப ராசி அன்பர்களே அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் உங்களுக்கு  சாதகமான போக்கு காணப்படும். கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் திற்மை உங்களிடம் நிறைந்து இருக்கும். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக  நிறைவேற்றுவீர்கள்.

     

    உங்களின் ஸப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு நற்பெயர் வாங்குவீர்கள். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க உதவிகளைச் செய்து அவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக்கொள்வீர்கள்.

     

    சமூகநோக்குடன் உங்களின் காரியங்களைச் செய்வீர்கள். நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும். செய்தொழில் நன்றாக நடப்பதால் புதிய கடன்கள் வாங்க நேரிடாது.

     

    சிலருக்கு வேறு இடங்களுக்கு சென்று வசிக்கும் நிலைமை உண்டாகும். பிறரின் பொறாமைகளுக்கும், போட்டிக்கும் ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் தொடுத்திருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் ஏற்படாது.

     

    மற்றபடி வெகுதூரத்திலிருந்து நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். மேலும் அவசியமான விஷயங்களுக்காக திடீரென்று அவசரப் பயணங்களைச் செய்ய நேரிடும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

     

    உற்றார் உறவினர்களிடையே உங்களின் செல்வாக்கு உயரும். உங்களின் பேச்சில் பொறுமையும் நிதானமும் இருக்கும். நினைத்த எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும். கடினமான விஷயங்களிலும் தோலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவீர்கள். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள்.

     

    உற்றார், உறவினர்கள் உங்கள் பேச்சுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். குறைந்த அளவுக்கு முதலீடு செய்து விருப்பமான வாகனங்களை வாங்குவீர்கள்.

     

    பெற்றோர் வழியில் ஏற்பட்ட மனத்தாங்கல்கள் நீங்கும். உங்களின் நேர்மையான போக்கை அனைவரும் பாராட்டுவார்கள். உங்களின் சூட்சும அறிவு வேலை செய்யத் தொடங்கும். எதிர்பாராத வகையில் சௌபாக்கியங்கள் தேடி வரும். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். நெடுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த உங்கள் விண்ணப்பம் அரசாங்கத்தால் சாதகமாக பரிசீலிக்கப்படும். இதனால்  சலுகைகள் கிடைக்கும். மனதிற்கினிய பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

     

    உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை திட்டமிட்டு முன்கூட்டியே செய்யவும். சில நேரங்களில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். அதேசமயம் பணவரவுக்குத் தடைகள் வராது. எதிர்பார்த்த ஊதிய உயர்வு சரியான நேரத்தில் வந்து சேரும். ஆனாலும் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

     

    வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நன்றாகவே நடக்கும். கடன்களைப் பெற்று கடையைச் சீரமைப்பீர்கள். புதிய சந்தைகளில் உங்கள் பொருட்கள் விற்பனையாகும்.

     

    அரசியல்வாதிகள் வெற்றிகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். ஆகவே உங்கள் திட்டங்களைப் பொறுமையாக செயல்படுத்தவும். அதேநேரத்தில் தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். சில சமயங்களில்  உங்கள் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். எனவே யாரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம்.

     

    கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.  சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவீர்கள்.

     

    பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். அதேசமயம் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சூடான வார்த்தைகளைப் பேச வேண்டாம்.

     

    மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்யத்தை வளர்த்துக்கொள்வீர்கள். அதேநேரம் பெற்றோரின் ஆதரவு குறையும்.

     

    அவிட்டம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் கை கூடும்.  உங்கள் வாக்கு வன்மையால் காரியம் கைகூடும். ஆன்மீக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாக திறமை வெளிப்படும்.

     

     

     

     

    சதையம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற  சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். மனோதைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியம் வெற்றிபெறும்.

     

     

    பூரட்டாதி:

    இந்த குருப் பெயர்ச்சியால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.

     

     

    பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.  தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.  சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

    அதிர்ஷ்ட எண்: 9, 3

  • மகரம்

    அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் தீர்க்கமான எண்ணமுடைய மகர ராசியினரே நீங்கள் எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின்  மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.

     

     

    குரு பகவான் உங்களின் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பொதுவாக குரு பகவான் பாக்கிய ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம்  இந்த குருப் பெயர்ச்சியால் உங்களின் செய்தொழிலில் நல்ல  முன்னேற்றம் ஏற்படும். செல்வ வளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வீர்கள்.

     

    பெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும்.

     

    உங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரினை உண்டாகி உங்களுக்கு உரிய பங்கு கிடைத்துவிடும். அதோடு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி புகழடையும் காலகட்டம் இதுவென்றால் மிகையில்லை.

     

    நண்பர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை நண்பர்கள் மறந்து விடுவார்கள். அதேநேரம் சில அனாவசிய செலவுகளையும் செய்ய நேரிடும். குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றை பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள்.

     

    குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழிலில் மாற்றம் செய்ய  நினைக்கும்போது முன் கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாவீர்கள். எனவே கவனம் தேவை.

     

    நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை நடுநிலையோடு இருந்து தீர்ப்பீர்கள். அதோடு தீயோரின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற சூழ்நிலைகளையும் தவிர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம்.

     

    உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.

     

    வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிவரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும்.

     

    அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

     

    கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள்.

     

    பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள்.

     

    மாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை.

     

    உத்திராடம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.

     

    திருவோணம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.

     

    அவிட்டம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் தடங்கல் இன்றி எல்லா காரியத்தையும் முடிப்பீர்கள். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலம் எதிர்பார்த்த வெற்றி தாமதமாக கிடைக்கும். ஒதுங்கி இருந்தால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட சுற்றமும், நட்பும் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது.

     

     

     

    பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும். சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும்.

    அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

    அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

     

     

  • தனுசு

    எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே

    நீங்கள் அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைவ்ய்வர்கள். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.

     

     

    உங்களின் பாக்கிய ஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தான ராசியில் குருபகவான் சஞ்சரிக்கிறார். இந்த குருப் பெயர்ச்சியால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உங்களின் சுய முயற்சியினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். அதிக வேகமில்லாமல் நிதானமாகவும், பொறுப்புடனும் காரியமாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். வீண் அபவாதங்களிலிருந்து விடுபடுவீர்கள்.  சிலருக்கு வீடு மாற்றம், இடமாற்றம் ஆகியவை நடக்கும். உங்களின் இரக்க குணத்தால் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

     

    அதேநேரம் சிலருக்கு முழங்கால் வலி, மூட்டு வலி ஆகியவை ஏற்படலாம். குடும்பத்தில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். அதோடு சில நேரங்களில் உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போகலாம். பெரியோர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிடலாம்.

     

    மற்றபடி குடும்பத்தில் அமைதி நிலவும்,. தாயார் வழி உறவுகள் சீராகும். உங்களுக்கு எதிராக கலகம் செய்தவர்கள் அடங்குவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டாகும். புதியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களின் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள்.

     

    உங்களின் செயல்களில் விவேகம் அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து பாராட்டும் வெகுமதியும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பூஜைகள், ஹோமங்களை இல்லத்தில் நடத்துவீர்கள். அசையாச் சொத்துகளால் வருமானம் வரத் தொடங்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

     

    உங்களின் முகத்தில் வசீகரம் உண்டாகும். பிறரைக் கவரும் வகையில் பேச்சுத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகளைச் செய்யும் ஆற்றலைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு தக்க அறிவுகளை வழங்கி அவர்களை உங்களுக்கு ஆதரவாக்கிக் கொள்வீர்கள்.

     

    உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியால் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வு பூர்வமாக பரிசீலித்து உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். இந்த குருவின் மாற்றத்தால் பணியிட மாற்றம் கிடைக்க வாய்ப்பில்லை.

     

    வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

     

    நீர்ப்பாசன வசதிகளுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாது.  எனவே இத்தகைய முயற்சிகளைத் தவிர்த்து பழைய கடன்களைத் திருப்பிச்செலுத்தவும்.

     

    அரசியல்வாதிகள் அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்ளவும். கட்சி மேலிடத்திடம் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளால் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள்.

     

    கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். அதனால் புகழைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்கள் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள்.

    சக கலைஞர்களுடன் நட்புடன் நடந்துகொண்டு புதிய ஒப்பந்தங்களைப் பெறவும். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய அனுபவம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

     

    பெண்மணிகள் கணவருடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள். பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை.

     

    மாணவமணிகள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றியடைவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். அதேநேரம் புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

     

    மூலம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.

     

     

    பூராடம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் வீடு, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக  இருந்து வந்தது. இனி அது மாறும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும்.

     

     

    உத்திராடம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் பிள்ளைகளின் வளர்ப்பின் போது கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம்.

     

     

    பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும். தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

    அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

    அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

  • விருச்சிகம்

    சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் விருச்சிக ராசியினரே நீங்கள் தந்திரசாலி. நீங்கள் பேசுவதற்கு முன்பு வார்த்தைகளை கோர்த்து பேசுவது நல்லது. திருமணத்திற்கு பிறகு யோகமான பலன்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். சேமிப்புகளை கரைப்பதில் வல்லவர் நீங்கள்.

     

     

    உங்களின் தொழில் ஸ்தானத்திலிருந்து லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் குரு பகவான். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்து மன நிம்மதி அடைவீர்கள். அனைத்து விஷயங்களும் படிப்படியாக சீராகும். வருமானம் உயரும். வீண் விரயம் ஏற்படாத வகையில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வீர்கள். செய்தொழிலில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

     

    புதியவர்கள் கூட்டாளிகள் ஆவார்கள். இதனால் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வீர்கள்.

     

    ஆற்றல் மிகுந்தவர்களையும், திறமைசாலிகளையும் உறுதுணையாகக் கொண்டு புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் இல்லம் தேடி விருந்தினர்கள் வருவார்கள். மற்றவர்கள் முடியாது என்று விட்டுவிட்ட காரியங்களைக் கூட நீங்கள் சுலபமாகச் செய்துமுடிப்பீர்கள்.

     

    உங்களின் மன பலத்தை மூல தனமாக்கிகொள்வீர்கள். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும். குடும்பத்தாருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா சென்று வருவீர்கள்.

     

    மற்றபடி வெளி ஆட்களிடம் உங்களின் தொழில் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை விட்டுக்கொடுத்து முடித்துக்கொள்ளவும்.

     

    நம்பகமான கூட்டாளிகளிடம் முக்கியமான வேலைகளைப் பிரித்துக் கொடுத்து அவர்களின் விருப்பப்படி செயல்பட அனுமதிப்பீர்கள். அனுபசாலிகளின் வழிகாட்டுதலின்படி குறித்த காலத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களின் காரியங்கள் நேர்த்தியாக இருக்குமாறு பார்த்துக்கொள்வீர்கள்.

     

    நல்ல நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெற்றோர் வழியில் சில மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். உடன் பிறந்தோரால் அனாவசியப் பிரச்னைகள் ஏற்படலாம்.

     

    அதனால் அவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அனாவசியமான பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் பயணங்களின் போது கவனம் தேவை. மற்றபடி பிள்ளைகளுக்கு சிறப்பான வருமானம் தரும் உத்யோகம் கிடைக்கும். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் வாக்குகொடுப்பதோ முன் ஜாமீன் போடுவதோ வேண்டாம்.

     

    உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க நினைப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

     

    வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் நல்லபடியாக முடியும். கூட்டாளிகள் உங்களை நம்பிப் புதிய முதலீடுகளில் ஈடுபட சம்மதிப்பார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று உங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இதனால் சக வியாபாரிள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.

     

    அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களுக்கு கட்சியில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உட்கட்சிப் பூசல்களில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

     

    கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக் கொடுத்த பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெற முயற்சிக்கவும். ரசிகர்களின் மனம் புண்படாத வகையில் நடந்துகொள்ளுங்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பார்கள். எனவே  அவர்களின் மனம் குளிர நடந்துகொண்டு அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

     

    பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பு, பாசம்  அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டு உங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

     

    மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அதனால் தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். மற்றபடி விளையாட்டுகளில் அதிக ஈடுபாடு செலுத்தி வெற்றி பெறுவீர்கள். சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.

     

    விசாகம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது.

     

    அனுஷம்:

    இந்த குருப் பெயர்ச்சியால் மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.

     

    கேட்டை:

    இந்த குருப் பெயர்ச்சியால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம்.

     

     

     

    பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.  கோளறு பதிகம் பாராயணம் செய்யலாம். செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். முன்னோர் வழிபாடு தினமும் செய்யவும்.

     

    அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

    அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7